என் மலர்
ஈரோடு
- வடிவேல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து எல்லை பாதுகாப்பு படை வீரராக கடந்த 18 வருடமாக பணியாற்றி வந்தார்.
- வடிவேல் உடல் திரிபுராவிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (38). இவரது மனைவி நித்தியா. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
வடிவேல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து எல்லை பாதுகாப்பு படை வீரராக கடந்த 18 வருடமாக பணியாற்றி வந்தார். தற்போது வடிவேல் திரிபுராவில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். தினமும் வடிவேல் தனது மனைவியுடன் போனில் பேசுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட வடிவேல் தனது மனைவியுடன் செல்போனில் பேசினார். அப்போது திரிபுராவில் கடும் குளிர் நிலவி வருவதாக மனைவியிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட வடிவேல் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் வடிவேல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வடிவேல் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து வடிவேல் உடல் திரிபுராவிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. பின்னர் ராணுவ வாகனத்தில் அவரது உடல் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளிக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலை பார்த்து மனைவி குழந்தைகள் உறவினர்கள் கதறி அழுதனர்.
பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து இன்று மாலை வடிவேல் உடல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் உள்ள மின் மயானத்தில் ராணுவ வீரர்கள் மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது.
- ரவிக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (38). கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணி முடிந்து ரவிக்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது ரவிக்குமார் மது அருந்தி உள்ளார். ஊரில் உள்ளவர்களுக்கு போன் செய்து கொண்டு அப்படியே தூங்க அங்குள்ள அறைக்கு சென்று விட்டார்.
இதனையடுத்து ரவிக்குமார் உறவினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அறையில் செல்போன் உடைந்து கிடந்து உள்ளது.
மேலும் ரவிக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரது உடலை கீழே இறக்கி வைத்தனர்.
இதுகுறித்து சென்னிமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ரவிக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவிக்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.
புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தனது மனைவி மற்றும் மகள் இறந்து போன துக்கத்தில் ஞானராஜ் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- வீட்டில் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் வனச்சாலை ரோடு 4-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஞானராஜ் (50). கூலி தொழிலாளி. இவரது மனைவி மரகதம். இவர்களுக்கு ரேணு என்ற மகளும், நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர்.
இதில் மகள் ரேணு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டார். ஞானராஜின் மனைவி மரகதம் தி.மு.க.வில் வார்டு கவுன்சிலராக இருந்தவர்.
இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனையடுத்து ஞானராஜ் தனது மகன் நவீன்குமார் உடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் தனது மனைவி மற்றும் மகள் இறந்து போன துக்கத்தில் ஞானராஜ் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று காலை பெயிண்டிங் வேலைக்கு சென்ற நவீன்குமார் இரவு வீடு திரும்பி வந்து பார்க்கும் போது தந்தை ஞானராஜ் வீட்டில் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே ஞானராஜை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர் ஏற்கனவே ஞானராஜ் இறந்து விட்டதாக கூறினர்.
இதனையடுத்து ஞானராஜ் உடல் பிரேத பரிசோதனை க்காக கோபி அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டு உள்ளது.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி, மகள் இறந்து போன துக்கத்தில் இருந்த ஞானராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ரோட்டில் திரியும் குதிரைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
- இந்த குதிரைகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் பகுதியில் பொதுமக்கள் பலர் ஆடு, மாடு, மற்றும் குதிரைகள் வளர்த்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள குதிரைகள் அடிக்கடி அந்தியூர் நகரின் முக்கிய பகுதி ரோடுகளில் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்தியூர் பஸ் நிலையம் பகுதி, பர்கூர் சாலை, அத்தாணி சாலை, ஆப்பக்கூடல் செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, விளையாட்டு மைதானத்திலும் குதிரைகள் அதிக அளவில் சுற்றுகின்றன.
ரோட்டில் திரியும் குதிரைகளால் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, விளையாட்டு மைதானத்திற்குள் நடை பயிற்சி செய்பவர்களும், விளையாடும் மாணவர்க ளும் எந்த நேரத்தில் இந்த குதிரை வந்து நம்மை தாக்கி விடுமோ என்ற ஒரு வித அச்சத்தோடு சென்று வருகிறார்கள்.
இதேபோல் சாலையில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும்தங்களை கீழே தள்ளி விடுமோ என்ற பயத்திலும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குதிரைகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே ரோட்டில் சுற்றி திரியும் குதிரைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குதிரையின் உரிமை யாளர்களை எச்சரிக்க வேண்டும் என்று பொது மக்கள், தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
- கோவிலின் உண்டியலை வேல் கம்பியால் உடைத்துக் கொண்டிருந்த திருடன் அங்கிருந்து தப்பி ஓடினான்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாதையனை கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் பகுதியில் பாலமரத்து முனியப்பன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சுற்றுச்சுவர் ஏதும் கிடையாது. திறந்தவெளியில் உள்ள இந்த கோவிலில் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் கோவில் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் சத்தம் போட்டு கொண்டே கோவிலை நோக்கிச் சென்றனர்.
அப்போது கோவிலின் உண்டியலை வேல் கம்பியால் உடைத்துக் கொண்டிருந்த திருடன் அங்கிருந்து தப்பி ஓடினான். இதுகுறித்து கோவில் பூசாரி அம்மாசைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து அம்மாசை அம்மாபேட்டை போலீசில் புகார் செய்திருந்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய திருடனை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் பயிற்சி இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது ஊமாரெட்டியூரை அடுத்த கோலக்காரனூர் பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படியான நின்ற ஒரு வாலிபரை போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
மேலும் விசாரணையில் இந்திரா நகரை சேர்ந்த மாதையன் (36) என்பதும், பாலமரத்து முனியப்பன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்றதும் தெரிய வந்தது.
இவர் தற்காலிகமாக சேலம் இரும்பாலை பகுதியில் தங்கி கட்டிடப்பணிக்கு கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். தனது தாய், தந்தையை பார்க்க ஊருக்கு வந்தவர் திருட்டு செயலில் ஈடுபட்டு ள்ளது என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாதையனை கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
- ஈரோடு பகுதியில் 4 இடங்களில் மஞ்சள் ஏல முறை விற்பனை நடக்கிறது.
- பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்களுக்கு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் என 4 இடங்களில் மஞ்சள் ஏல முறை விற்பனை நடக்கிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்களுக்கு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வருகின்ற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 18-ந் தேதி வழக்கம் போல மார்க்கெட் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் த.மா.கா.வும் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
- அ.தி.மு.க.-த.மா.கா இடையே எந்த ஒரு போட்டியோ மோதலோ ஏற்படவில்லை.
ஈரோடு:
அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணி தொடங்கியது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகரிடம் கேட்டபோது கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. த.மா.கா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தல் வந்துள்ளது. கூட்டணி தர்மபடி தமிழ் மாநில காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி பொருத்தவரை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் அவகாசம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தலைவர் ஜி.கே.வாசன் முறைப்படி கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்வார். நாங்கள் தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.வை பொருத்தவரை அவர்கள் தேர்தல் பணி தொடங்கி விட்டார்கள். கூட்டத்தில்கூட கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று முடிவு செய்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.-த.மா.கா இடையே எந்தஒரு போட்டியோ மோதலோ ஏற்படவில்லை.
அ.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், பாரதி ஜனதா ஆகிய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பலமான எதிர்கட்சியாக உள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த 18 மாதமாக பல்வேறு பிரச்சினைகள் மக்கள் சந்தித்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இந்த தேர்தலை பொருத்தவரை நாங்கள் அ.தி.மு.க. தலைமையில் தி.மு.க. அரசின் விரோத போக்கை எடுத்து கூறுவோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டு தலைவர்கள் கூடி பேசி முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் த.மா.கா.வும் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் இப்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
- அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
- இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்னும் 6 மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் களம் இறங்க முடிவு செய்துள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் பணி குறித்த ஆலோசனை கூட்டம் மற்றும் பூத் கமிட்டி கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, ராமசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு வார்டுகளுக்கும் பூத்து கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், வார்டு செயலாளர்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்கி தேர்தல் பணியாற்றுவது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் துர்திஷ்டவசமானது என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கை காட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க. அரசு தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை.
அ.தி.மு.க. கொண்டு வந்த பல்வேறு திட்டங்களையும் நிறுத்தி விட்டனர். மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, குப்பை வரி, பால் விலை உயர்வு என பல பொருட்கள் விலை உயர்ந்து விட்டன. இதை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள் என்றார்.
இதில் பகுதிச்செயலாளர் கேசவமூர்த்தி, ஜெயராஜ், மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன் ராஜா, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்கல் மாவட்ட இணை செயலாளர் மாதையன் உள்பட கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இதனால் அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.
- சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு சீசன் காலங்களில் சுமார் 3 முதல் 5 டன் வரை மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்படும்.
- தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மல்லிகைப்பூக்கள் செடியிலேயே கருகி வருகிறது. இதனால் பூ உற்பத்தி குறைந்து விட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பல்வேறு வகையான மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் அதிக அளவில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அதிகாலை நேரத்தில் விவசாயிகள் மல்லிகைப்பூக்களைபறித்து விற்பனைக்காக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவருவார்கள். அங்கு ஏலம் முறையில் பூக்கள் விற்பனை நடைபெறும்.
இந்த சந்தையில் மல்லிகைப்பூக்களை ஏலம் எடுக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள். மேலும் இந்த மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு சீசன் காலங்களில் சுமார் 3 முதல் 5 டன் வரை மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்படும். ஆனால் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மல்லிகைப்பூக்கள் செடியிலேயே கருகி வருகிறது. இதனால் பூ உற்பத்தி குறைந்து விட்டது.
இன்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு 450 கிலோ மட்டுமே மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்பட்டது. மேலும் தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் மல்லிகைப்பூக்கள் தேவை அதிகரித்து உள்ளது. பூக்கள் வரத்து குறைந்து தேவை அதிகரித்து உள்ளதால் இன்று நடந்த பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரு.4550-க்கு விற்பனை ஆனது. அதிக விலைக்கு பூ விற்பனையானாலும் வியாபாரிகள் போட்டி போட்டு மல்லிகைப் பூக்களை வாங்கி சென்றனர்.
- போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்சரக அலுவலகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவர் வழக்கம் போல் நேற்று வனச்சரக அலுவலகத்தில் இரவு நேர பணியில் இருந்தார்.
அப்போது சிவகிரி கருங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் முப்புடாதி குமார் (வயது 24) என்பவர் சிவகிரி வனச்சரக அலுவலகத்தின் உள்ளே புகுந்து பணியில் ஈடுபட்டிருந்த பாலசுப்பிரமணியனை சரமாரியாக தாக்கினார். அருகே இருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மணிகண்டன், மாரியப்பன் ஆகியோர் தடுத்து நிறுத்தி, சிவகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரரான முப்புடாதி குமாரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த மாதம் சிவகிரிக்கு மேற்கே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வடுவூத்து கன்னிமார் கோவிலுக்கு 12 பேர் வனத்துறை அனுமதியின்றி சென்றதாகவும், அவர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் விடுமுறையில் ஊருக்கு வந்த முப்புடாதி குமாரிடம் அபராதம் கட்டியவர்கள் புகார் தெரிவித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த முப்புடாதி குமார் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரோட்டோரம் நிறுத்தியிருந்த லாரியை கவனிக்காததால் மோட்டார் சைக்கிள் லாரியின் பின் பக்கத்தில் பலமாக மோதியது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இரவு நேரங்களில் வரும் கனரக வாகனங்கள் சத்தியமங்கலம்-பண்ணாரி சாலையில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டு காலை மீண்டும் தாளவாடி மலை பகுதிக்கு கர்நாடாகாவுக்கு புறப்பட்டு செல்லும்.
அதே போல் நேற்று இரவும் கர்நாடகாவுக்கு செல்ல ஒரு லாரி வந்தது. இரவு 9 மணி ஆனதால் டிரைவர் லாரியை சத்தியமங்கலம்-பண்ணாரி சாலை குய்யனூர் என்ற பகுதியில் ரோட்டோரம் நிறுத்தி இருந்தார். இரவு நேரம் என்பதால் லாரி நிற்பது தெரியவில்லை.
இந்த நிலையில் இரவு 1 மணியளவில் சத்தியமங்கலம் அடுத்த தோப்பூர் காலனியை சேர்ந்த நடராஜ் என்பவரது மகன் ரகுபதி (26), முருகன் என்பவரது மகன் சதீஷ்குமார் (24)ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் பண்ணாரி நோக்கி சென்றனர்.
அப்போது அவர்கள் ரோட்டோரம் நிறுத்தியிருந்த லாரியை கவனிக்காததால் மோட்டார் சைக்கிள் லாரியின் பின் பக்கத்தில் பலமாக மோதியது. இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ரகுபதி பலியானார். படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பலியானார்.
விபத்தில் பலியான ரகுபதி ஒரு தனியார் வங்கியில் ஊழியராகவும், சதீஷ்குமார் டிரைவராகவும் வேலைப்பார்த்து வந்தனர்.
இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சேட்டை செய்து வரும் குரங்குகள் அங்கிருந்து வெளியேறி மலைஅடிவார பகுதியில் சுற்றி திரிந்தது.
- சென்னிமலை கடை வீதிக்குள் நுழைந்து குரங்குகள் பழம், பன் உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில் மலைப்பகுதியில ஏராளமான குரங்குகள் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சேட்டை செய்து வரும் குரங்குகள் அங்கிருந்து வெளியேறி மலைஅடிவார பகுதியில் சுற்றி திரிந்தது.
அடிவாரப் பகுதியில் சுற்றி திரிந்த குரங்கு கூட்டம் கடந்த சில நாட்களாக அங்கிருந்து வெளியேறி சென்னிமலை நகருக்குள் நுழைந்து விட்டது. தினமும் குரங்கு கூட்டம் வீடுகளுக்கு படையெடுத்து வருகிறது.
வீடுகளின் ஜன்னல் திறந்து இருந்தால் உள்ளே நுழைந்து உணவுப் பொருட்களை எடுத்து சென்று விடுகிறது. மேலும் வெயிலில் காயவைக்கும் உணவுப் பொருட்களையும் எடுத்து சென்று விடுகிறது.
அதோடு இல்லாமல் சென்னிமலை கடை வீதிக்குள் நுழைந்து பழம், பன் உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறது. ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் சென்னிமலை நகருக்குள் குரங்கு கூட்டம் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து வனத்துறையினர் குரங்குகளை பிடித்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டனர். இந்த நிலையில் மீண்டும் தற்போது குரங்கு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உணவுப் பொருட்களை எடுத்து செல்லும் குரங்குகள் தாக்கி விடுமோ என்ற அச்சமும் உள்ளது. எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து இந்த குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






