என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஓசூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    புதுச்சேரி மாநிலம் திப்பராயபேட்டை பகுதியை சேர்ந்தவர் தேசிகன். இவரது மனைவி நதாலி (வயது 50). இவர்கள் ஓசூர் சேவகானப்பள்ளி அருகே கக்கனூரில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நதாலி, உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதற்காக பல மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூரில் கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஓசூர் உழவர் சந்தை பகுதியில் விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது உழவர் சந்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் கையில் பையுடன் இருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி கவிதா (வயது28) என்பதும், தற்போது அவர் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள பள்ளூரில் தங்கி இருந்து கஞ்சா கடத்தி வந்து ஓசூர் பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவர் தனது கூட்டாளிகளான ஆம்பூரை சேர்ந்த அஜீத் (21), ஓசூர் இமாம்பாடா பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகியோருடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கவிதா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து ஆயிரம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சூளகிரி அருகே மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதனாசேரியை சேர்ந்தவர் ராகுல் (வயது18). இவர், வாட்டர் சர்வீஸ் நிலையம் நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான ஷியாம், கோகுல் ஆகியோருடன், மோட்டார் சைக்கிளில் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்றார். சூளகிரி அருகே மேலுமலை அருகே சென்றபோது, முன்னால் சென்ற மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த, ராகுல், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். ஷியாம், கோகுல் லேசான காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அரசு ஆஸ்பத்திரி சாலையில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக பெத்தனப்பள்ளி அருகே உள்ள கெட்டூரை சேர்ந்த முருகேசன் (வயது 32), பூந்தோட்டம் கிருஷ்ணமூர்த்தி (59), செம்படமுத்தூர் பெருமாள் (48) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,490 மற்றும் 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சூளகிரி போலீசார் உத்தனப்பள்ளி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய பெரிய மோதுகானப்பள்ளியை சேர்ந்த அருண்குமார் (வயது 30), சதீஷ் (26), சரண் (23), பீரேப்பள்ளி குமரேசன் (25), முரளி (30), மாதேஷ் (32) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,140 பறிமுதல் செய்யப்பட்டது.
    பர்கூர் அருகே உடல்நலக்குறைவால் வாலிபரும் வேதனையில் அவரது தாயாரும் வி‌ஷம் குடித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா காரகுப்பம் அருகே எமக்கல் நத்தம் சாலையில் வசித்து வருபவர் பூபதி (வயது 50). இவர் ஐதராபாத்தில் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார் .

    இவரது மனைவி கஸ்தூரி (45). இவர்களுக்கு பிரேம்குமார் (23), புனித் (21) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் பிரேம் குமாருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டது . இதனால் அவர் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு மாற்று கிட்னி பொருத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக அவரது தாயிடமிருந்து கிட்னி பெற்று பிரேம் குமாருக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. அந்த நேரத்தில் பிரேம் குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் பிரேம் குமாருக்கு மாற்று கிட்னி பொருத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த பிரேம்குமார் நேற்று இரவு தனது வீட்டில் வி‌ஷத்தை குடித்தார். மகன் வி‌ஷம் அருந்தி மயங்கி விழுந்து கிடப்பதைப் பார்த்த தாய் கஸ்தூரி வேதனை அடைந்து அவரும் வி‌ஷத்தை குடித்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த கஸ்தூரியின் இரண்டாவது மகன் புனித் தனது தாயும், அண்ணனும் வி‌ஷம் குடித்து மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் 2 பேரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கஸ்தூரி மற்றும் அவரது மகன் பிரேம்குமார் ஆகியோர் உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    பர்கூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடியில் அதே பகுதியை சேர்ந்த காதர் (வயது 52). இவரை லாட்டரி சீட்டுகளை விற்றதாக பர்கூர் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது.
    கந்திகுப்பம் அருகே லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    கந்திகுப்பம் அருகே கிருஷ்ணகிரி குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் காளி கோவில் பகுதியில் விழுப்புரத்தை சேர்ந்த அன்பழகன் (வயது 39) என்பவர் பைப்லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது குப்பத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அன்பழகனை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பழகன் இறந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை, ஓசூரில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை தாலுகா கண்டிகானப்பள்ளி அருகே உள்ள எலசெட்டியை சேர்ந்தவர் ஸ்ரீ வரதராஜன் (வயது 31). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இந்த நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் திருகேரி அருகே உள்ள எம்.சி.ஹள்ளியை சேர்ந்தவர் கோபி (45). இவர் ஓசூரில் சாந்தி நகர் பகுதியில் தங்கி போட்டோகிராபராக பணி செய்து வந்தார். இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த கோபி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி வாகித் நகரை சேர்ந்தவர் முகமது யூசுப் (வயது 52). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூருவுக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 6 கிராம் தங்க மோதிரங்கள் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து முகமது யூசுப் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரியில் வீட்டில் நகை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சித்ரா வைசாலினி (வயது 25). இவர் குடும்பத்துடன் வீட்டில் கீழ் தளத்தில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று மர்ம நபர் இவரது வீட்டிற்கு வந்து, வீட்டின் முதல் தளத்தில் உள்ள கதவை உடைத்து உள்ளே சென்று அங்கு இருந்த 2½ பவுன் தங்க நகையை திருடி சென்றார். இது குறித்து அவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் நகையை திருடியது கிருஷ்ணகிரி வி.ஐ.பி. நகரை சேர்ந்த சதீஷ்குமார் (25) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
    உத்தனப்பள்ளி அருகே சரக்கு வாகனம் மோதி துணி வியாபாரி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் நேதாஜி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36), துணி வியாபாரி. இவர் ஊர் ஊராக சென்று தவணை முறையில் துணிகளை விற்பனை செய்வதும், பின்னர் அதற்கான பணத்தை ஒவ்வொரு வாரமும் தவணை முறையில் வசூல் செய்தும் வந்துள்ளார்.

    அந்த வகையில் விற்பனை செய்த துணிகளுக்கான பணத்தை வசூல் செய்ய நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றார். கெலமங்கலத்தில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    தேன்துர்க்கம் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் சுரேஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, உத்தனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    சரக்கு வாகன டிரைவர், வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. உடனே போலீசார் சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து சுரேஷின் மனைவி நாகராணி (32), மகள் அனிஷ்கா (11) மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் சுரேஷ் உடலை பார்த்து கதறி அழுதனர். அதிலும் சுரேஷின் மனைவி கதறல் அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. விபத்து தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஓசூர் உட்கோட்டத்தில் 866 இடங்களில் 3,174 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தெரிவித்தார்.
    மத்திகிரி:

    ஓசூர் அருகே உள்ள மத்திகிரியில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கும், ஓசூர் உட்கோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நன்கொடை வழங்கிய தொழில் அதிபர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் காவல் துறை சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் வரவேற்றார்.

    இதில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் கலந்து கொண்டு போலீசாரையும், நன்கொடையாளர்களையும் பாராட்டி, சான்றிதழ், பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஓசூர் காவல் உட்கோட்டத்தில் 866 இடங்களில் 3 ஆயிரத்து 174 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் 15 அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றங்களை தடுக்கவும், குற்றங்களில் ஈடுபடுபவர்களை விரைவாக கண்டறியவும் முடியும்.

    ஓசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒருவழிப்பாதைகள் அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி, கிருஷ்ணகிரி போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், ராஜீ, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பாலகிருஷ்ணன், தங்கவேல், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×