என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தமிழகத்தில் 7 ஆயிரம், 8 ஆயிரம் என்று இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 5,500 பேருக்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. தற்போது 7 ஆயிரம், 8 ஆயிரம் என்று இருந்த பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதே, அரசின் நடவடிக்கைக்கு சான்றாகும்.

    சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக நோய்ப்பரவலை தடுக்க தவறிவிட்டதாக சொல்கிறார்கள். கொரோனா நோய்ப்பரவலை தடுக்க பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாதிப்பை படிப்படியாக குறைத்துள்ளோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 89% பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கொரோனாவுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்ததால் இறப்பு எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளோம். வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் அதிகம் வருகின்றனர். மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. 

    காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனா கட்டுக்குள்வந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். எதிர்க்கட்சிகள் அரசைக் குறைகூறி வருகின்றன. இறப்பு எண்ணிக்கையும் தினமும் குறைந்து வருகிறது.

    100, 110 என்று இருந்த உயிரிழப்பு எண்ணிக்கையும் பாதியளவுக்கு குறைந்துவிட்டது. நேரடியாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் மத்திய நீர் வளத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
    காஞ்சிபுரம்:

    அத்திவரதர் தரிசன விழா 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் 48 நாட்கள் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசன விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி அத்திவரதர் தரிசன விழா முடிந்த பிறகு மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அதன்பிறகு அந்த குளத்தில் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    குளம் அசுத்தம் அடையாமல் இருக்க குளத்தில் பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் 3 மாதங்களுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்து நீர்ின் தன்மையை அறிந்து மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். என மத்திய நீர்வள ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதையொட்டி மத்திய நீர்வளத்துறை உதவி நீர் வள ஆராய்ச்சி அதிகாரி ராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் அத்திவரதர் வைத்திருக்கும் அனந்தசரஸ் குளத்தில் நீரின் தன்மையை ஆய்வு செய்தனர்.
    நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சீபுரம் வருகை தருகிறார்.
    காஞ்சீபுரம்:

    நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சீபுரம் வருகை தருகிறார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தர உள்ளார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னேற்பாடு பணிகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.


    பின்னர் கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காஞ்சீபுரத்திற்கு வருகை தருகிறார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார். பின்னர் அவர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    இதே விழாவில் காஞ்சீபுரத்தை அடுத்த கீழ்கதிர்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சீபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட தாசில்தார் அலுவலகங்களையும் திறந்து வைக்கிறார்.

    மொத்தம் ரூ.260 கோடியே 46 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார். பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இவை தவிர காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்புப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்தும், மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சீபுரம் வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காஞ்சீபுரம் சுற்றுலா மாளிகையில், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் வி.சோமசுந்தரம், சிட்லபாக்கம் ராசேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக வரவேற்பு அளிக்கின்றனர்.
    மகளின் படிப்புக்காக ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் சீட்டு கட்டுகள் வந்தது.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் வேடந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவரது முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்தார். அதில் விலை உயர்ந்த செல்போன், குறைந்த விலையில் விற்பதாக கூறப்பட்டு இருந்தது.

    இதனை உண்மை என்று நம்பிய முகமது அலி, தனது மகளின் ஆன்லைன் படிப்புக்காக ரூ.2,999 மதிப்புள்ள செல்போன் ஒன்றை கடந்த 2-ந் தேதி ஆர்டர் செய்தார்.

    இந்த நிலையில் அவரது முகவரிக்கு செல்போன் பார்சலை டெலிவரி செய்ய வாலிபர் வந்தார். செல்போனுக்கு உரிய பணத்தை பெற்றுக்கொண்டதும் அந்த பார்சலை முகமது அலியிடம் கொடுத்தார்.

    அவர் முன்னிலையிலேயே முகமது அலி அந்த பார்சலை பிரித்து பார்த்தார். ஆனால் அந்த பார்சலில் தான் ஆர்டர் செய்த செல்போனுக்கு பதிலாக சீட்டு கட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பார்சலை டெலிவரி செய்ய வந்த வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்து பள்ளிக்கரணை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், டெலிவரி கொண்டு வந்த வாலிபருக்கும், அந்த பார்சலை அனுப்பி மோசடி செய்ய முயன்றவர்களுக்கும் தொடர்பில்லை என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த புகாரை சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    சுங்குவார்சத்திரம் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தை அடுத்த சிறுமங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 35). அந்த கிராமத்தில் சிலரது வீட்டில் உள்ள மாடுகளுக்கு பால்கறந்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை அந்த பகுதியில் மழை பெய்து வந்தது. அப்போது அதே பகுதியில் உள்ள சுந்தரம் என்பவரின் வீட்டில் மாட்டுக்கு பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கி சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கன்று குட்டியும் இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்திரசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செய்யூர் அருகே மாவட்ட நிர்வாகம் சார்பில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவுக்குட்பட்ட புத்திரன் கோட்டை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலையில் அந்த நிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு திருநங்கைகள் 51 பேருக்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்குவது என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மூலமாக அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, திருநங்கைகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்ட இடத்தில் செய்யூர் தாசில்தார் ராஜேந்திரன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி ஆகியோர் நிலத்தை அளக்க சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது, கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து, தங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி அந்த இடத்தில் நில அளவீடு செய்வதை கண்டித்து வருவாய்த்துறை மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், அப்பகுதியில் நீண்ட நாட்கள் வசிக்கும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட கலெக்டர், தாசில்தார், ஆர்.டி.ஓ. உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், வருவாய்த்துறையினர் திருநங்கைகளுக்கு பட்டா நிலம் ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் அந்த இடம் கிராம மக்கள் அனுபவத்தில் உள்ள இடம் என்றும், எனவே திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா ஒதுக்கக்கூடாது எனவும் தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் கூறி சமாதானப்படுத்தினர். இதனையடுத்து நேற்று 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஜான் லூயிசை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

    அதில், திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் கிராம மக்களான தங்களது பயன்பாட்டில் உள்ளது என்றும், கிராமத்தில் அதிகம் பேர் வீட்டுமனை பட்டா இல்லாமல் உள்ள நிலையில், அவர்களுக்கு வீட்டுமனை பட்டா ஒதுக்கித் தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    அதைத் தொடர்ந்து, மனுவை மதுராந்தகம் ஆர்.டி.ஓ.வுக்கு அனுப்பி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறி அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
    சுங்குவார்சத்திரம் அருகே சொத்துக்காக தந்தையை கொலை செய்த வழக்கில் மகன் கைதானார். கூலிப்படையை ஏவி தந்தையை கொன்றது தெரிந்தது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 58). விவசாயியான ஜெயராமனுக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மேலும் பத்மாவதி என்ற 2-வது மனைவியும், அவர் மூலம் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சொத்து பிரச்சினையில் இரு குடும்பத்தினருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை தன் முதல் மனைவி மகன்களுடன் ஜெயராமன் அதே பகுதியில் உள்ள வயல் வெளிக்கு சென்றார்.

    அப்போது சொத்து தகராறில் பெற்ற தந்தை என்றும் பாராமல் முதல் மனைவியின் மகன்கள் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வயரால் ஜெயராமனின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கோவிந்தமாளின் மகன் உள்பட சிலரை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் ஜெயராமனின் முதல் மனைவி கோவிந்தம்மாளின் மகன் விக்னேஷ் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி படை அமைத்து தந்தை ஜெயராமனை கொலை செய்தது தெரிந்தது. மேலும் தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    சுங்குவார்சத்திரம் அருகே வயரால் கழுத்தை இறுக்கி விவசாயி கொலை செய்யப்பட்டார். சொத்துக்காக மகன்களே கொலை செய்தது தெரியவந்துள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 58). விவசாயி. இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர், 2-வது மனைவியாக பத்மாவதியும் அவர் மூலமாக ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சொத்து பிரச்சனையில் இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.

    நேற்று முன்தினம் மாலை தன்னுடைய முதல் மனைவி கோவிந்தம்மாளின் மகன்களுடன் ஜெயராமன் அதே பகுதியில் உள்ள வயல்வெளிக்கு சென்றார். அங்கு ஜெயராமன் மயங்கி விழுந்ததாக கூறி அவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு ஜெயராமனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜெயராமனின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்து இறுதிச்சடங்குக்கு அவரது மகன்கள் ஏற்பாடு செய்தனர். அப்போது ஜெயராமனின் கழுத்தில் காயம் இருப்பதை உறவினர்கள் பார்த்து சந்தேகம் அடைந்தனர். இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் ஜெயராமனின் முதல் மனைவி கோவிந்தமாளின் மகன்கள் தனது நண்பர்களுடன் தந்தை ஜெயராமனை வயல்வெளிக்கு அழைத்து சென்று வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தமாளின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களை தேடி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் சுந்தரி (வயது 22). கடந்த மாதம் 31-ந்தேதி தனது வீட்டின் அருகே உள்ள ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சுந்தரி அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். சுந்தரி தங்கச்சங்கிலியை இறுக்கமாக பிடித்து கொண்டார். பாதி அளவு தங்கச்சங்கிலியுடன் மர்மநபர் தப்பிச்சென்று விட்டார். இது குறித்து சுந்தரி செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    துரைப்பாக்கம் உதவி ஆணையர் லோகநாதன் தலைமையில் செம்மஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். நகை பறிப்பில் ஈடுபட்டது செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியியை சேர்ந்த ஜெய்சன் (22) என்பது தெரியவந்தது. அவர் சைதாப்பேட்டை ரங்கநாதபுரத்தில் உள்ள அவரது சகோதரி வீட்டில் இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று ஜெய்சனை கைது செய்தனர். அவரிடம் இருந்த 4¾ கிராம் தங்க நகையை தனிப்படை போலீசார் கைப்பற்றினர்.
    காஞ்சிபுரம் நகராட்சியில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் பெருநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை திட்டப்பணிகள், குடிநீர் வீட்டு இணைப்பு பணிகள், திடக்கழிவு மேலாண்மை, நகரமைப்புப் பணிகள் போன்றவை குறித்து இளங்கலை என்ஜினீயரிங் பட்டம் பெற்று 18 மாதங்கள், மிகாமலுள்ள பட்டதாரிகளுக்கு ஒரு ஆண்டு காலம் இலவச பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெறும் நபர்களுக்கு ஊதியமோ அல்லது உதவித் தொகையோ வழங்கப்படாது பயிற்சி முடிந்த பின் சான்று வழங்கப்படும் இந்த சான்று வேலை வாய்ப்புக்கு, நகராட்சி பணிகளில் சேருவதற்கான உத்தரவாக கருதக்கூடாது. பயிற்சியில் சேரும் இளங்கலை என்ஜினீயரிங் பட்டதாரிகள் வருகிற 7-ந் தேதிக்குள் www.internship.aicteindia.org என்ற இணைய தளத்தின் மூலம் பதிவு செய்து விவரத்தை நகராட்சிக்கு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரத்தில் அர்ச்சகர் வேலைக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவில் செயல் அலுவலர் கைது செய்யப்பட்டார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் புகழ்பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அர்ச்சகராக இருந்த நாகராஜ் குருக்கள் உடல் நலமின்றி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து உயிரிழந்த நாகராஜ் குருக்களின் மகன் அரிகரன் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் பூஜைகள் நடத்தி வருகிறார்.

    அரிகரன் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் நிரந்தர அர்ச்சகராக பணிபுரிய அந்த கோவிலில் உள்ள செயல் அலுவலரான செய்யாறை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பவர் அரிகரனிடம் ரூ.1½ லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அரிகரன் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். முதல் தவணையாக ரூ.40 ஆயிரம் தரும்படி கேட்டுள்ளார்.

    லஞ்சம் கொடுக்க மனமில்லாத அரிகரன் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் இது குறித்து புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் பேரில் அரிகரன் ரசாயனம் தடவிய ரூ.40 ஆயிரத்தை பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஆதி பீடாபரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் வைத்து கோவில் செயல் அலுவலர் சரவணனிடம் வழங்கினார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரவணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

    கைது செய்யப்பட்ட சரவணன் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் மற்றும் அச்சரப்பாக்கம் சிவன் கோவில் போன்ற கோவில்களின் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஊரப்பாக்கம் அருகே தி.மு.க. கிளை செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வண்டலூர்:

    சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த மண்ணிவாக்கம் அண்ணா நகர், கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 36). பெயிண்டரான இவர், அண்ணா நகர் தி.மு.க. கிளை செயலாளராக பதவி வகித்து வந்தார்.

    நேற்று இரவு ஆதனூர் ரோட்டில் பார்த்திபன் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.

    ஆனால் அந்த கும்பல் அவரை மடக்கி, மறைத்து வைத்திருந்த வீச்சு அரிவாளால் கழுத்து உள்பட உடம்பில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அதே மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த பார்த்திபன், துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் கொலையான பார்த்திபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நேரில் சென்று அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்தார்.

    இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா?. ரியல் எஸ்டேட் தொழில் போட்டியா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, தி.மு.க. கிளை செயலாளர் பார்த்திபனை கொலை செய்த கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் நடைபெற்ற இடம் உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்ததில் சில நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் கொலையாளிகளை பிடித்துவிடுவோம் என்றார்.

    அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.
    ×