search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை காலத்தை முன்னிட்டு எலுமிச்சம்பழம் விலை கடும் உயர்வு
    X

    கோடை காலத்தை முன்னிட்டு எலுமிச்சம்பழம் விலை கடும் உயர்வு

    • கோடை காலத்தை முன்னிட்டு எலுமிச்சம் பழம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனையானது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. எனவே பொதுமக்கள் குளிர்பானங்களை விரும்பி அருந்தி வருகின்றனர். எலுமிச்சை சாறு செறிந்த குளிர்ந்த நீர் அருந்தினால், உடல் வெப்பம் தணிவது மட்டுமின்றி, வயிற்றுப் பிரச்சினைகளும் சரியாகும்.

    மதுரை மாவட்டத்தில் தற்போது எலுமிச்சம்பழத்துக்கு மவுசு அதிகரித்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி மற்றும் பரவை காய்கறி மற்றும் பழச்சந்தைகளில் ஒரு கிலோ எலுமிச்சம் பழம் ரூ.200-க்கு விற்கப்படுகிறது.

    மதுரையில் பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சம்பழம் அதிகமாக விளைகிறது. எனவே வியாபாரிகள் அந்த பகுதிகளுக்கு சென்று போட்டி போட்டுக்கொண்டு எலுமிச்சம் பழங்களை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:-

    பேரையூர் தாலுகாவில் தும்மநாயக்கன்பட்டி, கீழப்பட்டி சந்தையூர், சாப்டூர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் எலுமிச்சை பழம் சாகுபடி ஆகி வருகிறது. இங்கு விளையும் எலுமிச்சை, மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    பேரையூரில் நடப்பாண்டு எலுமிச்சை விளைச்சல் நன்றாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்றைக்கு ரூ.120-க்கு கொள்முதல் ஆகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டு நல்ல மழை பெய்தது. இதனால் கண்மாய், கிணறுகளில் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் உள்ளது.

    எனவே நாங்கள் எதிர்பார்த்ததை போல, எலுமிச்சம்பழ விளைச்சல் நன்றாக அமைந்து உள்ளது. எங்களிடம் வியாபாரிகள் தற்போது ரூ.100 முதல் ரூ.120 வரை கொள்முதல் செய்கின்றனர். மாட்டுத்தாவணி பரவை உள்ளிட்ட காய்கறி சந்தைகளில் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    எலுமிச்சம்பழ விளைச்சலும், விலையும் அமோகமாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு வெயில் உக்கிரமாக இருப்பதால் தேவையும் சற்று அதிகமாக இருக்கும். எனவே எலுமிச்சை பழத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×