என் மலர்
ஈரோடு
- தைப்பூசத்தை முன்னிட்டு அஞ்சலகங்களில் பழனி கோவில் பிரசாத சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
- ஒருவர் எவ்வளவு பிரசாதங்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஈரோடு:
ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகர பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தைப்பூசத்தை முன்னிட்டு அஞ்சலகங்களில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பிரசாத சிறப்பு விற்பனை கடந்த 21-ந் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களான பொதுமக்கள் அஞ்சலகங்களுக்கு சென்று பணம் செலுத்தினால் பழனியில் இருந்து பிரசாதங்கள் வாடிக்கையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதற்கு கட்டணமாக ரூ.250 மட்டும் செலுத்த வேண்டும். ஒருவர் எவ்வளவு பிரசாதங்கள் வேண்டு மானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு பிரசாத பையில் பழனி பஞ்சாமிர்தம் 500 கிராம், பழனி தண்டாயுதபாணி படம் ஒன்று, விபூதி 10 கிராம் இருக்கும். இந்த சேவை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- பூனை ஒன்று எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி பூனையை உயிருடன் மீட்டனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் ரோடு மொண்டிப் புளியங்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 40). இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
இவரது வீட்டில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. சுமார் 80 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 10 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை இவர் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த பூனை ஒன்று எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது.
இதனையடுத்து சின்னச்சாமி உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
நிலைய அலுவலர் நவீந்தரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி பூனையை உயிருடன் மீட்டனர்.
- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரும் வழித்தடம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.
- ஓட்டு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் வந்து செல்ல கம்புகளால் சாரம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும்.
இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறை மற்றும் அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரும் வழித்தடம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் ஓட்டு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் வந்து செல்ல கம்புகளால் சாரம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
- தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார்.
- அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் 6 முனை போட்டி உருவாகும் வாய்ப்பு உள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார்.
இது தவிர அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளனர். மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவையும் போட்டியிடுகிறது. இதுவரை உள்ள நிலவரப்படி 6 முனை போட்டி உறுதியாகி உள்ளது.
இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 934 பேர். பெண்கள் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 987 பேர். 3-ம் பாலினத்தவர்கள் 15 பேர்.
2 லட்சம் வாக்காளர்களும் 6 முனை போட்டியை பார்க்க தயாராக இருக்கிறார்கள்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
- மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 150 ரூபாய் இருந்தது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் 3 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை நிலை கண்காணிப்பு குழுவினர் வெண்டிபாளையம் ரெயில்வே கேட்டு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 150 ரூபாய் இருந்தது.
அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் பெயர் கவின் (21)என்பதும் கரூரில் செயல்படும் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. பணத்திற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை.
இதனையடுத்து நிலை கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் அந்த வாலிபரிடம் தெரிவித்தனர்.
- ராசி வெற்றிலை என்பது மிகவும் மிருதுவாகவும், கரும்பச்சை நிறத்திலும் காணப்படும்.
- பீடா வெற்றிலை சற்று கடினமானதாகவும், வெளிர்பச்சை நிறத்திலும் இருக்கும்.
ஈரோடு :
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தையில் வாரம்தோறும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெற்றிலை விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு அந்தியூர், அத்தாணி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.
இங்கு ராசி வெற்றிலை, பீடா வெற்றிலை என தரம் வாரியாக வெற்றிலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ராசி வெற்றிலை என்பது மிகவும் மிருதுவாகவும், கரும்பச்சை நிறத்திலும் காணப்படும். இந்த வெற்றிலைகள் திருமண நிகழ்ச்சி, கோவிலில் சாமிக்கு படைப்பது போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
பீடா வெற்றிலை சற்று கடினமானதாகவும், வெளிர்பச்சை நிறத்திலும் இருக்கும். மேலும் இந்த வெற்றிலை காரத்தன்மை மிகுந்ததாக இருக்கும். இந்த வகை வெற்றிலை பீடா தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படும்.
வெற்றிலைகள் அனைத்தும் கட்டுகளாக விற்பனை செய்யப்படும். ஒரு கட்டில் 100 எண்ணிக்கையிலான வெற்றிலைகள் இருக்கும்.
அந்தியூர் வாரச்சந்தையில் நேற்று வழக்கம்போல் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. ராசி மற்றும் பீடா வகை வெற்றிலைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் ராசி வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.200-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.220-க்கும் விற்பனை ஆனது. அதாவது ராசி வெற்றிலை ஒன்று 2 ரூபாய் முதல் 2 ரூபாய் 20 காசு வரை விற்பனை செய்யப்பட்டது.
பீடா வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.70-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.80-க்கும் விற்கப்பட்டது. வெற்றிலை மொத்தம் ரூ.4 லட்சத்துக்கு விற்பனை ஆனது.
கடந்த 20-ந்தேதி ராசி வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.150-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.180-க்கும், பீடா வெற்றிலை குறைந்தபட்ச விலையாக ரூ.50-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 20-ந்தேதியை விட நேற்று ராசி மற்றும் பீடா வகை வெற்றிலை விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அந்தியூர் பகுதியை சேர்ந்த வெற்றிலை விவசாயிகள் கூறுகையில், 'பொதுவாக வெற்றிலை அதிக அளவில் விளைச்சலாகி வரும்போது ராசி வெற்றிலை கட்டு ஒன்று ரூ.50 முதல் 70 வரையும், பீடா வெற்றிலை ரூ.20 முதல் ரூ.40 வரையும் விற்பனை ஆகும். தற்போது பனிக்காலம் என்பதால் வெற்றிலை அதிக அளவில் வளராது. இதனால் சந்தைக்கு வெற்றிலை வரத்து குறைந்துவிட்டது. அதே வேளையில் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகள் போன்றவை இந்த மாதத்தில் அதிக அளவில் வருவதால் வெற்றிலைக்கான தேவை அதிகரித்து உள்ளது என்றனர்.
- நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது
- பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.42 அடியாக உள்ளது
ஈரோடு,
ஈரோடு, மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே அனைத்து வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து இரண்டாம் போக புஞ்சை பாசனத்திற்காக கீழ்ப்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.42 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 892 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்காலுக்கு 1800 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1100 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடியும் என மொத்தம் 3050 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.
- திடீரென மண் சரிந்து குழிக்குள் இருந்த இருவரையும் அமுக்கியது. மற்ற தொழிலாளர்கள் இருவரையும் போராடி மீட்டனர்
- வீரப்பன் சத்திரம் போலீசார் டையிங் மில் உரிமையாள ரான நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (51) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை நல்லாம்பட்டி ரைஸ் மில் புதூரை சேர்ந்தவர் மெய்ஞான–மூர்த்தி (21). கூலித் தொழிலாளி. இவர் ராசாம்பாளை யத்தில் ஒரு டையிங் மில்லில் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று மாலை மில்லில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. குழி தோண்டி குழாய் பதிக்கும் பணி நடந்தது. மெய்ஞானமூர்த்தி, ஈரோடு மாணிக்கம் பாளையம், சக்தி நகர் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த சதீஷ்(26) ஆகியோர் குழிக்குள் இறங்கி பணி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மண் சரிந்து குழிக்குள் இருந்த இருவரையும் அமுக்கியது. மற்ற தொழிலாளர்கள் இருவரையும் போராடி மீட்டனர். மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மெய்ஞானமூர்த்தி பரிதாப மாக இறந்தார். சதீஷ்க்கு காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வீரப்பன் சத்திரம் போலீசார் டையிங் மில் உரிமையாள ரான நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (51) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது
- நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்
பவானி,
பவானி கோவில்பாளையம் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது சேலம் மாவட்டம் எடப்பாடி கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் (33) பவானி காடப்பநல்லூர் பெரமாச்சிபாளையம் கவுரி சங்கர் (30) சேலம் மாவட்டம் எடப்பாடி பூ மணியனூர் தீபன் (28) பவானி சித்தார் சங்கரன் தோட்டம் குருபிரசாத் (25) ஆகியோர் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்.
- அவல்பூந்துறை குளத்தில் கடல் சார் ஆராய்ச்சியாளர்கள் படகு விடுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றதா ? என கடந்த 2 நாட்களாக ஆய்வு
- அவல்பூந்துறை குளத்தில் படகு இல்லத்தில் அனைத்து வசதிகள் சாத்தியமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்
மொடக்குறிச்சி,
மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறை குளத்தில் கடல் சார் ஆராய்ச்சியாளர்கள் படகு விடுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றதா ? என கடந்த 2 நாட்களாக ஆய்வு பணி மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறையில் 197 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்தை படகு இல்லமாக அமைக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை அடுத்து சுற்றுலாத் துறையின் சார்பில் ரூ.1.72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. படகு இல்லத்தில் பூங்கா, வரவேற்பு வளைவுகள், அலங்காரப் பணிகள், பயணிகளின் வசதிக்காக ஓய்வறை, குடிநீர் வசதி, குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய படகு இல்லம் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் படகு இல்லம் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால் படகு விடுவதற்கான சூழ்நிலை இல்லாததால் குளத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அதன்படி குளத்தில் தண்ணீர் வற்றிய நிலையில் குளத்தைச் சுற்றிலும் ஆங்காங்கே ஆழப்படுத்தும் பணி நடந்தது. பல இடங்களில் மண் எடுக்கப்பட்டு சமநிலைப்படுத்தும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில் தற்போது அவல்பூந்துறை குளம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆனால் படகு விட முடியாமல் இருந்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மற்றும் கூடுதல் கலெக்டர் மதுபாலன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கடந்த மாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் படகு விடுவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்காக கோவாவில் இருந்து கடல் சார் ஆராய்ச்சியாளர்கள் ராமசாமி, சிவசங்கர் ராவ் ஆகியோர் வரவழைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக ஆய்வுப் பணிகள் மேற்கொண்டனர்.
இதில் அவல்பூந்துறை குளத்தின் கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள், நீரோட்ட அமைப்பு உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொண்டனர். தொடர்ந்து நேற்று குளம் முழுவதும் வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு உள்ளிட்ட நீர் நிலை பகுதிகளில் நவீன கருவிகள் மூலம் எந்தெந்த பகுதியில் ஆழம் மற்றும் திட்டுகள் உள்ளன என்பது குறித்து குளத்தில் விசைப்படகு மூலம் நீர் நிலைகளுக்குள் சென்று ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து படகு சவாரி செய்வதற்கான வசதிகள் மற்றும் சாத்திய கூறுகள் உள்ளதா? என மிக துல்லியமாக ஆய்வு செய்தனர். இறுதி தகவலின் படி அவல்பூந்துறை குளத்தில் படகு இல்லத்தில் அனைத்து வசதிகள் சாத்தியமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு பணிகள் குளத்தில் இருப்பதால் இந்தப் பணிகள் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு விரைவில் அவல்பூந்துறை குளத்தில் படகு சவாரி விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது மொடக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் கணபதி, குளூர் ஊராட்சி தலைவர் செல்வராஜ், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத் தேர் திருவிழா வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- சென்னிமலையில் முருகப்பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். 10 –-ந் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் 15 நாள் தைப்பூச தேர் பெருவிழா நிறைவடைகிறது
சென்னிமலை,
சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத் தேர் திருவிழா வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சென்னிமலை மலைக்கு மேல் உள்ள சுப்பிரமணிய சாமி, வள்ளி, தெய்வானைக்கு ஆண்டுதோறும் தைப்பூச தேர் பெருவிழா 15 நாட்கள் நடக்கும். பழனி முருகன் கோவிலில் எப்படி பங்குனி உத்திர தேர்திருவிழா சிறப்போ அதே போல் ஆதி பழனி என அழைக்கப்படும் சென்னிமலை முருகன் கோவிலில் தை பூச தேர்திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வருகிற 27-ந் தேதி காலை கணபதி ஹோமமும், இரவு கிராமசாந்தியும் நடக்கிறது. 28-ந் தேதி சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. இரவு பல்லக்கு சேவையும், 29-ந் தேதி இரவு பல்லக்கு சேவை நடக்கிறது. 30-ந் தேதி இரவு 8 மணிக்கு மயில் வாகனக்காட்சியும், பிப். 1 -ந் இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடும், வெள்ளிமயில் வாகனக்காட்சியும் நடக்கிறது.
2-ந் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா நடக்கிறது. 3– -ந் தேதி மாலை 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக்காட்சியும், இரவு 8 மணிக்கு காமதேனு வாகனக்காட்சியும், நடக்கிறது. 4-ந் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமிக்கு வசந்த திருக்கல்யாணமும் நடக்கிறது.
5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும், காலை 6.30 மணிக்குள் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.
6-ந் தேதி மாலை 5 மணிக்கு தேர் நிலை வந்தடைகிறது. 7–-ந் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை குதிரை வாகனக்காட்சியும், 8–-ந் தேதி வியாழக்கிழமை இரவு 7 தெப்போற்சவமும், பூத வாகன காட்சியும் நடக்கிறது.
9 –-ந் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை வள்ளி தெய்வானை சமதே முத்து குமாரசாமிக்கு மகா அபிேஷகம் நடக்கிறது.
இரவு 8 மணிக்கு மகாதரிசனம் அன்று நடராஜப் பெருமான் வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணிய சாமி வள்ளி, தெய்வானை உடன் எழுந்தருளி வெள்ளிமயில் வாகனத்திலும், பஞ்சமூர்த்தி திருவீதி உலா அதிகாலை 5 மணி வரை நடக்கிறது.
அன்று சென்னிமலையில் முருகப்பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். 10 –-ந் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் 15 நாள் தைப்பூச தேர் பெருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தக்கார் அன்னகொடி, கோவில் செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர் ரவிக்குமார், அலுவலர்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- உயிருக்கு போராடிய தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தினேஷ்குமார் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்
ஈரோடு,
ஈரோடு மாநகர் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையிலிருந்து பெருந்துறை சாலை வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன் பகுதி வரையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார்(20). இவர் ஈரோடு பழைய பாளையத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் காலையில் மோட்டார் சைக்கிளில் தினேஷ்குமார் வருவது வழக்கம். இதேப்போல் மீண்டும் இரவில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு செல்வார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிபாளையத்தில் இருந்து தினேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வேலை பார்க்கும் கடைக்கு சென்று கொண்டிருந்தார். ஈரோட்டில் உள்ள மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதினார். இதில் அவர் தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்தில் இருந்து 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார்.
இதில் தினேஷ்குமார் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். தினேஷ்குமார் மேம்பாலத்தில் இருந்து கீழே சவிதா சிக்னல் அருகே இடது புறத்தில் விழுந்தார். அந்த சமயம் பள்ளிகளுக்கு தங்களது பிள்ளைகளை அழைத்து சென்ற பெற்றோர் மற்றும் வாகன ஓட்டிகள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்கு போராடிய தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தினேஷ்குமார் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தினேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தாரா ? அல்லது பின்பகுதியில் வந்த வாகனம் இடித்து தள்ளியதில் அவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






