என் மலர்
ஈரோடு
ஈரோடு அருகே பெரிய சேமூர் கல்லாங்கரடு ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் முத்து. இவருக்கு 2 மகன்கள்.மூத்த மகன் மணி. இளைய மகன் செல்வகுமார் (வயது 25). இவர் விசைத்தறி தொழிலாளியாக இருந்தார்.
இவரது மனைவி பெயர் லீலாவதி (22). சுதர்சன் என்ற 2 வயது மகன் உள்ளான். செல்வகுமாரின் அண்ணன் மணிக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் கோபித்துக்கொண்டு லட்சுமி திடீரென மாயமாகி விட்டார்.
இந்த நிலையில் தனது அண்ணி சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருப்பதை செல்வகுமார் அறிந்தார். இதனால் தனது அண்ணியை எப்படியாவது அண்ணனிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று செல்வகுமார் எண்ணி சங்ககிரிக்கு சென்றார்.
அங்கு தனது அண்ணியை பார்த்து பேசி வலுக்கட்டாயமாக அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமிக்கு கொளுந்தன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று மதியம் லட்சுமி தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக செல்வகுமார் வந்தார். அவரை பார்த்ததும் லட்சுமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ‘‘எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை என்று தானே சென்றேன். நான் இருந்த இடத்துக்கு வந்து வலுக்கட்டாயமாக ஏன் இங்கு அழைத்து வந்தாய்?’’ என்று லட்சுமி கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
இருவருக்கும் கடும்வாக்கு வாதம் ஏற்பட்டது. அருகில் கிடந்த கட்டையை எடுத்த லட்சுமி செல்வகுமாரை சரமாரியாக தாக்கினார்.அப்போது லட்சுமியின் உறவினர்கள் 6 பேர் அங்கு வந்தனர். 2 இளம்பெண்கள், 2 வயதான பெண்கள், 2 ஆண்கள் உள்பட 8 பேர் சேர்ந்து கொண்டு செல்வகுமாரை சுற்றி வளைத்து அடித்தனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் சேர்ந்து அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே செல்வகுமார் இறந்து விட்டதாக கூறினர்.
செல்வகுமாரை 8 பேர் சேர்ந்து தாக்கியபோது அந்த வழியாக வந்த ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
செல்வகுமாரை தாக்கி அவர் மயங்கி விழும் வரை வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ காட்சியை அந்த நபர் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசில் கொடுத்துள்ளார். போலீசார் அந்த வீடியோ காட்சியை வைத்து லட்சுமி உள்பட 4 பேரை அடையாளம் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபரை அவரது அண்ணி உள்பட உறவினர்களே வீதியில் சரமாரியாக அடித்து கொன்ற சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
ஈரோடு சோலார் இரணியன் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சாந்தா (வயது 30).
இவர் கிராம நிர்வாக அதிகாரி வேலை பெற முயற்சித்து வந்தார். இந்த தகவல் அறிந்த கரூர் மாவட்டம் பரஞ்சர்வழி குடித்தெருவை சேர்ந்த செந்தில்குமார் (57) என்பவர் சாந்தாவை தொடர்பு கொண்டார்.
‘‘உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன்’’ என்று கூறிய செந்தில்குமார், அதற்கு ரூ. 3 லட்சம் வேண்டும் என்று கேட்டார். அவர் கேட்டபடி ரூ. 3 லட்சம் பணத்தை செந்தில்குமாரிடம் சாந்தா கொடுத்தார்.
ஆனால் செந்தில்குமார் வேலை வாங்கி கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதையடுத்து செந்தில்குமாரிடம் சாந்தா போன் செய்து கேட்டார்.
ஆனால் செந்தில்குமார் சரியான பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து அவரிடம் சாந்தா கேட்டதால், ‘‘வேலை வாங்கி தர முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்’’ என்று கூறி உள்ளார்.
மேலும் தொடர்ந்து இது பற்றி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் சாந்தா புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கைதான செந்தில்குமார் கரூர் மாவட்டம் நல்லூர் பகுதியில் இது போன்று அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றார்.
சுமார் 80 பேரை ஏமாற்றி ரூ. 1 கோடி வரை மோசடி செய்துள்ளார். இந்த மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் செந்தில் குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த செந்தில்குமார் தற்போது சாந்தாவிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். எனவே இதுபோல வேறு யாரிடமும் செந்தில்குமார் மோசடி செய்துள்ளாரா? என்ற விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
ஈரோடு:
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கட்சி பேதமின்றி அனைத்து கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மவுன ஊர்வலம் நடத்தியும் வருகிறார்கள்.
புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியில் கருணாநிதி மறைவையொட்டி அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.
புங்கம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புங்கம்பள்ளி குளத்தை அடைந்தது. பிறகு அங்கு தி.மு.க.தொண்டர்கள் 11 பேர் தங்கள் தலை முடியை மொட்டை அடித்தனர். அப்போது அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஊர்வலத்தில் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர்.
இதே போல் கோபியில் தி.மு.க.தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினர்.
முன்னதாக அ.தி.மு.க.வினர் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான அ.தி.மு.க.தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கோபி பெரியார் திடலில் அனைத்து கட்சி சார்பில் தி.மு.க.தலைவர் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அந்தியூரில் கருணாநிதி மறைவையொட்டி அனைத்து கட்சி சார்பில் இரங்கல் ஊர்வலம் நடந்தது. இதில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ம.க.உள்பட பல்வேறு கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தேரடி திடலில் தொடங்கிய ஊர்வலம் பர்கூர் ரோடு, பஸ் நிலையம், சத்தி ரோடு, பிரம்மதேசம் ரோடு, தவிட்டு பாளையம், சிங்கார வீதி வழியாக 2 கி.மீட்டர் தூரத்தை கடந்து மீண்டும் தேரடி திடலில் முடிவடைந்தது.
தி.மு.க.அவைத்தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். மார்க்.கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஆர். முருகேசன் இரங்கல் உரையாற்றினார். முடிவில் கலைஞர் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நம்பியூரிலும் தி.மு.க.தலைவர் மறைவை யொட்டி மவுன ஊர்வலம் நடந்தது. ஒன்றிய தி.மு.க.பொறுப்பு செயலாளர் மெடிக்கல் செந்தில், தலைமையில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். கோசனத்தில் ஊராட்சி செயலாளர் இளங்கோ ஏற்பாட்டில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சத்தியமங்கலத்தில் அனைத்து பூ வியாபாரிகள் சார்பில் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கருணாநிதி படம் பல வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. #karunanidhideath #dmk
ஈரோடு:
ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சித்தையன் (வயது 48). இவர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சாஸ்திரி நகர் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் சித்தையனை கடத்தி சென்றது.
சித்தையன் வைத்திருந்த ரூ. 2 லட்சம் பணத்தையும் 5 பவுன் நகையையும் அந்த கும்பல் பறித்துக் கொண்டது. அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த சித்தையன் இது குறித்து சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பெத்த நாயக்கன்பட்டியை சேர்ந்த மதன்குமார் (42) என் பவரை கைது செய்தனர். பின்னர் மதன்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதன்குமார் மீது ஏற்க னவே தாராபுரம், பழனி, திண்டுக்கல் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மதன்குமார் தொடர்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரை செய்தார்.
கலெக்டர் உத்தரவுப்படி மதன்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதற்கான உத்தரவை கோவை மத்திய சிறையில் உள்ள அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர். #tamilnews
சென்னிமலை அருகே உள்ள ஓட்டப்பாறை, திரு நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). பனியன் கம்பெனி தொழிலாளி.
கரூர் அருகே உள்ள வெங்கமேடு இவரது சொந்த ஊர் ஆகும். அங்கிருந்து இங்கு வந்து பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
தி.மு.க. உறுப்பினரான இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்தது முதல் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்து வந்தார். நேற்று மாலையில் கருணாநிதி இறுதி ஊர்வலம், இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருந்தார்.
மாலை 6 மணி அளவில் அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார். சிறிது நேரத்தில் அவர் வீட்டிலேயே பரிதாபமாக இறந்தார்.
அவருக்கு பானுமதி என்ற மனைவியும், சவுமியா (17) என்ற மகளும், பிரகாஷ் (14) என்ற மகனும் உள்ளனர். சவுமியா 12-ம் வகுப்பும், பிரகாஷ் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
ஈரோட்டை அடுத்த பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசாம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 47). தொழிலாளி. தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி இறந்த தகவல் வெளியானது முதல் சோகமாகவே இருந்தார். நேற்று மாலை அவர் அங்குள்ள காவிரி ஆற்றுப்பாலத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மோட்டார் சைக்கிளை ஒரு பகுதியில் நிறுத்திய அவர் பாலம் வழியாக நடந்து சென்றார். பின்னர் அங்கு ஒரு இடத்தில் அவர் கடும் விரக்தியில் நின்றார்.
திடீரென அவர் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தார். மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து சென்று கொண்டிருந்தது.
அந்த தண்ணீரில் குதித்த செந்திலை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது. அவர் ஆற்றில் குதித்ததை அந்த பகுதியில் நின்ற சிலரும், வாகனங்களில் சென்றவர்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும், பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதாலும், இரவு நேரமாகி விட்டதாலும் செந்தில் என்ன ஆனார்? என தேட முடியாத நிலை ஏற்பட்டது.
இன்று (9-ந் தேதி) 2-வது நாளாக போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காவிரி ஆற்றில் குதித்த செந்திலின் கதி என்ன? என்று தெரியவில்லை.
அவர் ஆற்றில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் ஈரோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பவானிசாகர் வனப்பகுதி மலையடிவாரத்தில் உள்ள பவானிசாகர் அணை ஆசியாவிலேயே மண்ணால் உருவாக்கப்பட்ட 2-வது பெரிய அணை ஆகும்.
கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் 99 அடியை எட்டியது. தென்மேற்கு பருவமழை கொட்டியதால் அணையின் நீர்மட்டம் கிடு...கிடுவென உயர்ந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அணைக்கு நீர்வரத்து குறைந்திருந்தது. எனினும் சராசரியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்தது. இதையொட்டி பவானிசாகர் அணைக்கு இன்று காலை முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6933 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2300 கனஅடி தண்ணீரும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்காலில் 850 கனஅடியும், காளிங்கராயன் வாய்க்காலுக்கு 450 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.
இதேபோல் பொது மக்களின் குடிநீருக்காக பவானி ஆற்றில் 200 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.27 அடியாக இருந்தது.
தி.மு.க.தலைவர் முதுபெரும் தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி மறைவு தமிழக மக்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.
கருணாநிதி மறைந்தார் என்ற செய்தியை தமிழர்களால் இன்னும் நம்பமுடியவில்லை.
சென்னைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே என ஈரோடு மாவட்ட மக்கள், தி.மு.க. தொண்டர்கள், தமிழ்பால் பற்றுள்ளவர்கள் தங்கள் வசிக்கும் ஒவ்வொரு ஊர்களிலும் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, ஆப்பக்கூடல், அத்தாணி, பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி, தாளவாடி, கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அரச்சலூர், டி.என்.பாளையம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் கலைஞருக்கு இதய அஞ்சலி செலுத்துவதற்காக அடைக்கப்பட்டன.
பல கடைகள் முன் வியாபாரிகள் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி வைத்திருந்ததை காண முடிந்தது.
அத்தியாவசியமான பொருளான பால் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு உள்பட அனைத்து ஊர்களிலும் ரோட்டோரங்களில் வேன் மூலம் பால் விற்பனை செய்து வந்தனர்.மேலும் ஆங்காங்கே ஒன்றிரண்டு டீக்கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.
பொது மக்கள் மற்றும் தி.மு.க.தொண்டர்கள் ஆங்காங்கே கூடி நின்று கருணாநிதி பற்றியே பேசிக் கொண்டே இருந்தனர்.
ஈரோடு உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கிடந்ததால் கடை வீதிகள் மற்றும் முக்கிய இடங்கள் வெறிச்சோடி போய் கிடந்தன. ஒவ்வொருவர் வீட்டிலும் தங்கள் வீட்டில் ஒரு பெரியவர் காலமானதை போல் நினைத்து பாகுபாடின்றி தி.மு.க.தலைவர் கருணாநிதிக்கு இதய அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 60). செங்கல் சூளை நடத்தி வருகிறார்.
கரூரில் உள்ள இவரது உறவினர் மூலம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி கொண்டு பணத்தை பையில் வைத்தப்படி ஈரோட்டுக்கு பஸ்சில் வந்தார்.
பிறகு இவர் ஈரோடு காளைமாடு சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவன் அவரிடம், “உங்கள் பணம் கீழே விழுந்து கிடக்கிறது” என்றான்.
உடனே அவரும் குனிந்து பார்த்த போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் மாதேஸ்வரன் கையில் வைத்திருந்த ரூ.5 லட்சத்துடன் உள்ள பணப்பையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் “திருடன்.. திருடன்” என்று கூக்குரலிட்டார். பிறகு அவரும் அக்கம்-பக்கத்தினரும் தப்பி ஓடியவர்களை பிடிக்க விரட்டினர்.
இதில் ஒருவனை பொதுமக்கள் பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சூரம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
பிடிபட்ட ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவனது பெயர் குமார் என்றும் ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் மேலும் தப்பி ஓடிய 2 கொள்ளையர்களையும் தேடி வருகிறார்கள்.
சித்தோடு ஆவின் பால் பண்ணை உள்ளே பாரதி பெருமாள் நகரில் டாக்டர் சக்திவேல் என்பவர் வீடு கட்டி வருகிறார். ரமேஷ் என்பவர் மேஸ்திரியாக உள்ளார்.
இங்கு போட்டு வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்கள் மற்றும் ஜாக்கிகள், பேனர்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை யாரோ திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து சித்தோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி திருடிய ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியையொட்டி உள்ளது பர்கூர் வனப்பகுதி இங்கு ஏராளமான மலை கிராமங்கள் உள்ளது.
திடீர்... திடீரென யானைகள், மான்கள் போன்ற வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடும். ஊருக்குள் புகும் யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்ட பொதுமக்களுக்கும், வனத்துறையினருக்கும் போதும்... போதும் என்றாகி விடும்.
இந்த நிலையில் பர்கூர் மலை பகுதி மேற்கு மலை என்ற ஊருக்கு செல்லும் வழியில் தாளக்கரை பிரிவு அருகே ஒற்றை யானை ஒன்று ரோட்டில் நடமாடுகிறது. ஒற்றையடி பாதையாக உள்ள அந்த ரோட்டில் அந்த பகுதி மக்கள் நடந்து செல்வார்கள். மேலும் அருகே தான் ஊரும் உள்ளது.
ஆகவே பர்கூர் மேற்கு மலைப்பகுதி மக்கள் ரோட்டில் நடந்து செல்லவும் வீட்டை விட்டு வெளியே வரவும் பயப்படுகிறார்கள்.
எனவே ரோட்டில் சுற்றி திரியும் இந்த ஒற்றை யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
மேலும் வனத்துறையினரும் பொதுமக்களை கவனமாக இருக்கும்படி அறிவுரை கூறி உள்ளனர்.
கோபி அருகே உள்ள கொடிவேரி அணை பிரிவு பகுதியில் ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டின் ஓரமாக ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
இறந்து கிடந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும். அவரது வலது கையில் சத்தியா என்ற பெயர் பச்சை குத்தப்பட்டு இருந்தது.
அவர் எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் வாகனம் மோதிய அடையாளமும் இல்லை. உடலில் எந்த காயமும் இல்லை.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரமும் தெரியவில்லை. இது பற்றி கிடைத்த தகவலின் பேரில் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
இறந்த கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






