என் மலர்tooltip icon

    கரூர்

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது
    • வன்முறைகளை எதிர்க்கும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை கடைபிடிக்கும் பொருட்டும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உறுதிமொழி ஏற்புக் கூட்டம் நடைபெற்றது

    கரூர்,

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. வன்முறைகளை எதிர்க்கும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை கடைபிடிக்கும் பொருட்டும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உறுதிமொழி ஏற்புக் கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் துணைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளர்கள் அசோகன், முத்துராமன், மேலாளர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் வைத்தியநாதன் மற்றும் விழிப்புணர்வு அதிகாரி, மாதேஸ்வரன், துணை மேலாளர் (பாதுகாப்பு), சங்கிலிராஜன், துணை மேலாளர் (பாதுகாப்பு) ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து எடுத்துக் கொண்டனர்.

    • ஏராளமான மயில்கள் வந்து கொத்தி தின்பதால் பயிர்கள் நாசமடைகின்றன
    • மயில்கள் வராமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

    கரூர்,

    கரூர் நொய்யல், அத்திப்பாளையம், குப்பம், கோம்புப்பாளையம், ஓலப்பாளையம், நல்லிக்கோவில், ஒரம்புப்பாளையம் பேச்சிப்பாறை, நடையனூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, பழமாபுரம், புன்னம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இந்த பகுதிகளில் ஏராளமான மயில்கள் வருவதால் பயிர்களை மயில்கள் கொத்தி நாசப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே மயில்கள் இப்பகுதிக்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • பைக் பறிமுதல் செய்யப்பட்டது

    கரூர்,

    கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பெரியசாமி நகரை சேர்ந்தவர் பாலாஜி ராமசாமி (வயது 27). இவர் தனது வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். அதனை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பாலாஜி ராமசாமி கொடுத்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்து, அந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • புனிதநீராடி தீர்த்தகுடம் மற்றும் பால்குடம் எடுத்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள்
    • அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்

    கரூர்,

    தோகைமலை அருேக வெள்ளப்பட்டியில் மகாமாரியம்மன் ேகாவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி தீர்த்தகுடம் மற்றும் பால்குடம் எடுத்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக தோகைமலை குறிஞ்சி நகர் பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து இங்கிருந்து பால்குடம், காவடி எடுத்து கொண்டு தோகைமலையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வெள்ளப்பட்டி மகா மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு தயாராக இருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி தோகைமலை தமிழ்சங்கம் சார்பில் அதன் நிறுவனர் காந்திராஜன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    • துாய்மை பணியாளர்களுக்கு இவச வீட்டுமனை பட்டா வழங்க திட்டம்
    • நடவடிக்கை மேற்கொண்டு வருதாக கரூர் கலெக்டர் தகவல்

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கம் ஊரகப்பகுதி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-அனைத்து கிராமங்களிலும் குப்பைகளை முழுமையாக அகற்றி மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற கிராமங்களை உருவாக்க அனைத்து கிராமங்களிலும், அனைத்து பள்ளியிலும், அங்கன்வாடிகளிலும் கழிவறைகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். குப்பைகள் இல்லாத கிராமங்களை உருவாக்குவது நம்முடைய முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.

    தூய்மை காவலர்கள் மூலம் நாள்தோறும் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு தெருவிற்கும் குடிநீர் செல்கிறதா?, சாலைகள் இருக்கிறதா?, நாள்தோறும் குப்பைகள் சேகரிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.தூய்மை காவலர்கள் தெருக்களை சுத்தம் செய்ய குறுகிய காலத்தில் வரவில்லை என்றால் புகார் தெரிவிப்பதற்கான ஒரு அமைப்பையும் உருவாக்க வேண்டும். சேகரிக்கப்படும் குப்பைகளை முறையான இடத்தில் மொத்தமாக சேகரித்து மக்கும் குப்பைகளை 48 நாட்களுக்கு மண்ணில் புதைத்து உரமாக மாற்ற வேண்டும்அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் அனைவரையும் உறுப்பினர்களாக சேர வைக்க வேண்டும். அதன் மூலம் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் அவர்களுக்கு கிடைத்திட நாம் உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அன்புமணி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து ஊராட்சிகளின் பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 137 கன அடி தண்ணீர் வரத்து
    • 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது

    கரூர்,

    90 அடி கொண்ட அமராவதி அணையில் காலை 6 மணி நிலவரப்படி 62 கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 137 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 15 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 1850 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    • கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
    • தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார். தொழிலதிபரான இவருக்கு சொந்தமான மாந்தோப்பு வாங்கல் ஓடையூரில் உள்ளது.

    இந்த தோப்பினை திருச்சி மாவட்டம் காட்டுப் புத்தூர் பெருமாள் காட்டுப் புத்தூரைச் சேர்ந்த தங்கவேல் (வயது 64)என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனது மனைவி மயிலியுடன் தோட்டத்திலேயே தங்கி இருந்தார்.

    இந்த வயதான தம்பதி தங்குவதற்கு தோட்டத்தில் ஒரு சிறிய குடிசை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல் நேற்று இரவு சமையல் செய்து சாப்பிட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் படுத்து உறங்கினர்.

    இதற்கிடையே நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் குடிசை வீட்டின் கதவை தட்டினர். உடனே தங்கவேல் திடுக்கிட்டு எழுந்து கதவை திறந்தார். அடுத்த நொடி கொள்ளையர்கள் தாங்கள் எடுத்து வந்த மிளகாய் பொடியை கணவன்-மனைவி இருவர் மீதும் தூவி சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த தங்கவேல், அவரது மனைவி மயிலி ஆகிய இருவரும் மயங்கி விழுந்து இறந்தனர்.

    பின்னர் கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த மாந்தோப்பு தோட்டத்தில் வயதான தம்பதியினரின் நடமாட்டம் இல்லாததால் கிராம மக்கள் குடிசை வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக வாங்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். கொள்ளையர்கள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேலாயுதம்பாளையம் அருகே மணல் சலிக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலியானார்
    • வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கரூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 36). சம்பவத்தன்று இவர் கரூர் வேலாயுதம்பாளையம் அருகே நொய்யலில் உள்ள மணல் சலிப்பகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குமாரசாமி மணல் சலிப்பகம் எந்திரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். பின்னர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமாரசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்
    • இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    தரகம்பட்டி அடுத்த தூளிப்பட்டியை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 58). கூலி தொழிலாளியான இவர் கோவிலுக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மகன் தர்மராஜூடன் சென்றார். அப்போது தரகம் பட்டி-மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் அக்கரைப்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் சீரங்கன், தர்மராஜ் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களை பரிசோதித்த டாக்டர்கள் சீரங்கன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த தர்மராஜ் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் அருகே பைக் திருடிய வாலிபர் கைது செய்யபட்டார்
    • ஆண்டிவேல் போலீசில் புகார் செய்தார்

    கரூர்,

    கரூர் அருகே ராமானுாரை சேர்ந்தவர் ஆண்டிவேல் (வயது 52). எலக்ட்ரீஷியனான இவர் கரூர் வடக்கு நரசிம்மபுரம் பகுதியில் உள்ள எலக்ட்ரீக்கடை முன்பு பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ஆண்டிவேல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பைக்கை திருடியதாக திண்டுக்கல் மாவட்டம், அப்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணகுமார் (31) என்பவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

    • கிருஷ்ணராயபுரம் பகுதியில் காய்கறி சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளது
    • கத்திரிக்காய் கிலோ 30 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 20 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, புனவாசிப்பட்டி, பாப்பாப்பட்டி, வயலுார், சரவணபுரம், சிவாயம் ஆகிய கிராமங்களில் குறைந்த செலவில் அதிகம் வருமானம் தரக்கூடிய காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கத்திரிக்காய், வெண்டைக்காய் சாகுபடி நடந்துள்ளது. சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. விவசாயிகள் காய்களை பறித்து கரூர், குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். கத்திரிக்காய் கிலோ 30 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 20 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

    • கரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • கரூர் மாநகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

    கரூர்,

    கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கரூரில் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாரியம்மன் கோவிலுக்கு பூத்தட்டு ஊர்வலமாக சென்ற போது அதில் கலந்து கொண்ட அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஊர்வலத்தின் முன் குடிபோதையில் காவல் துறையினரிடம் தகராறு செய்தும், அந்த வழியாக அரசு வாகனம் மற்றும் வாகனத்தில் வந்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டும் மேலும் வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளனர்.பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    கரூர் மாநகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அதன் மூலம் கரூர் மாவட்ட அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.இந்த குற்றச்சம்பவம் தொடர்பாக கரூர் நகரப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்கள், பெண்கள் மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்து அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×