என் மலர்
மதுரை
- பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலஸ்தானத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
- அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கிரிவலமாக வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம்.
இங்கு மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி, சத்தியகிரீசுவரர், கற்பக விநாயகர், துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய 5 சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். திருப்பரங்குன்றம் மலை சிவலிங்க வடிவில் இருப்பதால் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக பக்தர்கள் இங்கு கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இன்று தைப்பூச நட்சத்திரம் மற்றும் தை பவுர்ணமியையொட்டி அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கிரிவலமாக வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூச நட்சத்திரத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா நடந்த நிலையில், நாள்காட்டியில் இன்று தைப்பூசம் என்று இருப்பதால் பக்தர்கள் பால்காவடி, பறவை காவடி பால்குடம் உள்ளிட்டவைகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலஸ்தானத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நகரை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருப்பரங்குன்றம் கோவில் வாசல், சன்னதி தெரு மற்றும் கிரிவலப் பகுதிகளில் வாகனங்கள் சென்று வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது .
பால்குடம், காவடி, பறவை காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழக்கமாக சன்னதி தெரு வழியாக கோவில் வாசலை வந்தடைவார்கள். இன்று போலீசாரின் கெடுபிடி காரணமாக பக்தர்கள் கீழரத வீதிகள் வழியாக சுற்றி விடப்பட்டனர். கடும் வெயிலில் பக்தர்கள் கோவிலுக்கு சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டது.
- தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க. இன்றைக்கு இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
- தமிழகத்தில் புகையிலை பயன்பாட்டுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
மதுரை:
திருமலை நாயக்கரின் 440-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவரது உருவச் சிலைக்கு ம.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் பாரம்பரியம் வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு ஈரோட்டில் வாக்காளர் ஆதரவு அதிகரித்து வருகிறது. எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி நிச்சயமாக வெல்லும்.
தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க. இன்றைக்கு இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த கட்சியை உடைத்ததில் பாரதிய ஜனதாவுக்கு பெரும் பங்கு உண்டு. இன்றைக்கு அவர்களே அ.தி.மு.க.வை ஒன்றுபடுத்துவோம் என்று பேசுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
தமிழகத்தில் புகையிலை, குட்காவுக்கான தடையை விலக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் புகையிலை பயன்பாட்டுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுவாமி-அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இந்த ஆண்டு தை மாத தெப்பத்திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் காலை, இரவில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா, காமராஜர் சாலை மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் நேற்று கோலாகலமாக நடந்தது.
இதையொட்டி நேற்று அதிகாலை மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுந்தரேசுவரர்-பிரியாவிடை வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டனர். அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, சுவாமி சன்னதி தெரு, முனிச்சாலை ரோடு, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் எதிரே உள்ள முக்தீசுவரர் கோவிலை சென்றடைந்தனர். அங்கு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
அதை தொடர்ந்து சுவாமி-அம்மன் தெப்பக்குளத்துக்கு சென்று, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்கள். சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
இதற்கிடையே மீனாட்சியின் தெப்ப உற்சவத்தை காண தெப்பக்குள கரையில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.
பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பகல் 11.10 மணிக்கு தெப்பம் வலம் வர தொடங்கியது. பக்தி கோஷங்கள் எதிரொலித்தன.
தெப்பக்குளத்தை 2 முறை பகலில் தெப்பம் வலம் வந்த பிறகு சுவாமியும், அம்மனும் தெப்பக்குள மைய மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்து இரவு மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளினர். அங்கு தை மாத பவுணர்மி நிலவு வெளிச்சத்திலும், மின்னொளியிலும் ஜொலித்த தெப்பத்தை இரவு 7.40 மணிக்கு மேல் பக்தர்கள் பக்தி கோஷத்துடன் இழுத்தனர். இரவில் 3-வது சுற்றாக தெப்பம் குளத்தை வலம் வந்தது. அப்போதும் ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசித்தனர்.
பின்னர் மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுந்தரேசுவரர் தங்கக்குதிரை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தெப்பக்குளத்தில் இருந்து சுவாமி-அம்மன் புறப்பாடாகி, காமராஜர்சாலை, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக கோவிலை அடைந்தனர்.
தெப்ப உற்சவத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள், போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர், இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல கமிஷனர் செல்லத்துரை, மீனாட்சி அம்மன் கோவில் துணை கமிஷனர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேவகி சிறப்பு மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த நவீன புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- 1998-ம் ஆண்டு கருப்பு வெள்ளை ஸ்கேன் கருவியுடன் தனது மருத்துவ சேவையை தொடங்கியது.
மதுரை
மருத்துவம் ஓர் மகத்தான சேவை, சாதாரண மனிதனுக்கும் எளிதில் சென்றடைய மனிதநேயத்துடன் கூடிய தரமான மருத்துவ சேவை செய்வதை நோக்கமாகவும், குறைந்த செலவில் பாதுகாப்பான மற்றும் தரமான மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்க பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் 1998-ம் ஆண்டு கருப்பு வெள்ளை ஸ்கேன் கருவியுடன் தனது மருத்துவ சேவையை தொடங்கியது.
22 ஆண்டுகளுக்கு முன்பு அதிநீவன ஸ்கேன் கருவிகளை கொண்டு தென் தமிழகத்தில் ஒரு புரட்சியை செய்து வந்தது. குறைந்த செலவில் தரமான மருத்துவ பரிசோதனை கிடைப்பதால் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள 10 மாவட்டங்களிலும் இருந்து மக்கள் CT ஸ்கேன், MRI Scan, USG ஸ்கேன், ECG. ECHO, TMT, DIGITAL X-RAY, Mammogram மற்றும் அதிநவீன ரத்த பரிசோதனை ஆய்வகம் (Laboratory) மூலம் பயன் பெறுகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2006-ம் ஆண்டு தேவகி புற்றுநோய் சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தார். தென் தமிழகத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பே அதிநவீன "லீனியர் அக்ஸிலரேட்டர்" புற்றுநோய் கதிர்வீச்சு கருவியை கொண்டு புற்று நோய்க்கான துல்லியமான சிகிச்சையை இன்று வரை தொடர்ந்து வழங்கி வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான அறுவை சிகிச்சை பிரிவு, கீமோதெரபி என்னும் மருத்துவ சிகிச்சை பிரிவு, கதிர்வீச்சு சிகிச்சை பிரிவு என அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் கிடைப்பதால் நோயாளிகள் அதிக அளவில் பயனடைகிறார்கள்.
புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டு தோறும் பிப்.4-ந்தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
2023-ஆம் ஆண்டில் Close the care gap என்பதே இந்த தினத்தின் மையக் கருத்தாக உள்ளது. புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு அதற்கான முறையான குணப்படுத்த கூடிய சிகிச்சையை கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகும். இதை மனதில் வைத்து மதுரை அரசரடி, தேவகி புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இந்த வருடம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன லீனியர் ஆக்ஸிலரேட்டர் கருவியான Halycon கருவி தென் இந்தியாவில் முதல்முறையாக நிறுவப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்துவது மட்டுமின்றி பக்க விளைவுகளை குறைக்கிறது. இதில் 4 விதமான கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
1. IMRT சிகிச்சையில் திருத்திய செறிவுடன் புற்றுநோய் பாதித்த இடத்தில் முப்பரிமான கதிர்வீச்சை செலுத்தி சுற்றியுள்ள நல்ல திசுக்களை பாதுகாக்கிறது.
2.VMAT என்னும் சுழல் கதிர்வீச்சு மூலம் மிக குறைவான நேரத்தில் துல்லியமான கதிரியக்கத்தை செலுத்துவதாகும்.
3. IGRT என்பது தினமும் நோய் பாதித்த இடத்தை CT Scan மூலமாக கண்டறிந்து கதிர்வீச்சை நோயின் அசைவிற்கு ஏற்ப கொண்டு சேர்ப்பதாகும்.
4. Stereotactic முறையில் மிக சிறிய அளவிலான தலை மற்றும் உடலில் உள்ள கட்டிகளை மிக குறுகிய நாட்களில் துல்லியமாக கொண்டு சேர்க்கிறது. இந்த சிகிச்சையை வெளி நோயாளியாக இருந்தே தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
தேவகி மருத்துவமனையில் கடந்த 17 ஆண்டுகளாக சிறந்த மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் மூலம் லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் இதுவரை பயனடைந்துள்ளனர். தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீடு, மாநில-மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், இ.எஸ்.ஐ. பயனாளிகள், தனியார் மருத்துவ காப்பீடு உள்ளவர்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 0452 -2288832 (Emergency No: 96006 00888) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
- வருகிற 23-ந்தேதிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மதுரை
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மதுரை மாவட்டம் புகழ் பெற்றது. இங்கு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டவரும் கண்டுகளிக்க வசதியாக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கியது. அப்போது அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதற்கிடையே மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்தன. இதற்கான டெண்டரை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.
இந்த டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் வருகிற 23-ந்தேதிக்குள் தங்களது ஒப்பந்தப்புள்ளிகளை இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- நெற்கதிர்களுடன் சுவாமியும், அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு தை மாத தெப்பத்திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் காலை, இரவு சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
விழாவில் சிகர நிகழ்ச்சியான தை தெப்பத்திருவிழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக காமராஜர் சாலை மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணி நிறைவடைந்தது. அதை தொடர்ந்து தெப்பத்திருவிழாவிற்கு முன்னோட்டமாக நேற்று முன்தினம் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும். நேற்று சிந்தாமணியில் கதிரறுப்பு வைபவமும் நடந்தன. இதற்காக மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அங்கு எழுந்தருளினார்கள். சிந்தாமணி பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வயல்வெளியில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் சார்பில் கோவில் சிவாச்சாரியார்கள் நெற்கதிர்களை அறுவடை செய்தனர். பின்னர் நெற்கதிர்களுடன் சுவாமியும், அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தெப்ப உற்சவமான இன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அதிகாலையில், மீனாட்சி அம்மன் கோவில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர்.
அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலையில் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்..
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாசலம் ஆகியோர் செய்து வருகிறார்கள். மேலும் தெப்பத்திருவிழாவையொட்டி அந்த பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செயயப்பட்டுள்ளது.
- அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- இந்த மனு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமங்கலம் டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமது ஷா புரத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மனைவி அபர்னா ஸ்ரீ (வயது34). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருங்குடியை சேர்ந்த அரசு ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜா (50), அவரது மனைவி நிலையூர் சத்துணவு மைய பொறுப்பாளர் கலைச்செல்வி (43) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் பொதுப்பணித்துறையில் வாங்கி தராமல் ஏமாற்றினர். பணத்தையும் திருப்பி தரவில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமங்கலம் டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ராஜா,கலைச்செல்வி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மேலூர் அருகே அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மரியாதை செலுத்தினர்.
- இதில் மாவட்ட துணைச் செயலாளர் பூமிநாதன், பேரூர் செயலாளர் கார்த்திகேயன், தொகுதி செயலாளர் மொண்டி, துணைச் செயலாளர் சின்ன கருப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூரில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அங்குள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மேலூர் ஒன்றிய செயலாளர் கேசிராஜன், ராகவன், பிரேம்குமார், நகர் செயலாளர் தங்கச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் ஜீவ சன்மார்க்கம், பாரதி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்டப்பட்டி பாலமுருகன், மாவட்ட துணைச் செயலாளர் பூமிநாதன், பேரூர் செயலாளர் கார்த்திகேயன், தொகுதி செயலாளர் மொண்டி, துணைச் செயலாளர் சின்ன கருப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடந்தது.
- செக்கனூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சில் கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் லதா ஜெகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வளர்மதி அன்பழகன் முன்னிலை வகித்தார்.
கூட்டம் தொடங்கி யவுடன் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப் பட்டது. இதனை தொட ர்ந்து கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி, மின்னல் கொடி, ஓம் ஸ்ரீ முருகன் உள்பட பலர் தங்களது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.
கவுன்சிலர் மின்னல் கொடி பேசுகையில், காண்டை, பொன்னமங்கலம், வாகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நிதி ஒதுக்கா ததால் அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை. மக்கள் கேள்வி கேட்கின்ற னர். எனவே கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் சுகாதார பணி மேற்கொள்ளப்படும் போது கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். செக்கனூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
- காதல் மனைவியை கொலை செய்த கணவர் பரபரப்பு வாக்குமூலம்
- இது பற்றிய புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
மதுரை தெற்கு வெளி வீதி, சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மகள் வர்ஷா (வயது19). இவர் நேற்று மதியம் சப்பாணி கோவில் தெருவில் பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் வர்ஷாவுடன் தகராறு செய்து அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார்.
இதில் உயிருக்கு போராடிய வர்ஷாவை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது பற்றிய புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் வர்ஷாவை கத்தியால் குத்திக்கொன்றது அவரது கணவர் பழனி (வயது26) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பழனி போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதா வது:-
நானும், வர்ஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் என்னை பிரிந்து வர்ஷா, தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். அவரை குடும்பம் நடத்த வரும்படி பலமுறை அழைத்தும் வர மறுத்துவிட்டார்.
இதில் ஏற்பட்ட தகராறில் வர்ஷாவை தாக்கினேன். இதுபற்றி வர்ஷா ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. வர்ஷா என்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்து விட்டதுடன் போலீசிலும் என்னை பற்றி புகார் செய்ததால் அவர் மீது எனக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இத னால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழா முன்னிட்டு சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியர்-தெய்வானையை தரிசித்தனர். பால்குடம், காவடி எடுத்து வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இன்று இரவு தந்தத்தொட்டி சப்பரத்தில் தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமியும், சிம்மாசனத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியும் திருவீதி உலா வருகின்றனர். தைப்பூசத்திருநாள் அன்று மட்டும் திருப்பரங்குன்றம் கோவிலில் இரண்டு முருகன், இரண்டு தெய்வானை திருவீதி உலாவருவது வழக்கமாகும்.
தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலில் காலையில் கணபதி ஹோமம், புண்ணியவாசனம் நடைபெற்று மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
அழகர்மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோவிலிலும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.=
- சிவபாலன் நேற்று இரவு குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
- குடோன் உரிமையாளர் சிவபாலன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.
மதுரை:
மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்தவர் சிவபாலன் (வயது 46). இவருக்கு சொந்தமான சாக்கு குடோன் அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பழைய சாக்குகள், நோட்டு, டைரி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் சிவபாலன் நேற்று இரவு குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவரது குடோனில் இருந்து நள்ளிரவு 12 மணி அளவில் 'குபுகுபு'வென கரும்புகை வந்தது.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது தொடர்பாக தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடோனில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதைத்தொடர்ந்து அனுப்பானடி, பெரியார் பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான சாக்கு, நோட்டு, டைரி ஆகியவை எரிந்து நாசமாகி விட்டன.
இதுபற்றி குடோன் உரிமையாளர் சிவபாலன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






