என் மலர்
ஈரோடு
- எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து இன்று காலை ஈரோடுக்கு வந்தார்.
- பவானி நசியனூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி வழிப்பாடு செய்தார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.
மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போல் தே.மு.தி.க.வும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்து உள்ளது.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்து உள்ளது. சமத்துவ மக்கள் கட்சி, பா.ம.க. ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்து விட்டனர்.
மேலும் டி.டி.வி. தினகரனும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளார். இதே போல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி அறிவித்தார். அதே போல் ஓ.பி.எஸ்.சும் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்து உள்ளார்.
இதையடுத்து முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து இன்று காலை ஈரோடுக்கு வந்தார். பவானி நசியனூரில் உள்ள அவரது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிப்பாடு செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள ரெஸ்டாரண்டுக்கு வந்தார்.
அங்கு ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயகுமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, பகுதி செயலாளர்கள் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் பூத் கமிட்டி, தேர்தல் வெற்றி வியூகங்கள், பிரசார யுக்தி குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.
இதற்கிடையே நாளை அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளை தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
- தற்போது 2-வது முறையாக நிலை கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் 3 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு நிலை கண்காணிப்பு குழுவினர் எல்லை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர்.
அப்போது ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் ரொக்க பணம் இருந்தது. நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த அணில் லகோதி (36) என்பதும், அதே பகுதியில் பிளாஸ்டிக் கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது. வியாபாரியான இவர் கடையில் வசூலான தொகையை கொண்டு வந்தபோது நிலை கண்காணிப்பு குழுவினரிடம் சிக்கியது தெரிய வந்தது.
இந்த பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் பணத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்து மாநகராட்சியில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு வந்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த பணத்திற்குரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு அதிகாரிகள் அணில் லக்கோதிடம் அறிவுறுத்தினர்.
ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது 2-வது முறையாக நிலை கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
- வாக்களிக்க வசதியாக 1,400 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் 52 இடங்களில் அமைக்கப்பட உள்ளது.
- வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த 5-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளா்கள் உள்ளனா்.
இவர்கள் வாக்களிக்க வசதியாக 1,400 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் 52 இடங்களில் அமைக்கப்பட உள்ளது.
வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது. மார்ச் 2-ந் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று அன்று மதியத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்த இடைத்தேர்தல் பணியில் ஈரோடு கிழக்கு தொகுதியை தவிர்த்து பிற தொகுதியான பவானி, பெருந்துறை, கோபி பகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதோர் என 550 பேர் ஈடுபட உள்ளனர்.
இதற்கான பட்டியல் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் வாக்குச்சவாடி அலுவலர் நிலை 1, நிலை 2 என்ற பொறுப்பில் ஈடுபடுவார்கள் எனவும், இவர்களுக்கான வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் பணி குறித்து பயிற்சி 3 நிலைகளில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாம் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
- வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக மக்களுக்காக உழைப்பேன்.
ஈரோடு :
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை ஈரோடு பெருந்துறைரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று நடந்த இதன் திறப்பு விழாவில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி, அழகிரி ஆகியோருக்கும், என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் அதிக பாசத்தை பொழிந்து வரும், தமிழ் மக்களின் காவலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் பெயர் அறிவிப்புக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு எதையும் எதிர்பாராமல் பிரசாரத்தை தி.மு.க.வினர் ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் என்ற வேறுபாடுகள் கிடையாது. எல்லோரும் மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்கள்.
இந்த தேர்தலில் மதச்சார்பற்ற அணியின் வேட்பாளராக போட்டியிடும் போது, தனிப்பட்ட முறையில் துக்கம் அதிகமாக இருந்தாலும் எனது மகன் விட்டுச்சென்ற பணிகளை தொடா்ந்து செய்ய வேண்டும் என்ற ஆவலில் தான் ஒப்புக்கொண்டேன்.
தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு, தமிழ் கலாசாரத்துக்கு காவலனாக போர் வீரராக காத்து கொண்டு இருப்பவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது கரத்தை பலப்படுத்தும் வகையில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும்கூட, நாம் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதுதான் மு.க.ஸ்டாலினுக்கும், ராகுல்காந்திக்கும் சூட்டுகின்ற மகுடமாக இருக்கும்.
எனது மகனைபோல், எனது தந்தையைபோல், எனது தாத்தா பெரியாரைபோல், வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக மக்களுக்காக உழைப்பேன்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
- மனமுடைந்த மணி அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை டவுன், அம்மாபாளையம் செங்கோட கவுண்டர் வீதியில் வசிப்பவர் மணி (வயது 35). இவர் சென்னிமலை-அரச்சலூர் ரோட்டில் அண்ணமார் தியேட்டர் அருகே இறைச்சிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இங்கு வந்து தங்கி கறிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி உள்ளார். ஆனால் மனைவியுடன் வாழாமல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
பின்னர் ஊட்டியை சேர்ந்த திவ்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் திவ்யாவுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக அவர் ஊருக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த மணி அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணி உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மைதிலி தேவி தான் வீட்டை விட்டு செல்வ தாக வாய்ஸ் மெசேஜ் மூலம் தகவல் அனுப்பினார்.
- இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்த சீனாபுரம், வீரணம்பாளை யம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி. இவரது மனைவி மைதிலி தேவி (வயது 39). இவர்கள் சொந்த மாக வீரணம் பாளையம் பகுதியில் தறி போட்டு தொழில் செய்து வருகின்ற னர்.
இவர்களுக்கு வெற்றி என்ற மகனும், நிவேந்திரா என்ற மகளும் உள்ளனர். வெற்றி கருக்குபாளையம் பகுதியில் உள்ள தனது தாத்தா செல்வராஜ் வீட்டில் தங்கி துடுப்பதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரு கிறார்.
இந்த நிலையில் வெற்றியின் செல்போனுக்கு அவரது தாய் மைதிலி தேவி தான் வீட்டை விட்டு செல்வ தாக வாய்ஸ் மெசேஜ் மூலம் தகவல் அனுப்பினார். இதை யடுத்து வெற்றி மற்றும் அவரது தாத்தா செல்வராஜ் ஆகியோர் உடனடியாக வீரணம் பாளையம் வந்து பார்த்தனர்.
அங்கு மைதிலி தேவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை அக்கம், பக்கம் மற்றும் உற வினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து மாயமான மைதிலி தேவியை தேடி வருகிறார்கள்.
- படுக்கையறையில் தமிழழகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் கருவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பார்வதி. இவர்களது மகன் தமிழழகன் (வயது29). இவர் ஊஞ்சலூரில் உள்ள தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
தமிழழகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தீராத வயிற்று வலி காரணத்தால் கடந்த 3 மாத காலமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் மற்றும் பார்வதி வேலைக்கு சென்றனர். வீட்டில் தமிழழகன் மட்டும் இருந்துள்ளார். இதனையடுத்து படுக்கையறையில் தமிழழகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் தந்தை ஆறுமுகம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது தமிழழகன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கி கொண்டிருந்த தமிழழகனை கீழே இறக்கி பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தமிழழகன் உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.
- இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு வழியில் ஆத்தி விநாயகர் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள வனப் பகுதியில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.
இதை கண்ட அப்பகுதி தொழிலாளர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த வாலிபரின் அருகே செல்போன் ஒன்று இருந்துள்ளது. ஆனால் அது சுவிட்ச் ஆப் ஆன நிலையில் இருந்தது. இதையடுத்து போலீசார் அதை கைப்பற்றி சார்ஜ் செய்து அதில் உள்ள நம்பரை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர்.
இதில் அவர் பண்ருட்டியை சேர்ந்த ஜெயக்குமார் (19) என்பதும், அவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் படித்து வந்ததும் தெரிய வந்தது. ஆனால் அவர் எப்படி சென்னிமலைக்கு வந்தார். எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வில்லை.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
- வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஈரோடு:
இந்தியாவின் 74 -வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பை தீவரப்படுத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலும் குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பஸ் நிலையம், ஜி. எச். ரவுண்டானா, கருங்கல்பாளையம், காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பார்க் உள்பட மாநகர் பகுதி முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதே போல் கோபி, அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், பெருந்துறை உள்பட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுபோல் ஈரோடு ரெயில் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
ரெயில் நிலையம் நுழைவாயிலில் பயணிகள் உடமைகள் தீவிர பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு பயணிகள் உடமை பரிசோதிக்கப்படுகிறது.
சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை நடத்துகின்றனர். அவர்கள் பெயர், முகவரி, செல்போன் எண்களை வாங்கிக் கொண்டு அனுப்பி விடுகின்றனர்.
இதுபோல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ெரயில்களையும் ெரயில்வே போலீசார், பாதுகாப்பு படை போலீசார் ஒன்றிணைந்து தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
ரெயில் நிலையங்களில் கேட்பாராற்று கிடக்கும் பொருட்கள் இருந்தால் அதனை தொட வேண்டாம். அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
குடியரசு தின விழாவையொட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நாளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
பின்னர் சிறப்பாக பணியாற்றிய போலீசார் அலுவலர்களை பாராட்டி பதக்கம், சான்றிதழ் வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து தியாகிகளை கவுரவப்படுத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்கிறார்கள்.
- ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
- கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை காலை 11 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.
கிராமசபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2022 முதல் 31.12.2022 முடிய) குறித்து விவாதித்தல், கிராமஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட 2022-23-ம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தினை டிசம்பர் 31-ந் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதித்தல் மற்றும் இத்திட்டத்தில் சாத்தியமான பணிகள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல்,
தற்போது உள்ள பணி தொகுப்பின் முன்னேற்றத்தினை பகிர்ந்து கொள்ளுதல், 2022-23-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்றநிலை குறித்து விவாதித்தல், 2023-24-ம் ஆண்டில் புதிதாக தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகள் மற்றும் வேலை வழங்குவதற்கான தொழிலாளர் மதிப்பீடு இறுதி செய்தல் குறித்து விவாதித்தல்,
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடுகணக்கெடுப்பு பணி, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து விளக்குதல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும்.
அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராமசபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு வட்டாரஅளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சிஅளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- வீட்டில் வைத்திருந்த எலிபேஸ்ட்டை சண்முகம் சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார்.
- இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி மேற்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (56). டெய்லர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் தனது மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் வீட்டில் வைத்திருந்த எலிபேஸ்ட்டை (விஷம்) சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார்.
உடனடியாக அவரை கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திடீரென கருப்பு தோட்டத்தில் தீப்பிடித்து கரும்புகள் எரிந்து கொண்டு இருந்தன.
- தீயணைப்பு வீரர்கள் உடனே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அடுத்த அய்யகவுண்டன் பாளையம் அருகே உள்ள சாணங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அன்னக்கொடி (47). விவசாயி. இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில் திடீரென கருப்பு தோட்டத்தில் தீப்பிடித்து கரும்புகள் எரிந்து கொண்டு இருந்தன. இதனைக்கண்ட அன்னக்கொடி பதறி அடித்து அக்கம் பக்கத்தினரை அழைத்து சத்தமிட்டார்.
அதற்குள் தீ மள மள கரும்புத் தோட்டத்தில் பரவியது. தீப்பிடித்த சம்பவம் குறித்து உடனே அப்பகுதி பொதுமக்கள் மொடக்குறிச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் லெமர் தம்பையா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கரும்பு தோட்டத்திற்கு மேல் சென்ற மின் கம்பிகள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் தீயில் 3½ ஏக்கர் கரும்பு எரிந்து சேதமானதுடன் தண்ணீர் பைப்புகளும் தீயில் கருகி போனது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.






