என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில் நேற்று சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, கோவை, சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக மேலும் 1,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 61 ஆயிரத்து 408 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் கடந்த மாதம் 19-ந்தேதியும், 65 வயது ஆண் 25-ந்தேதியும், 85 வயது முதியவர், 55 வயது ஆண் ஆகியோர் 30-ந்தேதியும், 67 வயது முதியவர் 31-ந்தேதியும் இறந்தனர்.
மேலும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்து 70 வயது மூதாட்டி கடந்த 1-ந் தேதியும், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது ஆண், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது ஆண் ஆகியோர் நேற்று முன்தினமும் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 389 ஆக உயர்ந்தது.
அதேநேரம் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,565 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 44 ஆயிரத்து 932 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
இதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்து உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று உள்ள 16 ஆயிரத்து 87 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அந்தியூர் அருகே உள்ள காட்டுப்பாளையத்தில் மருந்துக்கடை நடத்தி வருபவர் முத்தழகி (வயது 51). இவர் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரை வழங்குவது மற்றும் ஊசி போடுவது உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்து வருவதாக கலெக்டர் கதிரவனுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கலெக்டர் கதிரவன் உத்தரவின்பேரில் அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி, வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மோகனவள்ளி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் காட்டுப்பாளையத்துக்கு சென்று முத்தழகியிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது முத்தழகியின் வீட்டில் ஊசி போடுவதற்கு தேவையான மருந்துகள், ஊசிகள், கையுறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அந்தியூர் அருகே உள்ள மூக்கம்பாளையத்தை சேர்ந்த முத்தழகி 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதும், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் உதவியாளராக வேலை பார்த்த அனுபவத்தில் பொதுமக்களுக்கு ஊசி போட்டுவந்ததும் தெரிந்தது.
இதைத்தொடர்ந்து வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மோகனவள்ளி கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் முத்தழகியை கைது செய்தார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வயது பேதமின்றி தாக்கி வருகிறது. கொரோனா தொற்றுக்கு இளைஞர்கள், முதியவர்கள், முன் களப்பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், போலீசார் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு திண்டலில் லிட்டில் சிஸ்டர் என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து 76 முதியோர் தங்கியுள்ளனர். முதியோர்கள் தங்குவதற்கு தனித்தனி அறைகள் உள்ளன.
இந்நிலையில் இங்கு தங்கியுள்ள முதியவர்களில் ஒரு சிலருக்கு சளி, காய்ச்சல் இருந்தது. இதையடுத்து முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 76 முதியோர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வந்தது. இதில் 40 முதியோர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 36 முதியவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
முதியோர் இல்லத்தில் கொரோனா பரவலை அடுத்து ஈரோடு மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கையாக முதியோர் இல்லத்தில் மாநகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு முட்டைகள் வழங்க தமிழக அரசின் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி நேற்று முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ- மாணவிகளின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் அனுமதிக்கப்பட்ட முட்டைகள் வழங்கப்பட்டன.
ஈரோடு எஸ்.கே.சி.ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் நேற்று முட்டைகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை கே.சுமதி ஆலோசனையின் பேரில், சத்துணவு அமைப்பாளர் நிர்மலா மாணவ- மாணவிகளின் பெற்றோரிடம் சத்துணவு முட்டைகளை வழங்கினார். இதை முன்னிட்டு நேற்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பள்ளிக்கூடத்தின் முன்பு கிருமி நாசினி தெளித்து பிளீச்சிங் பவுடர்கள் போட்டனர்.
இதுபற்றி சத்துணவு அமைப்பாளர் நில்மலா கூறும்போது, “அரசு வழங்கி உள்ள அறிவுறுத்தலின் பேரில், சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவ- மாணவிகளின் பெற்றோருக்கும் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி, ஒவ்வொரு வகுப்பு வாரியாக அவர்கள் வரவேண்டிய நேரத்தை குறிப்பிட்டு உள்ளோம். அதன்படி அவர்கள் வந்ததும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட முட்டைகளை வழங்குகிறோம். பெற்றோரும் இடைவெளியை கடைபிடித்து, குறிப்பிட்ட நேரத்தில் வந்து முட்டை வாங்கி செல்கிறார்கள்” என்றார். இதுபோல் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் முட்டை வழங்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று 1,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 93 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சி நேரு நகரை சேர்ந்த 63 வயது ஆண் ஒருவர் கொரோனா பாதித்து சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
சில நாட்களுக்கு முன்பு அவர் குணமடைந்து வீடு திரும்பினார். சர்க்கரை நோயாளியான அவருக்கு திடீரென கண்ணில் வீக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து டாக்டர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவரது ஆலோசனையின்படி அவர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதேபோல் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பெரியகொடிவேரியை சேர்ந்த தறித்தொழிலாளியின் மனைவி சர்க்கரை மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தார்.
அப்போது அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். திடீரென அவரது வலது கண்ணுக்கு கீழ், கன்னத்தின் மையப்பகுதியில் கருப்பு நிறத்தில் தழும்பு ஏற்பட்டது. இதையடுத்து கருப்பு பூஞ்சை பயத்தால் அவர் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று தெரிய வரும்.
கொரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்டம் முன்னணியில் உள்ளது. தினசரி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா ஊரடங்கு போடப்பட்டு இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்தது.
பல்வேறு இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் ஏதேனும் ஒரு வழியில் சாலையில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. எனவே அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
நேற்று காளைமாட்டு சிலை அருகே போலீசார் வாகன சோதனை நடத்திய போது தேவையின்றி சுற்றிய பலரும் பிடிபட்டனர். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன. பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், மூலப்பட்டறை பகுதிகளிலும் சோதனை நடந்தது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அவசியமின்றி சுற்றி பிடிபட்டவர்களை கொரோனா பரிசோதனை செய்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். இந்த நடவடிக்கையால் பலரும் தெரியாமல் வந்துவிட்டேன் மன்னித்து விடுங்கள் என்று போலீசாரிடம் கெஞ்சினார்கள்.
இதுபற்றி போலீஸ் ஒருவர் கூறும்போது, “கொரோனா பாதிப்பு இருக்கும் பலரும், சோதனை கூட செய்யாமல் சாலைகளில் சுற்றி வருகிறார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே அவசியமின்றி வரும் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்” என்றார்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கு கீழ் குறைய தொடங்கியுள்ளது.
ஆனால் மேற்கு மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை மற்றும் திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி உத்தரவிட்டார்.
மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோரும், திருப்பூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோரும், ஈரோடு மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி, சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நியமிக்கபட்டு அந்தந்த மாவட்டங்களில் அவர்கள் முகாமிட்டு தடுப்புப் பணிகளை கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் இந்த மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்நிலையில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது.
கோவை மாவட்டத்தில் நேற்று 3,692 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஈரோட்டில் 1,743 பேரும், திருப்பூரில் 1,697 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஈரோடுக்கு வந்த மு.க.ஸ்டாலின் காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி மருத்துவ கல்லூரிக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் ஆக்சிஜன் வசதி குறித்தும், இருப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 400 படுக்கை வசதியுடன் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டிட பணிகளை பார்வையிட்டார். பின்னர் 5 டாக்டர்களுக்கும், 5 செவிலியர்களுக்கும் தற்காலிக பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஈரோட்டில் ஆய்வை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் சென்றார். அங்கு நோயாளிகளை அழைத்து வர வசதியாக 20 கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 110 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட மையத்தை திறந்து வைத்தார். பின்னர் குமரன் கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஈரோடு, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை புறப்பட்டு சென்றார்.
முன்னதாக முதல்-அமைச்சர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஈரோடு:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக சேலம் சென்று மாவட்ட கலெக்டர் உடன் ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து திருப்பூரில் 18 வயது முதல் 44 வயது உடையவருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கோவை சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். பின்னர் மதுரை மற்றும் திருச்சிக்கு சென்று கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை திறந்து வைத்தார்.
இந்நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து பரவலை கட்டுப்படுத்த கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து உள்ளார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் நாளை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகிறார். இதனையடுத்து இன்று இரவு 8.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஈரோடுக்கு கார் மூலம் வருகிறார். இரவு ஈரோடு காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
இதை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்கிறார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதல் வசதியுடன் கட்டப்படும் கட்டிடப் பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.
இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் சென்று ஆய்வு செய்கிறார். அதை தொடர்ந்து கோவை சி.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்கிறார். அதைத் தொடர்ந்து மாலை 4 மணி அளவில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து அன்று இரவே விமானம் மூலம் சென்னை செல்கிறார்.






