என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "25 thousand people treated in"

    • பள்ளிகளில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • சிறப்பு காய்ச்சல் முகாமில் இதுவரை 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இன்ப்ளுயன்சா எச்.3 என்.2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக வரும் மக்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

    உடல் வலி, தொண்டை வலி, இரும்பல், வயிற்றுப்போக்கு, சளி , காய்ச்சல், வாந்தி போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறியாக உள்ளது.

    இந்த காய்ச்சல் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்களை அதிக அளவில் தாக்கி வருகிறது.

    இந்த காய்ச்சலை கட்டுப்படுத்திடவும், பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 10-ந் தேதி முதல் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 இடங்கள் வீதம் மாவட்டம் முழுவதும் 45 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்து வருகிறது.

    ஈரோடு மாநகர பகுதியில் புதுமை காலனி மற்றும் வளையகார வீதி பகுதியில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்து வருகிறது. முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதனை செய்தனர்.

    குறிப்பாக முதியவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் சளி, காய்ச்சல் இருந்தால் அதற்கு உண்டான மாத்திரை வழங்கப்பட்டது. காய்ச்சல் அதிக அளவில் இருந்தால் அவர்கள் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    இதேப்போல் பள்ளிகளில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த சிறப்பு காய்ச்சல் முகாம்களில் தினமும் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் மக்கள் சிறப்பு காய்ச்சல் முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் சிறப்பு காய்ச்சல் முகாமில் இதுவரை 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    சிகிச்சை பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான காய்ச்சல் தான் உள்ளது. அதனால் அதற்குண்டான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு விட்டது.

    ஒரு சிலர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்கிய சிகிச்சை பெற்று குணமடைந்து சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    இது தவிர காய்ச்சல் அதிகம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    ×