search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு கலெக்டர்
    X
    ஈரோடு கலெக்டர்

    குடும்பத்தலைவர் இறந்தால் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு - கலெக்டர் தகவல்

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவர் இறந்தால் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்தார்.
    சென்னிமலை:

    சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரவலசு, குட்டப்பாளையம், வடமுகம் வெள்ளோடு மற்றும் முகாசிபுலவன்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதி மக்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

    விழாவுக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். ஈரோடு மேற்கு தொகுதி கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ, ஆர்.டி.ஓ. சி.சைபுதீன், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ, மாவட்ட கவுன்சிலர் ஏ.கே.பழனிச்சாமி, மாநில கோ-ஆப்-டெக்ஸ் இயக்குனர் ப.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் 11 நபர்களுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம், வேளாண்மை துறையின் மூலம் 2 நபர்களுக்கு ரூ.40 ஆயிரம், தோட்டக்கலைத்துறை மூலம் 2 பேருக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 615 என மொத்தம் 15 பேருக்கு ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்து 615 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் கதிரவன் பேசினார். அவர் பேசியதாவது:-

    கொரோனாவிற்கு பிறகு இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான் அதிக அளவில் முதலீடுகளை பெற்றுள்ளது.

    வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில், குடும்ப தலைவர்கள் இறந்தால் அவர்களின் வாரிசுகள் ரூ.5 லட்சம் இழப்பீடு பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இதுபோல் எண்ணற்ற திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் ஊராட்சி தலைவர்கள் வி.பி.இளங்கோ (குமாரவலசு), வாசுகி ஜெகநாதன் (வடமுகம் வெள்ளோடு), ரேணுகாதேவி குமார் (குட்டப்பாளையம்), ஈஸ்வரி (ஈங்கூர்), ஊராட்சி செயலாளர்கள் சதீஷ், சிதம்பரநாதன், சுப்பிரமணி, நாகராஜ் மற்றும் தோட்டக்கலை, வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×