என் மலர்tooltip icon

    கரூர்

    • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கரூர் மாவட்டத்தில் உதவி மையங்கள் அமைப்பு
    • பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் பிரபுசங்கர் அழைப்பு

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றினை பின்வரும் அலுவலகங்களில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை அழைத்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 9489984960, கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்- 9489984961, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்- 9489984962, கரூர் வட்டாட்சியர் அலுவலகம்- 9489984963, அரவக்குறிச்சி - 9489984964, மண்மங்கலம் - 9489984965-, புகளூர் - 9489984966, கிருஷ்ணராயபுரம் - 9489984967, குளித்தலை - 9489984968, கடவூர் - 9489984969.

    மேலும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையத்தில் தங்களது குடும்ப அட்டை எண்ணை அளித்து, தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை அறிந்து கொள்ளலாம். பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களின் பேரில் மேல்முறையீடு செய்ய விரும்பும் பட்சத்தில் தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தின் வாயிலாக மேல்முறையீடு செய்து கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இச்சேவை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறே https://kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உட்செலுத்தி விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி முதல்வரின் முகவரி திட்டத்தின் இலவச அழைப்பேசி எண் 1100–ல் அழைத்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்து விபரங்களை அறிந்து கொள்ளலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு விண்ணப்பங்கள் அனைத்தும் இ-சேவை மையத்தில் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள இயலும். இச்சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்க தமிழ்நாடு அரசின் ஆணையின்படி கரூர் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெறறது
    • நாளை விநாயகரை கரைப்பதற்கான ஊர்வலம் நடைபெறுகிறது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் பால த்துறை, புதுக்குறுக்கு பா ளையம், கூலக்கவுண்ட னூர், கடைவீதி, சுந்தரா ம்பாள் நகர், கொங்கு நகர், புகழி மலை அடிவாரம், காந்திநகர், நந்தவனம், கந்தம்பாளையம், முல்லை நகர், காந்தி மண்டபம், மலைவீதி ,நடுநானப்பரப்பு, அண்ணா நகர், கொங்கு நகர்,பாலத்துறை தேசிய நெடு ஞ்சாலை, கட்டிபாளையம், பாண்டிபாளையம், புன்னம்சத்திரம், செம்படாபாளையம், அண்ணா நகர் மேட்டு தெரு காவல் நிலையம் எதிரில், கந்தம்பாளையம் காலனி ,காந்தி நகர் மூன்றாவது தெரு, முருகம் பாளையம், அதியமான் கோட்டை, முல்லை நகர், அய்யம்பா ளையம், அதியமான் கோட்டை லட்சுமி நகர்,நொய்யல், மரவாபாளை யம், சேமங்கி, பெரியார் நகர் ,பிரேம் நகர், பெருமாள் நகர், அம்மாபட்டி, முருக ம்பாளையம், முத்தனூர், நடையனூர், கரைப்பா ளையம், நன்செய் புகளூர், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி

    மற்றும் பொதுமக்கள் சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது . நேற்று காலை விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது .பல பகுதிகளில் அக்கினி குண்டம் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓதி அதன் பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    அதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு சுண்டல் ,பொங்கல் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் நாளை (20 - ந் தேதி) அனைத்து பகுதிகளிலும் உள்ள விநா யகர் சிலைகள் வாகன ங்களில் ஊர்வலமாக எடு த்துச் சென்று புகழிமலை அடிவாரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது .

    அதனைத் தொடர்ந்து இரவு சுமார் 7 மணி அளவில் விநாயகர் சிலை களை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தவுட்டுப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் கரைக்க உள்ளனர்.

    விநாயகர் சிலை ஊர்வ லத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரவக்கு றிச்சி உட்கோட்ட துணைப் போலீஸ் சூப்பிரண்டு அண்ணா துரை தலை மையில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள், போலீசார் செய்துள்ளனர்.

    • 38 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டது
    • புகளூர் டிஎன்பிஎல் காகிதஆலை நிறுவனம் வழங்கியது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் சமுதாயப் பணிகளில் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் புகழூர் நகராட்சிக்குட்பட்ட ஓனவாக்கல் மேடு கிராமத்தை சேர்ந்த நலிவுற்ற சமுதாயத்தை சார்ந்த குழந்தைகளை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் பள்ளியில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது.ஓனவாக்கல் மேடு கிராமத்தைச் சேர்ந்த 38 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் 2023- 2024 ஆம் கல்வியாண்டில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை இலவச பள்ளிக்கல்வி பயின்று வருகின்றனர்.இலவச கல்வி பெரும் குழந்தைகளுக்கு 2செட் பள்ளி சீருடைகள், காலனி, காலனி உறை மற்றும் பள்ளி கட்டணம் முழுவதும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை இலவச பள்ளிக்கல்வியும், இவர்களுக்கான பள்ளி கட்டணம் உட்பட அனைத்து செலவினங்களையும் டிஎன்பிஎல் காகித நிறுவனத்தின் மூலமாக பள்ளி நிர்வாகத்திற்கு செலுத்தும் .2007 -2008 ஆம் ஆண்டு முதல் துவங்கி நடைபெற்று வரும் இந்த இலவச கல்வி திட்டத்தின் மூலம் இதுவரை 11 மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர்.

    மேலும் இந்த கல்வியாண்டில் 38 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ 13 லட்சம் செலவிடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வித் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி சேஷாயி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் காகித பிரிவில் 3 1/2 ஆண்டுகால கட்டணமில்லா தொழில்நுட்ப பட்டய படிப்பு பயில ஆண்டுதோறும் 5 மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ,விடுதி கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களையும் செலுத்தி காகித ஆலை நிறுவனம் கட்டணம் இல்லா கல்வி அளித்து வருகிறது.கரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎல் காகித ஆலை அழகு -1 ஐ சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் என்.புகளூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை அழகு-2 ஐ சுற்றியுள்ள மொண்டிசெட்டிப்பட்டி, கே .பெரியபட்டி, சித்தாநத்தம் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்து குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முதல் முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசையின்படி வித்யா ,பிரவீன், ராமன் மற்றும் கௌசிக் ஆகிய நான்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இத்திட்டத்தின் மூலம் இதுவரை 63 மாணவர்கள் கட்டணமில்லா தொழிற் பட்டயப்படிப்பு முடித்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர் .இக்கல்வியாண்டில் 19 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் இலவச தொழிற்கல்வி பயின்று வருகின்றனர்.இத் திட்டத்திற்காக டிஎன்பிஎல் காகித ஆலை நிறுவனம் தனது சமுதாய நலப்பணித் திட்டத்தின் மூலம் இந்த கல்வியாண்டில் 8 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது .38 மாணவர்களுக்கு இலவச பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குநர்( இயக்கம்) சீனிவாசன், பொது மேலாளர்( மனிதவளம் )கலைச்செல்வன் மற்றும் முதுநிலை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு38பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகளை வழங்கினார்கள்.

    • குளித்தலையில் காவிரி ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்
    • குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    குளித்தலை அருகே உள்ள மேலதாளியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜோதி. இந்த தம்பதியின் மகன் தீபக் (வயது 14). இவன், வேங்காம்பட்டியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    ஜோதியின் உறவினரின் மகன் கடந்த ஆண்டு இறந்துள்ளார். அவருக்கு சாங்கியம் செய்வதற்காக உறவினர்கள் அனைவரும் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்கு நேற்று வந்துள்ளனர். அனைவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தீபக்கும் ஆற்றில் இறங்கி குளித்தபோது, திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான்.

    இதைக்கண்ட அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள், ஆற்றில் மூழ்கிய தீபக்கை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீபக்கை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தீபக்கின் உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜோதி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என கரூரில் நல்லசாமி கூறியுள்ளார்
    • தடையை நீக்கி அறிவிக்க தவறினால் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை

    கரூர்,

    கரூரில் நேற்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகம் காரணமாக கீழ் பவானி பாசனம் நடப்பு ஆண்டில் பாதிப்புக்கு ஆளாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் தற்போது வெகுவாக குறைந்ததற்கு மழை பொழிவு குறைந்ததுதான் காரணம். இதற்கு நீர்வளத்துறை அமைச்சரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.தேர்தலுக்கு முன்பு தேவையற்ற இலவசங்களை அறிவித்து அவற்றை நடைமுறை படுத்தி வந்தால் இலங்கைக்கு வந்த நெருக்கடியை விட மோசமான நிலை தான் வரும். 28 மாத கால ஆட்சியில் 8 முறை ஆவின் பால், பால் பொருட்களின் விலையை அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு நிர்வாகமின்மையே காரணம்.

    தமிழகத்தில் கள், காவிரிநீர், நீட்ேதர்வு, சனாதனம் பற்றிய புரிதல் இல்லை. புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. தமிழக அரசு கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். அதை செய்ய தவறினால் வருகிற 2024 ஜனவரி 21-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.2024 நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பு தமிழக அரசு கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். தவறினால் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • புத்தூர் ஊராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது
    • சுகாதார ஆய்வாளர்கள், தோகைமலை வட்டார கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    கரூர்,

    தோகைமலை ஒன்றியம், புத்தூர் ஊராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தனிக்காசலம் தலைமை தாங்கினார். இதில் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு, ஒவ்வொரு தெருக்களில் உள்ள வீதிகள், பள்ளிகள், பொது இடங்கள் போன்ற பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள், தேங்காய் ஓடுகளில் தேங்கி நின்ற மழைநீரை அகற்றினர். மேலும், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று குடிநீர் தொட்டிகளை பரிசோதனை செய்து மருந்துகளை தெளித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள், தோகைமலை வட்டார கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தோகைமலை அருகே வீட்டில் இருந்து மாயமான முதியவர் தரிசு காட்டில் பிணமாக கிடந்தார்
    • தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    கரூர்

    கரூர், தோகைமலை அருகே உள்ள பி.சுக்காம்பட்டியை சேர்ந்தவர் ரத்னாசலம் (வயது 75). இவர் கடந்த 12-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து ரத்னாசலத்தை அவரது மகன் கவியரசன் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்தநிலையில் நேற்று முன்தினம் பண்ணப்பட்டி அருகே உள்ள ரெங்கபாளையம் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான தரிசு காட்டில் அழுகிய நிலையில் முதியவர் ஒருவர் கிடப்பதாக கவியரசனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் தனது உறவினர்களுடன் சென்று அங்கு பார்த்தார். அப்போது அங்கு இறந்து கிடப்பது வீட்டில் இருந்து மாயமான ரத்னாசலம் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்னாசலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கவியரசன் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, ரத்னாசலம் வயது முதிர்வின் காரணமாக இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தரிசு காட்டில் போட்டு விட்டு சென்றார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூரில் மது விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • தோகைமலை போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினர்

    கரூர்,  

    கரூர் தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் வெள்ளைய கவுண்டனூரை சேர்ந்த ராஜ்கணேஷ் (வயது 29) என்பவர் கொசூர் கடைவீதியில் நடத்தி வரும் தனது பெட்டிக்கடையிலும், கம்பளியாம்பட்டியை சேர்ந்த ராசம்மாள் (50) தனது பெட்டிக்கடையிலும் பதுக்கி வைத்து மது விற்றுக்கொண்டிருந்தனர். இதையடுத்து ராஜ்கணேஷ், ராசம்மாள் ஆகியோரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். இதேபோல் புன்னம் சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் மது விற்ற அதே பகுதியை சேர்ந்த திருமூர்த்தி மனைவி வசந்தா (64) என்பவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

    • புன்னம் சத்திரம் பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீரால் தொற்று நோய் அபாயம்
    • இரு புறமும் கழிவுநீர் சென்றிட வடிகால் கட்டப்பட்டுள்ளது.

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பஸ் நிலையம் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக பல கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டு சாலையின் இரு புறமும் கழிவுநீர் சென்றிட வடிகால் கட்டப்பட்டுள்ளது.

    ஆனால் வடிகால் பணிகள் முறையாக பராமரிக்கப்படாததாலும், சிலர் வடிகாலின் இடையில் கான்கிரீட் மற்றும் மணல்களை கொட்டி வைத்து அடைத்து விடுவதாலும், கழிவுநீர் வெளியே செல்லாமல் நீண்ட நாட்களாக தேங்கி நிற்பதால் பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல், மலேரியா ஆகிய தொற்றுநோய்களை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே சுகாதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள்புன்னம் சத்திரம் பகுதிக்கு நேரில் சென்று சாக்கடை கழிவு நீர் கால்வாயில் அடைபட்டு கிடக்கும் சாக்கடையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கரூர் அரசு மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம் சார்பாக முதலாமாண்டு மாணவிகளுக்கு நோக்குநிலை திட்ட விழா
    • இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மாணவிகளிடம் எடுத்துரைத்தார்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப் பணித் திட்டம் சார்பாக முதலாமாண்டு மாணவிகளுக்கு நோக்குநிலை திட்ட விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை வகித்தார். தாளாளர் கோதை நடேசன், செயலாளர் இன்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் ஷாலினி பிரியா இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.அரசு மகளிர் கல்லூரியின் துணை முதல்வர் ரதிதேவி வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு நாட்டு நலப்பணித் திட்ட மாணவி ஷஸ்மினாபானு வரவேற்றார். நாட்டு நலப்பணி திட்ட மாணவி பிரியா நன்றி கூறினார். நாட்டு நலப்பணி திட்ட மாணவி திவ்ய தர்ஷினி விழாவினை தொகுத்து வழங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜலிங்கம், சங்கீதா, சண்முகப்பிரியா, நந்தினி, ரம்யா, சஷ்டிகா ஆகியோர் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்தனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வு
    • மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை சேமங்கி, முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, கோம்பு ப்பாளையம், நத்தமேடு பாளையம், திருக்காடு துறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், பாலத்துறை, தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, கடம்பங்குறிச்சி, நன்னியூர் புதூர், வாங்கல்உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், ரஸ்தாலி, பச்சநாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகள் பயிர் செய்யப்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.450-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு ஆய்வு

      வேலாயுதம்பாளையம்,  

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பாண்டமங்கலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் பரமத்தி வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை களப்பயணமாக பார்வையிட்டனர். 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பற்றி பாடம் உள்ளது. இந்த பாடங்களில் உள்ள பாடத்திட்டத்தின் செயல்பாடுகளின் விளக்கங்களை அறிந்து கொள்ள எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அறிந்து கொண்டனர். நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் குற்றவியல் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், துணை நீதிமன்றம், நீதிமன்ற பதிவு அறைகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை அறிந்து கொண்டனர். நீதிபதிகள் மாணவ, மாணவியர்கள் இடையே இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை பற்றி விரிவாக கூறினார்கள். அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நீதிமன்ற வளாகத்தின் அனைத்து செயல்பாடுகளை பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த களப்பயணம் மாணவர்களின் இடையே தங்களது ஜனநாயக கடமை, சமூகப் பொறுப்புணர்ச்சியை தூண்டும் விதமாக அமைந்தது. இவர்களுடன் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி முதல்வர் நந்தினி மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் உடன் இருந்தனர். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை பார்வையிட்டு வந்த மாணவ, மாணவியர்களை ஆர்.என். ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனத்தின் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் டாக்டர் அருள், இன்ஜினீயர் சேகர், சம்பூரணம் மற்றும் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள்.

    ×