என் மலர்tooltip icon

    ஈரோடு

    • முன்விரோதம் காரணமாக யாராவது சண்முகம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • கூலி தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சவுண்டப்பூர் கணபதிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (47) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இவர் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் ஒரு பாட்டிலில் இருந்த பெட்ரோல் சிதறி தீப்பிடித்து கருகியது. மற்றொரு பாட்டிலில் இருந்த பெட்ரோல் தீப்பிடிக்காமல் அப்படியே கிடந்தது.

    சத்தம் கேட்டு எழுந்த வந்த சண்முகம் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. நீலகண்டன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது முன்விரோதம் காரணமாக யாராவது சண்முகம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் எங்கேயாவது கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் போலீஸ் துப்பறியும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    கூலி தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முன்பு காவல் நிலையங்களில் உரிய அனுமதி பெற வேண்டும்.
    • அரசியல் கட்சியினர் கார்களில் கட்சி சின்னம் கொடிகளை பொருத்தக்கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சியினர் பங்கேற்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்துகொண்டு அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய விடுமுறைகள் குறித்து கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். வேறு உங்கள் தரப்பில் இடம் அடையாளம் காணப்பட்டு இருந்தால் அது குறித்தும் தகவல் தெரிவிக்கலாம்.

    பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முன்பு காவல் நிலையங்களில் உரிய அனுமதி பெற வேண்டும். பொதுக்கூட்டங்களில் யார்? யார்? வருவார்கள். எத்தனை பேர்? வருவார்கள். வாகன எண் போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் ஊர்வலம் நடத்துவதாக இருந்தால் எந்த பகுதியில் நடத்துகிறார்களோ அந்த பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். எந்த இடத்தில் ஊர்வலம் தொடங்கி எந்த வழியாக ஊர்வலம் வந்து நிறைவடைகிறது என்பது குறித்த விவரங்களையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

    அரசியல் கட்சியினர் கார்களில் கட்சி சின்னம் கொடிகளை பொருத்தக்கூடாது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும். கட்சிக்கொடிகளை அகற்றுவது, பதாகை, பேனர்களை முறையாக மூடாமல் இருப்பது இது போன்றது தொடர்பாக ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 3 வழக்குகள், சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 6 வழக்குகள், வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 3 வழக்குகள், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 5 வழக்குகள், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 8 வழக்குகள் என மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்பவர்கள் அதற்குரிய ஆவணங்கள் கையில் வைத்து இருக்க வேண்டும்.
    • எத்தனை வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்படுகிறதோ அதற்கு ஏற்ப துணை ராணுவத்தினர் வருவார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறுவதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். அவர்கள் சந்தேகங்களுக்கு தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி தெளிவாக விளக்கம் அளித்தார்.

    பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளது. அரசியல் கட்சியினருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களும் தெளிவுபடுத்தப்பட்டது.

    இதுவரை பறக்கும் படை மூலம் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் என்ன வலியுறுத்தியுள்ளதோ அதை நாங்கள் பின்பற்றி வருகிறோம். கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். கடந்த முறை கணக்கெடுப்பு படி 20 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கும். தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். பதற்றமான வாக்குசாவடிகளில் துணை ராணுவத்தினர் கண்காணிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும். தற்போது பதட்டமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இறுதியில் எத்தனை வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்படுகிறதோ அதற்கு ஏற்ப துணை ராணுவத்தினர் வருவார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்பவர்கள் அதற்குரிய ஆவணங்கள் கையில் வைத்து இருக்க வேண்டும். இல்லையென்றால் பறிமுதல் செய்யப்படும். கிழக்கு தொகுதி ஜவுளி வியாபாரிகள் அதிக அளவில் உள்ளனர். அவர்களுக்கு தனியாக கூட்டம் நடத்தி தேர்தல் நடத்தை விதிமுறை குறித்து தெளிவாக விளக்கி கூறப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது மக்கள் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே.
    • 1972 திண்டுக்கல் தேர்தல்போல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று அதிரடியாக அறிவிக்கப்பட்டார்.

    அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அ.தி.மு.க.வினர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை எதிர்கொள்ள இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே தேர்தல் பணிமனை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பூஜையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இங்கு நாங்கள் அமைதியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வோம். அதன் முன்னோட்டமாக ஏற்கனவே ஊழியர் கூட்டம் நடத்தப்பட்டது. இன்று தேர்தல் பணிமனை அமைப்பதற்கு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

    கூட்டணி கட்சிகளுடன் கலந்துபேசி போட்டியிட விரும்புவர்களிடமிருந்து விருப்பமனு பெற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவிக்க உள்ளார். மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்அ.தி.மு.க. உறுதியாக வெற்றி பெறும் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். 1972 திண்டுக்கல் தேர்தல்போல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும். தி.மு.க. தேர்தல் பணி குழுவில் அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பது வழக்கம் தான். நாங்களும் பணிகுழுஅமைத்து தேர்தல் பணியை துவக்குவோம். மக்கள் சரியாக இருக்கிறார்கள். மனம் மாறி இருக்கிறார்கள். அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பார்கள்.

    இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையுடன் போட்டியிட்டு வெற்றி பெறும். அ.தி.மு.க. வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு செங்கோட்டையன் கூறும்போது, ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கூறியிருப்பதற்கும் இரட்டை இலை சின்னம் தனக்குதான், இ.பி.எஸ். அணியுடன் பேச தயார் என்று அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

    இரண்டு அணிகளும் ஒருங்கிணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக பாஜக துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம் கூறியதற்கு அவர் மீண்டும் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட தலைவர், மாநில பொதுச்செயலாளர், தமிழக காங்கிரஸ் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.
    • ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதல்முறையாக கடந்த 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    இந்த இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அல்லது அவரது 2-வது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இடைத்தேர்தலில் தான் போட்டியிடவில்லை. தனது 2-வது மகன் சஞ்சய் சம்பத்துக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்தார்.

    இதனால் சஞ்சய் சம்பத் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தந்தை பெரியாரின் பேரன் ஆவார். இவர் பெரியாரின் அண்ணன் மகன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வி.கே.சம்பத்- சுலோச்சனா சம்பத்தின் மகன் ஆவார். 21.11.1948-ம் ஆண்டு பிறந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தற்போது 75 வயது ஆகிறது.

    இவர் ஆரம்ப கல்வியை ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் பயின்றார். பின்னர் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் படித்தார். தொடர்ந்து சென்னை மாநில கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.

    கல்லூரியில் படிக்கும்போதே காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி செயலாளராக இருந்தார். தொடர்ந்து ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஈரோடு மாவட்ட தலைவர், மாநில பொதுச்செயலாளர், தமிழக காங்கிரஸ் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதல்முறையாக கடந்த 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தொடர்ந்து 2004-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவுத்துறை இணை அமைச்சராகவும் தொடர்ந்து வணிகம் மற்றும் தொழில்கள் துறை இணை அமைச்சராகவும், ஜவுளி துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.

    2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருப்பூரிலும், 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட இளங்கோவன் அதற்கு பின்பு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடாமல் பாராளுமன்ற தேர்தலில் மட்டுமே போட்டியிட்டு வந்தார்.

    இந்த நிலையில் அவரது மகன் திருமகன் ஈ.வெ.ரா. மறைவின் காரணமாக 38 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் சட்டமன்ற தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனது மனதில் பட்டதை தைரியமாக சொல்லும் குணாதிசயம் படைத்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் இன்று முத்தமாளை கைது செய்தனர்.
    • மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் நாகராஜை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே மல்லன்குளி என்ற பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மற்றும் தாளவாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது தாளவாடியில் இருந்து கர்நாடகா நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து காரில் இருந்த நபரிடம் இது குறித்து விசாரித்த போது அவர் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் கோட்டப்பள்ளி, உப்பார்வீதியை சேர்ந்த உமேஷா (23) என்பதும், கூடுதல் விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்தி சென்றதை ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆம்னி கார் மற்றும் 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் இந்த ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த முத்தம்மாள் (35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    இந்நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் இன்று முத்தமாளை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் நாகராஜை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி சல்பாஸ் மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
    • இது குறித்து ேகாபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (62). இவரது மனைவி வெங்கட்டம்மாள். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி செத்து போய்விடலாம் என புலம்பி கொண்டே இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி வெங்கட்டம்மாள் அவருக்கு ஆறுதல் கூறிவந்துள்ளார்.

    சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்த கிருஷ்ணமூர்த்தி சல்பாஸ் மாத்திரை (விஷ மாத்திரை) தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ேகாபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் -அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இப்போதே களை கட்ட தொடங்கியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்து 15 நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாலும் ஈரோடு சட்டசபை தொகுதி ஒரே தொகுதியாக இருந்த போதும் கிழக்கு மேற்கு தொகுதியாக பிரிக்கப்பட்ட பிறகும் முதன் முதலாக இங்கு இடைதேர்தல் நடப்பதாலும் ஈரோடு மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மட்டும் அல்லாமல் பொது மக்களிடையேயும் ஏற்பட்டு உள்ளதால் இந்த தொகுதி மிகுந்த பரபரப்பையும் எதிர் பார்ப்பையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியின் வேண்டுகோளை ஏற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் கடந்த சட்டசபை தேர்தலை போல இந்த தொகுதியில் த.மா.கா. மீண்டும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் எதிர்பாரா விதமாக இந்த தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓ.பி.எஸ். அணியும் இந்த தொகுதியில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் -அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இப்போதே இரு கட்சியினரும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அரசியல் கட்சி அலுவலகங்கள் நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாத நிலையில் வெறிச்சோடி காணப்படும். ஆனால் இப்பொழுது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. -காங்கிரஸ், அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி அலுவலகங்கள் தினமும் பரபரப்பாக காணப்படுகிறது.

    மேலும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மட்டும் அல்லாமல் கூட்டணி கட்சிகளும் பூத் கமிட்டி அமைத்து அதற்கான நபர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி தொடர்பாக தி.மு.க. சார்பிலும் அ.தி.மு.க. சார்பிலும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டு பேசும்போது யார் வேட்பாளர்களாக நிற்கிறார்களோ அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.

    காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க கட்சிகளின் சார்பில் இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இருப்பினும் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் தி.மு.க. சார்பில் நேற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக முதல் கட்டமாக தேர்தல் பிரசாரம் தொடங்கியது.

    ஈரோடு பெரியார் நகரில் அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு ஆகியோர் நேற்று காலை வீதிவீதியாக வீடு, வீடாக நடந்து சென்று தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்காளர்களிடம் கேட்டனர்.

    இதையடுத்து ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்-அ.தி.மு.க. கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர்களை எப்படியும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. காங்கிரஸ் கட்சிகள் மற்றும் இல்லாமல் கூட்டணி கட்சியினரும் சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

    தேர்தலுக்கு இன்னும் 36 நாட்கள் மட்டுமே உள்ளதாலும் இன்னும் 8 நாட்களில் வேட்பு மனு தாக்கல் தொடங்க இருப்பதாலும் ஈரோடு கிழக்கு தொகுதி இப்போதே களை கட்ட தொடங்கியுள்ளது.

    • காரில் தனி அறையில் இருந்த ரூ.2 கோடி பணம் திருட்டு போய் இருப்பதாக விகாஸ் ராகுல் புகார் தெரிவித்திருந்தார்.
    • குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.க்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பவானி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் பர்கத்சிங் என்கிற மடப்பால். இவருடைய மகள் கோவையில் தங்கி உள்ளார். பர்கத்சிங்கிடம் டிரைவராக அதே பகுதியை சேர்ந்த விகாஸ் ராகுல் (32) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் கோவையில் உள்ள பர்கத்சிங்கின் மகளிடம் இருந்து ரூ.2 கோடியை வாங்கிக்கொண்டு சொகுசு காரில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் நோக்கி புறப்பட்டார்.

    இந்த கார் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலம் அருகே நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் காரை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் சுதாரித்து கொண்டு காரை விகாஸ் ராகுல் வேகமாக ஓட்ட முயன்றார். அப்போது மேலும் 2 பேர்கள் சேர்ந்து காரை தடுத்து நிறுத்தினர்.

    5 பேரும் சேர்ந்து விகாஸ் ராகுலை அடித்து உதைத்து உள்ளனர் . அவரை காரில் இருந்து தள்ளிவிட்ட அந்த கும்பல் காரையும் எடுத்து சென்று விட்டது.

    இது குறித்து விகாஸ் ராகுல் லட்சுமி நகரில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் சென்று புகார் செய்தார். இதனையடுத்து மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருக்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஈரோடு அடுத்த கங்காபுரம் தனியார் ஜவுளி பூங்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் நின்று கொண்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கார் விகாஸ் ராகுல் ஓட்டி வந்தது என்பதை உறுதி செய்தனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அமிர்தவர்ஷினி, ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    காரில் தனி அறையில் இருந்த ரூ.2 கோடி பணம் திருட்டு போய் இருப்பதாக விகாஸ் ராகுல் புகார் தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.க்கள் ஆனந்தகுமார், அமிர்தவர்ஷினி ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தனிப்படை போலீசார் சி.சி.டி.வி. கேமிராக்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் ஒரு தனிப்படை போலீசார் நெல்லை விரைந்துள்ளனர்.

    மற்றொரு தனிப்படை போலீசார் ஈரோடு, கோவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே ரூ.2 கோடி கொள்ளை போன பணம் கருப்பு பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மேலும் டிரைவர் விகாஸ் ராகுல் கொள்ளை தொடர்பாக முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்து வருவதால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.

    முதலில் 3 பேர் மட்டுமே காரை வழி மறித்ததாக கூறிய விகாஸ் ராகுல் பின்னர் 5 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்ததாக கூறினார். உண்மையிலேயே பணம் கொள்ளையடி க்கப்பட்டதா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவ்வாறு கொள்ளை போயிருந்தால் அந்த கொள்ளை சம்பவத்திற்கும் டிரைவர் விகாசுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒப்பந்த நிறுவனம் கோரிக்கைளை நிறைவேற்றாததால் நேற்றிரவு முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
    • இன்று 2-வது நாளாக தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள், காவலர்கள் உள்பட 132 ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இப்பணியாளா்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது.

    தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.707 வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ளது.

    ஆனால் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதியத்தை விட குறைவாக நாளொன்று க்கு ரூ.395 மட்டுமே ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருவதாக தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். போராட்டம் காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.

    தொழிலாளர் நல சட்டங்களின் படியான சட்டபூர்வமான பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

    ஆனால் ஒப்பந்த நிறுவனம் கோரிக்கைளை நிறைவேற்றாததால் நேற்றிரவு முதல் மீண்டும் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    இரவு முழுவதும் கடும் பனியை பொறுப்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.

    எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் காத்திருப்பு போரா ட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • வீட்டில் சிவக்குமார் வேட்டியால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.
    • இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்த பெரிய வேட்டுவபாளையம், அரிஜுன காலனி பகுதியை ேசர்ந்த சிவக்குமார் (வயது 26). இவர் பெருந்துறை பஞ்சாயத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு திருமணம் ஆகி அகல்யா என்ற மனைவியும், கோபிகாஸ்ரீ என்ற மகளும், ஸ்ரீவர்ஷன் என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் சிவக்குமாருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு ஏற்பட்டு அகல்யா குழந்தைகளுடன் அவரது அம்மாவிடான ஈரோடு கொல்லம்பாளையத்திற்கு சென்று விட்டார். அதில் இருந்து சிவக்குமார் சரியாக வேலைக்கு போகாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.

    இதனால் சிவக்குமார் தந்தையும், தாயும் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தினர். எனினும் சிவக்குமார் மனைவி மற்றும் குழந்தைகளை நினைத்து புலம்பி கொண்டிருந்தார்.

    மேலும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே சிவக்குமார் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவரது தந்தை மாலை கடைக்கு சென்றார். பின்னர் கடையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிவக்குமார் வேட்டியால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.

    உடனடியாக அவரது தந்தை சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிவகுமாரை கீழே இறக்ககினர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிவக்குமார் இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் இடைதேர்தலில் போட்டியிட உள்ளார்.
    • தேர்தலில் வெற்றி பெற்றால் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதை தடுப்பேன்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இடைத்தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் அதன் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் போட்டியிட உள்ளார்.

    இதுகுறித்து ஆறுமுகம் கூறும்போது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். இதற்காக பாட்டில் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். தேர்தலில் போட்டியிட வைப்பு தொகை கட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடையாக சென்று கடைக்கு வெளியே உள்ள காலி மதுபான பாட்டில்களை சேகரித்து வருகிறேன்.

    இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தேர்தலில் போட்டியிட வைப்புத் தொகைக்கு கட்ட முடிவு செய்துள்ளேன். மேலும் மது குடிக்க வரும் மது பிரியர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறேன்.

    தேர்தலில் வெற்றி பெற்றால் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதை தடுப்பேன். மேலும் மதுவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் விதவைப் பெண்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்க சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஆறுமுகம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலி மது பாட்டில்களை சேகரித்து வருகிறார்.

    ×