என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஆந்திராவில் இருந்து சூட்கேசில் கஞ்சா கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. #ChennaiAirport
    பூந்தமல்லி:

    சென்னையை அடுத்த போரூர் சிக்னல், ஆற்காடு சாலையில் ஆட்டோவில் வந்து இறங்கிய பெண் ஒருவர் கையில் சூட்கேசுடன் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்குவதற்காக சென்றார்.

    அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணிடம் சூட்கேசை கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டி கேட்க பொதுமக்கள் கூடியதால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் கையில் மாட்டியிருந்த இரும்பு வளையத்தை எடுத்து அந்த பெண்ணின் முகத்தில் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதையடுத்து, பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது பற்றி தகவல் தெரியவந்ததும் வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் முத்துராஜா ஆகியோர் தலைமையில் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அந்த பெண் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரேணுகா (வயது 23) என்பதும், அவர் வைத்திருந்த சூட்கேசில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது தனக்கும் அந்த சூட்கேசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தான் ஒரு பட்டதாரி என்றும் தெரிவித்தார்.

    இருப்பினும் போலீசாருக்கு அந்த பெண்ணின் மீதான சந்தேகம் விலகாததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரேணுகா ஏற்கனவே ஆந்திரா போலீசாரால் 2 முறை கைது செய்யப்பட்டவர்.

    ரேணுகா அடைக்கப்பட்டிருந்த அதே சிறையில் சென்னை செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரியான முத்துலட்சுமி (65) என்பவரும் அடைக்கப்பட்டிருந்தார். இவர் ஆந்திராவில் கஞ்சா வாங்க சென்றபோது ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.

    சிறையில் இருந்தபோது ரேணுகாவிற்கும், முத்துலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். ரேணுகா வழக்கில் சிறைக்கு சென்றதால் அவருடைய பெற்றோர் அவரை வீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் முத்துலட்சுமி, ரேணுகாவை சென்னைக்கு அழைத்து வந்து பெரும்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்கவைத்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரியான தேவசகாயத்துக்கும், ரேணுகாவுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் முத்துலட்சுமி திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகியும் இதுவரை குழந்தை இல்லை.

    ரேணுகாவிற்கு சொந்த ஊர் ஆந்திர மாநிலம் என்பதால் அங்கிருந்து சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வர தேவசகாயத்துக்கு அவர் உதவியாக இருந்து வந்துள்ளார். அதன் பின்னர் தேவசகாயம் மூலம் பழக்கமான நிர்மல்குமார் என்பவருக்கும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கொடுத்துள்ளார்.

    கஞ்சா வியாபாரத்தை காரணம் காட்டி நிர்மல்குமார் உள்பட பல ஆண்களுடன் ரேணுகா பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தேவசகாயம், ரேணுகாவுடன் சண்டை போட்டு அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார். இதையடுத்து ரேணுகா நிர்மலுடன் கைகோர்த்துக்கொண்டு ஆந்திராவில் இருந்து கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்துள்ளார். இதில் ரேணுகாவிற்கு அதிகளவில் பணம் கிடைத்தது.

    இதையடுத்து கடந்த 4-ந்தேதி ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி சூட்கேசில் வைத்துக்கொண்டு தனியார் சொகுசு பஸ்சில் வந்த ரேணுகா நேற்று முன்தினம் காலை சோழிங்கநல்லூரில் வந்து இறங்கினார். கஞ்சாவை வாங்குவதற்காக நிர்மல்குமார் அங்கு வர தாமதம் ஆனதால் ரேணுகா அங்கு காத்துக்கொண்டிருந்தார்.

    அப்போது கார் மற்றும் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ரேணுகாவை காரில் ஏறும்படி கூறி உள்ளனர். இதில் பதறிப்போன ரேணுகா கூச்சல் போட்டதால் அங்கு பொதுமக்கள் கூட ஆரம்பித்ததையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து ரேணுகா செம்மஞ்சேரி போலீசில், மர்ம நபர்கள் தன்னை கடத்த முயன்றதாக புகார் அளித்ததார். ஆனால் அப்போது போலீசார் அவரிடம் இருந்த சூட்கேசை சோதனை செய்யவில்லை.

    பின்னர் ரேணுகா செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலம் போரூருக்கு வந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அதே மர்ம கும்பல் ரேணுகாவிடம் கஞ்சா சூட்கேசை பறிக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் கூடியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரேணுகாவை தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    ரேணுகா தன்னிடம் இருந்து பிரிந்து சென்று தனக்கு போட்டியாக கஞ்சா தொழில் செய்வதால் அவரது கணவர் தேவசகாயமே ஆள் வைத்து ரேணுகாவை கடத்தி கஞ்சாவை பறிக்க முயற்சி செய்தாரா? அல்லது தொழில் போட்டியில் வேறு யாராவது ரேணுகாவை கடத்த முயற்சி செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. தேவசகாயம் மற்றும் நிர்மல்குமாரை கைது செய்ய போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ரேணுகாவிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள போலீசார் அவரை போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். அதனை தொடர்ந்து இந்த கஞ்சா கடத்தலில் தொடர்பு உள்ளவர்கள் யார்? யார்? என்பது முழுமையாக தெரியவரும் என கூறப் படுகிறது. #ChennaiAirport
    சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை பக்ரைனில் இருந்து வந்த பயணியிடம் ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #goldsmuggling

    ஆலந்தூர்:

    பக்ரைனில் இருந்து இன்று அதிகாலை சென்னைக்கு விமானம் வந்தது. விமானத்தில் பயணிகள் கொண்டு வந்த உடமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது திடீரென்று சுங்கத்துறை எல்லையை வேகமாக கடந்து செல்ல முயன்ற பயணி ஒருவரை மடக்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

    அவர் வைத்திருந்த சூட்கேசை திறந்து சோதனை நடத்தினார்கள். அதில் ஒரு அட்டைப் பெட்டி இருந்தது. அதனுள் அலுமினியம் ஷீட் ஒன்று இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது 700 கிராம் தங்கம் கடத்தியது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.

    விசாரணையில் அவர் சென்னையைச் சேர்ந்த ஹைடுரூஸ் (வயது34) என்று தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #goldsmuggling

    செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னைக்கு வரும் ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்தது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் - காட்டாங்கொளத்தூர் இடையே உள்ள தண்டவாளத்தில் இன்று அதிகாலை 5.40 மணியளவில் திடீரென விரிசல் ஏற்பட்டது.

    அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரெயில் சென்றது. தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை அறிந்த ரெயில் என்ஜின் டிரைவர் இதுபற்றி செங்கல்பட்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வரும் வழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதே போல செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரெயில்களும் நிறுத்தப்பட்டது.

    ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தண்டவாள விரிசலை சரி செய்தனர். காலை 6 மணிக்கு பின்னர் ரெயில் போக்குவரத்து சீரானது.

    தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலில் சேது எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகர், அனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சுமார் ½ மணி நேரம் தாமதமாக சென்னைக்கு வந்து சேர்ந்தது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
    மாமல்லபுரம் அருகே சென்னை ஓட்டல் உரிமையாளர் கார் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    மாமல்லபுரம்:

    சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் மணி (வயது 61). ஓட்டல் உரிமையாளர் இவர் கடந்த 4-ந் தேதி மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு காரில் வந்தார்.

    மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கிழக்குகடற் கரை சாலையில் வந்த போது சாலை தடுப்பு தூணில் கார் மோதி கவிழ்ந்தது.

    இதில் படுகாயமடைந்த மணியை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மணி உயிரிழந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலைபார்த்த இடத்தில் ஆவணங்களை திருடி குழந்தைகள் பராமரிப்பு பள்ளியை போலியாக நடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார்.
    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் ராம் நகரில் தனியார் இன்டர்நே‌ஷனல் குழந்தைகள் பராமரிப்பு பள்ளி மற்றும் குழந்தை பராமரிப்பு ஆசிரியர் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு மடிப்பாக்கம் ராம் நகரை சேர்ந்த கிறிஸ்டினா முதல்வராக பணியாற்றி வந்தார்.

    இந்த பள்ளியில் கடந்த 4 மாதமாக ரூ.18 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. இதுபற்றி பள்ளி நிர்வாகி திருஞானசம்பந்தம் விசாரணை நடத்தினார்.

    அப்போது முதல்வராக உள்ள கிறிஸ்டினா வேலை பார்த்த இடத்தில் ஆவணங்களை திருடி அதனை மாற்றி அதே பகுதியை சேர்ந்த அனிதா என்பவருடன் இணைந்து தனியாக மடிப்பாக்கம் சீனிவாச நகரில் போலியாக குழந்தைகள் பராமரிப்பு பள்ளி நடத்தி வந்தது தெரிந்தது. மேலும் கிறிஸ்டினா ரூ.2 லட்சம் கையாடல் செய்து இருப்பதும் தெரிய வந்தது.

    இதுபற்றி மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது, போலீசார் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டினாவை கைது செய்தனர். வங்கி ஊழியர் அனிதாவை தேடி வருகிறார்கள்.
    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய 2 பேர் கார் மோதி பலியான சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #accidentcase

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லன் சிலை எதிரே இன்று காலை 4 மணி அளவில் திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திக், அஜித் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் தாறுமாறாக வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார்த்திக்கும், அஜித்தும் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கன்னியப்பன், திருநாவுக்கரசு ஆகியோர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றினர். அவர்களுக்கு உதவியாக பொது மக்களும் ஏராளமானோர் அங்கு திரண்டு நின்றனர்.

    அந்த நேரத்தில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கார் திடீரென விபத்தில் சிக்கியவர்களை மீட்டுக் கொண்டிருந்த பொது மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய தூத்துக்குடியை சேர்ந்த ஹேமச்சந்திரா (வயது 30), சென்னை தி.நகரை சேர்ந்த ஏகாம்பரம் (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் கார்த்திக், அஜித், பிரேம்குமார் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். அதிர்ஷ்டவசமாக போலீசார் காயமின்றி தப்பினர். காயம் அடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    முதலில் மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்திய தி.நகரை சேர்ந்த டிரைவர் ராகுலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிந்தது.

    இதேபோல் ஆம்புலன்ஸ் மீது மோதிய காரை பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் ஓட்டி வந்தது தெரியவந்தது. அவர்களுக்கு காரை ஓட்ட பெற்றோர் அனுமதி கொடுத்தது எப்படி? அதிகாலையில் எங்கிருந்து வந்தனர்? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    விபத்து ஏற்படுத்திய 3 பேரையும் மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர். கைதான மாணவர்கள் ஒருவர் திருவான்மியூரை சேர்ந்தவர், மற்றொருவர் பாலவாக்கத்தை சேர்ந்தவர் ஆவார்.

    பலியான ஹேமச்சந்திரன் நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் இன்று காலை மாமல்லபுரம் வந்து இருக்கிறார்.

    அந்த நேரத்தில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய போது கார் மோதி பலியாகி விட்டார். இதேபோல் பலியான மற்றொருவரான ஏகாம்பரமும் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்ததாக தெரிகிறது.

    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய 2 பேர் கார் மோதி பலியான சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரானில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரும் சென்னை வந்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். #TamilmaduFishermen
    ஆலந்தூர்:

    ஈரானில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரும் சென்னை வந்தனர். பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீண்டும் தொழில் செய்ய தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார், ஆரோக்கியராஜ், சகாய மைக்கேல் பார்த்திபன், ஜோசப், சேவியர் ஜெபமாலை, சூசை, சேவியர், ஜேசுதாசன், திருநெல்வேலியை சேர்ந்த செல்வகஸ்பர், விஜய், ஜேசுஇக்னேடிஸ், மார்க்வார்க், அந்தோணி மைக்கேல், அந்தோணி ராயப்பன், மரியஜோசப் கென்னடி, தூத்துக்குடியை சேர்ந்த பெனிடோ, சேவியர், சுஜய்பெர்ணான்டஸ், விக்டர், பிரசாந்த், அஜிடன் ஆகிய 21 மீனவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரான் நாட்டுக்கு மீன்பிடி தொழிலுக்காக சென்றனர்.

    இவர்கள், வேலைக்கான விசாவில் இல்லாமல் சுற்றுலா விசாவில் அழைத்து செல்லப்பட்டதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளானார் கள். இவர்களை பணிக்கு அமர்த்தியவர்களும் உரிய சம்பளம், உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தினர்.

    இதுபற்றி அவர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜஸ்டின் ஆண்டனிக்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றி அவர் மத்திய மந்திரிகள் சுஷ்மாசுவராஜ், பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு சென்றார். தி.மு.க. எம்.பி. கனிமொழியும் இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை மந்திரியிடம் நேரில் வலியுறுத்தினார்.

    அதைதொடர்ந்து ஈரான் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக ஈரானில் தவித்த தமிழக மீனவர்கள் 21 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நேற்று அதிகாலை அவர்கள் அனைவரும் ஈரானில் இருந்து தோகா வழியாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தனர்.

    அவர்களை, அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

    பின்னர் மீனவர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் வாகனங்களில் அனுப்பி வைத்தனர். அத்துடன் அவர்கள், உணவு சாப்பிட தமிழக அரசின் சார்பில் 21 பேருக்கும் தலா ரூ.500 வழங்கப்பட்டது.

    முன்னதாக கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர் குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரானில் தவித்த எங்களை மீட்டுவர நடவடிக்கை எடுத்த மத்திய-மாநில அரசுகளுக்கும், எங்களுக்கு உதவியவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தமிழகத்தில் இருந்து எங்களிடம் இருந்த மீன்பிடி தொழிலுக்கு தேவையான பொருட்களை விற்று அந்த பணத்தில்தான் ஈரான் சென்றோம்.

    ஆனால் கடந்த 7 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் எங்கள் குடும்பம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நாங்கள் மீண்டும் தொழில் செய்ய எங்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilmaduFishermen
    தாம்பரத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த எல்லம்மாள் (வயது85).

    இவர் இன்று காலை தாம்பரத்தில் ஆஸ்பத்திரிக்கு நடந்து கொண்டிருந்தார். தர்ம தோட்டம் என்ற பகுதியில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் எல்லாம்மாள் கழுத்தில் இருந்து 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து எல்லம்மாள் தாம்பரம் போலீசில் புகார் செய்தார்.

    மாமல்லபுரத்தில் பைனான்சியர் நீச்சல் குளத்தில் மர்ம முறையில் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    காஞ்சீபுரம் செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் நண்பர்களுடன் மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் செல்வராஜ் விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்தபோது திடீரென்று இறந்தார்.

    அவர் நீச்சல் குளத்தில் டைவ் அடித்து குளித்த போது மூச்சுத்திணறி மயக்கம் அடைந்ததாகவும், நண்பர்கள் அவரை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்ட தாகவும் போலீசில் தெரிவிக்கப்பட்டன. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வ ராஜ் எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கஞ்சா விற்பனை செய்ததாக போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனம் உடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த விப்பேடு கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ணன். இவரது மகன் உமேஷ் (வயது 17). இவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு உமேஷ் மற்றும் சில மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக விப்பேடு கிராம மக்கள் காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் உமேஷ் மற்றும் சில மாணவர்களை காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை போலீசார் எச்சரித்து விடுவித்தனர். மேலும் இந்த மாணவர்கள் கஞ்சா விற்றதாக சமூக வலைத்தளங்களிலும் தகவல் பரவியது.

    போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனம் உடைந்த உமேஷ், நேற்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கிருஷ்ணன் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் விப்பேடு கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். #tamilnews
    உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் அடுத்த காரணிமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 38). இவரது மனைவி பிரேமா (33). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மானாம்பதியில் இருந்து காரணிமண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    வயலூர் கூட்ரோடு அருகே வந்தபோது மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் மோதுவதுபோல வந்து பிரேமா அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

    உடனே ஸ்டாலின் மற்றும் அருகில் இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். அப்போது அந்த மர்ம நபர் நோனாம்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தங்கச்சங்கிலியுடன் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து பெருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை ஆய்வு செய்தார். அப்போது அந்த எண் போலியானது என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
    சொத்துவரி உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகங்கள் முன்பு இன்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாம்பரம்:

    சொத்துவரி உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகங்கள் முன்பு இன்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் மகாதேவன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுபோல பம்மல் நகராட்சி முன்பு நகர செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ×