என் மலர்
கரூர்
- கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்
- வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தவுட்டுப்பாளையம் போலீஸ் செக் போஸ்ட் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்தபோது மோட்டார் சைக்கிள் உள்ள பைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்து விற்பனைக்கு கொண்டு சென்ற திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்( வயது 26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புகளூர் அருகேவாய்க்காலுக்குள் தவறி விழுந்த தொழிலாளி சாவு
- இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலம் கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம்( வயது 41). இவர் புகளூர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரண்யா (26) .இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் பிரகாசம் நேற்று முன் தினம் இரவு சுமார் 8 மணி அளவில் முத்தனூர் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் புகளூர் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் நிலை தடுமாறி புகளூர் வாய்க்கால் தண்ணீருக்குள் விழுந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் பிரகாசம் புகளூர் வாய்க்காலுக்குள் விழுந்ததை பார்த்துள்ளார். உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்த வாய்க்காலுக்குள் இறங்கி தேடினார்கள். அப்போது முனி நாதபுரம் முனியப்ப சாமி கோவில் அருகே கட்டிடத்தில் இடுக்கில் சிக்கிக் கொண்டிருந்தார். இரவு சுமார் ஒரு மணியளவில் பிரகாசத்தின் உடலை மீட்டு வேலாயுதம் பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புகளூர் சாலையில் உள்ளநாணல் , செடி கொடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
- விவசாயிகள் இடுபொருட்களையும் விளை பொருட்களையும் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
நொய்யல்
நொய்யல் முதல் மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், திருக்காடுதுறை, பாலத்துறை ,தோட்டக்குறிச்சி, தளவா பாளையம் வழியாக புகளூர் வாய்க்கால் செல்கிறது.
இந்த வாய்க்காலில் இடது கரையில் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களும், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வாகனங்களும் சென்று வந்தன. இந்நிலையில் சாலையின் ஓரத்தில் இருபுறமும் ஏராளமான நாணல் தட்டுகள் மற்றும் பல்வேறு வகையான செடி கொடிகள் முளைத்துள்ளது. இது சாலையை ஆக்கிரமித்துள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் இடுபொருட்களையும் விளை பொருட்களையும் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்கால் மேட்டில் இருபுறமும் முளைத்துள்ள நாணல் தட்டு மற்றும் பல்வேறு வகையான செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புகழூரில் இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
- புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையிலான குழுவினர் புகழுர் முழுவதும் ஆய்வு
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையிலான குழுவினர் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, "பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு பள்ளிக்கு வாங்க" என்ற திட்டத்தின் கீழ், பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்த்தல் மற்றும் புதிய சேர்க்கை தொடர்பாக,பெற்றோர்களிடம் கல்வி கற்றல் பெருமை குறித்தும், மாணவ, மாணவிகளுக்கான தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்தும், எடுத்துரைத்து தங்களது குழந்தைகளை கல்வி கற்றலை தொடர வேண்டி விழிப்புணர்வு மேற்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் செந்தில், மூலிமங்கலம் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நகராட்சி நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
- தோகைமலையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- 20 பஞ்சாயத்துகளில் உள்ள 114 அங்கன்வாடி மையங்களில் பயன்பெரும் 264 குழந்தைகளின் தாய்மார்கள் கலந்து கொண்டனர்
குளித்தலை,
குழந்தைகளுக்கு துணை உணவு அளிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது. கரூர் கரூர் மாவட்டத்தில் பின்தங்கிய ஒன்றியமாக தோகைமலை வட்டாரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் கண்டறியப்பட்டுள்ள 112 பின்தங்கிய மாவட்டங்களில் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் பின்தங்கிய வட்டாரமாக கண்டறியப்பட்டுள்ளது.
வட்டாரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றியமைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்கமாக கடந்த மாதம் 30-ந்தேதி அன்று காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து முதல் கட்டமாக தமிழக அரசு வழிகாட்டுதல்களின்படி கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவுப்படி முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சுபோசித் பரிவார் -போஷன் மீல்ஸ் என்ற தலைப்பில் மாவட்ட திட்ட அலுவலர் உமா சங்கர், தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார் ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இணைந்து 6 மாதம் முடிந்து 181 வது நாள் ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு துணை உணவு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து திட்ட அலுவலர் கள் விளக்கவுரை வழங்கப்பட்டது.
20 பஞ்சாயத்துகளில் உள்ள 114 அங்கன்வாடி மையங்களில் 264 பயனாளிகளுக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது,நிகழ்ச்சியில் ஆறு மாத குழந்தைகளுக்கு துணை உணவு அறிமுகப்படுத்தப்பட்டு தாய்மார்களுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார் வழங்கினார். தொடர்ந்து தோகைமலை பகுதிகளில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- கோப்புபாளையம் - திருக்காடுதுறையில் 4 மாதமாக குடிநீர் இன்றி பொதுமக்கள் தவிப்பு
- சாலை விரிவாக்க பணியின்போது குழாய்கள் சேதம்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி, கோம்புப் பாளையம் ஊராட்சி, திருக்காடுதுறை ஊராட்சி குடிநீர் சப்ளைக்காக, தார் சாலையின் இருபுறமும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நொய்யல், வேலாயும்பாளையம் செல்லும் சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. தார் சாலையில் இருபுறமும் சுமார் 3 அடி ஆழத்திற்கு குழிகள் பறிக்கப்பட்டு விரிவாக்க பணி நடைபெற்றது. இதனால் சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்டிருந்த, குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்து குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதனால் கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதேபோல் இளங்கோ நகர் வெள்ளதாரை, சொட்டையூர் பகுதிகளில் தார் சாலையின் குறுக்கே பாலங்கள் கட்டும் பணி மந்தமாக நடைபெற்று, முடிவுராத நிலையில் உள்ளது. அதன் அருகே பெரிய அளவிலான குழிகள் இருக்கிறது. இதனை மூடாமல் அப்படியே விட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி செல்கின்றனர்.
அதேபோல் புங்கோடை முதல் நொய்யல் குறுக்கு சாலை வரை இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத மிகவும் மோசமான தார் சாலையாக உள்ளது. தார் சாலை அமைக்கும் பணிக்காக பல மாதங்களுக்கு முன் டெண்டர் எடுத்தும் இதுவரை தார் சாலை அமைக்கும் பணியை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் தொடங்கப்படவில்லை. ஆனால் இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. எனவே ஊராட்சிகள் நிர்வாகம் பொது மக்களுக்கு விரைந்து குடிநீர் வழங்கி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல் மிகவும் மோசமான நிலையில் உள்ள தார் சாலையை சீரமைக்கும் பணி டெண்டர் விட்டும் இதுவரை தார்சாலை அமைக்காத ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், அந்த சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக,ஆராதனை
- 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத சஷ்டியை முன்னிட்டு பாலசு ப்பிரமணியசுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
அதேபோல் நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்தில் புரட்டாசி மாத சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியருக்குபல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் புரட்டாசி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
- கரூர் பெரிய ரெங்கம்பாளையத்தில் மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வேலாயு தம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த ரெங்கம்பா ளையம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி சாவித்திரி (வயது 50), பாலச்சந்திரன் (வயது 56) , மரவாபாளையம் பகுதியை சேர்ந்த மணி (வயது 63), தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 120 மதுப்பாட்டுகளை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
- தளவாபாளையம், கடம்பங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்வெற்றிலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
- இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6ஆயிரத்திற்கும்,
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை , நத்தமேடுப்பாளையம், தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், மோதுகாடு, பாலத்துறை, தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், கடம்பங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலை வகைகளை பயிர் செய்துள்ளனர். இங்கு பறிக்கப்படும் வெற்றிலைகள், பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் வெற்றிலை அசோசியேசன் வெற்றிலை மண்டிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று 1,500-க்கும் வாங்கிச் சென்றனர். கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இல்லாததால் வெற்றிலை தேவை குறைவாக இருப்பதால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. வழக்கறிஞரான இவர் சவுக்கு சங்கரின் ஆதரவாளர் என கூறப்படுகிறது. சவுக்கு சங்கரின் யூ டியூப் நிர்வாகிகளான சூர்யா மற்றும் பிரதீப் ஆகியோர் ராஜாவை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து காரில் வேலாயுதம்பாளையம் வந்தனர். மூன்று பேரும் வேலாயுதம்பாளையம் அருகே பாலத்துறை பகுதியில் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் எதிரில் உள்ள பேக்கரிக்கு வெளியே நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் வக்கீல் ராஜா மற்றும் சவுக்கு சங்கரின் யூடியூப் அட்மின்கள் சூரியா, பிரதீப் ஆகிய மூன்று பேரையும் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் வழக்கறிஞர் ராஜாவுக்கு தாடை மற்றும் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. சூர்யா மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் தாக்குதல் நடத்தியவர்களை திருப்பித் தாக்க, 6 பேரும் அவர்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். சவுக்கு சங்கரின் யூடியூப் அட்மின்கள் சூரியா, பிரதீப் இருவரும் அவர்களது காரில் ஏறி தப்பிச் சென்றவர்களை துரத்திக் கொண்டு சென்றனர். காரில் தப்பிச் சென்ற மர்மநபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் நாமக்கல் மாவட்ட பகுதிக்கு சென்று மறைந்து விட்டனர்.
இந்நிலையில் படுகாயம் அடைந்த ராஜாவை உடனடியாக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்கறிஞர் ராஜா வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆன பதிவுகளை கைப்பற்றி தாக்குதல் நடத்திவிட்டு காரில் தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
- பள்ளம்தோதோண்டி தடுக்கப்பட்ட பின்பும்தோட்டக்குறிச்சி காவிரியில் தொடரும் மணல் திருட்டு
- சட்டவிரோதமாக மணலை அள்ளி கரையில் ஓர் இடத்தில் குவித்து வைத்திருந்ததையும், பின்னர் அதை வாகனங்கள் மூலம் அள்ளி செல்வதையும் கண்டறிந்தனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தளவா பாளையம் அருகே தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் பறித்து வைத்த குழியை மூடி மர்ம நபர்கள் மணல் அள்ளி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை எதிரொலியாக வாங்கல் அருகே மல்லம்பாளையத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரி மூடப்பட்டது. இதனால் கட்டுமான பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள காவிரி ஆற்றில் லாரி மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளி விற்பனை செய்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றுக்கு சென்று பார்வையிட்டனர். அதில் ஜேசிபி இயந்திரம் மூலம் சட்டவிரோதமாக மணலை அள்ளி கரையில் ஓர் இடத்தில் குவித்து வைத்திருந்ததையும், பின்னர் அதை வாகனங்கள் மூலம் அள்ளி செல்வதையும் கண்டறிந்தனர்.
அதையடுத்து மணல் திருட்டை தடுக்கும் வகையில் காவிரி ஆற்றுக்குச் செல்லும் பாதையின் குறுக்கே ஜேசிபி மூலம் ஆழமாக குழி பறித்து வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடை ஏற்படுத்தி இருந்தனர். இதனால் சில நாட்களாக மணல் திருட்டு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் மர்ம நபர்கள் ரோட்டின் குறுக்கே அதிகாரிகள் பறித்த குழியை மூடிவிட்டு இரவில் சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளி கடத்தி வருகின்றனர். எனவே அவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கரூர் மாவட்டம்தோட்டக்குறிச்சி அருகே உடைந்து விழுந்த மின்கம்பம்
- இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்திலிருந்து தொழிற்சாலைகளுக்கு செல்லும் உயர் அழுத்த மின் பாதையில், வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்த ஒரு மின் கம்பம் திடீரென சாய்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று உடைந்த மின் கம்பத்தை, அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை நிறுத்தினர். இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.






