என் மலர்tooltip icon

    கரூர்

    • கரூரில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது
    • 224 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கபட்டது

    கரூர்,

    கரூர் அரசு கலைக்கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 26 நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்முக தேர்வு நடத்தின. கரூரை சேர்ந்த 600 மேற்பட்டோர் இந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 224 பேரை தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்தனர். தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு, அரசு கலைக் கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் பணி நியமன ஆணையை வழங்கினார். மாவட்ட நிர்வாகப் பிரதிநிதி தமிழ் வசந்தன், தாவரவியல் துறைத் தலைவர் கார்த்திகேயன், கல்லூரியில் செயல்படும் கல்லூரி வேலை வாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் முகுந்தன் உள்ளிட்ட, கல்லூரியில் பணியாற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி தலைமையில் யோகா விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது
    • யோகா பயிற்சியை பயிற்சியாளர் முருகன் அனைவருக்கும் பயிற்சி அளித்தார்.

    குளித்தலை,

    குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சார்பு நீதிபதி சண்முகக்கனி தலைமையில் யோகா விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் நீதிபதிகள் பிரகதீஸ்வரன், பாலமுருகன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் சாகுல்ஹமீது, வழக்கறிஞர் சங்க செயலாளர் மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் நாகராஜன், மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். யோகா பயிற்சியை பயிற்சியாளர் முருகன் அனைவருக்கும் பயிற்சி அளித்தார்.

    • கரூர் பரணி பார்க் கல்வி குழுமத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டபட்டது
    • இந்நிகழ்ச்சிக்கு பரணி பார்க் சாரணர் மாவட்ட தலைவர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார்.

    கரூர்,

    பரணி பார்க் சாரணர் மாவட்டத்தின் சார்பாக 9-வது சர்வதேச யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பரணி பார்க் சாரணர் மாவட்ட தலைவர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். பரணி பார்க் சாரணர் மாவட்ட துணை தலைவர்கள் பத்மாவதி மோகனரங்கன், சுபாஷினி முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் முனைவர் ராமசுப்பிரமணியன் பேசுகையில் "நமது தாய் திருநாட்டின் பாரம்பரிய பெருமையையும், உலக அமைதியையும் வலியுறுத்தும் வகையில் பரணி பார்க் சாரணர் மாவட்டத்தின் சாரண மாணவர்கள் 5000 பேர் உலக யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்" என்றார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரணி பார்க் சாரணர் மாவட்ட உதவி செய்திருந்தனர். ஆணையர்கள் சுதாதேவி, சேகர் மற்றும் மாவட்டச் செயலர் பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் செந்தில்பாலாஜி குணமடைய வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது
    • குளித்தலை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர், கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தலைமையில் நடைபெற்றது

    குளித்தலை,

    கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை நடந்தது தொடர்ந்து. விரைவில் அவர் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்றிட வர வேண்டி குளித்தலை அருகே உள்ள ஸ்ரீ மலையாள சுவாமி கோவிலில் குளித்தலை தி.மு.க. மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்ட சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது, இதில் குளித்தலை ஒன்றிய அவைத்தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட பிரதிநிதி லோகநாதன், பழனி கராத்தே செந்தில், குமார், மேட்டு மருதூர் தனசேகரன், பாஸ்கர், கந்தசாமி, மருதூர் சந்திரசேகர், ராஜேந்திரம் கோபால், கூடலூர் மயில்வாகனன் மற்றும் குளித்தலை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கரூர், குளித்தலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
    • மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்றித்திரிந்ததை பார்த்த கலெக்டர் பிரபு சங்கர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு அந்த பெண்ணை உடனடியாக மீட்டு மனநல காப்பகத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

    கரூர்:

    கரூர் பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்து வந்தார். நேற்று கரூர் திருவள்ளுவர் மைதானம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்றித்திரிந்ததை பார்த்த கலெக்டர் பிரபு சங்கர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு அந்த பெண்ணை உடனடியாக மீட்டு மனநல காப்பகத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக ஸ்பீச் தெரபிஸ்ட் கனகராஜ், சாந்திவனம் மனநல காப்பகத்திற்கு தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார். இதையடுத்து அந்த பெண்ணை சாந்திவனம் மீட்புக்குழுவினர் மீட்டு திருச்சியில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் தொடர் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சிகளுக்காக பாதிக்கப்பட்ட பெண் கரூர் மாவட்டம், சீத்தப்பட்டியில் உள்ள மனநல காப்பகத்திற்கு மாற்றப்படுவார் என தெரிவித்தனர்.

    இதேபோல் குளித்தலை கடம்பர் கோவில் பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். அந்த பெண் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரிவதாகவும், அவரை மீட்டு உரிய சிகிச்சை அளிக்கும்படியும் தோகைமலை அருகே உள்ள மனநல காப்பகத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குளித்தலை பகுதிக்கு வந்த மனநல காப்பகத்தினர் அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் இது தொடர்பாக குளித்தலை போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்து அங்கு ஒப்புதல் கடிதம் பெற்று சிகிச்சைக்காக அவரை அழைத்து சென்றனர்.

    • புன்னம் சத்திரம் அருகே மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது
    • ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே உப்புப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45), கூலிதொழிலாளி. இவர் கரூர்-ஈரோடு மெயின் ரோட்டை ஒட்டியுள்ள அறுசுனை என்ற இடத்தில் குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே சென்று இருந்தனர். அப்போது மின் கசிவு காரணமாக வீட்டின் கூரையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    ஆனால் முடியவில்லை. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிசை வீட்டில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அருகே உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இருப்பினும் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் வைத்திருந்த பாத்திரங்கள், துணிகள், உணவுப் பொருட்கள் மற்றும் ஒரு மொபட் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.32¾ லட்சத்துக்கு ஏலம் போனது.
    • இந்த வாரம் நடந்த ஏலத்தில் 86.60½ குவிண்டால் எடை கொண்ட 22 ஆயிரத்து 6 தேங்காய் விற்பனைக்கு வந்தது.

    கரூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 86.60½ குவிண்டால் எடை கொண்ட 22 ஆயிரத்து 6 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16.79-க்கும், சராசரி விலையாக ரூ.19.19-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 358-க்கு விற்பனையானது. அதேபோல் 276.39½ குவிண்டால் எடை கொண்ட 557 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.86-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70.55-க்கும், சராசரி விலையாக ரூ.74.16-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.73.66-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.59.06-க்கும், சராசரி விலையாக ரூ.71.36-க்கும் என மொத்தம் ரூ.18 லட்சத்து 91 ஆயிரத்து 539-க்கு விற்பனையானது. அதேபோல் 92.31 குவிண்டால் எடை கொண்ட 124 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.145.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.126.99-க்கும், சராசரி விலையாக ரூ.126.11-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.147.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.120.19-க்கும், சராசரி விலையாக ரூ.143.99-க்கும் என மொத்தம் ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 22-க்கு விற்பனையானது.சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.32 லட்சத்து 75 ஆயிரத்து 919-க்கு விற்பனையானது.

    • வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மேட்டுத்திருக்காம்புலியூரை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகன் சிவா (வயது 20). இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமாக இருந்ததால் சிவா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். பின்னர் ராஜலிங்கம் மகன் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த சிவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து ராஜலிங்கம் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரவக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கபட்டது
    • பள்ளியில் பயிலும் அகிலன், முகிலன் ஆகியோரின் தந்தை அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

    கரூர்,

    அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் துரை, சதீஷ்குமார் ஆகியோர் உதவித்தொகை வழங்கினர். பள்ளியில் பயிலும் அகிலன், முகிலன் ஆகியோரின் தந்தை அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்தனர். அதைதொடர்ந்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிவண்ணன் இரு மாணவர்களுக்கும் உதவித்தொகை பெற பரிந்துரைத்தார். அதனடிப்படையில் இவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம், ரூ.1.50 லட்சம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சாகுல்அமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது
    • மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது

    கரூர்,

    அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம் பெற வேண்டி அவரது ஆதரவாளர்கள் நாள்தோறும் பூஜைகள் செய்வது, நேர்த்தி கடன் செலுத்துவது என பல வேண்டுதல்களை செய்து வருகின்றனர்.அந்த வரிசையில் இன்று மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பரணி பால்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. யாகத்தை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதில் அறங்காவலர் குழுவினருடன், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மண்டல தலைவர், கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். மேலும் நெரூர் சிவன் கோவிலில் மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ்.கே. கருணாநிதி தலைமையில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • கரூர் மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த கலெக்டர் அழைப்பு
    • 30ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்த மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது.இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இசேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையமுறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://tnesevai.tn.gov.in/ அல்லது https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும், விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி இரவு 8 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • கரூரில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • அமலாக்கதுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    கரூர்,

    கரூர் தமிழக சட்டசபைக்குள் நுழைந்த அமலாக்கத்துறை அத்துமீறலையும், மத்திய பா.ஜ.க. அரசையும் கண்டித்து நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். மத்திய மண்டல துணைச் செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில் கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

    ×