என் மலர்
ஈரோடு
திருச்சி மாவட்டம் துறையூர் இடையர்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரண்யா (28). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
குமார் ஈரோடு பூந்துறை ரோடு வாய்க்கால்மேடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். குமார் தனது சொந்த ஊரில் வீடு கட்டி வருகிறார். எனவே அந்த பணிகளை பார்வையிட அவர் ஊருக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சரண்யா மளிகை கடையை கவனித்து வந்தார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையின் ஷட்டரை சரண்யா பூட்டி விட்டு சென்றார்.
இன்று அதிகாலை 5.30 மணி அளவில் வழக்கம்போல் மளிகை கடையை திறக்க சரண்யா வந்தார். அவர் கடையின் ஷட்டரில் இருந்த பூட்டை திறக்க முயன்றார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதில் உட்கார்ந்த நிலையிலேயே சரண்யா இறந்து விட்டார்.
அந்த நேரத்தில் கடைக்கு பால் வாங்க அதே பகுதியை சேர்ந்த காவேரி என்ற பெண் வந்தார். அவர் சரண்யாவை அழைத்தார். அவர் பதில் ஏதும் சொல்லாததால் சந்தேகம் அடைந்த காவேரி சரண்யாவின் மீது கை வைத்தார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அலறி அடித்து கொண்டு ஓடி விட்டார். பின்னர் இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் கூறினார்.
இதையடுத்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மின்சார துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மளிகை கடையின் மின் இணைப்பை துண்டித்தனர்.
பின்னர் சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மளிகை கடை திறக்க வந்த தனது தாய் இறந்த தகவல் கிடைத்ததும் அவரது மகன் மற்றும் மகள் ஓடி வந்து தாயின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் துறையூருக்கு சென்ற சரண்யாவின் கணவருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய்க்கால்மேடு பகுதியில் நேற்று இரவு காற்றுடன் லேசான மழை பெய்தது. எனவே மின்கசிவு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது. இதுகுறித்து போலீசாரும், மின்சார துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் தமிழரசி. இவர் டி.என்.பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. துணைச்செயலாளராக உள்ளார். இவரது கணவர் ஈஸ்வரன் என்கிற அர்த்தனாரீஸ்வரன் (50) அ.தி.முக. உறுப்பினர்.
அர்த்தனாரீஸ்வரன் 8 வழிச்சாலை குறித்து தமிழக முதல்-அமைச்சர் பற்றி வாட்ஸ்அப் மூலம் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவர் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அர்த்தனாரீஸ்வரன் முதல்-அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அர்த்தனாரீஸ்வரன் மீது அரசுக்கு எதிராக அவதூறு பரப்புதல், வதந்தியை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. தொடர்ந்து 100 டிகிரி வெயில் பதிவாகி வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலை பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கோடைமழை கொட்டியது.
இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் சாலைகளில் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் இடி மின்னல் தாக்கி தென்னை மரங்கள் தீப்பிடித்தன. சூறாவளி காற்றால் பல ஆயிரம் வாழை மரங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பெருந்துறையில் 125 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
அம்மாபேட்டை பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இரவு 8.30 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சித்தார் பகுதியில் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஆலங்கட்டி மழை பெய்தது.
இதனால் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர், பொங்க வாலிகரடு பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவரது தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தை மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரம் தீபிடித்து எரிந்தது.
காற்றின் வேகத்தில் தீப்பொறி அவரது குடிசை வீட்டிலும் பட்டது. இதில் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.
மளமளவென பரவிய தீ வீட்டு முன்பு தென்னங்கீற்றால் வேயப்பட்டு இருந்த கொட்டகையிலும் பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
இதேபோல் சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சித்தார் பாலத்தின் அருகே உள்ள ரோட்டோரத்தில் இருந்த புளியமரம் சாய்ந்து விழுந்தது.
இதனால் மேட்டூர்பவானி ரோட்டில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பூதப்பாடி சந்தைப் பகுதியில் தென்னை மரம் சாய்ந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதன் காரணமாக பூதப்பாடி, சிங்கம்பேட்டை ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேப்போல் அம்மாபேட்டை அருகே உள்ள காடப்பநல்லூர் பகுதியில் வரதராஜன் என்கிற விவசாயி தோட்டத்தில் பூவன் ரக வாழைகள் பயிரிடப்பட்டு இருந்தது.
தற்போது அவை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று சூறாவளி காற்றால் 500 வாழைகள் சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ .2 லட்சம் ஆகும். அதேபோல் பெரிய குரும்பபாளையம் பகுதியில் வாசுதேவன் என்கிற விவசாயி தனது 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அங்கு பயிரிடப்பட்டிருந்த செவ்வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்தது. சூறாவளி காற்றால் 1,500 செவ்வாழைகள் முற்றிலும் சாய்ந்து விழுந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.
இதேப்போல் சின்ன குரும்பபாளையம், கேசரிமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.
கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கோபி அடுத்த கடுகாம்பாளையம், நாதிபாளையம், பொலவகாளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பயிரிடப்பட்டு ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழை, நேந்திரன், கதளி உள்ளிட்ட 5 ஆயிரம் வாழை மரங்கள் சூறாவளி காற்றுக்கு சேதம் அடைந்தது.
சாய்ந்த வாழைகள் குறித்து வேளாண்மை துறைஅதிகாரிகள் கணக்கீடு செய்து காப்பீடு செய்யாத பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
நேற்று ஒரேநாளில் சூறாவளி காற்றில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டு இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.
அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான தவிட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், சின்னத்தம்பிபாளையம், மூலக்கடை வட்டகாடு, காந்தி நகர், கள்ளிமடைகுட்டை, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
தவிட்டுப்பாளையம் பகுதியில் மரம் சாய்ந்து மின்கம்பத்தின் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதேபோல் கிராமப்புறப் பகுதிகளிலும் மின்சாரம் தடைபட்டது. அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் மூங்கில் பாளையத்தில் குமாரசாமி கவுண்டர் என்பவரது தோட்டத்தில் இடி விழுந்து 10 தென்னை மரங்கள் தீபிடித்து எரிந்தது.
சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அந்தியூர் பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் காற்றில் பறந்தது. அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சூறாவளி காற்றில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
இதனால் அந்தியூர்பர்கூர் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழையின் காரணமாக அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள 5 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
இதேபோல் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு தான் அதிகபட்சமாக மழை அளவு பதிவாகியுள்ளது.
கவுந்தபாடி, வரட்டுப்பள்ளம், சத்தியமங்கலம், கொடிவேரி போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது. ஈரோடு மாநகர பகுதியிலும் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த கோடை மழையால் பல்வேறு இடங்களில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
பெருந்துறை125, கவுந்தப்பாடி52.4, பவானி 31, சென்னிமலை22, எலந்தகுட்டைமேடு 20.4, கோபி12.4, வரட்டுப்பள்ளம் 7, ஈரோடு 5, பவானிசாகர்4.2, கொடிவேரி3.2, நம்பியூர் 3, அம்மாபேட்டை1.2.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி,தலமலை, ஜூர்கள்ளி, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், பவானிசாகர், விளாமுண்டி, சத்தியமங்கலம் என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், செந்நாய், கரடி, போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மலைப்பகுதியில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் குளம், குட்டைகள் தண்ணீர் நிரம்பி காணப்படுகின்றன.
இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட மகாராஜன்புரம் அருகே வனக்குட்டை அமைந்துள்ளது. இந்த வனகுட்டையில் தண்ணீர் இருப்பதால் வனப்பகுதியில் உள்ள யானைகள் குட்டியுடன் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்கிறது. சில நேரங்களில் யானைகள் குட்டையில் குளித்து கும்மாளமிட்டு வருகிறது.
எனவே வனப்பகுதிக்குள் செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.






