என் மலர்
ஈரோடு
- பள்ளிகளில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
- சிறப்பு காய்ச்சல் முகாமில் இதுவரை 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இன்ப்ளுயன்சா எச்.3 என்.2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக வரும் மக்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
உடல் வலி, தொண்டை வலி, இரும்பல், வயிற்றுப்போக்கு, சளி , காய்ச்சல், வாந்தி போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறியாக உள்ளது.
இந்த காய்ச்சல் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்களை அதிக அளவில் தாக்கி வருகிறது.
இந்த காய்ச்சலை கட்டுப்படுத்திடவும், பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 10-ந் தேதி முதல் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 இடங்கள் வீதம் மாவட்டம் முழுவதும் 45 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்து வருகிறது.
ஈரோடு மாநகர பகுதியில் புதுமை காலனி மற்றும் வளையகார வீதி பகுதியில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்து வருகிறது. முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதனை செய்தனர்.
குறிப்பாக முதியவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் சளி, காய்ச்சல் இருந்தால் அதற்கு உண்டான மாத்திரை வழங்கப்பட்டது. காய்ச்சல் அதிக அளவில் இருந்தால் அவர்கள் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இதேப்போல் பள்ளிகளில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு காய்ச்சல் முகாம்களில் தினமும் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் மக்கள் சிறப்பு காய்ச்சல் முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் சிறப்பு காய்ச்சல் முகாமில் இதுவரை 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான காய்ச்சல் தான் உள்ளது. அதனால் அதற்குண்டான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு விட்டது.
ஒரு சிலர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்கிய சிகிச்சை பெற்று குணமடைந்து சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர காய்ச்சல் அதிகம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
- கோவிந்தனை கையும் களவுமாக பிடித்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
- போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே ஊமரெட்டியூர் மாரியம்மன் கோவில் பின்புறம் வசிப்பவர் ரேவதி வயது (50).
இவர் சம்பவத்தன்று இரவு வீட்டு வராண்டாவில் சமையல் செய்து விட்டு கியாஸ் சிலிண்டரையும், அடுப்பையும் அப்படியே விட்டு விட்டு இரவு தூங்கச்சென்று விட்டார்.
பின்னர் காலை எழுந்து வெளியே சமையல் செய்வதற்காக வந்து பார்த்தபொழுது சிலிண்டரும், அடுப்பும் காணவில்லை. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசில் ரேவதி புகார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ரேவதியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் லைலா என்பவர் கியாஸ் சிலிண்டரும், அடுப்பும் எனது வீட்டில் இருக்கிறது.
இதனை எனது வீட்டிற்கு அடிக்கடி வரும் ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தை சேர்ந்த கோவிந்தன் (21) என்பவர் இங்கு வைத்து விட்டு சென்றுள்ளார் என ரேவதியிடம் லைலா கூறியுள்ளார்.
உடனடியாக கோவிந்தனை லைலா தனது வீட்டுக்கு வரும்படி நைசாக பேசி வரவழைத்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு வந்த கோவிந்தனை கையும் களவுமாக பிடித்து லைலாவும், ரேவதியும் அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து போலீசார் கோவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
- பொலவக்காளிபாளையம் கிராமத்தில் வேளாண்மை கிராமியக் கலைநிகழ்ச்சி நடை பெற்றது.
- விவசாயிகளும் வேளாண் துறை சார்ந்த அனைத்து விவரங்களையும் பெற்று பயனடைவார்கள்.
கோபி:
கோபி செட்டிபாளையம் வட்டாரத்தில் வேளா ண்மை உழவர் நலத்துறை மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பொலவக்காளி பாளையம் கிராமத்தில் வேளாண்மை கிராமியக் கலைநிகழ்ச்சி நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியை கோபி செட்டிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசினார்.
அப்போது வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள், வேளாண் இடு பொருட்கள், வேளாண் உபகரணங்களின் மானிய விவரங்கள் மற்றும் பல நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த செய்திகளை தெருமுனை கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மூலம் அனைத்து விவசாயிகள், பொதுமக்களுக்கு தெரிய படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதனால் கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் வேளாண் துறை சார்ந்த அனைத்து விவரங்களையும் பெற்று பயனடைவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மானிய நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு உள்ளது.
- மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்திற்கு வணிக விரிவாக்க மானிய நிதியாக கலெக்டர் கிருஷ்ண னுண்ணி ரூ.10 லட்சத்துக் கான காசோலையை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு மற்றும் உலக வங்கி நிதி உதவியுடன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் கிராம பகுதிகளில் வறுமை ஒழிப்பையும் தாண்டி தொழில் நிறு வனங்களை உருவாக்குதல்,
நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி தருதல் மூலமாக நிரந்தர வளர்ச்சி மற்றும் வளமான வாழ்வு பெற்று கிராமபுற மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துதலை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பவானி, பவானிசாகர், சென்னிமலை, சத்திய மங்கலம் மற்றும் தாளவாடி வட்டாரங்களில் 77 ஊராட்சி களில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்திற்கு வணிக விரிவாக்க மானிய நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் தாமோதரன், செயல் அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார அணி த்தலைவர்கள், திட்ட நிர்வாகிகள், நிறுவன இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.
- மொத்த தேங்காய்கள் ரூ.33,181-க்கு விற்பனையானது.
சென்னிமலை:
சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.
மொத்தம் 3,280 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக ரூ.24.54 முதல் ரூ.25.52 வரை விலை போனது.
சராசரி விலை ரூ.25.29-க்கு விற்பனையானது.
மொத்தம், 1,366 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.33,181-க்கு விற்பனையானது.
- குண்டம் தேர் திருவிழா பூச்சாட்டுதலுடன் நாளை தொடங்குகிறது.
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் விமரிசையாக குண்டம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு குண்டம் தேர் திருவிழா பூச்சாட்டுதலுடன் நாளை (16-ந் தேதி) தொடங்குகிறது. தொடர்ந்து 22-ந் தேதி மகிஷாசூர மர்தனமும், 28-ந் தேதி கிராமசாந்தியும், 29-ந் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்றைய தினத்தில் இருந்து தினமும் அம்மன் ஒவ்வெரு வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 5-ந் தேதி குண்டம் திருவிழாவும், 7-ந் தேர் திருவிழா தொடங்கி 10-ந் தேதி வரை தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை வந்து அடையும்.
தொடர்ந்து 11-ந் தேதி பரிவேட்டையும், 12-ந் தேதி வசந்தோற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- சென்னிமலை பகுதியில் 3 இடங்களில் தீப்பிடித்த சம்பவங்கள் நடந்துள்ளது.
- இலை, தழைகளை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலம் தொடங்கு வதற்கு முன்பே வெயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் மாவட்ட த்தில் உள்ள வனப்பகுதி மற்றும் தோட்டங்களில் உள்ள மரம், செடி காய்ந்து வருகிறது. கடும் வெயிலின் தாக்கத்தால் ஒரு சில பகுதி காடுகளில் தீப்பிடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இதே போல் சென்னி மலை பகுதியில் கடந்த 2 மாதங்களாக வனப்பகுதி மற்றும் தனியாருக்கு சொந்த மான நிலங்களில் வறண்டு கிடக்கும் செடி, கொடிகளில் தீ விபத்து ஏற்படும் சம்ப வங்கள் அடிக்கடி நடை பெற்று வருகிறது.
மேலும் கடந்த வாரம் சென்னிமலை பகுதியில் 2 இடங்களில் காயந்து கிடந்ததால் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த நிலையில் சென்னிமலை பகுதியில் மீண்டும் ஒரே நாளில் 3 இடங்களில் தீப்பிடித்த சம்பவங்கள் நடந்துள்ளது.
சென்னி மலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சி ஒட்டன் குட்டை மயில் கரடு, முருங்கத்தொழுவு பகுதி சூலைப்புதுார், சென்னி மலை பேரூராட்சி குப்பை கிடங்கு என 3 பகுதிகளில் செடி, கொடிகள் வறண்டு கிடந்தது.
அப்போது அந்த பகுதிகளில் ஒரே நாளில் திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கு இருந்த புல் மற்றும் செடி, கொடிகள் எரிய தொட ங்கியது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு நிலைய அலு வலர் முத்துசாமி தலை மையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால் இலை, தழைகளை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது:
சென்னிமலை பகுதியில் இது வரை இல்லாத அளவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 49 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக நாங்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளோம்.
சில இடங்களில் தீய ணைப்பு வாகனம் செல்ல முடியாததால் இலை, தழை களை கொண்டு தீயை அணைத்து வருகிறோம். பீடி, சிகரெட் பிடிப்பவர்கள் அதனை அணைக்காமல் வீசி விட்டு செல்வதால் இது போன்ற தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
எனவே தற்போது வெயி லின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு தீ விபத்து ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் சிவகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாவட்ட தலைவர் ராஜீ தலைமை தாங்கினார்.
அம்மன் கோவில் பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் மற்றும் சிவகிரி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் பரமு என்கிற ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டமைப்பின் செயலாளர் வேலுமணி வரவேற்றார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன், மாநில பொருளாளர் ராமசாமி கவுண்டர் ஆகியோர் கலந்து கொண்டு பால் விலை உயர்த்தி தரக்கோரி பேசினர்.
இக்கூட்டத்தில் வருகிற 17-ந் தேதிக்குள் பால் விலையை உயர்த்தி வழங்காவிட்டால் ஆவின் நிர்வாகத்திற்கு பால்உற்பத்தியாளர்கள் பாலை அனுப்புவதில்லை என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம், ஆவின் இயக்குனர் அசோக் குமார், கரூர் மாவட்ட தலைவர் பாலு குட்டி உள்பட 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் கரட்டாங்காட்டுப்புதூர் பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தலைவர் துரைசாமி நன்றி கூறினார்.
- கோபி குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணை்க்கு ஆஜராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
- மேலும் வரும் 20-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தொட்டாபாளையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சரக்கு ஆட்டோ மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கீழ்வாணியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (19) என்பவர் உயிரிழந்தார்.
அதேபோன்று கடந்த 2016-ம் ஆண்டு ஓலப்பாளையம் பிரிவில் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக தந்தை ஏசுராஜூடன், செல்வி மேரி என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது
அந்த வழியாக வந்த தனியார் நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் மோதியதில் செல்வி மேரியும், ஏசுராஜூம் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த வழக்கு சிறுவலூர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோபி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சதீஸ், நகராட்சி அதிகாரிகளுடன் கடை வீதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து மகேந்தி்சிங் என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை செய்து 3 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அப்போது கடையில் இருந்த உதாராம் என்பவர் சதீசிடம் தகராறு செய்ததுடன், அரசு பணி செய்யவிடாமல் தடுத்து உள்ளார். இது தொடர்பாக சதீஸ் அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த 3 வழக்குகளிலும் அப்போதைய இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் விசாரணை அதிகாரியாக இருந்தார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் பால முரளிசுந்தரம் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பணியாற்றி வருகிறார்.
அதேபோன்று கெட்டிசெவியூரில் கடந்த 2019-ம் ஆண்டு சரக்கு வேன் மோதியதில் சோமசுந்தரம் என்ற விவசாயி உயிரிழந்தார். விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கோபி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் இருந்தார். தற்போது அவர் ஈரோடு தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
அதேபோன்று கடந்த 2015-ம் ஆண்டு பங்களாபுதூர் அருகே உள்ள பனங்காட்டு பள்ளம் என்ற இடத்தில் வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பழனிச்சாமி என்பவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசார ணைக்கு அதிகாரியாக அப்போதைய பங்களாபுதூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கதிர்வேல் இருந்தார்.
தற்போது கதிர்வேல் கோவை மாவட்டம் போத்தனூர் போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
மேற்கண்ட 5 வழக்குகளிலும் சாட்சி விசாரணைக்கு கீழக்கரையில் உள்ள இன்ஸ்பெக்டர் பால முரளிசுந்தரம், போத்தனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கதிர்வேல், ஈரோடு் தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் தொடர்ந்து ஆஜராகாத நிலையில்
கோபி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ன் மாஜிஸ்திரேட் விஜய் அழகிரி 3 பேருக்கும் சாட்சி விசாரணை்க்கு ஆஜராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் வரும் 20-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
- நொய்யல் அருகே காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் தங்கராஜ் இறந்து கிடந்தார்.
- இது குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார் பாறை பகுதி யை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 60). விவசாயி. இவர் நொய்யல் அருகே காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் இறந்து கிடந்தார்.
இதை கண்ட பொது மக்கள் இது குறித்து அவரது மனைவி மல்லிகா மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மல்லிகா மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு வீட்டுக்கு எடுத்து வந்தனர்.
இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீ சார் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவரது மனைவி மல்லிகா கூறும் போது, எனது கணவர் அடிக்கடி மது குடித்து விட்டு கீழே விழுவது வழக்கம்.
அதே போல் எனது கணவர் மது போதை யில் நொய்யல் அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு செல்லும் போது நிலை த்தடுமாறி கீழே விழுந்து அவருக்கு அடிபட்டு இறந்து இருக்கலாம் என தெரி வித்தார்.
இதையடுத்து தங்கராஜ் உடலை போலீசார் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கொடுமுடி போலீ சார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
- போலீசார் பூபதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ராஜாஜிபுரம் சுப்பையா தெரு அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்த போலீசார் அங்கு சென்ற போது கருங்கல்பாளையம் கே.என்.கே ரோடு பகுதியை சேர்ந்த பூபதி (46) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு நம்பரை வெள்ளை தாளில் எழுதி பரிசு விழும் என்று கூறி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அவரிடம் இருந்து 9 கேரளா லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அம்பேத்கார் நகர் அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்றபோது ஆர்.என்.புதூர் அமராவதி நகரை சேர்ந்த விக்னேஷ் (30) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் எண்களை வெள்ளைத்தாளில் எழுதி பரிசு பெறும் என்று கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரிடமிருந்து 2 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சித்தோடு போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.
- வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பழையபாளையம் கீதா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மஞ்சுளா தேவி (55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செந்தில்குமார் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
தொழில் அதிபரான மஞ்சுளாதேவி கிரானைட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் தற்போது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். மஞ்சுளா தேவி மட்டும் வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவ்வப்போது பூந்துறையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று வருவார். மஞ்சுளாதேவியின் வீடு கீழ்த்தளம் மற்றும் முதல் மாடி கொண்ட வீடாக உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று மஞ்சுளா தேவி தனது தாயாரை பூந்துறையில் உள்ள அவரது வீட்டில் கொண்டு விட்டுவிட்டு கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டார். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு நேற்று மஞ்சள் தேவி மீண்டும் வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் ஜன்னல் கதவுகள் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதவை திறந்து உள்ளே சென்றபோது வீட்டின் முதல் மாடி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் பீரோ இருக்கும் அறைக்கு சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. மேலும் அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த வைரத்தோடு 3 ஜோடி, வைர வளையல் ஒரு ஜோடி, 4 வைர மோதிரம், 7 ஜோடி தங்கத்தோடு, 3 தங்க மோதிரம், 4 தங்க வளையல்கள், 3 தங்க பவள மாலை என மொத்தம் 18 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.4.50 லட்சம் ரொக்க பணமும் திருட்டு போய் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.12 லட்சத்து 54 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு மஞ்சுளாதேவி புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 நபர்கள் உள்ளே வருவது பதிவாகி இருந்தது. ஆனால் அந்த நபர்கள் சி.சி.டி.வி. கேமிராவை திருப்பி வைத்து விட்டதால் சரியாக அடையாளம் தெரியவில்லை.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்டு இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் மஞ்சுளா தேவி பற்றி நன்கு தெரிந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.






