என் மலர்tooltip icon

    கரூர்

    • அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்தில் ரூ.7 கோடி செலவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தொடங்கியது
    • இளங்கோ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    கரூர்,

    அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் தார் சாலை மிகவும் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்தில் முதல்- அமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் மூலமாக தார்சாலை அமைக்க ரூ. 7 கோடியே 3 லட்சத்து 30 ஆயிரம் நிதியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கினார். இதனைதொடர்ந்து அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்தில் பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.இளங்கோ கலந்து கொண்டு சாலை பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, மலைக்கோவிலூர் முதல் நந்தனூர் வரை ரூ.1 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலும், ஈசநத்தம் ரோடு முதல் சின்னகரியாம் பட்டி வரை ரூ.1 கோடியே 60 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலும், கொக்காட்டிபட்டி முதல் பால்வார்பட்டி, கணக்கு வேலன்பட்டி, பெரியவளையபட்டி வரை ரூ.1 கோடியே 71 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலும், வேலன் செட்டியூர் முதல் அஞ்சாகவுண்டன்பட்டி வரை ரூ.1 கோடியே 99 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் தார் சாலை பணிகள் தொடங்கின. இந்தநிகழ்ச்சியில் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 5 குவிண்டால் நிலக்கடலை ரூ.39 ஆயிரத்திற்கு விற்பனை
    • அரசு வேளாண் விற்பனை கூடத்தில் விற்பனை செய்த விவசாயிகள் மகிழ்ச்சி

    வேலாயுதம்பாளையம்,

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை, காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. கரூர் ஒன்றியம், க.பரமத்திஒன்றியம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 5.13 குவிண்டால் எடை கொண்ட 16-மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.76-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.20-க்கும், சராசரி விலையாக ரூ.76.76-க்கும் என ரூ.38ஆயிரத்து 786-க்கு விற்பனையானது.

    • நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தவரை தகாத வார்த்தையால் திட்டி தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது
    • புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகளூர் ஹை ஸ்கூல் மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் வசித்து வருபவர் வினோத்குமார்(வயது 36). இவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் அஜய் (19) என்பவர் வினோத்குமாரை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து வினோத் குமார் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் அஜயை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூரில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்

    கரூர்,

    கரூர் மாவட்டம் கோவிந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகத்தினை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வழங்கியபோது எடுத்தபடம். அருகில் சுகாதார பணி துணை இயக்குநர் சந்தோஷ்குமார், மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், தனி துணை கலெக்டர் சைபுதீன், சேலம் ஐசிஐசிஐ வங்கி மண்டல மேலாளர்கள் கணேஷ்அய்யர், அண்ணமலை, சுப்பிரமணியன், துணை மண்டல மேலாளர் வினோத்குமார், ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் உள்ளனர். 

    • கரூரில் கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல் நடந்துள்ளது
    • வழக்கு பதிந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் சடையம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சுப்பிரமணி (55). இவர் அந்த பகுதியில் உள்ள ராமசாமி, சம்பூரணம், பிரகாஷ் ஆகியோருக்கு கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடனை சுப்பிரமணி திருப்பி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமி, சம்பூரணம், பிரகாஷ் ஆகியோர் சுப்ரமணியை பார்த்து தகாத வார்த்தைகள் திட்டி அவரை தாக்கியுள்ளனர். இதில் சுப்பிரமணி படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த அவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து சுப்பிரமணி ராமசாமி, சம்பூர்ணம், பிரகாஷ் ஆகியோர் மீது வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • கரூரில் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    கரூர், 

    சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்தவர் ஜீவா (வயது 31). இவர், கரூர் அருகே ஆண்டாங்கோவில் புதுார் பகுதியில் உள்ள, தனியார் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் 50 அடி ஆழம் உள்ள கிணற்றில், பக்கெட் மூலம் தண்ணீர் இறைக்கும் போது, ஜீவா கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடலை, கரூர் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெங்கபாளையத்தில் மது விற்ற பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.
    • அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் பெண் ஒருவர் வீட்டில் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பெண்ஒருவர் வீட்டில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பெரிய ரெங்கம்பாளையம் பகுதியைச்சேர்ந்த வளர்மதி (52) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    வேலாயுதம்பாளையம்,

    கன்னியாகுமரி மாவட்டம் தோவானை அருகே வீரன்குளம் பகுதி சேர்ந்தவர் பரசுராமன் (45). இவரின் மனைவி ஜெயலட்சுமி (38). இவர்களுக்கு கணேஷ் (15) என்ற மகன் உள்ளார். இந்நிலையில். இருவரும் தற்பொழுது கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள லட்சுமி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். பரசுராமன் காகித ஆலை கேண்டீன் மற்றும் உள்ளூர் பகுதிகளில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பரசுராமன் வீட்டில் இருந்த மின்விசிறியை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பரசுராமன் மீது திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. அங்கு வந்த அருகாமையில் உள்ளவர்கள் பார்த்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரசுராமனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜெயலட்சுமி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • பட்டா வழங்குவது தொடர்பாக கோட்டாட்சியர் ஆய்வு
    • புகழூர் நகராட்சி பகுதியில் ஆய்வு நடைபெற்றது

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் புன்செய் புகளூர் மற்றும் நஞ்சை புகளூர் கிராமங்களில் 50 ஆண்டு காலமாக பட்டா இல்லாமல் வசித்து வரும் பொதுமக்களுக்கு நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் வீட்டு மனை பட்டா 1705 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக 2-ஆம் கட்ட கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கரூர் கோட்டாட்சியர் ரூபினா தலைமையில், புகழூர் வட்டாட்சியர் முருகன், புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன், நகராட்சி ஆணையாளர் கனிராஜ், கரூர் மாவட்ட நில அளவை பிரிவு உதவி இயக்குனர், மண்டல துணைத்தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், நில அளவையர்கள் கொண்ட குழுவினர் இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

    • கரூர் மாவட்டத்தில் பணிக்கு சென்ற சேல்ஸ்மேன் மாயமாகி உள்ளார்
    • மனைவி புகாரின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம், ராமா கவுண்டனுார் பகுதியை சேர்ந்த காந்தி மகன் மாணிக்கவாசகம் (வயது 40) இவர், கரூரில் தனியார் மொபைல் நிறுவனத்தில், சேல்ஸ்மேனாக பணி யாற்றி வருகிறார். இவர் நாமக்கல்லுக்கு ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக சென்றுள்ளார். ஆனால், இது வரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த மாணிக்க வாசகத்தின் மனைவி கங்கா, போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

    • கரூரில் சேவல் சண்டை நடைபெற்றது
    • சேவல் சண்டையில் ஈடுபட்ட4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கரூர், 

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்ட போலீசார் கூலிக்காரன் வலசு பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அந்த பகுதியில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்தி யதாக, திண்டுக்கல்லை சேர்ந்த சதீஷ் (வயது 35), ரவி (36), பொள்ளாச்சியை சேர்ந்த நல்லமுத்து (33), நந்தகுமார் (35), ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, இரண்டு சேவல்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • வேலாயுதம்பாளையத்தில் ஆடியை முன்னிட்டு தேங்காய் சுடும் திருவிழா நடைபெற்றது.
    • சுட்ட தேங்காயை விநாயகருக்கு படைத்து அதன் பின்னர் பொதுமக்களுக்கு விநியோகம்

    வே.பாளையம், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடி பண்டிகையை முன்னிட்டு தேங்காய் சுடும் திருவிழா நடைபெற்றது. இதில் நொய்யல், முத்தனூர், தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், குழந்தைகள் அவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் ஒன்று திரண்டு கலந்து கொண்டனர்.முதிர்ச்சி அடைந்த தேங்காய்களை எடுத்து தேங்காயில் துவாரம் போட்டு தேங்காய்க்குள் இருக்கும் தண்ணீருக்குள் வறுகடலை, பச்சரிசி, நாட்டுச்சக்கரை, எள், பாசிப்பருப்பு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை பொடியாக்கி உள்ளே போட்டனர். பின்னர் தேங்காயில் உள்ள துவாரத்தில் நொச்சி குச்சியின் ஒரு முனையை வைத்து அடைத்து மறுமுனையின் குச்சியை கையில் பிடித்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள பொது இடத்தில் தீ மூட்டி அந்த தீயில் நன்றாக தேங்காயை சுட்டனர். பின்னர் அருகில் சுட்ட தேங்காயை, எடுத்து சென்று விநாயகர் கோயிலில் படையலிட்டனர். அப்போது விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் தேங்காய் உடைக்கப்பட்டு, அனைவருக்கு விநியோகிக்கப்பட்டது.

    ×