என் மலர்
மதுரை
- கோடை காலத்தை முன்னிட்டு எலுமிச்சம் பழம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
- ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனையானது.
மதுரை
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. எனவே பொதுமக்கள் குளிர்பானங்களை விரும்பி அருந்தி வருகின்றனர். எலுமிச்சை சாறு செறிந்த குளிர்ந்த நீர் அருந்தினால், உடல் வெப்பம் தணிவது மட்டுமின்றி, வயிற்றுப் பிரச்சினைகளும் சரியாகும்.
மதுரை மாவட்டத்தில் தற்போது எலுமிச்சம்பழத்துக்கு மவுசு அதிகரித்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி மற்றும் பரவை காய்கறி மற்றும் பழச்சந்தைகளில் ஒரு கிலோ எலுமிச்சம் பழம் ரூ.200-க்கு விற்கப்படுகிறது.
மதுரையில் பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சம்பழம் அதிகமாக விளைகிறது. எனவே வியாபாரிகள் அந்த பகுதிகளுக்கு சென்று போட்டி போட்டுக்கொண்டு எலுமிச்சம் பழங்களை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:-
பேரையூர் தாலுகாவில் தும்மநாயக்கன்பட்டி, கீழப்பட்டி சந்தையூர், சாப்டூர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் எலுமிச்சை பழம் சாகுபடி ஆகி வருகிறது. இங்கு விளையும் எலுமிச்சை, மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பேரையூரில் நடப்பாண்டு எலுமிச்சை விளைச்சல் நன்றாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்றைக்கு ரூ.120-க்கு கொள்முதல் ஆகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டு நல்ல மழை பெய்தது. இதனால் கண்மாய், கிணறுகளில் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் உள்ளது.
எனவே நாங்கள் எதிர்பார்த்ததை போல, எலுமிச்சம்பழ விளைச்சல் நன்றாக அமைந்து உள்ளது. எங்களிடம் வியாபாரிகள் தற்போது ரூ.100 முதல் ரூ.120 வரை கொள்முதல் செய்கின்றனர். மாட்டுத்தாவணி பரவை உள்ளிட்ட காய்கறி சந்தைகளில் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
எலுமிச்சம்பழ விளைச்சலும், விலையும் அமோகமாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு வெயில் உக்கிரமாக இருப்பதால் தேவையும் சற்று அதிகமாக இருக்கும். எனவே எலுமிச்சை பழத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- விநாயகர் சதுர்த்தியன்று சந்திரமுகி-2 வெளியாகும்.
- மதுரையில் நடிகர் ராகவாலாரன்ஸ் பேட்டியளித்தார்.
மதுரை
ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் மதுரை செல்லூர் திரை யரங்கில் ரசிகர்க ளுடன் அமர்ந்து ருத்ரன் படத்தைப் பார்த்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
அம்மா பாசம் என்பதால் ருத்ரன் படத்தில் நடித்தேன். குடும்பம், குடும்பமாக ருத்ரன் பார்க்க வருகிறார்கள். இதனை மாஸ் படமாக்கி வசூலை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி.
"செல்போனுக்கு கொடுக்கும் மரியாதை கூட, தாய்க்கு தருவதில்லை" என்று நான் இந்த படத்தில் பேசிய வசனம், ரசிகர்க ளிடம் பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு நிறைய தாய்மார்கள் செல்போனில் கூப்பிட்டு பாராட்டுகின்றனர். நான் குடும்பத்தோடு அதிகம் இணக்கமாக இருப்பவன். என் திரையுலக வெற்றிக்கு குடும்ப படங்களே காரணம்.
இப்போது நல்ல படத்திற்கு கூட விமர்சனம் வருகிறது. விமர்சனம் என்பது தனிநபர் விமர்ச னமாக இருக்கக்கூடாது. எடுக்கும் படத்தை நன்றாக எடுக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்பு வார்கள். அதில் சிறுதவறு ஏற்பட்டால் அது குற்றமாகாது. எவ்வளவு விமர்சனம் செய்தாலும், இந்த படம் தியேட்டரில் வசூலை குவிக்கிறது. அவர்களின் விமர்சனத்திற்கு இதுவே பதிலடியாகும்.
நல்ல கதை வந்தால், மதுரையை பற்றிய படம் எடுப்பேன். 'சந்திரமுகி-2' பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. 3 பாடல், ஒரு சண்டை மட்டுமே பாக்கி உள்ளது. ஜிகர்தண்டாவும் முடிந்து விட்டது.
காஞ்சனா-2 படத்திற்கு கதை எழுதி வருகிறேன். பெரிய இடைவெளி இல்லாமல், இனி தொடர்ந்து படங்களில் நடிப்பேன். 'சந்திரமுகி-2' விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சதுரகிரியில் கடும் வெயிலிலும் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
- காலை 7 மணிக்கு வனத்துறை பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்த பின் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர்.
திருமங்கலம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலை மேல் உள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதம் சித்திரை மாத அமாவாசையை (19-ந் தேதி முன்னிட்டு இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி பிரதோஷ நாளான இன்று 17-ந்தேதி அதிகாலை முதல் விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்- சிறுமிகள், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் சதுரகிரி மலை அடிவாரத்தில் திரண்டனர்.
காலை 7 மணிக்கு வனத்துறை பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்த பின் மழை ஏற அனுமதிக்கப்பட்டனர். கோடைகாலம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் வெயில் வருவதற்கு முன்பே மலை ஏறுவதை காண முடிந்தது.
மலையேறுபவர்களின் வசதிக்காக மலைப்பாதைகளில் உள்ள சங்கிலிபாறை, வழுக்குப்பாறை, காராம் பசு சந்திப்பு, விலாவடி கருப்பசாமி கோவில் பகுதிகளில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.
காலை 9 மணி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் சிரமத்துடன் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடந்தது.
- மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு, பதவி உயர்வை மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முன்வருவாரா? என முன்னாள் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.
- இதற்கான அறிவிப்பை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் என்றார்.
மதுரை
திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. பிரமுகருமான டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-
நாட்டின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்கி வருகிறது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தரமான மருத்துவ சிகிச்சையை குறைந்த செலவில் பெறபலரும் தமிழகத்திற்கு வருகிறார்கள்.
நமது மாநிலம் சுகாதாரத் துறையில் முன்னணி மாநில மாக திகழ்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு பலரது பாராட்டையும் பெற்று தந்தார். தமிழக மக்களுக்கும் குறைந்த கட்ட ணத்தில் தரமான சிகிச்சை கிடைக்க அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
ஆனால் தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் தங்கள் ஊதிய, பதவி உயர்வுக்காக தொடர்ந்து போராட வைக்கப்படுகிறார்கள். இது நியாயமா? தற்போதுள்ள 8, 15, 17, 20 ஆண்டுகள் முடித்து கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை 5, 9, 11, 12 ஆண்டு கள் முடிந்தவுடன் கொடுக்க வேண்டும் என்று கடந்த 2009-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் கருணா நிதி ஆட்சியின்போது அர சாணை பிறப்பிக்கப்பட்டது.
மத்திய அரசு மருத்து வர்கள் 4, 9, 13, 20 ஆண்டுகள் கழித்து ஊதிய, பதவி உயர்வு பெறுகின்றனர். அவர்க ளுக்கு 7-வது ஊதிய குழுவில் 14-வது ஆண்டில் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் அடிப்படை ஊதியமாக பெறுகிறார்கள். மத்தியஅரசு மருத்துவர் 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் குறைந்தது 15 அல்லது 20 ஆண்டுகள் கழித்து பெறுகின்ற நிலை உள்ளது. இதன் காரணமாக மாநில அரசு மருத்துவர் ரூ.86 ஆயிரம் மட்டுமே அடிப்படை ஊதியமாக பெறுகிறார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது இதுதொடர்பாக சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர், எனது கோரிக்கைக்கு ஆவண செய்யப்படும் என பதில் அளித்தார். ஆனால் கொரோனா காரணமாக காலதாமதமானது. கடந்த 2009-ம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னையில் மருத்துவர்கள் உண்ணா விரத போராட்டம் நடத்தி னர்.
அப்போது மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சி அமைந்தவு டன் கோரிக்கை நிறைவேற் றப்படும் என உறுதி அளித்தார். தி.மு.க. ஆட்சி அமைத்து 1½ வருடம் ஆகியும் மருத்துவர்களின் நியாயமான ஊதிய, பதவி உயர்வு நிறைவேற்றப்படவில்லை. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முன்வர வேண்டும். இதற்கான அறிவிப்பை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சித்திரை திருவிழா 23-ந்தேதி தொடங்குவதால் மதுரை வைகை ஆற்றில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- தடுப்பணைகளால் விபத்து அபாயம் ஏற்படும்.
மதுரை
மதுரை மீனாட்சி -சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இதில் குறிப்பிடக்தக்கது சித்திரை பெருவிழா. 12 நாட்கள் நடக்கும். விழாவின்போது மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
இந்த ஆண்டு வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்து டன் விழா தொடங்குகிறது. மே 5-ந்தேதி முத்திரை பதிக்கும் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்க உள்ளது.
அழகர் கோவிலில் இருந்து தங்க குதிரையில் புறப்பட்டு வரும் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கு வார். இந்த நிகழ்வை கண்டு களிப்பதற்காக மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வைகையாற்று பகுதியில் திரளுவார்கள்
இதனை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ள ஆழ்வார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அங்கு குப்பை குளங்களை அகற்றும்பணி நடந்து வருகிறது.
சித்திரை திருவிழா நெருங்குவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.
வைகை ஆற்றில் சமீபத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் இது இன்னமும் தூர்வாரப்படவில்லை. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண பக்தர்கள் வைகையின் இருபுறமும் திரண்டு வருவது வழக்கம். அப்போது மக்கள் வெள்ளம் 6 அடி உயர தடுப்பணை அருகே சென்றால், தண்ணீருக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. அதுவும் தவிர வைகை ஆற்றின் படித்துறைகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளது.
எனவே அங்கு பிளாஸ்டிக் குப்பைகள் மலை போல தேங்கி கிடக்கிறது. வைகை ஆற்றில் கள்ளழகரை காண வரும் பக்தர்கள், மொட்டையடித்து ஆற்றில் நீராடுவார்கள். அப்போது ஆற்றின் படிகள் சிதிலமடைந்து இருப்பதன் காரணமாக அதனை அறியாமல் பக்தர்கள் ஆபத்தை சந்திக்க நேரிடும். எனவே வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கும் முன்பாக ஆற்றை சுத்தம் செய்து தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு இணைய தளம் மூலம் நுழைவு சீட்டு வழங்கப்படுகிறது.
- வருகிற 22-ந்தேதி முதல் பதிவு செய்யலாம்.
மதுரை
மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யா ணம் ஆகும். இது கோவிலில் உள்ள வடக்கு ஆடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் அடுத்த மாதம் 2-ந்தேதி காலை 8.30 மணி முதல் 8.59 மணிக்குள் நடக்கிறது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. அதே போல தெற்கு கோபுரம் வழியாக வருகை தரும் பக்தர்களுக்கு கட்டணம் இல்லா தரிசனம் என்ற முறையில் அனுமதி வழங்கப் படும். இது யார் முதலில் வருகிறார்களோ அவர்க ளுக்கு அனுமதி என்ற நிலையில் இருக்கும்.
மீனாட்சி-சுந்தரேசுவரர் கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் கட்டண சீட்டு பெற வசதியாக இந்து சமய அறநிலையத்துறையின் https://hrce.tn.gov.in- திருக்கோவிலின் https://maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வருகிற 22-ந் தேதி முதல் 25-ந் தேதி இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யலாம்.
இதன் ஒரு பகுதியாக ரூ.500 கட்டண பதிவில் ஒருவர் 2 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய இயலும். ரூ.200 கட்டண பதிவில் ஒருவர் 3 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகள் இரண்டையும் பதிவு செய்ய இயலாது. 12 வயதிற்கு மேற்பட்ட அனை வருக்கும் சீட்டு வாங்க வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்த இயலும். எனவே ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்ய இயலாது.
பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி, பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணச் சீட்டு பெற விரும்பும் பக்தர்கள் ஆதார் கார்டு, போட்டோ அடை யாள அட்டை, கைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் முன்பதிவு செய்து கொள்ள லாம்.
இணைய தளத்தில் கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், பக்தர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு நடத்தி உரிய நபருக்கு மின்னஞ்சல் அல்லது கைபேசி எண்ணிற்கு வருகிற 26-ந் தேதி தகவல் அனுப்பப்படும்.
உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல்- குறுந்தகவல் கிடைக்க பெற்றவர்கள், வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உறுதி செய்யப்பட்ட தகவலை காட்டி, கட்டணச் சீட்டு தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு வருபவர்களுக்கு கட்டணச் சீட்டு வழங்கப்பட மாட்டாது. வெளியூரில் வசிக்கும் உறுதி செய்யப்பட்ட குறுந்த கவல் உடையவர்களுக்கு மட்டும் பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் அடுத்த மாதம் 1-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டணச் சீட்டு தரப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 2-ந் தேதி காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜ கோபுரம், மொட்டை முனீ ஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியில் அனுமதிக்கப் படுவர். ரூ.200 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழி யாக வந்து வடக்கு ராஜ கோபுரம் வழியாக கோவி லுக்குள் அனுமதிக்கப்படு வர். திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெற்றவர்கள், அவர்க ளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்க ளில் அமர்ந்து திருக்கல்யாண காட்சியைக் கண்டு அம்மன் -சுவாமி அருள் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்க மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
- மதுரை காஜிமார் தெருவில் உள்ள ஹஸ்ரத் தாஜுதீன் மஹாலில் நடந்தது.
மதுரை
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி காஜிமார் தெருவில் உள்ள ஹஸ்ரத் தாஜுதீன் மஹாலில் நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர் ரசூல் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் முகமது அலி ஜின்னா, போனி பேஸ், அபுதாகிர், அப்பாஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் கோ.சந்திரசேகர் வரவேற்றார்.
இதில் முதன்மை குரு கத்தோலிக்க உயர்மறை மாவட்டம் மதுரை அருட்தந்தை ஜெரோம், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மதுரை மாவட்ட முஸ்லீம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்ட தலைவர் அலாவுதீன், அருட்தந்தையர் பெனடிக் பர்ண பாஸ், லாரன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பகுதி குழு செயலாளர் ஜீவா.
கவுன்சிலர்கள் நூர்ஜகான், ஜென்னியம்மாள், பானு முபாரக் மந்திரி, சிறுபான்மை நலக்குழு மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, பொருளாளர் ஜான்சன், ஐ.என்.டி.ஜே. மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது ஆகியோர் பேசினர்.
- தமிழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
- கடந்த ஆண்டில் மட்டும் 5,784 நியாயவிலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெறப்பட்டு உள்ளன.
மதுரை:
மதுரை மாவட்டம் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் இன்று கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 4 ஆயிரத்து 453 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அடங்கும். கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு நிலைகளிலான வங்கிகளில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 71 ஆயிரத்து 950 கோடி மதிப்பீட்டில் வைப்புத் தொகை ஈட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மொத்தம் ரூபாய் 64 ஆயிரத்து 140 கோடி மதிப்பீட்டில் 17 விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 17.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.13 ஆயிரத்து 443 கோடி மதிப்பீட்டில் வேளாண் கடனுதவிகளும், 1.59 இலட்சம் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூபாய் 1 ஆயிரத்து 72 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளும், 2.86 லட்சம் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூபாய் 1 ஆயிர்த்து 339 கோடி மதிப்பீட்டில் கடனு தவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 35,941 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 26,018 முழுநேரக் கடைகளும், 9,923 பகுதிநேர கடைகளும் அடங்கும்.
கடந்த ஆண்டில் மட்டும் 5,784 நியாயவிலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெறப்பட்டு உள்ளன. நடப்பாண்டில் கூடுதலாக 5 ஆயிரம் நியாய விலைக்கடைகளை புனரமைத்திடவும், கூடுதலாக 2 ஆயிரத்து 500 நியாயவிலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றிடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுகளின் போது கலெக்டர் அனீஷ் சேகர், இணை பதிவாளர்கள் குருமூர்த்தி (கூட்டுறவு சங்கங்கள்), பிரியதர்ஷினி (பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை), மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்கு நர் ஜீவா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கல்வீச்சில் காயமடைந்த 2 பெண்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி கல்வீசிய நபர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து நேற்று (16-ந்தேதி) மாலை 6:15 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்னை நோக்கிச்சென்றது.
இந்த ரெயில் திருமங்கலம்-மதுரை இடையே மறவன்குளத்தை கடந்து வந்தபோது இரவு.9.20 மணியளவில் முன்பதிவு இல்லாத பெட்டிமீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்த ரெயிலில் பயணம் செய்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த கலா (28) என்பவர் படுகாயம் அடைந்தார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 14-ந்தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் மீண்டும் சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றுள்ளார். அப்போது தென்காசி அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வி என்ற பெண்ணும் அவரது அருகில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
இந்தநிலையில் மர்ம நபர்கள் வீசிய கற்கள் 2 பேர் மீதும் விழுந்தது. இதில் 2 பேரும் காயமடைந்தனர். இதில் கலாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கல்வீச்சில் பெண்கள் காயமடைந்ததை கண்ட பயணிகள் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதைத்தொடர்ந்து ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆறுமுக பாண்டியன், தீபா ஆகியோர் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட கோச்சில் விசாரணை நடத்தினர்.
பின்னர் கல்வீச்சில் காயமடைந்த 2 பெண்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. காயமடைந்த 2 பெண்களும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கப்பலூர் டோல்கேட், மறவன்குளம் திருமங்கலம் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அந்த பகுதியில் யாரும் சிக்காத நிலையில் தொடர்ந்து கலாவின் சகோதரி முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் ரெயில்வே எஸ்.பி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. பொன்னுச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அருணோதயம், செல்லப்பாண்டி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கல்வீசிய நபர்களை தேடி வருகின்றனர்.
பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டி மீது கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 2 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேலூர் அருகே பயணிகள் நிழற்குடை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மேலூர்-சிவகங்கை மெயின்ரோட்டில் இந்த பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
மேலூர்
மேலூர் ஊராட்சி ஒன்றியம் வண்ணாம்பாறைபட்டி ஊராட்சியில் பொது நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மேலூர்-சிவகங்கை மெயின்ரோட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதை பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இதில் மேலூர் யூனியன் தலைவர் பொன்னுசாமி, வண்ணாம்பாறைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூமாரி மகாராஜன், துணைத் தலைவர் சின்ன கருப்பு, மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், ஜெயபாலன், யூனியன் பொறியாளர்கள் மணிமாறன், நெடுஞ்செழியன், உறங்கான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் வெள்ளலூர் இளங்கண்ணன், கோட்டநத்தம்பட்டி கந்தப்பன், கிடாரிபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
- புதிய கற்காலத்தில் தானியங்களை அரைப்பதற்கான அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
- மதுரை முத்துப்பட்டி பெருமாள்மலையில் செஞ்சாந்து ஓவியத்தின் எதிரிலுள்ள பாறையிலும் இதுபோன்ற அரைப்புப் பள்ளங்கள் உள்ளன.

மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் மற்றும் பல்லாங்குழி.
மதுரை
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப் பகுதியில் சுமார் 8000 ஆண்டுகள் பழமையான, புதிய கற்காலத்தின் அரவைத் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும், பாறையில் உருவாக்கப்பட்ட அமைப்பினை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.
கோபால்சாமி மலை அருகில் பழமையான தொல்லியல் தடயங்கள் இருப்பதாக நூர்சாகிபுரம் சு.சிவகுமார் கொடுத்த தகவலின் பேரில், அவருடன் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி சிவரஞ்சனி, திருப்பு ல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் மனோஜ், பிரவீனா ஆகியோர் அப்பகுதி யில் கள ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:-
புதிய கற்காலமும் வாழ்வியல் மாற்றமும்
புதிய அகழாய்வுகள் மூலம் தமிழ்நாட்டில் நிலவிய புதிய கற்காலம் கி.மு.6000 முதல் கி.மு.2200 வரையிலானது என தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மனிதன் நாடோடி வாழ்க்கை யில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய புதிய கற்காலத்தில் தான் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மட்பாண்டங்கள், நிரந்தரக் குடியிருப்புகள், தானியங்களை இடித்து அரைத்துப் பயன்படுத்துதல், தெய்வ வழிபாடு, வழுவழுப்பான கற்கருவிகள் ஆகியவை தோற்றம் பெற்றன.
இந்நிலையில் கோபால்சாமி மலையின் வடக்குப் பகுதியில் கல்லாலான வட்டச்சில்லு, அரைப்புக்கற்கள், சிவப்பு நிற பானை ஓடுகள், புதிய கற்கால கற்கோடரி, இரும்புக் கசடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்குள்ள பாறைகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வழுவழுப்பாகத் தேய்த்த சிறிய மற்றும் பெரிய பள்ளங்கள், அம்மி போன்ற அமைப்பும் உள்ளன. இவை அரைப்புக் கற்களைக் கொண்டு தானியங்களை இடிக்கவும், அரைக்கவும், கொட்டைகளை உடைக்கவும் பயன்படுத்திய இடங்களாக இருக்கலாம். இவை கற்கருவிகளைத் தேய்த்த போது உண்டான பள்ளங்கள் இல்லை. அவை நீளமானதாக இருக்கும். இவை அவ்வாறு இல்லை. இதுவரை கண்டுபி டிக்கப்பட்ட கற்கருவிகள் தேய்க்குமிடங்கள் பெரும்பா லும் நீர்நிலைகள் அருகிலேயே உள்ளன. இங்கு ஆறு, சுனை எதுவுமில்லை.
புதிய கற்காலத்தில் மனிதனிடம் ஏற்பட்ட முக்கியமான நாகரிக வளர்ச்சி தானியங்களை இடித்து, அரைத்துப் பயன்படுத்தியதும், சமைத்த உணவுகளை உண்ணத் தொடங்கியதும் தான். இது அவனது வாழ்க்கை முறையை மாற்றி, பல் உள்ளிட்ட உடல் பிரச்சினைகளுக்குக் காரண மானது. பையம்பள்ளி உள்ளி ட்ட இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் புதிய கற்காலத்தில் பயன்பா ட்டில் இருந்த அரைப்புக்கல், திருகைக்கல், குழவி போன்றவை கண்டெடுக்கப் பட்டுள்ளன. மேலும் பாறையில் ஒரு வரிசைக்கு 6 என 3 வரிசைகளில் அமைந்த 18 குழிகள் கொண்ட பல்லாங்குழி அமைப்பும், அதன் அருகில் சதுர வடிவில் அமைந்த படம் போன்ற ஒரு பாறைச் செதுக்கலும் இங்கு உள்ளன.
இரும்புக்காலம்
தமிழ்நாட்டில் புதிய கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாக இரும்புக் காலம் இருந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக பாறையின் வடக்கில் 1 முதல் 3 அடி வரை உயரம் உள்ள சில பலகைக்கற்கள், தனித்தனி யாகக் காணப்படு கின்றன. இவை இரும்புக்கா லத்தைச் சேர்ந்த சேதமடைந்த கல்திட்டையின் எஞ்சிய கற்கள் ஆகும். இப்பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய கற்கால, இரும்புக்காலத் தடயங்கள் உள்ளன.
தென் தமிழ்நாட்டில் புதிய கற்காலத்தின் தடயங்கள் பெரிய அளவில் கிடைக்காத நிலையில் இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் தே.கல்லுப் பட்டியில் இத்தடயங்களை மத்திய தொல்லியல் துறை ஏற்கனவே கண்டுபிடித் துள்ளது. மதுரை முத்துப்பட்டி பெருமாள்மலையில் செஞ்சாந்து ஓவியத்தின் எதிரிலுள்ள பாறையிலும் இதுபோன்ற அரைப்புப் பள்ளங்கள் உள்ளன. இந்த இடங்களில் அகழாய்வு செய்து தென் தமிழ்நாட்டில் நிலவிய புதிய கற்காலப் பண்பா ட்டை அரசு வெளிக்கொணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா 22-ந் தேதி நடக்கிறது.
- காலை 10.45 அளவில் லட்சார்ச்சனை நடக்கிறது.
சோழவந்தான்
மதுரைமாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சித்திரரத வல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக இருக்கிறார்.அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.
ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு குரு பெயர்ச்சி விழா 3 நாட்கள் நடைபெறும். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்து குரு பகவானை தரிசித்து செல்வார்கள்.
இந்த ஆண்டு வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) குருபெயர்ச்சி விழா தொடங்குகிறது. அன்று காலை 10.45 அளவில் லட்சார்ச்சனை நடக்கிறது. 22-ந் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.
அன்று இரவு 9மணி அளவில் யாகசாலை தொடங்கி 11.24 மணிக்குள் பரிகார மகாயாகம், மஹா பூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடை பெறுகிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் பாலமுருகன், தக்கார் இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம், தீயணைப்பு நிலைய அலுவலர் ரூபன் ஆகியோர் விழா ஏற்பாடு களை ஆய்வு செய்து வருகின்றனர்.






