search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழைநீர் தேங்கியுள்ள காட்சி.
    X
    மழைநீர் தேங்கியுள்ள காட்சி.

    சீர்காழியில் கனமழை: கோவில்களுக்குள் தேங்கி நிற்கும் தண்ணீர்

    சீர்காழியில் 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் சட்டைநாதர் கோவில், அமிர்தகடேஸ்வரர் கோவில்களுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், திருவெண்காடு, திருமுல்லைவாசல், கொண்டல், அகணி, எடக்குடி வடபாதி, கடவாசல், விளந்திடசமுத்திரம், அத்தியூர், ராதாநல்லூர், தாழந்தொண்டி, தொடுவாய், ஆமபள்ளம், ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடிய, விடிய கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சீர்காழி பகுதியில் பல்வேறு இடங்களில சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி வருகின்றன.

    இதேபோல வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, கதிராமங்கலம், விளந்திடசமுத்திரம், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர்.

    எடமணல் அருகே பெரிய தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து விட்டது. இதன் காரணமாக மழைநீர் வடியாமல் அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. எடமணல் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.

    திருமுல்லைவாசல் ஊராட்சிக்குட்பட்ட சுனாமி குடியிருப்பு முழுவதும் மழைநீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. திருமுல்லைவாசல், தொடுவாய் ஆகிய நெடுஞ்சாலைகளில் மழை நீர் வடிய வழியில்லாமல் தேங்கி உள்ளது. திருமுல்லைவாசல் தொடுவாய் ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையோரமாக பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கடல் சீற்றம் காரணமாக திருமுல்லைவாசல் கடற்கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

    சீர்காழியை அடுத்த திருக்கருக்காவூர் கிராமத்தில் உப்பனாற்று கரை உடைந்து வயல்களில் கடல் நீர் புகுந்ததால் 750 ஏக்கரில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக கொள்ளிடம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் 16 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வளாகத்துக்குள் தண்ணீர் புகுந்து முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைத்தொடர்ந்து தண்ணீரை என்ஜின் மூலம் கோவில் நிர்வாகத்தினர் வெளியேற்றி வருகின்றனர்.

    இதேபோல சீர்காழி சட்டைநாதர் கோவில் வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

    திருவெண்காடு அருகே நெப்பத்தூர்-தென்னம்பட்டினம் ஊராட்சியை இணைக்கும் நாட்டுக்கண்ணி மண்ணியாற்றின் குறுக்கே பாலம் உள்ளது. கடந்த ஆண்டு இந்த பாலம் பழுதடைந்ததால் அதன் அருகே ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. பழைய தரைப்பாலத்தில் போக்குவரத்து நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று தரைப்பாலம் திடீரென உள்வாங்கியதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் பாலத்தை பார்வையிட்டார். இதை தொடர்ந்து இந்த பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
    Next Story
    ×