என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வாழைகள் சேதம்
    X
    வாழைகள் சேதம்

    சூறாவளி காற்றுடன் கோடை மழை கொட்டியது- ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் வாழைகள் சேதம்

    அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான தவிட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், சின்னத்தம்பிபாளையம், மூலக்கடை வட்டகாடு, காந்தி நகர், கள்ளிமடைகுட்டை, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. தொடர்ந்து 100 டிகிரி வெயில் பதிவாகி வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலை பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கோடைமழை கொட்டியது.

    இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் சாலைகளில் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் இடி மின்னல் தாக்கி தென்னை மரங்கள் தீப்பிடித்தன. சூறாவளி காற்றால் பல ஆயிரம் வாழை மரங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பெருந்துறையில் 125 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    அம்மாபேட்டை பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இரவு 8.30 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சித்தார் பகுதியில் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஆலங்கட்டி மழை பெய்தது.

    இதனால் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர், பொங்க வாலிகரடு பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவரது தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தை மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரம் தீபிடித்து எரிந்தது.

    காற்றின் வேகத்தில் தீப்பொறி அவரது குடிசை வீட்டிலும் பட்டது. இதில் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    மளமளவென பரவிய தீ வீட்டு முன்பு தென்னங்கீற்றால் வேயப்பட்டு இருந்த கொட்டகையிலும் பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

    இதேபோல் சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சித்தார் பாலத்தின் அருகே உள்ள ரோட்டோரத்தில் இருந்த புளியமரம் சாய்ந்து விழுந்தது.

    இதனால் மேட்டூர்பவானி ரோட்டில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பூதப்பாடி சந்தைப் பகுதியில் தென்னை மரம் சாய்ந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதன் காரணமாக பூதப்பாடி, சிங்கம்பேட்டை ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேப்போல் அம்மாபேட்டை அருகே உள்ள காடப்பநல்லூர் பகுதியில் வரதராஜன் என்கிற விவசாயி தோட்டத்தில் பூவன் ரக வாழைகள் பயிரிடப்பட்டு இருந்தது.

    தற்போது அவை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று சூறாவளி காற்றால் 500 வாழைகள் சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ .2 லட்சம் ஆகும். அதேபோல் பெரிய குரும்பபாளையம் பகுதியில் வாசுதேவன் என்கிற விவசாயி தனது 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அங்கு பயிரிடப்பட்டிருந்த செவ்வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்தது. சூறாவளி காற்றால் 1,500 செவ்வாழைகள் முற்றிலும் சாய்ந்து விழுந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

    இதேப்போல் சின்ன குரும்பபாளையம், கேசரிமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.

    கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கோபி அடுத்த கடுகாம்பாளையம், நாதிபாளையம், பொலவகாளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பயிரிடப்பட்டு ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழை, நேந்திரன், கதளி உள்ளிட்ட 5 ஆயிரம் வாழை மரங்கள் சூறாவளி காற்றுக்கு சேதம் அடைந்தது.

    சாய்ந்த வாழைகள் குறித்து வேளாண்மை துறைஅதிகாரிகள் கணக்கீடு செய்து காப்பீடு செய்யாத பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    நேற்று ஒரேநாளில் சூறாவளி காற்றில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டு இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.

    அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான தவிட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், சின்னத்தம்பிபாளையம், மூலக்கடை வட்டகாடு, காந்தி நகர், கள்ளிமடைகுட்டை, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

    தவிட்டுப்பாளையம் பகுதியில் மரம் சாய்ந்து மின்கம்பத்தின் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதேபோல் கிராமப்புறப் பகுதிகளிலும் மின்சாரம் தடைபட்டது. அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் மூங்கில் பாளையத்தில் குமாரசாமி கவுண்டர் என்பவரது தோட்டத்தில் இடி விழுந்து 10 தென்னை மரங்கள் தீபிடித்து எரிந்தது.

    சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அந்தியூர் பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் காற்றில் பறந்தது. அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சூறாவளி காற்றில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    இதனால் அந்தியூர்பர்கூர் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழையின் காரணமாக அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள 5 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    இதேபோல் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு தான் அதிகபட்சமாக மழை அளவு பதிவாகியுள்ளது.

    கவுந்தபாடி, வரட்டுப்பள்ளம், சத்தியமங்கலம், கொடிவேரி போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது. ஈரோடு மாநகர பகுதியிலும் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த கோடை மழையால் பல்வேறு இடங்களில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பெருந்துறை125, கவுந்தப்பாடி52.4, பவானி 31, சென்னிமலை22, எலந்தகுட்டைமேடு 20.4, கோபி12.4, வரட்டுப்பள்ளம் 7, ஈரோடு 5, பவானிசாகர்4.2, கொடிவேரி3.2, நம்பியூர் 3, அம்மாபேட்டை1.2.
    Next Story
    ×