என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கூச்சலிட்ட இளைஞர்களை தட்டிக்கேட்ட தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிட்டபுள்ளாம் பாளையம் காலனியை சேர்ந்த மதுசூதனன், தனது நண்பர்களுடன் நேற்றிரவு பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது அவர்கள் மதுபோதையில் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதனை அப்பகுதியில் வசித்து வந்த ரங்கசாமி- அருக்கானி தம்பதியினர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கு தகராறு ஏற்பட்டதையடுத்து, தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

    ஆனாலும், ஆத்திரம் குறையாத இளைஞர்கள் நள்ளிரவில் ரங்கசாமி- அருக்கானியை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர், தலைமறைவாக உள்ள இளைஞர்களை தேடி வருகின்றனர்.
    கோபி அருகே சொத்து தகராறில் கழுத்தை நெரித்து முதியவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய பேரன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    கடத்தூர்:

    கோபி அருகே சொத்து தகராறில் கழுத்தை நெரித்து முதியவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய பேரன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கோபியை அடுத்த சுண்டப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 84). விவசாயி. இவருக்கு மூர்த்தி என்ற மகனும், சகுந்தலா என்ற மகளும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து அவரவர் குடும்பத்துடன் அதே ஊரில் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இதேபோல் பழனிச்சாமியும் தனியாக வசித்து வந்தார். ஏற்கனவே இவர்களுடைய குடும்பத்தில் சொத்து சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், தன்னுடைய இடம் ஒன்றை விற்பனை செய்ய பழனிச்சாமி முயற்சித்து உள்ளார். இதற்கு மூர்த்தியும், சகுந்தலாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அதில் தங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் மதியம் பழனிச்சாமி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ‘பழனிச்சாமியிடம் சொத்தை பிரித்து தருமாறு மகன் மூர்த்தியும், மகள் சகுந்தலாவும் கேட்டு உள்ளனர். ஆனால் அதற்கு பழனிச்சாமி மறுத்து விட்டாராம். இந்த நிலையில், பழனிச்சாமியின் பேரன் மற்றும் அவனுடைய 14 வயது 2 நண்பர்கள் என 3 பேர் நேற்று முன்தினம் பழனிச்சாமியின் வீட்டுக்கு சென்று உள்ளனர். அப்போது பழனிச்சாமிக்கும், அவருடைய பேரனுக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த பேரன், மற்றும் அவனுடைய நண்பர்கள் 2 பேர் சேர்ந்து பழனிச்சாமியை தாக்கி உள்ளனர். இதில் அவர் கட்டில் மேல் விழுந்தார். பின்னர், 3 பேரும் சேர்ந்து பழனிச்சாமியின் கழுத்தை நெரித்துள்ளனர். இதில் அவர் இறந்துவிட்டார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றது,’ தெரிய வந்தது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடியதாக கூறப்படும் பழனிச்சாமியின் பேரன் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தீபாவளி பண்டிகையையொட்டி 40 ஆயிரம் விசைத்தறிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், சோலார் மற்றும் சித்தோடு, விஜயமங்கலம், சிவகிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த விசைத்தறிகளில் பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி-சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி விசைத்தறி கூடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் தங்கி வேலை பார்க்கும் வெளி மாவட்டம் மற்றும் மாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர்.

    இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘தர்மபுரி, திண்டுக்கல், நெல்லை, மதுரை, புதுக்கோட்டை மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி நீண்டநாள் விடுமுறை விடப்படுவது வழக்கம்.

    அதன்படி 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையால் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிப்படையும். இதேபோல் நாள் ஒன்றுக்கு 21 ஆயிரம் விலையில்லா வேட்டி -சேலைகள் உற்பத்தி பாதிக்கப்படும். எனினும் விசைத்தறி தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டுவதற்காக இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை முடிந்து வருகிற 23-ந் தேதி மீண்டும் விசைத்தறிகள் செயல்படும்’ என்றார்கள்.
    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை இன்று காலை நேர நிலவரபடி 96.09 அடியாக உள்ளது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை இன்று காலை நேர நிலவரபடி 96.09 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 3166 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கனஅடியும் என மொத்தம் 3100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    கோபி செட்டிபாளையம் அருகே பாஸ்ட்புட் கடையில் பெண்ணிடம் நீ அழகாக இருக்கிறாய் என்று சொல்லி வாய்த்தகராறில் ஈடுபட்ட லாரி டிரைவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோபி:

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் தனபாக்கியம் (46). இவர் கோபி தீயணைப்பு நிலையம் அருகே தள்ளுவண்டியில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக பால்ராஜ் (60) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    கோபியை சேர்ந்தவர் ஆறுமுகம்(47) லாரி டிரைவர். இவர் தனபாக்கியத்தின் பாஸ்ட்புட் கடைக்கு சிக்கன் ரைஸ் வாங்க சென்றார். அப்போது அவர் தனபாக்கியத்தை பார்த்து, ‘நீ அழகாக இருக்கிறாய்’ என்று கூறினார். அப்போது தனபாக்கியம் சாப்பிட வந்தால் உன் வேலையை பார்த்து விட்டு செல் என்றார். இதனால் அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து ஆறுமுகம் அந்தியூரை சேர்ந்த தனது நண்பர்கள் மவுலீதரன் (27), சிவமூர்த்தி (23), தினேஷ்குமார் (22) ஆகியோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பாஸ்ட்புட் கடைக்கு வரவழைத்தார்.

    அவர்கள் 4பேரும் சேர்ந்து தனபாக்கியம் மற்றும் கடையில் வேலைபார்க்கும் பால்ராஜ் ஆகியோரை தாக்கினர். பின்னர் கடையில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணையை எடுத்து அவர்கள் தனபாக்கியத்தின் மீது வீசினர். இதில் அவரது 2 கைகளிலும் எண்ணை கொட்டி தீக்காயம் அடைந்தார்.

    இதையடுத்து தனபாக்கியம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் பெண்ணை துன்புறுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லாரி டிரைவர் ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானிசாகர் அணையின் நீர்வத்து 878 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 3,100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
    பவானிசாகர்:

    தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

    இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் அணைக்கு வருகிறது.

    இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.23 அடியாக உள்ளது. அணையின் நீர்வத்து 878 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 3,100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது பவானிசாகர் அணையில் 25.8 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.
    மதுக்கூர் அருகே செல்போன் கடையில் திருட முயன்ற வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள காசாங்காட்டை சேர்ந்த வினோத், சித்திரைசெல்வன், வைத்தீஸ்வரன், ராமதாஸ், வின்சென்ட், மணி ஆகியோர் வெளியூர் சென்று விட்டு காசாங்காடு ரெகுநாதபுரம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது மதுக்கூர் இடையகாடு பகுதியை சேர்ந்த ரகுமதுல்லா மகன் ஹாஜாமைதீன்(வயது23), முத்துப்பேட்டை சேர்ந்த ரபீக் மற்றும் ஒருவர் வின்சென்ட் என்பவரின் செல்போன் கடை பூட்டை உடைத்து திருடிக்கொண்டிருந்தனர். அவர்களை கண்டு வினோத் மற்றும் அவரது நண்பர்கள் பிடிக்க முயன்றனர். அப்போது ரபீக் மற்றும் அவருடன் வந்த மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். ஹாஜாமைதீன் ஓடும் போது எல்லை கல்லில் தடுக்கி கீழே விழுந்தார். அவரை அருகில் கிடந்த கம்பி மற்றும் கட்டையால் வினோத், சித்திரைசெல்வன், வைத்தீஸ்வரன் உள்ளிட்ட 6 பேரும் தாக்கினர்.

    இதில் ஹாஜாமைதீன் பலத்த காயம் அடைந்தார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வந்து பார்த்த போது ஹாஜாமைதீன் பலத்த காயமடைந்து மயக்க நிலையில் இருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹாஜாமைதீன் இறந்தார். 

    இது குறித்து ஹாஜாமைதீன் தந்தை ரகுமதுல்லா மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், சித்திரைசெல்வன், வைத்தீஸ்வரன், ராமதாஸ், வின்சென்ட், மணி ஆகிய 6 பேரை தேடி வருகிறார்கள்.
    மனித கை விரல்களைப்போல் உருவம் கொண்ட கேரட் சத்தி உழவர் சந்தையில் விற்பனைக்கு வந்தது.
    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோபி ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் குழு மூலம் காய்கறிகள் விற்பனை செய்பவர் ரமேஷ் (வயது 45).

    இவர் சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் உறவினர் ஒருவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கேரட் சாகுபடி செய்துள்ளார். இதில் விளைந்த கேரட்டுகளை அறுவடை செய்த ரமேஷ் நேற்று சத்தியமங்கலம் உழவர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்தார்.

    ரமேஷ் விற்பனைக்கு கொண்டுவந்திருந்த கேரட்டுகளில், ஒரு கேரட் மனித கை விரல்களைப்போலவே இருந்தது. ஆரஞ்சு நிறத்தில் 4 விரல்களை நீட்டியதுபோல் காணப்பட்டது. சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் வித்தியாசமான உருவத்தில் இருந்த இந்த கேரட்டை அதிசயத்துடன் பார்த்து சென்றார்கள்.
    பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து நாளை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூர் மற்றும் வேட்டைக்காரன்கோவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 400-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு போனஸ் தொகையை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்வு பயிற்சியில் அரசு பள்ளி மாணவர்கள் 16,300 பேர் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது.

    மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

    பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான சீருடைகள், ஷூ-சாக்ஸ், தயாராக உள்ளது. விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும்.

    பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பு முகாமில், தமிழகம் முழுவதும் 45 சதவீத பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். பள்ளிகள் திறப்பு குறித்து நாளை (வியாழக்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ள கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழுவில் ஈரோடு பெண் டாக்டர் இடம்பெற்றுள்ளார். இதனால் அவரது பூர்வீக கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    ஈரோடு:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் இந்தியரான டாக்டர் செலின் கவுண்டர் என்கிற செலின் ராணி கவுண்டர் இடம்பிடித்திருக்கிறார். 43 வயதாகும் செலின் கவுண்டர், அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியாளராக உள்ளார். அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குனராகவும் இருக்கிறார்.

    புதிய அதிபர் ஜோ பைடனின் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்று இருக்கும் டாக்டர் செலின் கவுண்டர், இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்து இருக்கிறார்.

    இவரது தந்தை நடராஜ், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர். தங்கள் கிராமத்து பெண், அமெரிக்க நாட்டில் ஓர் உயரிய பொறுப்பில் வந்து இருப்பது இந்த கிராமத்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நேற்று டாக்டர் செலின் குறித்த செய்தி அறிந்து, மொடக்குறிச்சி பெருமாபாளையம் பகுதியில் உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். தூரபாளையம் கிராமத்தில் வசித்துவரும் டாக்டர் செலினின் பெரியப்பா மகள் அன்னபூரணி, கிராமத்து மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

    இதுவரை 4 முறை டாக்டர் செலின் மொடக்குறிச்சிக்கு வந்து உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.
    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவர் இறந்தால் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்தார்.
    சென்னிமலை:

    சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரவலசு, குட்டப்பாளையம், வடமுகம் வெள்ளோடு மற்றும் முகாசிபுலவன்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதி மக்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

    விழாவுக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். ஈரோடு மேற்கு தொகுதி கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ, ஆர்.டி.ஓ. சி.சைபுதீன், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ, மாவட்ட கவுன்சிலர் ஏ.கே.பழனிச்சாமி, மாநில கோ-ஆப்-டெக்ஸ் இயக்குனர் ப.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் 11 நபர்களுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம், வேளாண்மை துறையின் மூலம் 2 நபர்களுக்கு ரூ.40 ஆயிரம், தோட்டக்கலைத்துறை மூலம் 2 பேருக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 615 என மொத்தம் 15 பேருக்கு ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்து 615 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் கதிரவன் பேசினார். அவர் பேசியதாவது:-

    கொரோனாவிற்கு பிறகு இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான் அதிக அளவில் முதலீடுகளை பெற்றுள்ளது.

    வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில், குடும்ப தலைவர்கள் இறந்தால் அவர்களின் வாரிசுகள் ரூ.5 லட்சம் இழப்பீடு பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இதுபோல் எண்ணற்ற திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் ஊராட்சி தலைவர்கள் வி.பி.இளங்கோ (குமாரவலசு), வாசுகி ஜெகநாதன் (வடமுகம் வெள்ளோடு), ரேணுகாதேவி குமார் (குட்டப்பாளையம்), ஈஸ்வரி (ஈங்கூர்), ஊராட்சி செயலாளர்கள் சதீஷ், சிதம்பரநாதன், சுப்பிரமணி, நாகராஜ் மற்றும் தோட்டக்கலை, வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஈரோடு:

    ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை வர இருப்பதால், ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.சிவசங்கர், மாநில துணைத்தலைவர் ஜெ.பாஸ்கர்பாபு முன்னிலை வகித்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
    ×