என் மலர்
ஈரோடு
- கருப்பன் யானையை பிடிக்க அரிசி ராஜா முத்து, கபில்தேவ் மற்றும் கலீம் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
- கருப்பன் யானை மல்குத்திபுரம் கிராமத்தில் சொன்னஞ்சப்பா என்பவர் வீட்டின் முன் கட்டி இருந்த பசுமாட்டை முட்டி தள்ளியது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அடுத்த ஜீரகள்ளி வனச்சரத்திக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை தினந்தோறும் வனத்தை ஒட்டி உள்ள கிராமத்துக்குள் புகுந்து வாழை, மக்காச்சோளம், கரும்பு, தென்னை பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
இதையடுத்து விவசாயிகள் தினம் தோறும் இரவு நேரங்களில் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரவு காவலுக்கு சென்ற 2 விவசாயிகளை கருப்பன் யானை தாக்கிக் கொன்றது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுடன் விவசாயிகளை கொன்று அச்சுறுத்தும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கருப்பன் யானையை பிடிக்க அரிசி ராஜா முத்து, கபில்தேவ் மற்றும் கலீம் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் 150 வனப்பணியாளர்கள் கருப்பன் யானையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முதல்கட்டமாக நேற்று முன்தினம் இரவு மரியபுரம், ஜோரகாடு, மற்றும் ரங்கசாமி கோவில் வழிதடத்தில் வனத்துறையினர் 3 கும்கிகளுடன் விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானை வரவில்லை.
இதையடுத்து நேற்று இரவு கருப்பன் யானை ஜோரகாடு பகுதிக்கு வராமல் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட மல்குத்திபுரம் பகுதியில் சுற்றியதை வனத்துறையினர் கண்டு பிடித்தனர். இதையடுத்து அங்கு சென்ற மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் கருப்பன் யானையை சுற்றி வளைத்தனர். ஆனால் கருப்பன் யானைக்கு மயக்கஊசி செலுத்த முடியவில்லை. மேலும் திடீரென கருப்பன் யானை மருத்துவகுழுவினரை துரத்தியது. இதில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
அங்கிருந்து தப்பிய கருப்பன் யானை மல்குத்திபுரம் கிராமத்தில் சொன்னஞ்சப்பா என்பவர் வீட்டின் முன் கட்டி இருந்த பசுமாட்டை முட்டி தள்ளியது. இதில் மாட்டின் குடல் வெளியே வந்து உயிருக்கு போராடி வருகிறது. அதிகாலை சிக்கள்ளி வனப்பகுதிகுள் கருப்பன் யானை தப்பி சென்றது. விரைவில் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
- கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகளுக்கு தேவையான கயிறு, மணி ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
- வியாபாரிகள் ஆர்வத்துடன் மாடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுவது வழக்கம்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும், மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.
அதன்படி இன்றும் மாட்டு சந்தை கூடியது. இன்று பசுமாடு, எருமை மாடு, கன்றுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. வெளிமாநில வியாபாரிகளும் அதிக அளவில் கூடி இருந்தனர்.
வரும் திங்கட்கிழமை மாட்டு பொங்கலையொட்டி இன்று மாட்டு சந்தையில் மாடுகளுக்கு தேவையான கயிறு, மணி, சாட்டை ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
வியாபாரிகள் ஆர்வத்துடன் மாடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். குறிப்பாக மாடுகளுக்கு அணிவிக்கப்படும் கயிறு, கழுத்து கயிறு, மூக்கணாங் கயிறு, கழுத்து மணி விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
கழுத்து மணி சிறியது 20 ரூபாய்க்கும், பெரிய மணி 150 ரூபாய்க்கும், திருகாணி 20 முதல் 50 ரூபாய்க்கும், கழுத்து கட்டி கயிறு 20 முதல் 200 வரைக்கும், சாட்டை 50 முதல் 200 ரூபாய் வரைக்கும், மொளகுச்சி கம்பி 50 முதல் 100 ரூபாய் வரைக்கும் விற்பனையானது.
- காளீஸ்வரன் தனது மனைவி மைவிழி அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கினார்.
- இதில் மைவிழிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
மொடக்குறிச்சி:
ஈரோடு வெண்டிபாளையம் அடுத்த காந்திபுரம் பாபு தோட்டத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன் (26). டிரைவர். இவரது மனைவி மைவிழி (22). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
காதல் திருமணம் செய்து கொண்டதால் 2 வீட்டு பெற்றோர்களிடமும் எதிர்ப்பு இருந்து வந்தது.இந்த நிலையில் காளீஸ்வரனுக்கும், அவரது மனைவி மைவிழிக்கும் கருத்து வேறுபாடுகாரணமாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து கடந்த 2மாதங்களுக்கு முன்பு மைவிழி கணவரை விட்டு பிரிந்து சென்று ஈரோடுஅக்ரகாரம் பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு சென்று விட்டார்.
மேலும் அவரது கணவர் காளீஸ்வரன் குழந்தையை பார்க்க வரக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனால் மைவிழி கணவர்வீட்டிற்கு வராமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இவர்களது குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் மைவிழி இரவு 9 மணியளவில் தனது குழந்தையை பார்க்க தனது கணவர் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டில் இருந்த காளீஸ்வரன் தனது மனைவி மைவிழியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார்.
மேலும் நீ உயிரோடு இருந்தால் தான் எனக்கு பிரச்சினை, உன்னைகொன்றால் தான் நானும்எனது மகளும் நன்றாகஇருக்க முடியும்என்று கூறி மைவிழி அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கினார்.
இதில் மைவிழிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
இதனைப்பார்த்த உறவினர்கள் மைவிழியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இது குறித்து மைவிழி மொடக்குறிச்சி போலீசில் புகார்செய்தார். போலீசார் காளீஸ்வரன்மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம்அந்த பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விவசாயிகள் எந்திர நடவு முறைக்கு தங்களை மாற்றி கொண்டுள்ளனர்.
- பொங்கல் பண்டிகைக்கு பின் நடவு பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
ஈரோடு:
காலிங்கராயன் பாசன பகுதியில் முதல் போக அறுவடை பணிகள் முடிவடைந்து 2-ம் போக சாகுபடிக்கான ஆயத்த பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
இந்த பகுதியில் கூலி ஆட்கள் மூலமாக மட்டுமே நடவு பணிகள் மேற்கொள்வது வழக்கம்.
ஆனால் ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு போன்ற காரணங்களால் இந்த ஆண்டு அதிகப்படியான விவசாயிகள் எந்திர நடவு முறைக்கு தங்களை மாற்றி கொண்டுள்ளனர்.
அதற்கு ஏற்ப தற்போது நாற்றங்கால்களை தயார்படுத்தி வரும் விவசாயிகள் பொங்கல் பண்டிகைக்கு பின் நடவு பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
எந்திர நடவு மூலம் ஏக்கருக்கு ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவு குறைவதுடன், குறைவான நேரத்தில் நடவு பணிகளை முடிக்க இயலும் என தெரிவித்தனர்.
மேலும் போதிய இடைவெளியுடன் கூடிய எந்திர நடவால் பயிர்கள் நன்கு கிளைத்து வளர்வதாகவும், அதிக மகசூல் கிடைப்பதாகவும் விவசாயிகள் கூறினர்.
- குந்துபையூர் தென்றல் நகரில் சிலர் சேவல் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
- இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு உதவி சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் தலைமையில் போலீசார் வெள்ளி திருப்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது குந்துபையூர் தென்றல் நகரில் சிலர் சேவல் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடிக்க முயன்ற போது அதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 3 பேர் சிக்கினர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் மயிலம்பாடி பகுதியை சேர்ந்த விஜயகுமார்(28), சித்தூர் பகுதியை சேர்ந்த மோகன் பிரசாத் (28), முருகன் (30) என தெரிய வந்தது. இவர்கள் பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்கள் பயன்படுத்திய 3 சேவலையும் பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்தி ஈஸ்வரன் கோவில் படித்துறையில் இறங்கி பவானி ஆற்றில் பரிசல் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தார்.
- பரிசல்லானது திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து ஆரோக்கிய மேரியை அமுக்கியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசூர் அடுத்த மாக்கினாகோம்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (42). இவரது கணவர் அந்தோணிசாமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
அந்தோணிசாமி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆரோக்கியமேரி தினமும் பவானி ஆற்றில் மீன் பிடிக்க செல்வது வழக்கம்.
அதேப்போல் நேற்றும் மீன்பிடிக்க தனது தங்கை மல்லிகாவுடன் சென்றார். இதற்காக ஆரோக்கிய மேரி பரிசலை எடுத்துக்கொண்டு சென்றார்.
சத்தி ஈஸ்வரன் கோவில் படித்துறையில் இறங்கி பவானி ஆற்றில் பரிசல் போட்டு தங்கையுடன் மீன் பிடித்து கொண்டிருந்தார்.
பின்னர் மாலை அரியப்பம்பாளையம் அம்மன் கோவில் அருகே பவானி ஆற்று தடுப்பு அணையில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது ஆரோக்கிய மேரி ஆற்றின் நடுவில் உள்ள தடுப்பணை சுவரைத் தாண்டி செல்ல பரிசலை தூக்கி போட்டு அதில் ஏற முயன்றார்.
அப்போது பரிசல்லானது திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து ஆரோக்கிய மேரியை அமுக்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தங்கை மல்லிகா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஆரோக்கிய மேரியை தூக்கி மணல்மேட்டில் படுக்க வைத்து பார்த்த போது அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே ஆரோக்கிய மேரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மன வேதனையில் இருந்த பாரூக் சம்பத்தன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பி.பி.அக்ரஹாரம், பூம்புகார் நகரை சேர்ந்தவர் அப்துல்பாரூக் (68). இவரது மனைவி ஆயிஷா. அப்துல் பாரூக்கு நீண்ட வருடமாக இருதய நோய் பிரச்சனை இருந்து வந்தது.
இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்த பாரூக் சம்பத்தன்று தற்கொலை செய்ய முடிவு எடுத்து பி.பி.அக்ரஹாரம் காயிதே மில்லத் தெருவில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரூக் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பழனி திடீரென மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தார்.
- உடனடியாக அவரை சிகிச்சைக்காக கார் மூலம் கோபி அரசு மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கரட்டுப் பாளையம் அருகே உள்ள மேட்டுக்காடு பவர் ஹவுஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் பழனி (39). விவசாயக் கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்திய சாவித்திரி.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழனியை கட்டு விரியன் பாம்பு கடித்து விட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதன் பிறகு பழனி உடல் அடிக்கடி சரி இல்லாமல் இருந்தது.
இதற்காக பழனி கொடிவேரியில் உள்ள பாம்பு கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை பழனி திடீரென மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக கார் மூலம் கோபி அரசு மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு பழனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாளை தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
- 15-ந்தேதி தெப்போற்சவம் நடக்கிறது.
கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.
கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக கோவில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினார்கள். பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. குண்டம் இறங்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். கடந்த 6-ந் தேதி தேர் நிலை பெயர்தல் நிகழ்ச்சியும், 9-ந் தேதி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது.
அதைத் தொடர்ந்து 11-ந் தேதி மாவிளக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு11 மணி அளவில் கோவிலின் முன்புள்ள குண்டத்தில் பொங்கல் வைத்து பூஜை நடந்தது. பின்னர் 50 அடி குண்டத்தில் எரிகரும்பு (விறகுகள்) வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று அதிகாலை 4 மணியளவில் பூசாரிகள் அம்மனிடம் வாக்கு கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 5.30 மணியளவில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் தலைமை பூசாரி ஆனந்த் குண்டத்தில் உள்ள தீதனல் மற்றும் பழம், பூக்கள் ஆகியவற்றை வானத்தை நோக்கி வீசி, குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து முதன் முதலில் தீமிதித்து தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் கைக்குழந்தைகளுடன் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
குண்டம் இறங்குவதற்கு வசதியாக ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக நின்று குண்டம் மிதித்தனர். இதற்கான பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் இரண்டு டிஸ்பிக்கள் 13 இன்ஸ்பெக்டர்கள், 93 சப் இன்ஸ்பெக்டர்கள், 532 போலீசார் மற்றும் ஊர் காவல் படை வீரர்கள் என 800-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும், திருட்டு போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக மாறு வேடத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
குண்டம் விழாவையொட்டி அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நாளை (13-ந் தேதி) மாலை 4 மணியளவில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 14-ந் தேதி சனிக்கிழமை இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட மலர்ப்பல்லக்கில் கோபி நகருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
15-ந் தேதி கோபியில் தெப்போற்சவமும், 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை கோபி, புதுப்பாளையம், நஞ்சகவுண்டம்பாளையம் பகுதிகளில் மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது. 21-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 5 ஆயிரத்து 427 பேர் அதிகமாக உள்ளனர்.
ஈரோடு:
தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 5-ந் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 23 பேர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 5 ஆயிரத்து 427 பேர் அதிகமாக உள்ளனர்.
- அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- வனத்துறையினர் பலாப்பழங்களுடன் கருப்பன் யானைக்காக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய காத்திருந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கருப்பன் யானை அட்டகாசம் செய்து வருகிறது.
இரவு நேரங்களில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கருப்பன் யானை, காலிபிளவர், முட்டைகோஸ், மக்காச்சோளம், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பின்னர் அதிகாலை நேரமானதும் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.
எனவே அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ், கலீம், அரிசி ராஜா ஆகிய 3 கும்கிகளை கொண்டு வந்தனர். அந்த கும்கிகள் ஜோரை காடு ரங்கசாமிகோவில் அருகில் கட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 3 கும்கிகள் மற்றும் 4 கால்நடை மருத்துவர்கள் மற்றும் 150 வனத்துறையினர் கொண்ட குழுவினர் கருப்பன் யானையை பிடித்து மயக்க ஊசி செலுத்த தயார் நிலையில் இருந்தனர்.
இதற்காக வனத்துறையினர் பலாப்பழங்களுடன் கருப்பன் யானைக்காக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய காத்திருந்தனர். ஆனால் உஷாரான கருப்பன் யானை இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
எனவே இன்று காலை அடர்ந்த வனப்பகுதிக்கே சென்று கருப்பன் யானையை தேட வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். பின்னர் கும்கிகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தவும் முடிவு செய்து உள்ளனர்.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் வரும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- பா.ஜனதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்ததால் தொகுதி காலியானதாக சட்டசபை செயலாளர் அறிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் தமிழக தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
ஒரு தொகுதி காலியானால் 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தவேண்டும். அதன்படி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் வரும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே மக்கள் மத்தியில் ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதால் தி.மு.க. போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் பிரபலமான ஒரு வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் தற்போதே தங்களுக்கு தெரிந்த தலைவர்கள் மூலம் காய் நகர்த்தி வருகின்றனர்.
அதேபோல் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு 2011, 2016 தேர்தல்களில் தொடர்ந்து 2 முறை அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இதில் 2011 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார். ஆனாலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் யுவராஜா கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
எனவே இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வே நேரடியாக போட்டியிடும் என்று கூறப்படுகிறது. ஈரோடு கிழக்குதொகுதி மாநகராட்சி மற்றும் சில கிராம பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.
கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. அதிக தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக ஈரோட்டில் உள்ள 8 தொகுதிகளில் கோபி செட்டிபாளையம், பவானி சாகர், பெருந்துறை, பவானி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.வும், மொடக்குறிச்சி தொகுதியில் கூட்டணி கட்சியான பா.ஜ.கவும் வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 8 தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி 5 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி ஈரோடு கிழக்கு, மேற்கு, அந்தியூர் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை காட்ட அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தலாம் என்று தெரிகிறது.
அ.தி.மு.க. இடைத்தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவர்களை எதிர்க்க தி.மு.க.வும் தயாராகி வருகிறது. கொங்கு மண்டலம் அ.தி.மு.க. கோட்டை அல்ல அது தி.மு.க.வின் கோட்டை என்று நிரூபிக்கும் வகையில் இந்த தேர்தல் அமையும்.
அ.தி.மு.க. போட்டியிடும் பட்சத்தில் அவர்களை எதிர்கொள்ள தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர். இதனால் இந்த இடைத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பா.ஜனதாவும் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்று கூறி வருகிறது. இங்கு தான் பா.ஜனதாவுக்கு 2 பெண் எம்.எல்.ஏக்கள் ( வானதி சீனிவாசன், சரஸ்வதி) உள்ளனர். மேலும் புத்தாண்டு அன்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஒரு டுவிட்டர் பதிவு வெளியிட்டார். அதில் கடந்த காலங்களில் தமிழக பா.ஜ.க., தனித்துப்போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில் மீண்டும் இதை செய்ய தயங்காது என்றும், தி.மு.க. கூட்டணி இல்லாமல் போட்டியிட தயாரா? என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் பா.ஜனதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி என்று பேசினார். மேலும் சில அ.தி.மு.க.வினரும் பா.ஜனதாவினருடன் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. எனவே அதற்கு முன்னோட்டமாகவும், கொங்கு மண்டலத்தில் உள்ள தங்களது செல்வாக்கை நிரூபிக்கவும் சரியான வாய்ப்பாக இந்த இடைத்தேர்தலை பயன்படுத்த பா.ஜனதா தனித்து போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. தங்கள் ஆட்சியின் மக்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே போல் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்பதை நிருபிக்க எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.
எனவே தி.மு.க., அ.தி.மு.க.வே நேரடியாக மோதுமா? அல்லது கடந்த தேர்தல் போல் கூட்டணி கட்சிகளுக்கே போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்குமா? என்று தேர்தல் தேதி அறிவித்தப்பின் தெரியவரும்.
இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியின் நிலவரம் குறித்து உளவுப்பிரிவு போலீசாரும் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.






