ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில் பெண் கைது

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் இன்று முத்தமாளை கைது செய்தனர்.மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் நாகராஜை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில் பெண் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே மல்லன்குளி என்ற பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மற்றும் தாளவாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது தாளவாடியில் இருந்து கர்நாடகா நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து காரில் இருந்த நபரிடம் இது குறித்து விசாரித்த போது அவர் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் கோட்டப்பள்ளி, உப்பார்வீதியை சேர்ந்த உமேஷா (23) என்பதும், கூடுதல் விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்தி சென்றதை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆம்னி கார் மற்றும் 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இந்த ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த முத்தம்மாள் (35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் இன்று முத்தமாளை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் நாகராஜை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com