என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர்கள், நர்சுகளுக்கு தற்காலி பணி ஆணையை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    X
    டாக்டர்கள், நர்சுகளுக்கு தற்காலி பணி ஆணையை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை- பெருந்துறை மருத்துவ கல்லூரியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி மருத்துவ கல்லூரிக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கு கீழ் குறைய தொடங்கியுள்ளது.

    ஆனால் மேற்கு மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை மற்றும் திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

    இதையடுத்து பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி உத்தரவிட்டார்.

    மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோரும், திருப்பூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோரும், ஈரோடு மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி, சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நியமிக்கபட்டு அந்தந்த மாவட்டங்களில் அவர்கள் முகாமிட்டு தடுப்புப் பணிகளை கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் இந்த மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின்

    ஏற்கனவே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்நிலையில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது.

    கோவை மாவட்டத்தில் நேற்று 3,692 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஈரோட்டில் 1,743 பேரும், திருப்பூரில் 1,697 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஈரோடுக்கு வந்த மு.க.ஸ்டாலின் காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி மருத்துவ கல்லூரிக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் ஆக்சிஜன் வசதி குறித்தும், இருப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 400 படுக்கை வசதியுடன் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டிட பணிகளை பார்வையிட்டார். பின்னர் 5 டாக்டர்களுக்கும், 5 செவிலியர்களுக்கும் தற்காலிக பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    ஈரோட்டில் ஆய்வை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் சென்றார். அங்கு நோயாளிகளை அழைத்து வர வசதியாக 20 கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 110 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட மையத்தை திறந்து வைத்தார். பின்னர் குமரன் கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    ஈரோடு, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக முதல்-அமைச்சர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×