என் மலர்tooltip icon

    கரூர்

    • கார் மீது லாரி மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    காரைக்கால் மேலஓடுகரை அடுத்த அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது44). இவர் கோடை விடுமுறையையொட்டி குடும்பத்துடன் காரில் மேட்டுப்பாளையத்துக்கு சுற்றுலா சென்றனர். உடன் நண்பர் சுந்தர் என்பவரும் சென்றார். அங்கு சுற்றிப்பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். வரும் போது சுந்தர் காரை ஓட்டி வந்தார். கரூர்-திருச்சி நெடுஞ்சாலை கீழவதியம் அருகே வந்துகொண்டிருந்தபோது திருச்சியிலிருந்து கரூர் நோக்கி வந்த லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் பயணம் செய்த ராஜா (44), இவரது மனைவி வேணி (27), உறவினர் சந்தியா (23), சுந்தர் (43), நித்யா ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்ட 5 பேரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ராஜா கொடுத்த புகார்படி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த லாரி டிரைவர் இளையராஜா (44) என்பவர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசிரியையிடம் பணம் பறிக்க முயன்ற பெண் கைது செய்யபட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் நஞ்சைபுகளூரைச் சேர்ந்தவர் நிர்மலா (வயது 40). இவர் காட்டம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஆசிரியை நிர்மலா கரூர் பேருந்து நிலையத்தின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பெண் ஆசிரியை பர்சில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து ஆசிரியை சத்தம் போடவும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து திருட முயன்ற பெண்னை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட அந்த பெண் சேலத்தை சேர்ந்த கவிதா(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து கவிதாவை கைது செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கரூர் மாரியம்மன் கோவிலில் மண்டகப்படி விழா நடைபெற்றது
    • நாள்தோறும் பல்வேறு விஷேச வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது.

    கரூர்,

    கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 14-ந் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அதைதொடர்ந்து பூச்சொரிதல் விழா, காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நாள்தோறும் பல்வேறு விஷேச வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று கரூர் மாநகராட்சி சார்பில் மண்டகப்படி விழா நடைபெற்றது. அதில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், ஆணையாளர் ரவிச்சந்திரன், மண்டல குழு தலைவர்கள் அன்பரசன், கோல்ட் ஸ்பாட் ராஜா, வழக்கறிஞர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கரூரில் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது
    • கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 30-ந் தேதி நடக்கிறது

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட அனைத்து கேஸ் ஏஜென்சிகள், வாடிக்கையாளர்களுடன் டி.ஆர்.ஒ., தலைமையில் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. கரூர் மாவட்டத்தில் நுகர்வோருக்கு கேஸ் சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் முறைகேடு, நுகர்வோர் பதிவு செய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏஜென்சிகளின் மெத்தனப் போக்கு தொடர்பாக வரும் புகார் குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆயில் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்த முடிவு செய்யபடும். எனவே கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் குறைகள் குறித்து தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கரூரில் பைக் திருடிய வட மாநில வாலிபர் கைது செய்யபட்டார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரித்தனர்.

    கரூர்,

    கரூர் தேர்வீதி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது29). காய்கறி வியாபாரியான இவர் கரூர் பஸ் ஸ்டாண்டில் தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது பைக்கை காணவில்லை. இதுகுறித்து வெங்டேஷ் அளித்த புகாரின்படி கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரித்தனர். விசாரணையில் பைக் திருடியவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிபின்குமார் (28) என தெரியவந்தது. இதையடுத்து பிபின் குமாரை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

    • தரகம்பட்டி அருகே மது குடிக்க பணம் கேட்டு தந்தையை மகன் தாக்கியுள்ளார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வருகின்றனர்.

    கரூர்,

    தரகம்பட்டி அடுத்த துாளிப்பட்டி, காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 60). இவரது மகன் முருகன் சம்பவத்தன்று பழனியாண்டியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பழனியாண்டி தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த முருகன் தகாத வார்த்தையால் பேசி இரும்பு கம்பியால் பழனியாண்டியை தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனியாண்டியை மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து பழனியாண்டி கொடுத்த புகாரின்படி பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வருகின்றனர்.

    • வயதான தம்பதி கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
    • மயிலி அணிந்திருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகை மற்றும் குடிசை வீட்டில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

    கரூர்,

    திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், இவரது மனைவி மயிலி. இவர்கள் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே ஓடையூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான மாங்காய் தோட்டத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் தோட்டத்தில் உள்ள குடிசையில் தங்கவேலும், மயிலியும் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். மேலும் மயிலி அணிந்திருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகை மற்றும் குடிசை வீட்டில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இந்த கொலை சம்பவம் வாங்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க திருச்சி டி.ஐ.ஜி., சரவணசுந்தர் உத்தரவுபடி கரூர் எஸ்.பி., சுந்தரவதனம் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • குளித்தலை பகுதிகளில் 7 இடங்களில் புதிய மின் மாற்றிகள் தொடங்கப்பட்டுள்ளது
    • எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் தொடங்கி வைத்தார்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர்பள்ளி, கருங்களாப்பள்ளி, ஈச்சம்பள்ளம், கூடலூர் பாலம், சூரியனூர், கவுண்டம்பட்டி ஆகிய 7 இடங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை வகித்து புதிய மின்மாற்றுகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தியாகராஜன், குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) ஆனந்த், உதவி செயற்பொறியாளர் பாலகுமார், உதவி பொறியாளர் நடராஜன், நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், இராஜேந்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தினவள்ளி சண்முகம், மின்வாரிய அலுவலர் கோபால், பரளி செந்தில் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • டீசல் திருடிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் :

    கரூர் சணப்பிரட்டி அருகே தனியார் லாரி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தநிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்த புலியூர் ஆசாரியர் காலனியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 45). நிறுவனத்தில் இருந்து 25 லிட்டர் டீசலை திருடி உள்ளார். இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் பாலசுப்பிரமணி பசுபதிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கரூர்:

    நெய்தலூர் கிராமம், கட்டாணி மேட்டில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், கருப்பசாமி, வீரமாகாளியம்மன், மலையாள கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவில் புதிதாக கட்டப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் ஊர் மக்கள் பெருகமணி காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து யாகசாலையில் வைத்தனர். பின்னர் முதல் கால பூஜை, 2-ம் கால பூஜை, 3-ம் கால பூஜை, 4-ம் கால பூஜைகள் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் பகவதி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
    • 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவல் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • மருத்துவமனை வளாகத்தில் முதியவர் இறந்து கிடந்தார்
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சம்பவத்தன்று வந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மருத்துவமனை வளாகத்திலேயே இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வைகைநல்லூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×