என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • அறுவை சிகிச்சை அரங்கத்தை உடனே சீரமைக்க உத்தரவு
    • பஸ் நிலையத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கையை எடுக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    தமிழக சட்டமன்ற உறுதிமொழி குழு அதன் தலைவரும், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவருமான வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று இரவு கார் மூலம் கன்னியாகுமரி வந்தனர். இந்த குழுவில் அண்ணாநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன், சேலம் மேற்கு தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ. அருள், நாமக்கல் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராமலிங்கம், ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதன் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர்கள் கருணாநிதி, துணை செயலாளர் ரவி, பிரிவு அலுவலர் பியூலா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழுவினர் நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினர். இன்று காலையில் இந்த குழுவினர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் இந்த எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் கன்னியாகுமரியில் உள்ள வட்டார தலைமை மருத்துவமனைக்கு சென்று "திடீர்" ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பெண்கள் பிரசவ வார்டு, பெண் உள்நோயாளிகள் பிரிவு, ஆப்ரேஷன் தியேட்டர் உள்பட அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த நோயாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தனர். அங்கு தற்போது பரவி வரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் யாரும் உள்ளனரா? என்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். உள்நோயாளிகள் வார்டில் உள்ள ஜன்னல்களில் கொசு வலைகளை உடனடியாக பொருத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன் பிறகு இந்த குழுவினர் கன்னியாகுமரியில் பாழடைந்து கிடக்கும் புதிய பஸ் நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த குழுவினர் அந்த பஸ்நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். பின்னர் தேங்காய்பட்டணத்தில் ரூ.253 கோடி செலவில் நடைபெற்று வரும் துறைமுக விரிவாக்க பணிகளை இந்த குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கட்டிட பிரிவு செயற்பொறியாளர் வெள்ளைச்சாமி ராஜா, உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் மாரிதுரை, மருத்துவத்துறை இயக்குனர் பிரகலாதன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், அதிகாரிகள் கலந்துகொண்டனர். சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி ஆஸ்பத்திரியில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லை. இங்கு வருகிற நோயாளிகளை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டை பொதுமக்கள் அளிப்பதன் அடிப்படையில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது. அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடத்தின் மோசமான தன்மையின் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் தான் பிரசவ அறுவை சிகிச்சை மற்றும் வேறு அறுவை சிகிச்சைகள் இங்கு நடைபெறவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை அரங்கத்தை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு வருபவர்களை மட்டும் மருத்துவ கல்லூரிக்கு பரிந்துரை செய்ய வேண்டும். 5 டாக்டர்கள், 10 செவிலியர்கள் உள்ளனர். சில பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறியுள்ளார்கள். அந்த காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.20 லட்சம் செலவில் ஆஸ்பத்திரி சீரமைக்கப்படுகிறது. இந்த பணியை 2 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். ஜன்னல்களில் கொசுவலைகளை பொருத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மிக முக்கியமான பகுதி கன்னியாகுமரி ஆகும். இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீனவர்கள் அவசர தேவைக்கு வருகின்றபோது மருத்துவர்கள் பணியில் இருந்து பணியாற்ற வேண்டும். வட்டார தலைமை மருத்துவமனை யில் 24 மணி நேரமும் ஒரு மருத்துவர் இருப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். கன்னியாகுமரி பஸ் நிலையம் மிக மோசமான நிலையில் உள்ளதாக புகார் வந்துள்ளது. பஸ் நிலையயத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். ரூ.10 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கையை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • எதிர்பாராதவிதமாக பாலசாமி மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி இன்று காலை பாலசாமி உயிரிழந்தார்.

    தக்கலை:

    தேவிகோடு செறுவ ல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசாமி (வயது81). இவர் கடந்த 30-ந்தேதி தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலில் நோக்கி கார் விரைந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பாலசாமி மீது மோதியது.

    இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பாலசாமி உயிரிழந்தார்.

    இது சம்பந்தமாக அவரது மகன் பால் வின்சிகர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் கார் டிரைவர் பாபநாசம் பகுதியை சேர்ந்த முத்து சுப்பிரமணியன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 9 நிலையில் இருந்து 11 நிலையாக மாற்றி அமைக்கப்படுகிறது.
    • இதைத்தொடர்ந்து இந்த புதிய ராஜகோபுரத்துக்கான மறு அளவீடு செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்றுபோன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கோவிலில் உள்ள கொலுமண்டபத்தில் நடந்தது.

    இதில் கேரளாவை சேர்ந்த 4 நம்பூதிரிகள் கலந்துகொண்டு தேவபிரசன்னம் பார்த்தனர். அப்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டவேண்டும் என்றும், அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் 24-வது சக்தி பீடத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்திவிட்டு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும், சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும், தேவபிரசன்னத்தில் அருள்வாக்கு கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை கட்டிய ஸ்தபதியின் மகன் ஆனந்த்ஸ்தபதி மற்றும் தொல்லியல் துறையினருக்கும் இந்துசமய அறநிலையத்துறை வடிவமைப்பு பொறியாளர் முத்துசாமி தலைமையிலான வல்லுனர் குழுவினரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடக்க வேண்டி கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்தப்பட்டது. தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது போன்று கோவில் தென்மேற்கு மூலையான கன்னி மூலையில் கோவிலின் தல விருச்சமான சந்தன மரமும் நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் 120 அடி உயரம் 66 அடிநீளம் 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணி நடந்தது. இதேபோல கோவிலின் கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் அமைய இருக்கும் இடத்திலும் நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது. இந்த நில அளவீடு செய்யும் பணியை இந்துஅறநிலையத்துறை மண்டல ஸ்தபதி செந்தில், ஸ்ரீரங்கம் ஸ்தபதி இளையராஜா ஆகியோர் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இறுதி கட்ட ஆய்வாக தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதியும் மகாபலிபுரம் அரசு சிறப்பு கலைக்கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூர்த்தி தலைமையிலான வல்லுனர் குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இந்த இறுதி கட்ட ஆய்வு பணிகள் நடந்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அமைய இருக்கும் ராஜகோபுரத்தின் அளவை மாற்ற திட்ட மிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ராஜகோபுரத்தின் உயரத்தை 120 அடியில் இருந்து 150 அடியாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ராஜகோபுரத்தை 9 நிலையில் இருந்து 11 நிலையாக மாற்றவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ராஜகோபுரம் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. இதைத்தொ டர்ந்து இந்த புதிய ராஜகோபுரத்துக்கான மறு அளவீடு செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

    • அஜில்ராஜ் பொன்மனை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
    • அவரது உடலை குலசேகரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவட்டார்:

    குலசேகரம் அருகே உள்ள ஆனைக்கூட்டுவிளை கிளக்கம்பாகம் பொன்மனை பகுதியை சேர்ந்தவர் அஜில் ராஜ் (வயது 38). இவருக்கு அனுஜா (26) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அஜில்ராஜ் பொன்மனை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில மாதங்களாக இவருக்கும், மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதன் காரணமாக அவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அஜில் ராஜ் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதுவுடன் தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரைகளை தின்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை குலசேகரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவர் மாயமான குறித்து மண்டைக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • தனிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    மணவாளக்குறிச்சி:

    மண்டைக்காடு அருகே உள்ள கோவிலான் விளை யை சேர்ந்தவர் ஜாண்சன். டெம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தனிஷா(வயது 19) பக்கத்து ஊரிலுள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று வழக்கம்போல் காலை கல்லூரிக்கு செல்ல வீட்டிலிருந்து தனிஷா புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடினர். ஆனால் தனிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.ஆகவே அவர் மாயமான குறித்து மண்டைக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி யை தேடி வருகின்றனர்.

    • சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
    • சில நேரங்களில் பலத்த மழையாகவும் பெய்கிறது.

    தக்கலை:

    குமரிமாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில சமயம் சாரல் மழையாகவும், சில நேரங்களில் பலத்த மழையாகவும் பெய்கிறது. அதே நேரத்தில் பகலில் வெயில் அடிக்கிறது. இவ்வாறு சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சல் பாதித்து அவதிப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால கடந்த 30-ந்தேதி மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. ஒரு ஒன்றியத்தில் 3 இடங்களி லும், நாகர்கோவிலில் மாநகராட்சி பகுதியில் 4 இடங்களிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது. அதில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டது.

    இதுகுறித்து திருவி தாங்கோடு சுகாதார துறை அதிகாரி ராமதாசிடம் கேட்ட போது, 'தக்கலை சுற்று வட்டார பகுதியில் பெரும் பாதிப்பு இல்லை. இருப்பினும் முகாம் நடத்தப்பட்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுகிறது' என்றார்.

    இந்நிலையில் நேற்று தக்கலை அரசு மருத்துவ மனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஒரே நேரத்தில் நூற்றுக்கும மேற்பட்ட நோயாளிகள் திரண்டனர். அவர்கள் வெகுநேரம் காத்திருந்து மருந்து வாங்கி சென்றனர். மேலும் மாத்திரைகள் வழங்கும் இரண்டு பிரிவில் ஒன்று மட்டுமே செயல்பட்டதால் நோயாளிகள் வெகுநேரம் வரிசையில் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

    • புகையிலை பொருள்கள் பறிமுதல்
    • அந்த வழியாக ரோந்து வந்த தனிப்படை போலீசார் பார்த்தனர்.

    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் ஒரு கார் வெகு நேரமாக நின்றது. அதன் டிரைவர் காருக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அதனை அந்த வழியாக ரோந்து வந்த தனிப்படை போலீசார் பார்த்தனர். அவர்கள் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கிருஷ்ணகிரி குப்பச்சிபாறை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 24) என்பது தெரியவந்தது.

    அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் காருக்குள் போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் 20 சாக்கு மூடைகளில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தன. அதுபற்றி விசாரித்த போது, விஜயன் என்பவர் கூறியதின் பேரில் கிருஷ்ணகிரியில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்ததாக பிரகாஷ் தெரிவித்தார்.

    புகையிலை பொருட்களை அவர் குமரி மாவட்டத்தில் சப்ளை செய்வதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து கடத்தி கொண்டு வந்துள்ளார். இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் டிரைவர் பிரகா சும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது.

    • மார்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் நடத்துகிறது.
    • 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 2-வது சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை 4-ந்தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மார்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் நடத்துகிறது.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, செவிலியர் படித்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாழை மரம் நட்டதால் பரபரப்பு
    • தினமும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    திருவட்டார்:

    பேச்சிப்பாறை முதல் மார்த்தாண்டம் வரை உள்ள சாலையானது மிகவும் பரப்பரப்பாக காணப்படும் காலை, மாலை வேளைகளில் அதிக அளவு வாகனங்கள் செல்லும். புத்தன்கடை பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. அதன் அருகில் ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது தினமும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    இதனால் ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளும் மழை காலங்களில் பள்ளத்தில் விழுந்தார்கள். இதை கருத்தில் கொண்டு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தில் வாழை மரத்தை நட்டு அதன் மீது மாலை போட்டு பள்ளத்தில் வைத்துள்ளனர். மீண்டும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழாமல் இருக்க கல் வைத்துள்ளனர். எனவே பெரும்விபத்து நடைபெறும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • மாவட்ட திட்ட இயக்குனர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    ராஜாக்கமங்கலம்:

    மேலசங்கரன்குழி முதல் நிலை ஊராட்சியில் வேம்பனூர் கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள விவசாயம் விளை பொருட்கள் கிட்டங்கியை எம்.ஆர். காந்தி திறந்து வைத்தார்.

    ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் அய்யப்பன், ஊராட்சி துணை தலைவர் ரமேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜாண்சிலின் விஜிலா, ஊராட்சி உறுப்பி னர்கள் முன்னிலை வகித்த னர். மேலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அதே வளாகத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை ஊராட்சி தலைவர் முத்து சரவணன் தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்திற்கு மாவட்ட திட்ட இயக்குனர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகாபாய், ராஜா ஆறுமுக நயினார், பொறியாளர் கவிதா, தலைமை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கால்நடை மருத்துவர், அங்கன்வாடி பணியாளர்கள், ரேசன் கடை ஊழியர்கள், மின்சாரவாரிய ஊழியர்கள், காவல் நிலைய ஊழியர்கள், ஊராட்சி செயலாளர் சசிகலா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் தங்களை அர்ப்பணித்து கடமையை செய்ததற்காக அவர்களுக்கு ஊராட்சி தலைவர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோர்களால் கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விவசாய விளை பொருட்கள் கிட்டங்கியை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விவசாயி பங்களிப்புடன் பயன்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பன்றிவாய்க்கால் கால் வாயை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுப்பு சுவர் கட்டவேண்டும் என்றும், ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என்றும், சாந்தபுரம் சாலை மேலசங்கரன்குழியில் நெடுஞ்சாலை துறை மூலம் நடைபெறும் கட்டுமானம் வேகமாக வேலையை முடிக்க வேண்டும் என்றும், ரோட்டு ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், நெல் அறுவடை செய்ய முடியாமல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கவும், வீடுகளில் உள்ள கழிவு குப்பைகளை சாலை ஓரம் தெருக்களில் கொட்டாமல் ஊராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வழங்கவேண்டும் என்றும், தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் புதிய தெரு விளக்கு பொருத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவேண்டும் என்றும், கிராம சபையில் சிறப்பு தீர்மானங்களாக நிறை வேற்றபட்டது.

    • திற்பரப்பு, திருநந்திக்கரை, அரசமூடு ஆகிய இடங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.
    • இந்த தகவலை குழித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    திருவட்டார்:

    வீயன்னூர் துணை மின் நிலைய உயர் மின்ன ழுத்தப்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆற்றூர், திருவட்டார், செருப்பாலூர், வெண்டலிகோடு, வலியாற்றுமுகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வேர்க்கிளம்பி, மணலிக்கரை, மணக்காவிளை, முகிலன்கரை, பெருஞ்சக்கோணம், காயல்கரை, சித்திரங்கோடு, சாண்டம், ஆத்துக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

    இதுபோல் பேச்சிப்பாறை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கடையாலுமூடு, கோதையார், குற்றியார், மைலார், உண்ணியூர்கோணம், சிற்றார், களியல், ஆலஞ் சோலை, பத்துகாணி, திற்பரப்பு, திருநந்திக்கரை, அரசமூடு ஆகிய இடங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    தக்கலை உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே, நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மணலி, தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, அப்பட்டு விளை, பரசேரி, ஆளூர், பேயன்குழி, மொட்டவிளை, காரங்காடு, நெட்டான்கோடு, பூலன்கோடு, வீராணி, தோட்டி யோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங் கோடு, மங்காரம், புதூர், சேவியர்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், கோழிப்போர்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சாமிவிளை, முளகுமூடு, சாமியார்மடம், கல்லுவிளை, மேக்கா மண்டபம், செம்பருத்திவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல் விளை ஆகிய இடங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்தநேரத்தில் மின்பாதை மற்றும் மின்கதட கங்களுக்கு இடையூறாக நிற்கும் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தக்கலை மின் வினியோக செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுபோல் குழித்துறை துணை மின் நிலையத்தில் மாதாந் திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே, நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன் திட்டை, குழித்துறை, இடைத் தெரு ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை குழித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பயிற்சியினை பயிற்றுனர்கள் டைமன் அருள் மற்றும் ஜான்சிராணி பயிற்சி அளித்தனர்.

    பூதப்பாண்டி:

    பூதப்பாண்டியில் உள்ள தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் வார்டு உறுப்பினர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது. ஆர்.ஜி.எஸ்.ஏ.திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட 16 ஊராட்சிகளில் உள்ள பெண் வார்டு உறுப்பினர்களுக்கு தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலக அவைக்கூடத்தில் நடந்த பயிற்சியில் பெண்கள் பங்கேற்பு சுயசார்பு தன்மை, பணியில் சந்திக்கும் சவால்கள், பாலின சமத்துவம் மற்றும் பாலினசரி நிகர் வரவு செலவு திட்டம், அரசியல் அமைப்பு சமத்துவம், பெண்களுகளுக்கான உரிமைகள், சட்டங்கள், மத்திய, மாநில அரசின் திட்டங்கள் ஆளுமை திறமையை வளர்த்தல், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியினை பயிற்றுனர்கள் டைமன் அருள் மற்றும் ஜான்சிராணி பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் செய்யப்பட்டது.

    ×