search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goat Blood"

    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரண் கிடாய் பூஜை நடைபெற்றது.
    • பச்சை ரத்தத்தை பழனிச்சாமி உட்பட 5-க்கும் மேற்பட்ட பூசாரிகள் குடித்தும் வாழைப்பழத்தை ரத்தத்துடன் கலந்தும் சாப்பிட்டு உள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நல்லகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (56). இவர் கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

    மேலும் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இதற்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அண்ணா மலையார் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் பழனிச்சாமி தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    நேற்று கோவில் திருவிழாவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து கரகம் பூஜை, கிளி பிடிக்க செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரண் கிடாய் பூஜை நடைபெற்றது.

    இந்த பரண் கிடாய் பூஜையின் போது கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பரண் போன்ற அமைப்பின் மீது வேண்டுதல் வைத்துள்ள பக்தர்கள் கொடுக்கும் ஆட்டு கிடாய்களை பூசாரிகள் வெட்டி அவற்றின் பச்சை ரத்தத்தில் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிடுவது, அதை குழந்தை இல்லாதவர்கள், தொழில் தடை, உடல்நிலை சரியாக வேண்டும் என வேண்டுதல் வைத்துள்ள பக்தர்களுக்கு பூசாரிகள் வழங்குவது வழக்கம்.

    அப்போது மதியம் 20-க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்கள் வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட கிடாயின் பச்சை ரத்தத்தை பழனிச்சாமி உட்பட 5-க்கும் மேற்பட்ட பூசாரிகள் குடித்தும் வாழைப்பழத்தை ரத்தத்துடன் கலந்தும் சாப்பிட்டு உள்ளனர்.

    இதனையடுத்து சிறிது நேரத்தில் பழனிச்சாமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மயங்கி விழுந்த பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பழனிச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×