என் மலர்
கிருஷ்ணகிரி
- பட்டாசு கடை நடத்த கடுமையான கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது.
- யாராவது அனுமதியின்றி விற்பனை செய்கிறார்களா? என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ஓசூர்:
தமிழக-கர்நாடகா மாநில எல்லையான பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அத்திப்பள்ளியில் ஒரு பட்டாசு கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர்.
இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பட்டாசு கடை நடத்த கடுமையான கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது.
மேலும், விதிமுறைகளை மீறி யாராவது பட்டாசுகளை பதுக்கி விற்பனை செய்தல், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
மேலும் மாவட்டத்தில் யாராவது அனுமதியின்றி விற்பனை செய்கிறார்களா? என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகே ஜுஜுவாடி திருவள்ளுவர் நகரில் முறையான அரசு அனுமதியின்றி, 85 அட்டைப் பெட்டிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது40) என்பவரை சிப்காட் போலீசார் கைது செய்து, பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், நேற்று தொடர் நடவடிக்கையாக அதே பகுதியில், போலீசார் அதிரடி ஆய்வு செய்து, தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் 32 அட்டைப்பெட்டிகளில் பட்டாசுகளை அனுதியின்றி பதுக்கிவைத்திருந்ததாக வெங்கட விஜயன் (28) என்பவரை போலீசார் கைது செய்து, பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
- அக்கம் பக்கத்தினர் பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- யாராவது அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரிகை பக்கம் கோட்ட சாதனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா.
இவரது மகன் பாலாஜி (வயது 35). டிரைவரான இவருக்கு திருமணமாகி ராதா என்ற மனைவியும், விஷ்னு,ஜோதி மூர்த்தி என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவியும் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் பாலாஜி தனியாக வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் பாலாஜி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வீடு வெளிப்புறம் பூட்டிருந்த நிலையில், உறவினர்கள் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாலாஜி பாதி அழுகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உடனே பாலாஜியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை வேறு யாராவது அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- பெண்ணை தாக்கிய சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட மஜீத்கொல்ல அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயி. இவரது மகள் வெண்பா (வயது20).
அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் வித்யசாகர் (25), அவரது நண்பர் சந்தோஷ் (25). இருவரும் ராணுவ வீரர்கள் ஆவர்.
இந்நிலையில் மூர்த்திக்கும், வித்யசாகருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே சந்தோஷ், வித்யசாகர் ஆகிய 2 பேரும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வித்யசாகருக்கும், மூர்த்திக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த வெண்பா அதனை தட்டிக்கேட்டார்.
உடனே வித்யசாகரும், சந்தோஷூம் சேர்ந்து மூர்த்தியையும், வெண்பாவையும் சரமாரியாக தாக்கினர். இதில் தந்தை, மகள் 2 பேரும் காயமடைந்தனர். உடனே அவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து வெண்பா மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராணுவ வீரர்களான வித்யசாகர், சந்தோஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
பெண்ணை தாக்கிய சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஊத்தங்கரை அருகே தரைப்பாலத்தில தேங்கும் நீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டியில் ரெயில் வே தரைப்பாலம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அ.தி.மு.க., ஆட்சி யில் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் மழைக்கா லங்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்பதால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தேங்கிய தண்ணீரை கடந்த செல்லும் பொழுது பழுதாகி நிற்பதும், போக்குவரத்து தடையும் ஏற்படுகிறது.
காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தத் தரை பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற நிரந்தர மான நடவடிக்கை எடுக்க கோரி சாமல்பட்டி பொது மக்கள் மற்றும் வணிகர்கள் அனைத்து கடைகளையும் இன்று அடைத்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்ட னர். இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திமுகவினர், அதிமுகவினர், வணிகர் சங்க அமைப்பினர் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன், ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் மறியலில் ஈடுப்பட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
- ஒசூரில் மாநில அளவிலான சப்ஜூனியர் எறி பந்து போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்ட அணியினர் சாதனை படைத்தனர்.
- தமிழகத்தின் 37 மாவட்டங்களிலிருந்து 16 வயதிற்கு உட்பட்ட 800 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர்.
கிருஷ்ணகிரி மாவட்ட எறிபந்து சங்கத்தின் சார்பில், மாநில அளவி லான சப்-ஜூனியர் எறிபந்து போட்டிகள், ஓசூர் தின்னூரில் உள்ள தனியார் பள்ளியில், 2 நாட்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இந்த போட்டிகளை, முதன்மை விருத்தினராக கலந்து கொண்ட ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தார்.
இந்திய எறிபந்து சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட எறிபந்து சங்க தலைவர் செந்தமிழ்செல்வன் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தவமணி வரவேற்றார். கிருஷ்ணகிரி மாவட்ட எறிபந்து சங்க புரவலரும், ஓசூர் மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான எஸ். நாராயணன், தனியார் பள்ளி தாளாளர் ஆர்.தீபா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதில், தமிழகத்தின் 37 மாவட்டங்களிலிருந்து 16 வயதிற்கு உட்பட்ட 800 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டிகள், பகல், இரவாக 122 ஆட்டங்கள் நடைபெற்றது.
நேற்று போட்டிகள் நிறைவடைந்து, அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. போட்டிகளில் மாணவர் மற்றும் மாணவியர் அணியில் கிருஷ்ணகிரி மாவட்ட அணியே முதலிடத்தை பிடித்து சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றன.மேலும் வீரர், வீராங்கனை யருக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டது.
அதேபோல், சென்னை மாவட்ட அணி மாணவ, மாணவியர் அணி 2-வது இடத்தையும் , 3-வது இடத்தை ஈரோடு மாவட்ட மாணவ, மாணவியர் அணியும் பிடித்தன. மேலும் இதில், பள்ளி முதல்வர் பவானி சங்கரி, ஆசிரிய, ஆசிரியை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடும் நடவடிக்கை எனப்படும் தெரிவித்துள்ளார்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்த பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
விடுதிகள் பதிவு
தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங் கள் (ஒழுங்கு முறை) சட்டம் 2014-ம் ஆண்டும் நடை முறைக்கு கொண்டு வரப் பெற்றது. அதன்படி, தனியா ரால் நடத்தப்படும் பணிபுரி யும் மகளிருக்கான இல்லங் கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல், உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வரும் பணிபுரியும் பெண்க ளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்தும் உரிமையாளர்கள் விடுதி களை பதிவு செய்யவும், உரிமம் பெறவும் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளு மாறு கேட்டுக்கொள்ள படுகிறது.
மேலும், தனியார் பணிபு ரியும் மகளிர் விடுதிகளின் உரிமையாளர்கள் விடுதிக்கு உரிமம் பெறுவதற்கு இணை யதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துக் கொள் ளப்படுகிறது.
தகுதிகள்
பணிபுரியும் மகளிர் விடுதியின் உரிமம் பெறுவ தற்கு பொதுப்பணித்து றையின் கட்டிட உறுதித் தன்மை சான்று, தீயணைப்பு தடையின்மை சான்றிதழ், தாசில்தாரால் வழங்கப்படும் கட்டிட உரிமம் சான்று, சுகாதாரச் சான்றிதழ் மற்றும் விடுதி காப்பாளர், பாதுகாவ லரின் மருத்துவச் சான்று, நன்னடத்தை சான்று ஆகிய வை பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டி டத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும்.
உரிமம் பெறாமல் செயல் படும் பணிபுரியும் மகளிருக் கான இல்லங்கள் மற்றும் விடுதிகளை நடத்துபவர்கள் மீது சட்டப்படி 2 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும், அதையும் மீறி நடத்துபவர்கள் மீது ரூ.1 லட்சம் அபராதமும், 3 முதல் 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்ப டும்.
தொடர்பு கொள்ளலாம்
எனவே, தனியார் பணிபுரியும் மகளிர் விடுதி கள் நடத்தும் உரிமையா ளர்கள், பதிவு செய்யப்படா மல் செயல்படும் விடுதிகளை உடனடியாக இணைதளம் வாயிலாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.21, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரி யிலும், 04343-235717 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
- கிருஷ்ணகிரியில் தனியார் வேலைவாயப்பு முகாம் மூலமாக 756 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
- 102 தனியார்கள் நிறுவனங் கள் பங்கேற்றன
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்து றையில் வேலை வாய்ப்பு முகாமை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் சப் கலெக்டர் வந்தனா கார்க் ஆகியோர் துவக்கி வைத்துர 756 -நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். இதில் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்து றை இணை இயக்குநர் ஆ.லதா ஆகியோர் முன்னி லை வகித்தனர்.
இதில் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்ஒய்.பிரகாஷ் பேசியாதவது;- தமிழ்நாடு முதலமைச்சர் படித்த இளைஞர்கள், வேலை வாய்ப்பற்ற இளை ஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்க ளை செயல்படுத்தி வருகி றார்கள். அவ்வகையில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கிதர வேண்டும் என்ற அடிப்ப டையில் முதலமைச்சர் கடந்த 20.3.2022 அன்று மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை தொ டங்கி வைத்தார்.முதலீடா ளர்கள் மாநாட்டை நடத்தி பல்வேறு நிறுவ னங்கள் அமைவதற்கு வழிவகை செய்துள்ளார்.
அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டைட்டான், டாடா எலக்ரா னிக்ஸ், டெல்டா, ஓலா மற்றும் செய்யாறு காலணி தயாரிப்பு தொழிற்சாலை துவக்கப்பட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அதேப்போல அரசு துறையில் வேலை வாய்ப்புகள் போட்டித் தேர்வுகளின் வாயிலாகவே அரசுப் பணிகளில் வேலை வாய்ப்பு சாத்தியமாகும். அரசு வேலைவாய்ப்புகள் பெற உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் தன்னாார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் நடை பெறும் இவ்வகுப்பு களில் பயிற்சி பெற்றுள்ளவர்க ளில் 2023 வரை 131 நபர்கள் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பல்வேறு அரசு துறைகளில் பணி யாற்றி வருகிறார்கள் இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக தனியார் துறை வேலை வாய்ப்பு அரங்கு களை நடை பெற்ற இம்முகா மில் அசோக்லைலேன்ட், டி.வி.எஸ், டெல்டா, டாடா எலக்ரானிக்ஸ் உள்ளிட்ட 102 தனியார்கள் நிறுவனங் கள் பங்கேற்றனர். இம்முகா மில் 2580 நபர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துக் கொண்டனர். அவர்களில் 757 நபர்களுக்கு நிறுவனங் கள் சார்பில் பணி நியமன ஆணைகளை வழங்கப்பட் டது.
- கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் 971 வழக்குகளில் ரூ.3.83 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
- இது 5-வது சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஆகும்.
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமனற வளாகத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்ப ணிகள் ஆணைக்கு ழுவின் வழிகாட்டுதலின் படி, கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்கு ழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி சுமதிசாய் பிரியா முன்னி லையில், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. இந்நிகழ்ச்சியின் போது அவர் பேசுகையில், இந்த வருடத்தில் இது 5-வது சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஆகும்.
வழக்கா டிகள் நிலுவை யில் உள்ள தங்கள் வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு காணலாம். ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வங்கிகள், பைனான்ஸ் நிறுவனங்களின் முன் சமரசங்களின் வாயிலாக 99 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, ரூ.1 கோடியே 11 லட்சத்து 48 ஆயிரத்து 619 வசூல் ஆகியுள்ளது.
எனவே, இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி, நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்துக்கொள்ள முன்வர வேண்டும். இது குறித்து மற்றவர்க ளுக்கும் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
நேற்று கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்ச ம்பள்ளி, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்ற ங்களில் நிலுவை யில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் மற்றும் முன் வழக்குகள் ஆகியவை விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 971 வழக்குகளில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 28 ஆயிரத்து 271-க்கு தீர்வு காணப்பட்டது.
மேலும், முதன்மை மாவட்ட நீதிபதி, குடும்ப நல வழக்கில் இணைந்த ஜோடிக்கு இனிப்பு மற்றும் மரக்கன்று வழங்கியும், பாகப்பிரிவினை வழக்கில் இணைந்த குடும்பத்திற்கு இனிப்புகள் வழங்கியும் வாழ்த்தினார்.
இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிபதி நாகராஜன், மாவட்ட அமர்வு நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா, முதன்மை சார்பு நீதிபதி மோகன்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஜெனிபர், நீதித்துறை நடுவர் எண்.1 கார்த்திக் ஆசாத், வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ராமசந்திரன், செயலாளர் சத்தியநாராயணன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவால் செய்யப்பட்டிருந்தது.
- ஒசூரில் பட்டாசுக் கடைகள் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தாசில்தார் வலியுறுத்தினர்.
- அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை கோர வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரியில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து, ஓசூர் அருகே பட்டாசு ஆலையை பார்வையிட சென்றபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த, மாவட்ட வருவாய் அலுவலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துகளை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை கோர வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் 15பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
இவ்வாறு, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், எல்லை பகுதி அருகிலும். நடந்த பட்டாசு வெடி விபத்துக்கள், உயிர் சேதங்கள் பொது மக்களை அச்சத்திலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளன. அடுத்த (நவம்பர்) மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஓசூர் மாநகரில் உள்ள பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஓசூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று, தாசில்தார் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய அவர், "பட்டாசு கடைகளில் 18 வயதிற்கு கீழ் யாரையும் வேலைக்கு அமர்த்த க்கூடாது. என எச்சரித்தார். மேலும், தொழிலாளர்கள் குறித்த விபரம் முழுமையாக சேகரித்து தினமும் வருகை பதிவேடு பின்பற்ற வேண்டும், கட்டா யமாக தொழிலா ளர்களுக்கு இன்சூரன்ஸ் செலுத்திருக்க வேண்டும் என்றும்,பட்டாசு கடைகளில் இரண்டு கதவுகள் திறந்த நிலையிலும், தீயை அணைக்க மணல், நீர் வாளிகள் இருப்பது மிகவும் அவசியம் எனவும் அறிவுறுத்தினார். இதில், 70 பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
- ஓசூரில் அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ. 5 ஆயிரம் மற்றும் செல்போனை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
- ஓசூர் டவுன் போலீசார் நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள குடிசாதனபள்ளியை அடுத்த கரியசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி செல்வ வின்னரசி (வயது30). இவர் பேரிகை அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று செல்வவின்னரசி ஓசூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவரின் கைப்பையில் இருந்த ரூ.5 ஆயிரத்தையும், செல்போனையும் காணவில்லை. இதுகுறித்து செல்வவின்னரசி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தான் பஸ்சுக்காக காத்திருந்தபோது தனது கைபையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், செல்போன் காணவில்லை என்றும், எனது அருகில் பஸ்சுக்காக 3 பெண்கள் காத்திருந்தனர். அவர்கள் தான் திருடி இருக்கவேண்டும் என்று சந்தேகத்தின் பேரில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பெண்களையும் ஓசூரில் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் விசாரித்ததில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் லட்சுமி புரா பகுதியைச் சேர்ந்த ரேணுகா (45), பார்வதி (35), லட்சுமி என்கிற சாவித்ரி (55) ஆகிய 3 பேரும் செல்வ வின்னரசியிடம் பணம், செல்போன் திருடியது தெரியவந்தது. 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
- கிருஷ்ணகிரி அருகே ஆந்திரா எல்லையில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார்.
- வனத்துறையினர் யானை காட்டுக்குள் விரட்ட ஏற்பாடு
கிருஷ்ணகிரி அடுத்துள்ள காளிகோவில் அருகே ஆந்திர மாநில எல்லையில் ஒற்றை யானை தாக்கி விவசாயி லட்சுமணன் வயசு (60), என்பவர் உயிரிழந்துள்ளார். இரவு 12:30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. காளி கோயில் அருகே ஆந்திர மாநிலத்தில் உள்ள பொம்ம தேசகொள்ளை என்ற கிராமம் உள்ளது. இங்கு லெட்சுமணன் மனைவி வீரம்மா உடன் நெல் வயல் காவலுக்கு நேற்று இரவு சென்று உள்ளார்.
காவல் இருந்த போது ஒரு பகுதியில் மனைவி தீ வைத்து விலங்குகள் வரமால் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். விவசாயி லெட்சுமணன் அங்குள்ள தென்னை மரத்தின் கீழே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றை யானை விவசாயியை தாக்கி மிதித்து கொன்றது. இது அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் சென்று யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கந்திகுப்பம் போலீசார் விவசாயியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கிருஷ்ண கிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவ மனைக்கு அனுப்பி உள்ளனர்.
இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தி யுள்ளது
- கிருஷ்ணகிரியில் பெண் வீராங்கனைகளின் விழிப்புணர்வு பிரசார வாகன பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- 10 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து குஜராத் மாநிலம் ஏக்தா நகர் சென்றடைகின்றனர்.
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப் போம், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தலைப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பெண் வீராங்கனைகளின் மாபெரும் விழிப்புணர்வு பிரசார வாகன பேரணி தொடங்கி உள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் (ஸ்ரீநகர்), மேகாலாயா (சில்லாங்), தமிழ்நாடு கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களில் இருந்து தொடங்கி 75 மோட்டார்சைக்கிளில் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள், 15 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என 10 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து குஜராத் மாநிலம் ஏக்தா நகர் சென்றடைகின்றனர்.
கடந்த 5-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த வாகன பேரணி நேற்று கிருஷ்ணகிரி வந்தது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் சரயு, மத்திய ரிசர்வ் காவல் படையின் துணை தலைவர் இமான்ஸ்சுகுமார் ஆகி யோர் வரவேற்று வாகன பெண் வீராங்க னைகளுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்புரை யாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் விஜயகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் துணை ராணுவ படையின் மாவட்ட தலைவர் சுப்பிரமணி, துணை தலைவர் வெங்கடராமன், சி.ஆர்.பி.எப் கமாண்டோ குரூப் துணை ஆய்வாளர் வீரபத்திரன், கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட சி.ஆர்.பி.எப். கமாண்டோ குரூப் மற்றும் முன்னாள் மத்திய ஆயுத காவல் படை வீரர்கள் நலச்சங்கம் மற்றும் காவேரிப்பட்டணம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தருமபுரி ஜவான்ஸ் குரூப் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்






