என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேட்பாளர்கள் அறிவிக்கும் முன்பே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது
    X

    வேட்பாளர்கள் அறிவிக்கும் முன்பே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் -அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இப்போதே களை கட்ட தொடங்கியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்து 15 நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாலும் ஈரோடு சட்டசபை தொகுதி ஒரே தொகுதியாக இருந்த போதும் கிழக்கு மேற்கு தொகுதியாக பிரிக்கப்பட்ட பிறகும் முதன் முதலாக இங்கு இடைதேர்தல் நடப்பதாலும் ஈரோடு மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மட்டும் அல்லாமல் பொது மக்களிடையேயும் ஏற்பட்டு உள்ளதால் இந்த தொகுதி மிகுந்த பரபரப்பையும் எதிர் பார்ப்பையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியின் வேண்டுகோளை ஏற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் கடந்த சட்டசபை தேர்தலை போல இந்த தொகுதியில் த.மா.கா. மீண்டும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் எதிர்பாரா விதமாக இந்த தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓ.பி.எஸ். அணியும் இந்த தொகுதியில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் -அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இப்போதே இரு கட்சியினரும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அரசியல் கட்சி அலுவலகங்கள் நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாத நிலையில் வெறிச்சோடி காணப்படும். ஆனால் இப்பொழுது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. -காங்கிரஸ், அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி அலுவலகங்கள் தினமும் பரபரப்பாக காணப்படுகிறது.

    மேலும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மட்டும் அல்லாமல் கூட்டணி கட்சிகளும் பூத் கமிட்டி அமைத்து அதற்கான நபர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி தொடர்பாக தி.மு.க. சார்பிலும் அ.தி.மு.க. சார்பிலும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டு பேசும்போது யார் வேட்பாளர்களாக நிற்கிறார்களோ அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.

    காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க கட்சிகளின் சார்பில் இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இருப்பினும் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் தி.மு.க. சார்பில் நேற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக முதல் கட்டமாக தேர்தல் பிரசாரம் தொடங்கியது.

    ஈரோடு பெரியார் நகரில் அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு ஆகியோர் நேற்று காலை வீதிவீதியாக வீடு, வீடாக நடந்து சென்று தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்காளர்களிடம் கேட்டனர்.

    இதையடுத்து ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்-அ.தி.மு.க. கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர்களை எப்படியும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. காங்கிரஸ் கட்சிகள் மற்றும் இல்லாமல் கூட்டணி கட்சியினரும் சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

    தேர்தலுக்கு இன்னும் 36 நாட்கள் மட்டுமே உள்ளதாலும் இன்னும் 8 நாட்களில் வேட்பு மனு தாக்கல் தொடங்க இருப்பதாலும் ஈரோடு கிழக்கு தொகுதி இப்போதே களை கட்ட தொடங்கியுள்ளது.

    Next Story
    ×