என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது.
தினந்தோறும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதுவரை சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

விழாவின் 9-ம் நாளான இன்று அத்திவரதர் மாம்பல வண்ண பட்டாடை மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காஞ்சிபுரத்திற்கு வரும் அனைத்து வழிகளிலும் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் குவிந்து வருகின்றனர்.
பக்தர்கள் அதிக அளவு வருவதால் நகர்புறத்தினை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கும் வகையில் காஞ்சிபுரம் மட்டுமல்லாமல் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து நகராட்சி ஊழியர்கள் காஞ்சிபுரத்துக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினந்தோறும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுகாதாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பக்தர்கள் வரும் சாலைகள் அனைத்தையும் தொடர்ந்து சுத்தப்படுத்தியும், சுகாதரக்கேடு ஏற்படாமல் பிளீச்சிங் பவுடர் தெளிப்பது என பல்வேறு பகுதிகளிலும் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்கள். அவர்களின் பணியினை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
காஞ்சிபுரத்துக்கு வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுவதால் காந்தி சாலை ரங்கசாமி குளம் பகுதியில் இருந்து பெருமாள் கோயில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் பக்தர்கள் நடந்து வரும் நிலை உள்ளது.
வெயிலில் கால் சுடாமல் நடந்து செல்ல வசதியாக சாலையில் நீர் தெளிக்கப்பட்டு பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே வரவேற்பினைப் பெற்றுள்ளது.
அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சீபுரம் வருகிறார். அன்று அத்திவரதரை தரிசனம் செய்யும் அவர், காஞ்சீபுரத்தில் தங்கி மறுநாள் காலையில் நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை மீண்டும் தரிசனம் செய்கிறார்.
மோடியுடன் உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய மந்திரிகளும், தமிழக அமைச்சர்களும் வருகை தர உள்ளனர்.

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே எடுத்து தரிசிக்கப்படும் அத்திவரதர் சிலை தரிசனம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.
கோவில் வசந்த மண்டபத்தில் சயன நிலையில் அருள்பாலிக்கும் அத்திவரதரை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரள்கிறார்கள்.
மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். அவருடன் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனும் உடன் சென்றார்.
அத்திவரதர் பற்றிய சிறப்புகளை ரவிசங்கர் பிரசாத்திடம் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலையிலேயே பக்தர்கள் பெருமளவில் திரண்டனர். டி.கே. நம்பி தெரு, டோல்கேட், ஆனைக்கட்டி தெரு அமுதபடி தெரு, வடக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, உள்ளிட்ட தெருக்கள் பக்தர்கள் கூட்டத்தால்திக்கு முக்காடியது.
வெளியூர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கார், வேன்களில் வந்து குவிந்தனர். 3 கிலோ மீட்டர் துரம் வரை வரிசை இருந்தது. பொது தரிசன வரிசையில் சென்றவர்கள் குறைந்தபட்சம் 4 மணி நேரம் காத்திருந்தே தரிசிக்க முடிந்தது.
இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தரிசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமும் ஒவ்வொரு வண்ணபட்டு அலங்காரத்தில் அத்திவரதர் அருள் பாலித்து வருகிறார். இன்று மஞ்சள் பட்டு அலங்காரத்தில் காட்சி கொடுத்தார்.
மலேசியாவில் இருந்து நேற்று இரவு சென்னை வந்த விமான பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் மகிழ்பூர் பகுதியை சேர்ந்த மக்கான்சிங் (32) என்பவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவர் போலீசாரால் தேடப்படுகிற குற்றவாளி என தெரிய வந்தது.
அவரது மனைவி கொடுத்த வரதட்சணை புகாரில் கடந்த 2 வருடமாக அவரை போலீசார் தேடிவந்தனர். அவர் தலைமறைவாக இருந்துள்ளார்.
போலீசாரிடம் சிக்காமல் தப்பி வந்த மக்கான்சிங் சென்னை விமான நிலையத்தில் சிக்கி கொண்டார். அவரை போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை கைது செய்து பஞ்சாப் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பஞ்சாப் மாநில போலீசார் சென்னை வருகிறார்கள். அவர்களிடம் அவரை ஒப்படைக்கின்றனர்.
போரூர்:
போரூர் பைபாஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே பகல் மற்றும் இரவு நேரங்களில் தனியாக மோட்டார் சைக்கிளில் வருபவர்களை நோட்டமிட்டு கத்தியை காட்டி மிரட்டி ஒரு கும்பல் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக போரூர் உதவி கமிஷனர் செம்பேடு பாபுவுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று போரூர் ஏரிக்கரையில் சந்தேகத்திற்கு இடமாக கத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபரை குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவன் குன்றத்தூர் அடுத்த மதனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த யாகோப் (22) என்பது தெரிந்தது. போரூர் ஏரியில் மீன்பிடித்து விற்பனை செய்து வரும் யாகோப் போரூர் ஏரிக்கரையில் வசித்து வரும் கூட்டாளிகளான மணிகண்டன், சுந்தர்ராஜ் ஆகியோர் உடன் சேர்ந்து தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
யாகோப் அளித்த தகவலின்படி கூட்டாளிகள் 2 பேர் உள்பட 3 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, ஐபோன் உள்ளிட்ட 4 செல்போன்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
வேளச்சேரி:
ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் சுஜித் சுகன் (36). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தார். மேடவாக்கம் மெயின் சாலை வழியாக ஈச்சங்காடு சிக்னல் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் ஒருவர் குறுக் கிட்டதால் திடீர் பிரேக் போட்டார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.
அத்திவரதரை தரிசிக்க தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். நேற்று 5-வது நாளாக அத்திவரதருக்கு ஆரஞ்சு நிற பட்டாடை அணிவிக்கப்பட்டது.
பின்னர் வண்ண மலர்களால் அலங்கரித்து, தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று ஒரு நாள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க 85 ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர்.
இந்திய தலைமை அரசு வக்கீல் பராசரன் குடும்பத்துடன் சென்று நேற்று அத்திவரதரை தரிசனம் செய்தார்.
அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். கடந்த 4 நாட்களில் 2 1/2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.
அத்திவரதர் தரிசனம் செய்வதற்கென ஆன்லைனில் கடந்த 2 நாட்களாக ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். ஆன்லைனில் முன்பதிவு செய்தோருக்கான தரிசனம் நேற்று தொடங்கியது.
அதன்படி தினந்தோறும் இரண்டு வேளைகளில் 500 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். காலை 11 மணியில் இருந்து 12 மணி வரை 500 பேர் மாலை 5 மணி முதல் 6 மணி வரை 500 பேர் என மொத்தம் ஆயிரம் பக்தர்கள் ஆன்லைனில் ரூ. 500 செலுத்தி தரிசனம் செய்தனர்.
சிறப்பு தரிசனம் மேற் கொண்டவர்கள் முக்கியஸ்தர்கள் செல்லும் வரிசையில் சென்றனர். அவர்களுக்கு அத்திவரதர் பெருவிழா என அச்சிடப்பட்ட கைப்பையுடன் சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு பேட்டரி கார், சக்கர நாற்காலி வழங்கப்பட்டு சிரமம் இன்றி தரிசனம் செய்தனர். அத்திவரதரை தரிசனம் செய்ததோடு மூல வரையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரதராஜ பெருமாள் கோவிலில் கோடை உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. 11-ந் தேதி கருட சேவை விழா நடைபெற உள்ளது.
இதையட்டி அத்தி வரதரை தரிசனம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை (12 மணி நேரம்) மட்டுமே அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த நேர கட்டுப்பாடு வருகிற 11-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்துள்ளது. 4-வது நாளான நேற்று அத்திவரதர் வெள்ளை நிற பட்டாடையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலையில் இருந்தே வெளியூர், உள்ளூர் பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட வரிசையில் அத்திவரதரை வழிபட்டனர்.
வரதராஜபெருமாள் கோவிலில் கோடை உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. 11-ந் தேதி கருடசேவை விழா நடைபெறவுள்ளது. விழாவையொட்டி அத்திவரதரை தரிசனம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை (12 மணி நேரம்) மட்டுமே அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. வருகிற 11-ந் தேதி வரை மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க முடியும்.
அத்திவரதர் தரிசனம் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் 1 லட்சம் பக்தர்களும், 2-ந் தேதி 50 ஆயிரம் பேரும், 3-ந் தேதி (நேற்று முன்தினம்) 60 ஆயிரம் பேரும், நேற்று 75 ஆயிரம் பேரும் என கடந்த 4 நாட்களில் மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து உள்ளனர்.
சோழிங்கநல்லூர்:
அடையாறு, ஜல்லடியன் பேட்டையை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி உமா (வயது 47).
இன்று காலை கணவன் - மனைவி இருவரும் மாம்பாக்கத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
சித்தாலப்பாக்கம் சிக்னல் அருகே வந்த போது அவ்வழியே வந்த தண்ணீர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய உமா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் சுந்தரம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
போக்குவரத்து போலீசார் உமாவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தண்ணீர் லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பல்லாவரம் அடுத்த பம்மல் இரட்டை பிள்ளையார் கோயில் தெருவில் பிள்ளையார் கோவில் உள்ளது.
நேற்று மாலை கோவிலுக்குள் குடிபோதையில் புகுந்த வாலிபர் அங்கு வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, அம்மன் சிலை, நாககன்னி சிலை ஆகியவற்றை கல்லால் அடித்து உடைத்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சங்கர் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குடிபோதையில் இருந்த அந்த வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் அனகாபுத்தூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி விஜயகுமார் என்பது தெரிந்தது. அவருடைய மனைவி கடந்த 6 மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் தொடர்ந்து குடிபோதையில் சுற்றி திரிந்துள்ளார் என்று தெரியவந்தது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரிதா (வயது19). ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நண்பர் கார்த்திக் என்பவரின் காரில் 5 பேருடன் மாமல்லபுரத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்தனர். காரை கார்த்திக் ஓட்டினார்.
மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது, சாலையின் குறுக்கே திடீரென மாடுகள் புகுந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
பலத்த காயம் அடைந்த பிரிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் இருந்த கார்த்திக், அஸ்வின், பிராங்லின் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மாமல்லபுரம் போலீசார் அவர்களை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பிரிதாவுடன் வந்த ஆண் நண்பர்கள் அனைவரும் சென்னையில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.






