search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A special force is"

    • காரில் தனி அறையில் இருந்த ரூ.2 கோடி பணம் திருட்டு போய் இருப்பதாக விகாஸ் ராகுல் புகார் தெரிவித்திருந்தார்.
    • குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.க்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பவானி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் பர்கத்சிங் என்கிற மடப்பால். இவருடைய மகள் கோவையில் தங்கி உள்ளார். பர்கத்சிங்கிடம் டிரைவராக அதே பகுதியை சேர்ந்த விகாஸ் ராகுல் (32) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் கோவையில் உள்ள பர்கத்சிங்கின் மகளிடம் இருந்து ரூ.2 கோடியை வாங்கிக்கொண்டு சொகுசு காரில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் நோக்கி புறப்பட்டார்.

    இந்த கார் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலம் அருகே நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் காரை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் சுதாரித்து கொண்டு காரை விகாஸ் ராகுல் வேகமாக ஓட்ட முயன்றார். அப்போது மேலும் 2 பேர்கள் சேர்ந்து காரை தடுத்து நிறுத்தினர்.

    5 பேரும் சேர்ந்து விகாஸ் ராகுலை அடித்து உதைத்து உள்ளனர் . அவரை காரில் இருந்து தள்ளிவிட்ட அந்த கும்பல் காரையும் எடுத்து சென்று விட்டது.

    இது குறித்து விகாஸ் ராகுல் லட்சுமி நகரில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் சென்று புகார் செய்தார். இதனையடுத்து மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருக்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஈரோடு அடுத்த கங்காபுரம் தனியார் ஜவுளி பூங்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் நின்று கொண்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கார் விகாஸ் ராகுல் ஓட்டி வந்தது என்பதை உறுதி செய்தனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அமிர்தவர்ஷினி, ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    காரில் தனி அறையில் இருந்த ரூ.2 கோடி பணம் திருட்டு போய் இருப்பதாக விகாஸ் ராகுல் புகார் தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.க்கள் ஆனந்தகுமார், அமிர்தவர்ஷினி ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தனிப்படை போலீசார் சி.சி.டி.வி. கேமிராக்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் ஒரு தனிப்படை போலீசார் நெல்லை விரைந்துள்ளனர்.

    மற்றொரு தனிப்படை போலீசார் ஈரோடு, கோவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே ரூ.2 கோடி கொள்ளை போன பணம் கருப்பு பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மேலும் டிரைவர் விகாஸ் ராகுல் கொள்ளை தொடர்பாக முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்து வருவதால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.

    முதலில் 3 பேர் மட்டுமே காரை வழி மறித்ததாக கூறிய விகாஸ் ராகுல் பின்னர் 5 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்ததாக கூறினார். உண்மையிலேயே பணம் கொள்ளையடி க்கப்பட்டதா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவ்வாறு கொள்ளை போயிருந்தால் அந்த கொள்ளை சம்பவத்திற்கும் டிரைவர் விகாசுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×