என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ளாரா என தனிப்படையினர் போலீசார் தேடி வருகின்றனர்.
    ஓசூர்:

    தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் ஏமாற்றியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய காவல் துறை தீவிரம் காட்டியது. அதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதனை தொடர்ந்து அவர் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளார்.

    அவரை பிடிக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 9 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். தமிழகத்தில் விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ளாரா என தனிப்படையினர் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

    இந்த நிலையில் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் பதுங்கி உள்ளார் என்ற தகவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் ஓசூர் பகுதியில் உள்ள ரிசார்ட், சொகுசு விடுதிகள் அதேபோல பெங்களூரு புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு விடுதிகளில் உள்ளாரா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


     
    கிருஷ்ணகிரி அருகே சூதாடிய 14 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் அவனதாப்பட்டி சிறுவர் பூங்கா பகுதியில் ரோந்து சென்ற போது பணம் வைத்து சூதாடிய சங்கர் (வயது 27), மகேந்திரன் (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கெலமங்கலம் போலீசார் ரோந்து சென்ற போது பணம் வைத்து சூதாடிய ராஜாமணி (33), பிரகாஷ்குமார் (49), ரங்கநாதன் (38), மஞ்சுநாத் (23), சந்திரசேகர் (32), குப்புராஜ் (58) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல கெலமங்கலம் போலீசார் ரோந்து சென்ற போது பணம் வைத்து சூதாடிய வெங்கடேஷ் (24), சந்திரப்பா (36), மணி (31), சதீஷ் (23), முருகேஷ் (45), அபிமனு (42) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 200 பறிமுதல்செய்யப்பட்டது.
    கிருஷ்ணகிரி அருகே கார் மோதி லாரி உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி அருகே தட்ரஹள்ளியை சேர்ந்தவர் குமார் (வயது 46). லாரி உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் சுங்கச்சாவடி அருகில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த சொகுசு கார் குமார் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த குமார், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூர் அருகே சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர் டவுன் போலீசார் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய தேர்ப்பேட்டை சந்திரன் (வயது 33), முனிகுட்டியப்பா நகர் முரளி (24), நரசிம்மா காலனியை சேர்ந்த ஷாகித் (30), வசந்த்நகர் வேலன் (33), ஜனப்பர் தெரு கோபிநாத் (28), அப்பாவு நகர் ராஜ்குமார் (31), ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பாபு (35) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரத்து 240 பறிமுதல் செய்யப்பட்டது.
    தேன்கனிக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை தாலுகா பாலேகானூர் அருகே உள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்தவர் கவியரசு (வயது 24). கூலித் தொழிலாளி. இவர் கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்து வந்தார். இதனை அவருடைய தாய் கண்டித்தார். இதில் மனமுடைந்த கவியரசு ஓசூர் அருகே தொடுதேப்பள்ளியில் ஒரு தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சூளகிரி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சூளகிரி அருகே உள்ள டேம் எப்பளத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 60). கூலித் தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் எப்பளம்-மேடுப்பள்ளி சாலையில் தேவாலயம் அருகில் சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து, சூளகிரி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
    வேப்பனப்பள்ளி அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பனப்பள்ளி:

    வேப்பனப்பள்ளி போலீசார் பூதிமுட்லு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடை ஒன்றில் சோதனை செய்த போது ரூ.1,616 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர் நூரான் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.
    பர்கூர் அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    பர்கூர் தாலுகா சிகரலப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி வனிதா (வயது 41). இவர்களின் மகன் கார்த்தி (22). இந்தநிலையில் வனிதாவும், கார்த்தியும் மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வளைவில் திரும்பிய போது பின்னால் அமர்ந்திருந்த வனிதா தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வனிதா இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் நாமால்பேட்டை பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் நரசிம்மலு குட்டா (வயது62). இவர் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக, ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது, கடையில் பதுக்கிவைத்திருந்த 16.7 கிலோ அளவிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நரசிம்மலு குட்டாவை, போலீசார் கைது செய்தனர்.
    கெலமங்கலம் அருகே மரத்தில் லாரி மோதி கிளீனர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அருகே உள்ள நெருப்புகுட்டையை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 17). லாரி கிளீனர். நேற்று முன்தினம் இவர் லாரியில் கெலமங்கலம் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சளகிரி பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார். லாரியை டிரைவர் சரத்குமார் (21) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது மஞ்சளகிரி பஸ் நிறுத்தம் அருகில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் டிரைவர், கிளீனர் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முனிராஜ் இறந்தார். டிரைவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வாகன ஓட்டிகள், பயணிகள், பஸ்களில் பயணிப்பவர்கள கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    ஓசூர்:

    தமிழகத்தில் ஒருவருக்கு, ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், கர்நாடக- தமிழக மாநில எல்லைகளில் வாகன ஓட்டிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில், தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வாகன ஓட்டிகளுக்கு, சுகாதாரத் துறையினர் உடல் வெப்பநிலை பரிசோதனையையும் மேற் கொண்டனர்.

    இந்த நிலையில், ஓசூர் சப்-கலெக்டர் தேன்மொழி, நேற்று மாநில எல்லையில், இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

    மாநில எல்லையில் வாகன ஓட்டிகளின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்தும், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வாகன ஓட்டிகள், பயணிகள், பஸ்களில் பயணிப்பவர்கள கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    இதையொட்டி, எல்லையிலேயே தடுப்பூசி முகாம்கள் அமைத்து, தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், மாநில எல்லையில் வாகன போக்குவரத்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உத்தனப்பள்ளி அருகே குடிபோதையில் தகராறு செய்த அசாம் வாலிபர், குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே பாத்தகோட்டா பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு மேற்கு வங்காளம் ஜால்பைகுரி பகுதியை சேர்ந்த சம்பு தண்டி (வயது 37) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இதேபோல் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜிபு (27) என்ற வாலிபரும் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் 2 பேரும் கல்குவாரியில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்து சமையல் செய்து வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் ஜிபு அடிக்கடி மது குடித்து விட்டு சம்பு தண்டியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு சம்பு தண்டி, அறையில் சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது மதுபோதையில் தள்ளாடியப்படி ஜிபு வந்தார். திடீரென அவர், சம்பு தண்டியின் சாப்பாட்டு தட்டை காலால் எட்டி உதைத்தார். மேலும் சமம்பு தண்டியையும் திடீரென தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சம்பு தண்டி, அருகே கிடந்த காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து ஜிபுவை குத்தினார். இதில் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயம் அடைந்த ஜிபு  சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீசார் விரைந்து வந்தனர். கொலையுண்ட ஜிபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பு தண்டியை , கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடிபோதையில் தகராறு செய்த அசாம் வாலிபர், குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×