search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு- காட்டாற்றை ஆபத்தான முறையில் கடந்து செல்லும் கிராம மக்கள்
    X

    பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு- காட்டாற்றை ஆபத்தான முறையில் கடந்து செல்லும் கிராம மக்கள்

    • இரு பள்ளங்கள் குறுக்கே மேம்பாலம் கட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராடியதன் விளைவாக 1½ ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டும் பணி தொடங்கியது.
    • தொடர் மழையால் சக்கரைப்பள்ளத்தில் நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பஸ் வசதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலையில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் மலை கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்துக்கு செல்ல குரும்பூர்பள்ளம் மற்றும் சக்கரைப்பள்ளம் என இரு அபாயகரமான இடங்களை கடந்து செல்ல வேண்டும். குரும்பூர்பள்ளத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் சக்கரைப்பள்ளம் உள்ளது. இந்த 2 பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால் பஸ் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வசதியும் தடைப்பட்டு, மாக்கம்பாளையம் மலை கிராமம் தனி தீவாக மாறும். வெள்ளம் வற்றினால்தான் இயல்பு நிலைக்கு மக்கள் வர முடியும்.

    இரு பள்ளங்கள் குறுக்கே மேம்பாலம் கட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராடியதன் விளைவாக 1½ ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் இந்த பணி மெதுவாக நடந்து வருவதால் இன்னும் முழுமை அடையவில்லை.

    இந்நிலையில் மாக்கம்பாளையம், அரிகியம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் சக்கரைப்பள்ளத்தில் மழை நீர் பெருக்கெடுத்து சென்றது. இதனால் பள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் பஸ் வசதி தடைப்பட்டுள்ளது. இதனால் பஸ் பயணிகள், அப்பகுதி கிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் 8 கிலோமீட்டர் தூரம் பயணித்து கிராமத்தை அடைந்தனர்.

    இந்நிலையில் தொடர் மழையால் சக்கரைப்பள்ளத்தில் நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பஸ் வசதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் காட்டாற்று வெள்ளத்தை கயிறு கட்டி ஆபத்தான முறையில் இடுப்பளவு வெள்ளத்தை கடந்து சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,

    மாக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து தினமும் வியாபாரம், பிழைப்பிற்காக சத்தியமங்கலம் சென்று வருகிறோம். இதற்காக அடர்ந்த வனப்பகுதியில் 8 கிலோ மீட்டர் நடந்து குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரைப்பள்ளத்தை கடந்து வருகிறோம். மழைக்காலங்களில் இந்த இரு பள்ளங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த சமயம் நாங்கள் உயிரை பணயம் வைத்து காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்வோம்.

    இதற்கு நிரந்த தீர்வாக இரு பள்ளங்களிலும் பாலம் கட்டித்தர வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி தற்போது பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதுவும் மந்தமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிழைப்புக்காக வெளியே சென்றாக வேண்டும். அதனால் தற்போது நாங்கள் காட்டாற்று வெள்ளத்தில் கயிறு கட்டி ஆபத்தான முறையில் சென்று வருகிறோம். இதை தவிர்க்க இரு பள்ளங்களிலும் நடக்கும் பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×