search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lemons"

    • கீரமங்கலம் பகுதியில் எலுமிச்சம்பழம் ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், மாங்காடு, அணவயல், பனங்குளம், குளமங்கலம், பேற்பனைக்காடு, நெய்வத்தளி, பெரியாளூர், பாண்டிக்குடி உள்பட கீரமங்கலத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 10 வருடங்களாக தென்னை, பலா உள்ளிட்ட தோப்புகளில் ஊடுபயிராக எலுமிச்சை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 5 டன் முதல் 10 டன் வரை உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மதுரை, கோயம்புத்தூர், கேரளா உள்பட பல பெரு நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    கீரமங்கலம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் கீரமங்கலம், கொத்தமங்கலம், பனங்குளம், கைகாட்டி, மாங்காடு பூச்சிகடை, மறமடக்கி உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள காய்கனி கமிஷன் கடைகள் மூலமாகவும், தனியாகவும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் அங்கு குளிர்பான கடைகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அதனால் கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ ரூ.20-க்கும் ரூ.10-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. சில நாட்களாக ரூ.10-க்கும் கீழே குறைந்தது. இந்நிலையில், நேற்று ஒரு கிலோ ரூ.7-க்கும் ரூ.5-க்கும் கொள்முதல் செய்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.180 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது குளிர் பானங்களின் விற்பனை குறைந்துள்ளதால் கடந்த சில மாதங்களாக படிப்படியாக விலை குறைந்து கிலோ ரூ.10-க்கும் கீழே விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவாக விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.

    இதனால் தோட்டங்களில் பழங்கள் சேகரிக்கும் கூலிக்கு கூட விற்பனை செய்ய முடியவில்லை என்றனர். எலுமிச்சம்பழம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கூறுகையில், கீரமங்கலம் சுற்றியுள்ள விவசாயிகள் கொண்டு வரும் எலுமிச்சம்பழங்களை அன்றாடம் வெளிச்சந்தை விலையை வைத்தே கொள்முதல் செய்கிறோம். கடந்த சில நாட்களாக கொள்முதல் விலையைவிட வெளியூர்களில் விற்பனை விலை குறைவதால் பலத்த நஷ்டம் ஏற்படுகிறது. ஆனாலும் விவசாயிகளிடம் கொள்முதலை நிறுத்தாமல் வாங்கி வருகிறோம் என்றனர்.

    • கரும்புச்சாறு உள்ளிட்ட பானங்களில் கெட்டுப்போன எலுமிச்சை பழங்களை பயன்படுத்துவதாக புகார் வந்தது.
    • 36 கடைகளில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இளநீர், கரும்புச்சாறு, கூழ், ஜூஸ் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    கடைகளில் ஆய்வு

    இந்நிலையில் மாநகர பகுதியில் கோடைக்காலங்களில் விற்பனை செய்யப்படும் ஜுஸ், கரும்புச்சாறு, சர்பத் கடைகளில் தரமற்ற எலுமிச்சை பழங்கள், கெட்டுப்போன எலுமிச்சை பழங்களை பயன்படுத்து வதாகவும், அழுக்கடைந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்து கின்றனர் எனவும் பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர்களும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம் புகார் கூறி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வழிகாட்டுதலின்படி இன்று நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையிலான குழுவினர் டவுன் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    சுமார் 81 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 36 கடைகளில் தரமற்ற பொருட்கள் பயன்ப டுத்தப்ப ட்டது கண்டு பிடிக்கப்பட்டு அதன் உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து அந்த கடைகளுக்கு ரூ.6,800 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த கடைகளில் அரசு உத்தரவை மீறி பயன்ப டுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமார் 75 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

    • கோடை காலத்தை முன்னிட்டு எலுமிச்சம் பழம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனையானது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. எனவே பொதுமக்கள் குளிர்பானங்களை விரும்பி அருந்தி வருகின்றனர். எலுமிச்சை சாறு செறிந்த குளிர்ந்த நீர் அருந்தினால், உடல் வெப்பம் தணிவது மட்டுமின்றி, வயிற்றுப் பிரச்சினைகளும் சரியாகும்.

    மதுரை மாவட்டத்தில் தற்போது எலுமிச்சம்பழத்துக்கு மவுசு அதிகரித்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி மற்றும் பரவை காய்கறி மற்றும் பழச்சந்தைகளில் ஒரு கிலோ எலுமிச்சம் பழம் ரூ.200-க்கு விற்கப்படுகிறது.

    மதுரையில் பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சம்பழம் அதிகமாக விளைகிறது. எனவே வியாபாரிகள் அந்த பகுதிகளுக்கு சென்று போட்டி போட்டுக்கொண்டு எலுமிச்சம் பழங்களை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:-

    பேரையூர் தாலுகாவில் தும்மநாயக்கன்பட்டி, கீழப்பட்டி சந்தையூர், சாப்டூர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் எலுமிச்சை பழம் சாகுபடி ஆகி வருகிறது. இங்கு விளையும் எலுமிச்சை, மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    பேரையூரில் நடப்பாண்டு எலுமிச்சை விளைச்சல் நன்றாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்றைக்கு ரூ.120-க்கு கொள்முதல் ஆகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டு நல்ல மழை பெய்தது. இதனால் கண்மாய், கிணறுகளில் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் உள்ளது.

    எனவே நாங்கள் எதிர்பார்த்ததை போல, எலுமிச்சம்பழ விளைச்சல் நன்றாக அமைந்து உள்ளது. எங்களிடம் வியாபாரிகள் தற்போது ரூ.100 முதல் ரூ.120 வரை கொள்முதல் செய்கின்றனர். மாட்டுத்தாவணி பரவை உள்ளிட்ட காய்கறி சந்தைகளில் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    எலுமிச்சம்பழ விளைச்சலும், விலையும் அமோகமாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு வெயில் உக்கிரமாக இருப்பதால் தேவையும் சற்று அதிகமாக இருக்கும். எனவே எலுமிச்சை பழத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை குறைந்தது
    • ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

    ஈரோடு, ஜூன். 9-

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம் போன்ற பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தினமும் 3 டன் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில் திடீரென விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே பழங்கள் விற்பனைக்கு வந்தன. எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் கோடை காலம் என்பதால் அதன் தேவையும் அதிகரித்தது.

    இதனால் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது. மேலும் கோவில் விசேஷங்கள் அதிக அளவில் தொடர்ந்து வந்ததால் எலுமிச்சம்பழம் தேவை அதிகரித்து தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே இருந்தது.

    இந்நிலையில் மீண்டும் எலுமிச்சம்பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டுக்கு எலுமிச்சம் பழங்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இன்று கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம், பெங்களூர், சேலம், கோவை, திருச்சி போன்ற பகுதிகளிலிருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இன்று மட்டும் 5 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

    வரத்து அதிகரிக்க தொடங்கியதன் எதிரொலியாக விலையும் சரிய தொடங்கியது. இன்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80-க்கு விற்பனை யானது. சில்லறையில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.5-க்கு விற்பனையானது. ஒரு கிலோவில் 22 முதல் 25 எலுமிச்சை பழங்கள் உள்ளன.

    கீரமங்கலம் பகுதியில் வரத்து அதிகரிப்பால் எலுமிச்சை பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    கீரமங்கலம்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர். குளமங்கலம், பனங்குளம், பாண்டிக்குடி, நெய்வத்தளி, சேந்தன்குடி, நகரம் கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் தென்னந்தோப்புகளுக்குள்ளும், தனியாகவும் எலுமிச்சை சாகுபடி செய்து வருகின்றனர். கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, புளிச்சங்காடு கைகாட்டி, பனங்குளம், குளமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 10 டன் வரை எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக வருகிறது.

    ஆனால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 5-க்கும் குறைவாக வாங்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வியாபாரிகளும் மொத்தமாக வாங்கி வெளியூர்களுக்கு அனுப்பும் போது ரூ.10-க்கும் குறைவாகவே விற்கப்படுவதால் அவர்களுக்கும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு கிலோ எலுமிச்சை பழங்கள் ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. அதனால் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகபட்ச விலை ரூ.20-க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது கிலோ ரூ. 10, ரூ.12 என்று விற்கப்பட்டு வந்த எலுமிச்சை பழங்கள் தற்போது கிலோ ரூ. 5-க்கு விற்பனை ஆகிறது. அதனால் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை இல்லாமல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. உற்பத்தி செலவுக்கு கூட பழங்களின் விற்பனை இல்லை என்பதால் ஒவ்வொரு நாளும் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது.

    கீரமங்கலம் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றை பாதுகாப்பாக வைக்க குளிர்பதன கிடங்கு இல்லாததால் கட்டுபடியான விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் நட்டத்தில் விற்கும் நிலை உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக வேட்பாளர்கள் சொல்லிவிட்டு சென்றுவிடுகின்றனர். அதன் பிறகு நடவடிக்கை எடுப்பதில்லை. குளிர்பதன கிடங்கு இருந்தால் விலை குறையும் காலங்களில் மலர்கள், காய், கனிகளை வைத்திருந்து விலை உயரும் போது விற்பனை செய்ய முடியும்.

    அதேபோல எலுமிச்சை ஜூஸ் என்று ரசாயனம் கலந்த பானங்களை விற்கும் கடைகாரர்கள் நேரடியாக எலுமிச்சை பழங்களை கொள்முதல் செய்து தரமான ஜூஸ்களை விற்பனை செய்தால் மக்களுக்கும் பாதிப்பு இல்லை. விவசாயிகளுக்கும் எலுமிச்சை பழங்களின் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.“

    இவ்வாறு விவசாயிகள் கூறினர். 
    ×