search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dmk volunteers mottai"

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க.தொண்டர்கள் 11 பேர் தங்கள் தலை முடியை மொட்டை அடித்தனர். #karunanidhideath #dmk

    ஈரோடு:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கட்சி பேதமின்றி அனைத்து கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மவுன ஊர்வலம் நடத்தியும் வருகிறார்கள்.

    புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியில் கருணாநிதி மறைவையொட்டி அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.

    புங்கம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புங்கம்பள்ளி குளத்தை அடைந்தது. பிறகு அங்கு தி.மு.க.தொண்டர்கள் 11 பேர் தங்கள் தலை முடியை மொட்டை அடித்தனர். அப்போது அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஊர்வலத்தில் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    இதே போல் கோபியில் தி.மு.க.தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினர்.

    முன்னதாக அ.தி.மு.க.வினர் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான அ.தி.மு.க.தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கோபி பெரியார் திடலில் அனைத்து கட்சி சார்பில் தி.மு.க.தலைவர் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    அந்தியூரில் கருணாநிதி மறைவையொட்டி அனைத்து கட்சி சார்பில் இரங்கல் ஊர்வலம் நடந்தது. இதில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ம.க.உள்பட பல்வேறு கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    தேரடி திடலில் தொடங்கிய ஊர்வலம் பர்கூர் ரோடு, பஸ் நிலையம், சத்தி ரோடு, பிரம்மதேசம் ரோடு, தவிட்டு பாளையம், சிங்கார வீதி வழியாக 2 கி.மீட்டர் தூரத்தை கடந்து மீண்டும் தேரடி திடலில் முடிவடைந்தது.

    தி.மு.க.அவைத்தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். மார்க்.கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஆர். முருகேசன் இரங்கல் உரையாற்றினார். முடிவில் கலைஞர் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நம்பியூரிலும் தி.மு.க.தலைவர் மறைவை யொட்டி மவுன ஊர்வலம் நடந்தது. ஒன்றிய தி.மு.க.பொறுப்பு செயலாளர் மெடிக்கல் செந்தில், தலைமையில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். கோசனத்தில் ஊராட்சி செயலாளர் இளங்கோ ஏற்பாட்டில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சத்தியமங்கலத்தில் அனைத்து பூ வியாபாரிகள் சார்பில் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கருணாநிதி படம் பல வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. #karunanidhideath #dmk

    ×