என் மலர்
ஈரோடு
- கொடிவேரி தடுப்பணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
- கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவுவாயில் அடைக்கப்பட்டது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணையில் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.
கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பலர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள். இதனால் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் கொடிவேரி அணைக்கு வருவார்கள்.
இந்த நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான கோபிசெட்டிபாளையம், நம்பியூர், சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி வருகிறது.
மேலும் கொடிவேரி தடுப்பணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதேபோல் பவானி ஆற்று பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டுகிறது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு கடந்த 2 நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
மேலும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் பகுதியில் அதிகளவில் தண்ணீர் கொட்டி செல்கிறது. இதனால் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவுவாயில் அடைக்கப்பட்டது. மேலும் தடுப்பணைக்கு செல்லும் வழியிலேயே தடுப்புகள் வைக்கப்பட்டு எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டு உள்ளது. அதில் தடுப்பணையில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கொடிவேரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என எழுதப்பட்டு உள்ளது.
இதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அந்த வழியாக வருபவர்களை அறிவுரை கூறி அனுப்பி வைத்து வருகிறார்கள்.
இதை பற்றி தகவல் அறியாததால் இன்று காலை பொதுமக்கள் பலர் வந்திருந்திருந்தனர். தடை விதிக்கப்பட்டு தடுப்பணைக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் மற்றும் அணை ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
- அணையை ஒட்டிய வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் எந்நேரமும் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
- அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் பகுதியில் அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை.
42 அடி கொண்ட இந்த அணைக்கு அடர்ந்த வனப்பகுதியில் பெய்யும் மழை நீரே நீர்வரத்து ஆகும்.
இந்த நிலையில் குண்டேரிப்பள்ளம் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் குண்டேரிப்பள்ளம் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த அணையின் நீர்மட்டம் நேற்று வரை 22.22 அடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. பெய்த கனமழையால் குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் 124.4 மி.மீ அளவு மழை பொழிவு இருந்து உள்ளது.
இந்த நிலையில் கடம்பூர், குன்றி, மல்லியம்மன் துர்க்கம், விளாங்கோம்பை, கம்பனூர், கல்லூத்து மற்றும் குண்டேரிப்பள்ளம் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த கனமழை காரணமாக அடர்ந்த வனப்பகுதி வழியாக உள்ள சில பள்ளங்கள் வழியாக மழை வெள்ள நீரானது சேறு மண் கலங்கியவாறே குண்டேரிப்பள்ளம் அணைக்கு 563.66 கன அடி நீர் வந்துள்ளது.
இதனால் தற்போது இன்று அணையின் நீர்மட்டம் 36.10 அடியாக உள்ளது. இதனால் ஒரே நாளில் சுமார் 13 அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்தது. இன்னும் 4 அல்லது 5 அடி தண்ணீர் வந்தால் அணை நிரம்பும் நிலை உள்ளது. அணையை ஒட்டிய வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் எந்நேரமும் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
நேற்று இரவு வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஒரே நாளில் அணைக்கு நீர்வரத்து 13.88 அடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் அணை கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. மேலும் தொடர் மழையால் பசுமையாக காணப்பட்டு வருகிறது. அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- தற்போது மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகள், குளம் குட்டைகள் நிரம்பி வழிகிறது.
பவானிசாகர்:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 50 கனஅடிக்கு குறைவாக வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று பவானிசாகர் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,672 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 47.45 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டு வந்த 200 கனஅடி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலுக்கு மட்டும் 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் பலத்த மழை காரணமாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 36.10 அடியாக உள்ளது. இதே போல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 23 அடியாக உயர்ந்துள்ளது.
தற்போது மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகள், குளம் குட்டைகள் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரண் கிடாய் பூஜை நடைபெற்றது.
- பச்சை ரத்தத்தை பழனிச்சாமி உட்பட 5-க்கும் மேற்பட்ட பூசாரிகள் குடித்தும் வாழைப்பழத்தை ரத்தத்துடன் கலந்தும் சாப்பிட்டு உள்ளனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நல்லகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (56). இவர் கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.
மேலும் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இதற்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அண்ணா மலையார் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் பழனிச்சாமி தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
நேற்று கோவில் திருவிழாவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து கரகம் பூஜை, கிளி பிடிக்க செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரண் கிடாய் பூஜை நடைபெற்றது.
இந்த பரண் கிடாய் பூஜையின் போது கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பரண் போன்ற அமைப்பின் மீது வேண்டுதல் வைத்துள்ள பக்தர்கள் கொடுக்கும் ஆட்டு கிடாய்களை பூசாரிகள் வெட்டி அவற்றின் பச்சை ரத்தத்தில் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிடுவது, அதை குழந்தை இல்லாதவர்கள், தொழில் தடை, உடல்நிலை சரியாக வேண்டும் என வேண்டுதல் வைத்துள்ள பக்தர்களுக்கு பூசாரிகள் வழங்குவது வழக்கம்.
அப்போது மதியம் 20-க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்கள் வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட கிடாயின் பச்சை ரத்தத்தை பழனிச்சாமி உட்பட 5-க்கும் மேற்பட்ட பூசாரிகள் குடித்தும் வாழைப்பழத்தை ரத்தத்துடன் கலந்தும் சாப்பிட்டு உள்ளனர்.
இதனையடுத்து சிறிது நேரத்தில் பழனிச்சாமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மயங்கி விழுந்த பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பழனிச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மோட்டார் சைக்கிளில் சித்தோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட துளசிமணி படுகாயம் அடைந்தார்.
- தானமாக பெறப்பட்ட 2 கண்களையும் ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
பெருந்துறை:
ஈரோடு மாமரத்துபாளையம் அருகே கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிமணி (46). கூலித் தொழிலாளியான துளசிமணிக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் துளசிமணி கடந்த 19-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சித்தோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட துளசிமணி படுகாயம் அடைந்தார்.
அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் துளசிமணியை பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 21-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து துளசி மணியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தார் முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்து உடல் உறுப்புகளை பெறுவதற்காக காத்திருந்த உறுப்பு மாற்ற ஆணையத்தின் விதிமுறைப்படி 21-ந் தேதி மாலையில் துளசிமணியின் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து துளசிமணியின் கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கண்கள் மற்றும் தோல் ஆகியவை பாதுகாப்பாக எடுக்கப்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் கல்லீரல் தானம் பெறுவதற்காக காத்திருந்த ஒருவருக்கும், 2 சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவருக்கும், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நோயாளிக்கும் சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டது. அதேபோல தானமாக பெறப்பட்ட 2 கண்களையும் ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
உடல் உறுப்பு தானம் வழங்கிய துளசிமணியின் குடும்பத்தாருக்கு அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.வள்ளி சத்யமூர்த்தி நன்றி தெரிவித்ததுடன் துளசி மணியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார். அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை செய்யப்படுவது 9-வது முறை என மருத்துவக் கல்லூரி சேகர் தெரிவித்தார்.
- நேற்று மாலை முதல் பவானி ஆற்றில் 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை தாழ்வு மண்டலாக மாறுகிறது.
இதன் எதிரொலியால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 5 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது.
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்று 1346 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 6,357 கன அடியாக உயர்ந்துள்ளது.
பில்லூர் அணையில் இருந்து நேற்று மாலை முதல் பவானி ஆற்றில் 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- இரு பள்ளங்கள் குறுக்கே மேம்பாலம் கட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராடியதன் விளைவாக 1½ ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டும் பணி தொடங்கியது.
- தொடர் மழையால் சக்கரைப்பள்ளத்தில் நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பஸ் வசதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலையில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் மலை கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்துக்கு செல்ல குரும்பூர்பள்ளம் மற்றும் சக்கரைப்பள்ளம் என இரு அபாயகரமான இடங்களை கடந்து செல்ல வேண்டும். குரும்பூர்பள்ளத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் சக்கரைப்பள்ளம் உள்ளது. இந்த 2 பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால் பஸ் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வசதியும் தடைப்பட்டு, மாக்கம்பாளையம் மலை கிராமம் தனி தீவாக மாறும். வெள்ளம் வற்றினால்தான் இயல்பு நிலைக்கு மக்கள் வர முடியும்.
இரு பள்ளங்கள் குறுக்கே மேம்பாலம் கட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராடியதன் விளைவாக 1½ ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் இந்த பணி மெதுவாக நடந்து வருவதால் இன்னும் முழுமை அடையவில்லை.
இந்நிலையில் மாக்கம்பாளையம், அரிகியம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் சக்கரைப்பள்ளத்தில் மழை நீர் பெருக்கெடுத்து சென்றது. இதனால் பள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் பஸ் வசதி தடைப்பட்டுள்ளது. இதனால் பஸ் பயணிகள், அப்பகுதி கிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் 8 கிலோமீட்டர் தூரம் பயணித்து கிராமத்தை அடைந்தனர்.
இந்நிலையில் தொடர் மழையால் சக்கரைப்பள்ளத்தில் நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பஸ் வசதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் காட்டாற்று வெள்ளத்தை கயிறு கட்டி ஆபத்தான முறையில் இடுப்பளவு வெள்ளத்தை கடந்து சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,
மாக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து தினமும் வியாபாரம், பிழைப்பிற்காக சத்தியமங்கலம் சென்று வருகிறோம். இதற்காக அடர்ந்த வனப்பகுதியில் 8 கிலோ மீட்டர் நடந்து குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரைப்பள்ளத்தை கடந்து வருகிறோம். மழைக்காலங்களில் இந்த இரு பள்ளங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த சமயம் நாங்கள் உயிரை பணயம் வைத்து காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்வோம்.
இதற்கு நிரந்த தீர்வாக இரு பள்ளங்களிலும் பாலம் கட்டித்தர வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி தற்போது பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதுவும் மந்தமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிழைப்புக்காக வெளியே சென்றாக வேண்டும். அதனால் தற்போது நாங்கள் காட்டாற்று வெள்ளத்தில் கயிறு கட்டி ஆபத்தான முறையில் சென்று வருகிறோம். இதை தவிர்க்க இரு பள்ளங்களிலும் நடக்கும் பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.
- நொய்யல் ஆறு வழியாக ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சென்னிமலை:
ஒரத்துப்பாளையம் அணைக்கு கடந்த 10 நாட்களாக சுமார் 10 கன அடி தண்ணீரே வந்து கொண்டிருந்தது. மிக குறைவான நீர் வரத்தாக இருந்ததால் அணையில் தண்ணீரை தேக்கி வைக்கப்படாமல் இருந்தது. பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை 91 கன அடியாகவும், புதன்கிழமை 40 கன அடியாகவும், பின்னர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 70 கன அடியாகவும் இருந்தது.
இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளான கோவை, திருப்பூர் மாவட்டங்களில் திடீரென பரவலான மழை பெய்ததால் நொய்யல் ஆறு வழியாக ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு 327 கன அடி நீர்வரத்து இருந்தது. அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீர் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ளதால் திருப்பூர் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளிலிருந்து சாய கழிவு நீரை மழை நீரோடு நொய்யல் ஆற்றில் திறந்து விட்டார்களோ என்ற சந்தேகம் உள்ளது. அதனால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திருப்பூர் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளை கண்காணிக்க வேண்டும் என்றனர்.
- குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.
- குண்டேரி பள்ளம் அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால் கடந்த இரண்டு நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஈரோடு புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து வருகிறது. இதேபோல் மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு 762 கன அடி நீர் அதிகரித்து வந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.18 அடியாக உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 22.23 அடியாக உள்ளது. குண்டேரி பள்ளம் அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால் கடந்த இரண்டு நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது. 33.45 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 17.09 அடியாக உள்ளது. 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணை நீர்மட்டம் கடந்த ஒன்றரை மாதமாக முற்றிலும் வற்றிப் போய் உள்ளது. தொடர்ந்து அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்மட்டமும் சற்று உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பெருந்துறை சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- விளை நிலங்களின் பல பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது.
ஈரோடு:
அக்னி நட்சத்திர காலம் நடைபெற்று வரும் நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வானில் கருமேகங்கள் சூழ்ந்து மலை தூரி வருகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று பகல் 2 மணி வரை வானில் மேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீச துவங்கியது. இதைத் தொடர்ந்து மாலை 4 மணி முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் மலைப்பகுதிகளான தாளவாடி, ஆசனூர், கடம்பூர் மற்றும் அந்தியூரில் கனமழை பெய்தது. கோபி, பவானி, மொடக்குறிச்சி, பெருந்துறை மற்றும் சென்னிமலை பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

நம்பியூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று மாலை திடீரென கன மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக நம்பியூர் அருகே உள்ள சந்தன நகர் பகுதியில் உள்ள குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. தொடர் கனமழை காரணமாக குளத்திற்கு அதிக அளவு தண்ணீர் வரத்து இருந்ததை தொடர்ந்து, குளத்தில் இருந்த தண்ணீர் முழுமையாக வெளியேறி வருகிறது. இந்த குளத்தில் இருந்து தண்ணீர் சந்தன நகர், ஆண்டிக்காடு, கோரக்காடு, ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் வழியாக வெளியேறி வருகிறது. இந்த பகுதியில் உள்ள குளம் உடைப்பு ஏற்பட்டதால் இங்குள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் தாழ்வான இடங்களில் வசித்து வரும் பொதுமக்கள் மேடான பகுதிக்கு செல்லவும், கால்நடைகளை பாதுகாப்பாக வைக்கவும், காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் மழை நீர் முழுவதும் தாழ்வான பகுதிகள் வழியாக வெளியேறியதால் வீடுகளுக்குள் புகவில்லை. இந்நிலையில் இன்று காலை குளம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
சென்னிமலை யூனியன், வாய்ப்பாடி ஊராட்சி, வாய்ப்பாடி, விஜயமங்கலம் ஆர்.எஸ்., ரெயில்வே பாலம் அடியில் நேற்று மாலை பெய்த மழை பெய்தது. அப்போது ரெயில்வே பாலம் அடியில் கார் ஒன்று சென்றது. அப்போது கார் நீரில் மூழ்கியது. காரில் இருந்தோர் வெளியேறினர். அதை தொடர்ந்து பெரிய டாரஸ் லாரி ஒன்று மழை தண்ணீரில் சிக்கிக் கொண்டது. இதை ஜே.சி.பி. மூலம் வெளியே எடுக்கப்பட்டது. கார் மட்டும் தண்ணிருக்குள் முழ்கி உள்ளது. இதையடுத்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றினர். ரெயில்வே பாலத்தில் நடுப்பகுதியில் சுமார் 10 அடி உயரத்தண்ணீர் உள்ளது. இன்று காலை தண்ணீரில் மூழ்கி இருந்த காரை வெளியே எடுத்தனர். கார் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
பெருந்துறை சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. பெருந்துறையில் மாலை 3 மணிக்கு தொடங்கி 5 மணி வரையிலும் கன மழை பெய்தது. அதன் பிறகு லேசான சாரல் மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது. இதனால் பெருந்துறையை சுற்றியுள்ள விளை நிலங்களின் பல பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. விஜயமங்கலம் பகுதியில் மலையங்குட்டை, மொடவாட்டு குட்டைகளுக்கு செல்லும் நீர்வழிப் பாதை அடைக்கப்பட்டதால் குட்டைகளுக்கு மழைநீர் செல்லாமல் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நின்றது. பெருந்துறை சிப்காட்டிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது. தற்போது இந்த மழையால் வறட்சி நீங்கி காய்ந்துபோன கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கும், சோளம், கம்பு, நிலக்கடலை, மக்காச்சோளம் போன்ற மானா வாரி பயிர்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மழை இல்லாமல் புல் பூண்டு காய்ந்து கிடந்த நிலையில் தற்போதைய மழையால் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ளதால் கால்நடைகளுக்கு தீவன பஞ்சம் குறையும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- தாளவாடி-71, பெருந்துறை-57, அம்மாபேட்டை-35, நம்பியூர்-26, பவானி-24, சென்னிமலை-18, கவுந்தபாடி-18, குண்டேரிபள்ளம்-9, கோபி-9, வரட்டுபள்ளம்-9, சத்தி-7, ஈரோடு-6, கொடிவேரி-6, பவானிசாகர் -4, மொடக்குறிச்சி-4 கொடுமுடி-4.
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- தொடர்ந்து இரவு மற்றும் நள்ளிரவில் சாரல் மழை தூறி கொண்டே இருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதை தொடர்ந்து 110 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. அனல் காற்று வீசியது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து பல இன்னல்களுக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடனும் பலத்த சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதே போல் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி, தலமலை மற்றும் அந்தியூர் அடுத்த பர்கூர், தாமரைக்கரை, தட்டக்கரை உள்பட வனப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயில் வாட்டியது. இதனால் மாவட்டத்தின் வனப்பகுதிகளில் மரம், செடி, கொடிகள், புல் வயல்கள் காய்ந்து காட்சி அளித்தது. தொடர்ந்து கடும் வெயில் சுட்டெரித்ததால் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி வனப்பகுதியில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு திடீரென தீப்பிடித்தது. இதை தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதே போல் 2 முறை வனப்பகுதியில் தீ பிடித்து அணைக்கப்பட்டது.
இந்த நிலையில் தாளவாடி, தலமலை மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக பலத்த மழை கொட்டி வருகிறது.
தொடர்ந்து இரவு மற்றும் நள்ளிரவில் சாரல் மழை தூறி கொண்டே இருக்கிறது. மேலும் பகல் நேரங்களில் ஒரு சில நேரங்களில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.
இந்த நிலையில் தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெயிலால் தவித்த மலை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல் நேற்றும் தாளவாடி வனப்பகுதியில் சாரல் மழை பெய்தது.
தொடர்ந்து மழை பெய்வதால் தாளவாடி வனப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மேலும் வனப்பகுதி முழுவதும் மரம், செடி, கொடிகள் துளிர்ந்து பசுமையாக காட்சி அளித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயிலால் சொல்ல முடியாத இன்னல்களை சந்தித்த மக்கள் வனப்பகுதியில் குளிர் காற்று வீசுவதால் குதுகளித்தனர்.
இதே போல் அந்தியூர் அருகே உள்ள பர்கூர், தட்டக்கரை, தாமரைக்கரை உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் கடந்த 1 வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பர்கூர் மலை கிராம பகுதிகளில் சாரல் மழை மற்றும் பலத்த மழை பெய்தது.
இதே போல் நேற்றும் பர்கூர் வனப்பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக பரவலாக மழை கொட்டியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்பட்டு வருகிறது.
மேலும் மலைப்பகுகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காற்று வீசுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது பெய்து வரும் மழையால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது.
- பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மதியம் 3 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
- குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியிலும் கடந்த 2 நாட்களாக இரவில் பலத்த மழை பெய்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை தீவிரமடைந்து வருகிறது.
அதன்படி ஈரோடு புறநகர் பகுதிகளான சத்தியமங்கலம், அந்தியூர், கோபி செட்டிபாளையம் பகுதிகளிலும் ஈரோடு மாவட்ட எல்லை பகுதிகளான தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலை கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் ஈரோடு மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் இருந்தது. ஆனால் மதியம் 3 மணிக்கு பிறகு மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மதியம் 3 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 3 மணிக்கு பின்னர் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. 3 மணிக்கு பெய்ய தொடங்கிய கனமழை மாலை 6 மணி வரை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக பெருந்துறை, காஞ்சிக்கோவில், பெத்தம்பாளையம், திங்களூர், நசியனூர், பணி க்கம்பாளையம், கிருஷ்ணம்பாளையம், விஜயமங்கலம், புங்கம்பாடி போன்ற தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது. புங்கம்பாடியில் உள்ள அணைக்கட்டு பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணைக்கட்டு நிரம்பி அந்த உபரிநீர் அருகே உள்ள குளங்களுக்கு சென்றது.
பெருந்துறை அருகே தெற்கு பள்ளம், பெருந்துறை ரிங் ரோடு பகுதி, டைமன் சிட்டி பகுதி உள்பட பெருந்துறையில் உள்ள 6 குளங்கள் நேற்று பெய்த பலத்த மழையால் நிரம்பியது. இதன் உபரிநீர் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டிற்கு சென்று சூரம்பட்டி அணைக்கட்டும் நிரம்பியது. 6 குளங்கள், அணைக்கட்டு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியிலும் கடந்த 2 நாட்களாக இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கவுந்தப்பாடி, சென்னிமலை, கொடுமுடி, பவானி, மொட க்குறிச்சி, பவானிசாகர், நம்பியூர், வரட்டுப்பள்ளம் என ஈரோடு புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
அதே நேரம் ஈரோடு மாநகர் பகுதியில் லேசான சாரல் மழையுடன் நின்றுவிட்டது. இதனால் மாநகர் பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்ட எல்லை பகுதியான தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் பெய்த மழையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருந்துறை-51, குண்டேரிப்பள்ளம்-25.20, கவுந்தப்பாடி-14, சென்னிமலை-12, கொடுமுடி-8.60, பவானி-6.40, மொடக்குறிச்சி-6, பவானிசாகர்-5, நம்பியூர்-3.10, வரட்டுப்பள்ளம்-3.






