என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் சார்"

    • அவல்பூந்துறை குளத்தில் கடல் சார் ஆராய்ச்சியாளர்கள் படகு விடுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றதா ? என கடந்த 2 நாட்களாக ஆய்வு
    • அவல்பூந்துறை குளத்தில் படகு இல்லத்தில் அனைத்து வசதிகள் சாத்தியமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்

    மொடக்குறிச்சி,

    மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறை குளத்தில் கடல் சார் ஆராய்ச்சியாளர்கள் படகு விடுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றதா ? என கடந்த 2 நாட்களாக ஆய்வு பணி மேற்கொண்டனர்.

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறையில் 197 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்தை படகு இல்லமாக அமைக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை அடுத்து சுற்றுலாத் துறையின் சார்பில் ரூ.1.72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. படகு இல்லத்தில் பூங்கா, வரவேற்பு வளைவுகள், அலங்காரப் பணிகள், பயணிகளின் வசதிக்காக ஓய்வறை, குடிநீர் வசதி, குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய படகு இல்லம் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் படகு இல்லம் திறந்து வைக்கப்பட்டது.

    ஆனால் படகு விடுவதற்கான சூழ்நிலை இல்லாததால் குளத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அதன்படி குளத்தில் தண்ணீர் வற்றிய நிலையில் குளத்தைச் சுற்றிலும் ஆங்காங்கே ஆழப்படுத்தும் பணி நடந்தது. பல இடங்களில் மண் எடுக்கப்பட்டு சமநிலைப்படுத்தும் பணி நடைபெற்றது.

    இந்த நிலையில் தற்போது அவல்பூந்துறை குளம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆனால் படகு விட முடியாமல் இருந்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மற்றும் கூடுதல் கலெக்டர் மதுபாலன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கடந்த மாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் படகு விடுவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்காக கோவாவில் இருந்து கடல் சார் ஆராய்ச்சியாளர்கள் ராமசாமி, சிவசங்கர் ராவ் ஆகியோர் வரவழைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக ஆய்வுப் பணிகள் மேற்கொண்டனர்.

    இதில் அவல்பூந்துறை குளத்தின் கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள், நீரோட்ட அமைப்பு உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொண்டனர். தொடர்ந்து நேற்று குளம் முழுவதும் வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு உள்ளிட்ட நீர் நிலை பகுதிகளில் நவீன கருவிகள் மூலம் எந்தெந்த பகுதியில் ஆழம் மற்றும் திட்டுகள் உள்ளன என்பது குறித்து குளத்தில் விசைப்படகு மூலம் நீர் நிலைகளுக்குள் சென்று ஆய்வு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து படகு சவாரி செய்வதற்கான வசதிகள் மற்றும் சாத்திய கூறுகள் உள்ளதா? என மிக துல்லியமாக ஆய்வு செய்தனர். இறுதி தகவலின் படி அவல்பூந்துறை குளத்தில் படகு இல்லத்தில் அனைத்து வசதிகள் சாத்தியமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் பல்வேறு பணிகள் குளத்தில் இருப்பதால் இந்தப் பணிகள் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு விரைவில் அவல்பூந்துறை குளத்தில் படகு சவாரி விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின்போது மொடக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் கணபதி, குளூர் ஊராட்சி தலைவர் செல்வராஜ், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×