search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மயக்க ஊசி செலுத்த வந்த மருத்துவ குழுவினரை விரட்டிய கருப்பன் யானை
    X
    கருப்பன் யானை தாக்கியதில் குடல் வெளியேறி உயிருக்கு போராடி வரும் பசு மாடு.

    மயக்க ஊசி செலுத்த வந்த மருத்துவ குழுவினரை விரட்டிய கருப்பன் யானை

    • கருப்பன் யானையை பிடிக்க அரிசி ராஜா முத்து, கபில்தேவ் மற்றும் கலீம் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
    • கருப்பன் யானை மல்குத்திபுரம் கிராமத்தில் சொன்னஞ்சப்பா என்பவர் வீட்டின் முன் கட்டி இருந்த பசுமாட்டை முட்டி தள்ளியது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அடுத்த ஜீரகள்ளி வனச்சரத்திக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை தினந்தோறும் வனத்தை ஒட்டி உள்ள கிராமத்துக்குள் புகுந்து வாழை, மக்காச்சோளம், கரும்பு, தென்னை பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

    இதையடுத்து விவசாயிகள் தினம் தோறும் இரவு நேரங்களில் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரவு காவலுக்கு சென்ற 2 விவசாயிகளை கருப்பன் யானை தாக்கிக் கொன்றது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுடன் விவசாயிகளை கொன்று அச்சுறுத்தும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து கருப்பன் யானையை பிடிக்க அரிசி ராஜா முத்து, கபில்தேவ் மற்றும் கலீம் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் 150 வனப்பணியாளர்கள் கருப்பன் யானையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    முதல்கட்டமாக நேற்று முன்தினம் இரவு மரியபுரம், ஜோரகாடு, மற்றும் ரங்கசாமி கோவில் வழிதடத்தில் வனத்துறையினர் 3 கும்கிகளுடன் விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானை வரவில்லை.

    இதையடுத்து நேற்று இரவு கருப்பன் யானை ஜோரகாடு பகுதிக்கு வராமல் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட மல்குத்திபுரம் பகுதியில் சுற்றியதை வனத்துறையினர் கண்டு பிடித்தனர். இதையடுத்து அங்கு சென்ற மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் கருப்பன் யானையை சுற்றி வளைத்தனர். ஆனால் கருப்பன் யானைக்கு மயக்கஊசி செலுத்த முடியவில்லை. மேலும் திடீரென கருப்பன் யானை மருத்துவகுழுவினரை துரத்தியது. இதில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

    அங்கிருந்து தப்பிய கருப்பன் யானை மல்குத்திபுரம் கிராமத்தில் சொன்னஞ்சப்பா என்பவர் வீட்டின் முன் கட்டி இருந்த பசுமாட்டை முட்டி தள்ளியது. இதில் மாட்டின் குடல் வெளியே வந்து உயிருக்கு போராடி வருகிறது. அதிகாலை சிக்கள்ளி வனப்பகுதிகுள் கருப்பன் யானை தப்பி சென்றது. விரைவில் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

    Next Story
    ×