என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு வகைகளாக பிரிக்கிறார்கள்.
    • நத்தப்பேட்டை ஏரிக்கரை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகள் கொண்டது. இதில் 31 வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. மீதமுள்ள 20 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த முடியாமல் உள்ளது. இதற்கும் நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்க முடியாத சூழ்நிலையில் 51 வார்டுகளில் சுமார் 4 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் தினம்தோறும் சுமார் 100 டன் குப்பைகள் சேக ரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் நத்தப்பேட்டை கிடங்கில் கொட்டி அதனை மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு வகைகளாக பிரிக்கிறார்கள். தற்போது மக்கள்தொகை பெருக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லை விரிவு காரணமாக குப்பைகள் அதிக அளவில் சேகரிக்கப்படுகின்றன. இதனால் குப்பைகளை தரம் பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் மாநகராட்சி ஊழியர்கள் பலர் குப்பைகளை நத்தப்பேட்டை ஏரிக்கரை பகுதியில் கொட்டி வருகிறார்கள்.

    மேலும் வீடுகளில் இருந்து கழிவு நீர் அனைத்துமே நத்தப்பேட்டை ஏரியில் கலந்து வருகின்றன. வழக்கமாக மழைக்காலங்களில் நத்தப்பேட்டை ஏரி, கொலவாய் ஏரி, ரெட்டேரி முழுமையாக நிரம்பினால் உபரி நீர் அருகில் உள்ள வையாவூர், கலியனூர், நெல்வாய் முத்தியால்பேட்டையில் உள்ள சிற்றேரி, தென்னேரிக்கு செல்லும். குப்பை கழிவுகளால் நத்தப்பேட்டை ஏரி மாசு அடைந்து வருவதால் அதன் அருகே உள்ள வையாவூர் ஏரியும் தற்போது மாசு அடைந்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி மையப்பகுதியில் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மஞ்சள் நீர் கால்வாய் வழியாக வெளியேறும் கழிவு நீர் அங்கிருந்து நத்தப்பேட்டை பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்றடையும். அங்கு கழிவு நீரை சுத்திகரித்து நத்தப்பேட்டை ஏரியில் தண்ணீர் கலப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

    ஆனால் இந்த பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதன்காரணமாக கால்வாயில் வரும் கழிவு நீர் அனைத்தும் அப்படியே நத்தப்பேட்டை ஏரியில் கலந்து வருகிறது. இதனால் நத்தப்பேட்டை ஏரிக்கரை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏரியின் தண்ணீர் வையாவூர் ஏரிக்கும் செல்வதால் அந்த ஏரி தண்ணீரின் நிலையும் மோசமடைந்து உள்ளது.

    நத்தப்பேட்டை ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய நீர் பச்சை மற்றும் கருப்பு நிறமாக மாறி வருவதால் அந்த தணணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மாநகராட்சி குப்பை கிடங்கில் உரிய பராமரிப்பு செய்யவில்லை என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை தீர்ப்பாயம் ரூ.93 லட்சம் அபராதம் விதித்தனர். ஆனால் இதுவரை அதனை செலுத்த முடியாமல் மாநகராட்சி காலதாமதம் செய்து வருகிறது. மேலும் அபராதம் விதித்தும் தற்போது வரை ஏரியை அசுத்தம் செய்யும் பணியிலேயே மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. ஏரிநீர் மாசடைந்து வருவதால் பறவையின் வரத்தும் குறைந்து உள்ளது. இந்த ஏரியை ஒரு சுற்றுலாத்தலமாகவோ, படகு சவாரி தலமாகவோ மாற்றினால் பொழுதுபோக்குக்காக பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றனர்.

    மேலும் இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, மஞ்சள் நீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு அதன் மீது சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    நத்தப்பேட்டை மாநகராட்சி குப்பைக்கிடங்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.60 கோடிநிதி ஒதுக்கப்பட்டு

    உள்ளது. இதற்கான பணி விரைவில் நடைபெறும் என்றனர்.

    • கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • விமான நிலையத்திற்கு எதிராக இதுவரை 7 முறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு தேவையான நிலம் விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் கையகப்படுத்தப்பட உள்ளன.

    இதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    ஏகனாபுரம் கிராமமக்கள் பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதலே எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். இன்று அவர்களது போராட்டம் 705-வது நாளாக நீடித்தது.

    இந்த நிலையில் இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் ஏகனாபுரம் தவிர ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சிகளிலும் நடைபெற்றது. அதிகாரிகள் கிராமசபை கூட்டம் நடத்தவராமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏகனாபுரம் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பு குழுவினர் வருகிற 3-ந்தேதி(புதன்கிழமை) காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து விமான நிலைய எதிர்ப்பு குழுவை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 57 ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்து உள்ளது. ஏகனாபுரத்தை அதிகாரிகள் புறக்கணித்து உள்ளனர். நாங்கள் தான் விமான நிலையத்திற்கு எதிராக இதுவரை 7 முறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம். 6 முறை கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தோம்.

    இப்போது அதிகாரிகள் எங்கள் கிராமத்தை புறக்கணித்து உள்ளனர். எங்களுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட அரசின் எந்த உதவியும் கிடைப்பதில்லை. எங்களை புறக்கணிக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்தை அழிக்க பார்க்கிறது. எனவே வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டக்குழுவை சேர்ந்த 20 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள், என்றார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏகனாபுரம் கிராம மக்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திராவுக்கு இடம்பெயர சித்தூர் மாவட்ட கலெக்டரை சந்திக்கப் போவதாக அறிவித்து இருந்தனர். பின்னர் இந்த போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்மநபர் தப்பியோடினார்.
    • பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றும், பெண் காவலர் டில் ராணிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது.

    பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்மநபர் தப்பியோடினார்.

    இதையடுத்து, வெட்டு காயங்களுடன் படுகாயமடைந்த பெண் காவலர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் தொடர்பாக, குடும்ப பிரச்சினையில் கணவரே அரிவாளால் வெட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, கணவன்- மனைவி இடையே விவாகரத்து தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாகவும் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், பெண் காவலர் டில்லி ராணியை அவரது கணவர் மேகநாதன் தான் வெட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    பெண் காவலர் மீண்டும் இணைந்து வாழ மறுத்ததால் கணவர் மேகநாதன் வெட்டியதாகவும், பிறகு தலைமறைவாகிவிட்டார் என்றும் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    • தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு.
    • 690 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம்.

    பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட மறுத்து நிலம் எடுப்பு பணிகளை மேற்கொள்வதாக கிராம மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேலும், அண்டை மாநிலமான ஆந்திரா அரசிடம் தஞ்சம் கேட்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    தஞ்சம் கேட்டு, வரும் திங்கட்கிழமை சித்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம், ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு போராட்ட குழு அறிவித்துள்ளது.

    பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து 690 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு தூப தீப ஆராதனைகள் செய்யப்பட்டது.
    • வேதங்கள் ஒலிக்க திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் என அழைக்கப்படும் அத்தி வரதர் கோவிலில் கோடை காலத்தை குறிக்கும் வகையில் வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. வசந்த உற்சவத்தின் 7-ம் நாளான இன்று குதிரை வாகன வீதி உலாவும், அனந்த சரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது.

    தீர்த்தவாரி உற்சவத்தை யொட்டி வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு மஞ்சள், சந்தனம், துளசி, உள்ளிட்டவைகளால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு தூப தீப ஆராதனைகள் செய்யப்பட்டது.

    வசந்த மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட வரதராஜ பெருமாளை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள செய்து மேளதாள வாத்தியங்கள் முழங்க சன்னதி வீதி, நான்கு மாடவீதியில் வீதி உலா வந்தனர். தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாளுக்கு திரளான பக்தர்கள் வழியெங்கும் கற்பூர ஆரத்தி எடுத்து தரிசனம் செய்து வழிபட்டனர்.

    இதைதொடர்ந்து கோவிலுக்கு திரும்பிய வரதராஜ பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்துக்கு அருகே எழுந்தருளியதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் வேதங்கள் ஒலிக்க திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    • எச்.ராஜா காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
    • எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததால் தான் தி.மு.க. வெற்றி பெற்றது.

    காஞ்சிபுரம்:

    பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வந்தார். காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் இருவரும் 20 நிமிடங்கள் உரையாடினார்கள். பின்னர் எச்.ராஜா காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.

    அதன்பிறகு எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்துக்கு பொருளாதாரம் தான் தெரியாது என்றால் அவருக்கு கணக்கும் கூட தெரியவில்லை, பா.ஜ.க. ஏற்கனவே 430 தொகுதியில் போட்டியிட்டு மீதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்தது, அதில் 240 தொகுதி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ப.சிதம்பரம் கணக்கு தெரியாமல் 99 தொகுதிகளுக்கும், 240 தொகுதிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார். இது அவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் குற்றமா என கேள்வி கேட்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அவர் வயது மூப்பு காரணமாக இதுபோன்று பேசி வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவேண்டும் எனவும், மோடி அரசு தோல்வி பெற வேண்டும் எனவும் இஸ்ரேலில் உள்ள தனியார் அமைப்பு மூலம் வேலை செய்ததாக வெளியே தெரிய வந்துள்ளது. இது போன்று தேச துரோக வேலையில் ஈடுபட்டவர்கள் யார் என்று கண்டறிய விசாரணை நடைபெற உள்ளது.

    எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததால் தான் தி.மு.க. வெற்றி பெற்றது. கடந்த முறையை விட இந்த முறை தி.மு.க. வாக்கு வங்கி குறைந்து உள்ளது.

    அனைத்து மதங்களையும் மேம்படுத்தி கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி மதப் பிரிவினைவாதிகளை உண்டாக்கும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளில் கூட சிறுபான்மையினரை குறிப்பிட்டு, பெரும்பான்மையானவர்களை புறக்கணித்தனர்.

    பா.ஜ.க. வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறி வருவது தவறானது என்றும் பா.ம.க.வின் வாக்குகளே பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் உயர்வுக்கு காரணம் என்றும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகிறார். செல்வப்பெருந்தகை பல கட்சிகளில் பயணித்து தற்போது காங்கிரசில் உள்ளார். பா.ஜ.க. பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை. மீறி பேசினால் அவருடைய பல்வேறு பின்புலங்களை ஆராய வேண்டியிருக்கும். ஆகவே அவர் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று மாலை அனுமன் வாகன உற்சவமும் நடைபெற உள்ளது.
    • நாச்சியார் திருக்கோலத்தில் பல்லாக்கு உற்சவம்.

    காஞ்சிபுரம்:

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் வைகுண்ட பெருமாள் திருக்கோவில் என அழைக்கப்படும். அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் குரோதி ஆண்டு வைகாசி மாத பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நேற்று அம்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். மாலை சூரிய பிரபை வாகனம் உற்சவமும் நடைபெற்றது.

    இந்த நிலையில் இன்று காலை கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் இன்று மாலை அனுமன் வாகன உற்சவமும் நடைபெற உள்ளது.

    இதனைத்தொடர்ந்து பிரமோற்சவத்தின் நான்காவது நாளான நாளை சேஷ வாகனம். மாலை வேளையில் சந்திர பிரபை உற்சவம் நடைபெறுகிறது.

    5-ம் தேதி- ஐந்தாவது நாள் சாலை உற்சவம் நாச்சியார் திருக்கோலத்தில் பல்லாக்கு உற்சவம், தொடர்ந்து மாலை யாளி வாகன உற்சவம் நடைபெற உள்ளது.

    6-ம் தேதி -ஆறாவது நாள் உற்சவம் வேணுகோபாலன் திருக்கோளத்தில் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை வேளையில் யானை வாகன உற்சவம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து 7-ந்தேதி -எடுப்பு தேர் உற்சவம் நடைபெறுகிறது. ஜூன் 8 ஆம் தேதி எட்டாவது நாள் உற்சவம் - வெண்ணெய் தாழி கண்ணன் பல்லாக்கு மற்றும் மாலை வேளையில் குதிரை வாகனம்

    9-ந்தேதி - ஒன்பதாவது நாள் உற்சவம் பல்லாக்கு மற்றும் தீர்த்த வாரி நடைபெறுகிறது மாலை முகுந்த விமான உற்சவமும் நடைபெற உள்ளது.

    • புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
    • நிலத்தடி நீர், மழை வெள்ள பாதிப்பு, நீர் நிலை பகுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 4 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.

    விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஆயிரத்து 317 ஏக்கர் நிலம் மட்டுமே அரசு நிலம் ஆகும். 3 ஆயிரத்து 200 ஏக்கர் பட்டா நிலங்கள். 799 ஏக்கர் நீர் நிலைப்பகுதிகளாக உள்ளன.

    இதையடுத்து புதிய விமான நிலையத்திற்காக விவசாயம் மற்றும் நீர் நிலை நிலங்களை கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புறத்தை சேர்ந்த 13 கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் நிலங்களை கையகப்படுத்த தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு இழப்பீடு தொகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.கடந்த நில நாட்களுக்கு முன்பு கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் நிலத்தடி நீர், மழை வெள்ள பாதிப்பு, நீர் நிலை பகுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் சென்னையின் 2-வது விமான நிலைய பணிக்கான டெண்டர்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசு வெளியிடும் என்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி முடிய இன்னும் ஒரு ஆண்டு ஆகும். இதன்பின்னர் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகளுக்கான டெண்டர் விடப்படும். மத்திய அரசின் கொள்கை அடிப்படையிலான ஒப்புதலுக்காக மாநில அரசு காத்திருக்கிறது என்றார்.

    • சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துகின்றனர்.
    • வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும், தெரிந்து கொள்ள வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 'டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்' வேலை, அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துகின்றனர்.

    அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல் பெறப்படுகிறது. எனவே வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும், தெரிந்து கொள்ள வேண்டும்.

    அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை அல்லது குடி பெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டும், ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விவரங்களை www.amigrate.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண் 90421 49222 மூலமாகவும் poechennai1 @mea.gov.in, poechennai2@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் இதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் அயலகத் தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 18003093793, 8069 009901, 80690 09900 (மிஸ்டு கால் நம்பர்) ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சித்திரை மாத பிரமோற்சவம் ஆதிகேசவ பெருமாளுக்கு கடந்த 23-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கடந்த 29-ந்தேதி ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் பாஷிய காரா சாமி (ராமானுஜர்) கோவில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் ஆதிகேசவ பெருமாளுக்கு என்னென்ன உற்சவங்கள் நடைபெறுகிறதோ அதே போல் ராமானுஜருக்கும் நடைபெறுவது வழக்கம்.

    சித்திரை மாத விழாவில் ஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் உற்சவமும் ராமானுஜருக்கு அவதார விழா என்று 10 நாட்கள் உற்சவமும் தனித்தனியாக நடைபெறும். இந்நிலையில் சித்திரை மாத பிரமோற்சவம் ஆதிகேசவ பெருமாளுக்கு கடந்த 23-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாள் விழாவில் சிம்ம வாகனம், கருட சேவை, சேஷ வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனத்தில் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 29-ந்தேதி ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இந்த நிலையில் இன்று காலை ராமானுஜர் 1007-வது அவதார உற்சவத்தில் முக்கிய விழாவான திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீராமானுஜர் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி சாமியை வழிபட்டபடி ஊர்வலமாக சென்றனர்.

    • பட்டு ஜரிகை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு காரணமாக, பட்டுச்சேலைகளின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது.
    • வழக்கமாக 2 அல்லது 3 ஆண்டுகளைக் கடந்த பட்டுச்சேலைகள் 65 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் உலகப்புகழ் பெற்றது. இங்குள்ள பட்டுச்சேலைகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்கப்படுகின்றன. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து பட்டுச்சேலைகளை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை குறைந்து உள்ளது. தற்போது, பட்டுச்சேலை விற்பனையில் தொடர்ந்து ஏற்படும் மந்தம் காரணமாக, பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் திணறி வருகின்றன. கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்களில் விற்பனை குறைந்ததால் சுமார் ரூ.110 கோடி அளவிற்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டுச்சேலைகள் தேக்கமடைந்துள்ளதாக கைத்தறி சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் ஆயிரக்கணக்கான பட்டுச்சேலைகள் விற்பனை ஆகாமல் குவிந்து கிடக்கின்றன.

    பட்டு ஜரிகை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு காரணமாக, பட்டுச்சேலைகளின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. விலை அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுவதால் அதன் விற்பனை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறை, மற்றும் போலி பட்டுகள் விற்பனையும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

    மேலும் விற்பனை மந்தம் காரணமாக பட்டுச்சேலை உற்பத்தியும் காஞ்சிபுரத்தில் குறைக்கப்பட்டு உள்ளது. மூன்று சேலைகளை ஒரு மாதத்தில் நெய்ய வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை தான் பணி வழங்கப்படுவதாக நெசவாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    வழக்கமாக 2 அல்லது 3 ஆண்டுகளைக் கடந்த பட்டுச்சேலைகள் 65 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். தற்போது அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், ஆயிரக்கணக்கான பட்டுச்சேலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து உள்ளதால், அவற்றை தள்ளுபடியில் விற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே கூட்டுறவு சங்கங்களில் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கும் பட்டுச்சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கைத்தறி சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து கைத்தறித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், ஆண்டுதோறும் பட்டுச்சேலைகளை கொள்முதல் செய்து வருகிறது. அடிக்கடி பட்டுச்சேலை கண்காட்சி நடத்தி விற்பனை செய்கிறோம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், ஊழியர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கும்போது, கைகளால் நெய்யப்பட்ட பட்டு சேலைகள், கைத்தறி பொருட்களை வாங்கி வழங்கும்படி தொழிற்சாலைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஜி விஸ்வநாதன் கூறும்போது, தங்கம், வெள்ளி விலைவாசி உயர்வின் காரணமாக பட்டுச்சேலை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் ஜரிகை விலை உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக ரூ.30 ஆயிரம் விற்க வேண்டிய ஒரு பட்டுச்சேலையின் விலை ரூ.50 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. மேலும் கடும் வெயில் மற்றும் பாராளுமன்ற தேர்தல் காரணமாக பட்டுச்சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    முக்கியமாக காஞ்சிபுரத்தில் போலி பட்டு சங்கங்கள் அதிகமாக தொடங்கப்பட்டுள்ளன. அரசு சங்கங்கள் பெயர் பலகை போலவே போலி சங்கங்கள் பெயர் மற்றும் பட்டுச்சேலை கொடுப்பதற்காக அட்டைப்பெட்டி, பை ஆகியவை ஒரிஜினல் சங்கங்கள் போலவே தயாரித்து வாடிக்கையாளர்களை மிகப்பெரிய அளவில் ஏமாற்றுகிறார்கள்.

    இதுகுறித்து அரசு பட்டு கூட்டுறவு சங்கங்களின் சார்பில் பலமுறை புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டுச்சேலைகள் தேக்கம் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக புதிய சேலைகளை நெய்வதற்கு நெசவாளர்களுக்கு தொழில் சரிவர கொடுக்க முடியவில்லை. காரணம் ஏற்கனவே பல ரக சேலைகள் சொசைட்டிகளில் தேங்கியுள்ள காரணத்தினால் புதிதாக தொழில் கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக நெசவாளர்கள் நெசவுத்தொழிலை விட்டுவிட்டு பல்வேறு வேலைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    • மாலையில் மாடுகள் திரும்பியபோது வரும் வழியில் ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் 9 பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்து விழுந்தன.
    • மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் வழியில் நெற்பயிர்கள், நெல்குவியல்கள் உள்ளன.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில் ஏராளமானோர் மாடுகள் வளர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கம் போல் ஏராளமான மாடுகள் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றன. மாலையில் மாடுகள் திரும்பியபோது வரும் வழியில் ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் 9 பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்து விழுந்தன. மேலும் 4 மாடுகள் மயக்கமடைந்து உள்ளன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் வழியில் நெற்பயிர்கள், நெல்குவியல்கள் உள்ளன. அதை மாடுகள் சேதம் செய்ததால் மாடுகளுக்கு ஏதேனும் பூச்சி மருந்து கலந்த உணவை அளித்திருக்கலாம் என்றனர்.

    இதுபற்றி அறிந்ததும் வாலாஜாபாத் வட்டாட்சியர் சதீஷ் , வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் விரைந்து வந்தனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் மாடுகள் இறப்புக்கான காரணம் குறித்து பரிசோதனை செய்தனர்.

    ×