என் மலர்tooltip icon

    ஈரோடு

    • முதல் நிலக்கடலை மறைமுக ஏலம் விற்பனை நடக்க உள்ளது.
    • தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலமும் நடக்கிறது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட விற்பனைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சனிக்கிழமை தோறும் எள் மறைமுக ஏலமும், கூடுதலாக தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலமும் நடக்கிறது. வரும் வியாழக்கிழமை முதல் நிலக்கடலை மறைமுக ஏலம் விற்பனை நடக்க உள்ளது.

    இதற்காக புதன் கிழமை மாலை, 4 மணிக்குள் நிலக்கடலையையும், சனிக்கிழமை காலை, 8 மணிக்குள் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காயை எடுத்து வர வேண்டும்.

    விளை பொருட்களை கல், மண், தூசு நீக்கம் செய்து, தரம் பிரித்து விற்பனை கூடத்துக்கு கொண்டு வர வேண்டும். வியாபாரிகள் கொள்முதல் செய்யும் விளை பொருளுக்கான தொகையை நேரடியாக விவசாயி வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    எனவே, விவசாயிகள், தங்களது வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும். மேலும் கூடுதல் தகவலுக்கு ஈரோடு மாவட்ட விற்பனைக்குழு – 99445 23556, மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை, 99425 06990 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
    • பவானிசாகர் அணையில் இருந்து 1,055கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவ ரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82. 92 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 432 கன அடியாக தண்ணீர் குறைந்து வருகிறது. கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,055கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.77 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 24.11 அடியாக உள்ளது. வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 25. 98 அடியாக உள்ளது. மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. 

    • யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
    • கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகம் உள்ளது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் தாளவாடி, ஆசனூர், தலமலை உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை கள், புலி, சிறுத்தை, கரடி என பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    மேலும் ஆசனூர் வனப்பகுதிகளில் குளம், குட்டைகள் மற்றும் நீரோடைகள் உள்ளது. இந்த நீர்நிலைகளில் வன விலங்குகள் வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தாளவாடி, ஆசனூர் வனப்பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    ஆசனூர் வனப்பகுதியை ரசிப்பதற்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்து வருகிறார்கள். இதையடுத்து வனத்துறையின்ர் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.

    இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஈரோடு மாட்ட பொதுமக்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து இயற்கை அழகை ரசிக்கிறார்கள். இதனால் ஆசனூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

    மேலும் வனத்துறையினரும் ரோந்து வந்து கண்காணித்து வருகிறார்கள். அப்போது வனப்பகுதிக்குள் நுழைபவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.

    இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதிக்குள் சிலர் அனுமதியின்றி நுழைந்து ஆபத்தை உணராமல் சுற்றி திரிந்தனர். அப்போது 3 பேர் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள நீரோடையில் குளித்து கொண்டு இருந்தனர். அந்த பகுதியில் ரோந்து வந்த வனத்துறையினர் அவர்களிடம் விசரணை நடத்தி அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த பகுதியில் அனுமதியின்றி நுழைந்து யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் அவர் கொண்டு வந்த கேமிராவையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் வனப்பகுதியில் உள்ள ஆபத்து குறித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆசனூர் வனசரக அலுவலர் சிவகுமார் கூறும்போது, வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல வன விலங்குகள் உள்ளன. பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அத்துமீறி நுழைகிறார்கள். இதனால் ஆபத்து நிகழ கூடும். எனவே பொது மக்கள் வனப்பகுதிக்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி அனுமதியின்றி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்தல், நீரோடைகளில் குளித்தல் போன்ற குற்றங்களுக்காக கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • திருமணத்துக்காக இருவீட்டு பெற்றோரும் உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்தனர்.
    • நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சரசு. இவர்களது மகன் கேசவமூர்த்தி (28). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலைப்பார்த்து வந்தார். அப்போது அதே பள்ளியில் ஊழியராக வேலைப்பார்க்கும் பெண்ணுக்கும், கேசவ மூர்த்திக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஈரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், நாளை (22-ந்தேதி) காலை திருமணம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் திருமணத்துக்காக இருவீட்டு பெற்றோரும் உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த கேசவமூர்த்தி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பக்கத்து வீட்டு சிறுவன் வந்து பார்த்த போது தான் கேசவமூர்த்தி பிணமாக தொங்குவது தெரியவந்தது. பின்னர் இதுப்பற்றி தெரியவந்தும் உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஓடிவந்து கேசவமூர்த்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் இதுப்பற்றி தெரியவந்ததும் வெள்ளி திருப்பூர்போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கேசவ மூர்த்தியின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த ஒருவாரமாகவே கேசவ மூர்த்தி தொடர்ந்து காதலியிடம் செல்போனில் பேசி வந்து உள்ளார்.

    இந்த நிலையில் தான்அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். எனவே போனில் பேசும் போது அவர்களுக்கு இடையே ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக மனம் உடைந்து கேவச மூர்த்தி தற்கொலை செய்து கொண்டுஇருக்கலாம் என்று தெரியவந்தது. மேலும் இது குறித்து அவரது காதலியிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இது குறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இலகுரக வாகனங்கள், கனரக மற்றும் மிகவும் கனரக வாகனங்கள் ஏராள மாக சென்று வருகிறது.
    • சிறு ரோடு அகலப்படுத்தும் பணியினால் ஓரளவு விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.

    அம்மாபேட்டை,

    தொப்பூர் - பவானி ரோடு இரு புறமும் தலா1.5 மீட்டர் அகலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் நெடுஞ்சாலை துறையினர் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலை துறை எல்லைக்கு அளவீடு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அம்மாபேட்டை பகுதியில் நெரிஞ்சிப்பேட்டை, அம்மா பேட்டை, சித்தார் ஆகிய பகுதிகளில் இருபுற எல்லை களிலும் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை எல்லை வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளதால் ரோடுகள் பார்ப்பதற்கு அகலமாகவும், அழகாகவும் காட்சியளிக்கிறது.

    இந்நிலையில் சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் இருந்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் சிலர் மீண்டும் ரோடு வரை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் மீண்டும் ரோடுகள் பழைய நிலைக்கு வர வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    தற்போது தொப்பூர்-பவானி ரோடு அகலப்படு த்தும் பணி நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஏற்கனவே இந்த ரோட்டில் இலகுரக வாகனங்கள், கனரக மற்றும் மிகவும் கனரக வாகனங்கள் ஏராள மாக சென்று வருகிறது. இதனால் இரு புறமும் ரோட்டை கடக்கவே அதிக நேரம் ஆகிறது.

    ஏற்கனவே சில வருடங்களாக இந்த ரோடு 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது என கூறி வந்த நிலையில் தற்போது 2 வழிச்சாலையாகவே போடப்பட்டு வருகிறது. இந்த ரேட்டில் 100-க்கணக்கான விபத்து க்களால் உயிர் இழப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது போடும் இந்த சிறு ரோடு அகலப்படுத்தும் பணியினால் ஓரளவு விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.

    எனவே நெடுஞ்சாலை த்துறை அளவீடு செய்துள்ள எல்லை வரை மீண்டும் யாரும் ஆக்கிரமிப்பு செ ய்வதை அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக சித்தாரில் தற்போது ஆக்கிரமித்துள்ள அனைத்து கடைகளையும் உடனே அகற்றி பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறு இல்லாமல் செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.

    • சோனுபரீத் (20)என்பவரும் தங்கி அதை ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
    • தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஈரோடு, 

    சத்தீஸ்கர் மாநிலம் ஜனிஹீர் பகுதியை சேர்ந்தவர் டிஜோராம் (20). இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஈங்கூர் நல்லி கவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    அவரது அறையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சோனுபரீத் (20)என்பவரும் தங்கி அதை ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கலந்த 10 நாட்களுக்கு முன்பு டிஜோராம் சத்தீஸ்கருக்கு சென்றார். அதன் பிறகு மீண்டும் தான் வேலை செய்யும் ஆலைக்கு வந்தார். சொந்த ஊர் சென்று திரும்பி வந்ததிலிருந்து நிஜோராம் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

    அதன் பிறகு வேலைக்கு செல்லாமல் அறையிலேயே இருந்து வந்துள்ளார். இது குறித்த அவரிடம் கேட்டபோது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார்.

    இந்நிலையில் நேற்று அறையில் உடன் இருந்த சோனுபரீத் வேலைக்கு சென்று விட்டார். அறையில் டிஜோராம் மட்டும் இருந்துள்ளார். மாலையில் வேலையை முடித்து கொண்டு சோனுபரீத் அறைக்கு வந்தபோது டிஜோராம் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிஜோராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது.
    • காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் பதிவானது. இதனால் குழந்தைகள் முதியவர்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த மே மாதம் 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் மூன்று நாட்கள் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்தது.

    ஆனால் அதன் பிறகு அக்னி நட்சத்திர வெயில் தனது கோர தாண்டவத்தை காட்டத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது.

    குறிப்பாக 11 மணி முதல் மதியம் 5 மணி வரை வெயிலில் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கத்துடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். இவர்கள் எப்படி என்றால் வீட்டில் உள்ளவர்கள் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. வீட்டில் 24 மணி நேரமும் மின்விசிறி இயங்கி கொண்டே தான் இருக்கிறது.

    எனினும் வெப்பம் காரணமாக புழுக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயில் தாக்கம் காரணமாக உடலில் நீர் சத்து குறைந்து தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் அதிகரித்து வருகிறது. எனவே நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    பொதுமக்கள் வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை கூட எடுத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதுபோக மோர், இளநீர், அதிக அளவில் பருகலாம் எனவும் இதனால் நீர் சத்து கிடைக்கும் இடமும் மதித்து உள்ளனர்.

    நொங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காயும் உடலுக்கு இதமானது என அறிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஈரோட்டில் சராசரியாக 102 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இன்னும் சில நாட்களில் அக்னி நட்சத்திரம் விடைபெறுகிறது. அதுவரை சமாளித்து தான் ஆக வேண்டும் என பொதுமக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

    • ஆற்றுப்பகுதி அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.
    • சீட்டு கட்டுகள், ரூ.1600 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அரசூர் ஆற்றுப்பகுதி அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது.

    அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அரசூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் (64), ஆறுமுகம்(64), சந்திரன் (65), சுந்தரம் (70), அன்பழகன் (58), செல்வன் (53), திருமூர்த்தி (52), குமரேசன் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.1600 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை கோட்டை நோக்கி பேரணிக்கு செல்ல உள்ளனர்.
    • அனைத்து அரசு ஊர்தி ஓட்டுநர்களும் இதில் பங்கேற்க வேண்டும்.

    சென்னிமலை,

    ஈரோடு மாவட்ட அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க மாவட்ட செயலாளர் சென்னிமலை சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுத்துறை பல்வேறு துறைகளில் பணிபுரியும் 7000 அரசுத்துறை ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி திங்கட்கிழமை ஒருநாள் விடுப்பு எடுத்து சென்னை கோட்டை நோக்கி பேரணிக்கு செல்ல உள்ளனர்.

    அரசுத்துறையில் பணிபுரியும் ஓட்டுனர்களுக்கு ஊதியம் முரண்பாடு, கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு, கழிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் அரசு வழங்க வேண்டும், காலியாக உள்ள ஓட்டுனர்கள் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் வேலைவாய்ப்பு துறை மூலம் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்,

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண்துறையில் காலியாக உள்ள 35 க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் 15 ஓட்டுநர் பணியிடங்கள் வருவாய் துறையில் 10 க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பணியிடங்கள், மருத்துவத்துறையில் 20 ஓட்டுனர் பணியிடங்கள்,

    இதே போல் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஓட்டுனர்கள் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சென்னையில் வருகிற திங்கட்கிழமை நடைபெறும் பேரணிக்கு ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் அன்று விடுப்பு எடுத்து சென்னை செல்கின்றனர்.

    அனைத்து அரசு ஊர்தி ஓட்டுநர்களும் இதில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஒரு பையுடன் நின்று கொண்டு இருந்தார்.
    • அவர் போட்டு சென்ற பையை சோதனை நடத்தினர்.

    பவானி, 

    பவானி அருகே உள்ள லட்சுமி நகர் கோண வாய்க்கால் பகுதியில் ஈரோடு ரோட்டில் சித்தோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒருவர் ஒரு பையுடன் நின்று கொண்டு இருந்தார். அவர் போலீசாரை கண்டதும் அந்த பையை அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் அவர் போட்டு சென்ற பையை சோதனை நடத்தினர்.

    இதில் ஒரு லிட்டர் கேனில் 11 பிளாஸ்டிக் பாட்டில்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எரி சாராயம் இருப்பது கண்டறி யப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த 11 சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் தப்பி ஓடியவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பவானி லட்சுமி நகர் அருகே உள்ள கோண வாய்க்கால் ஒய்யாங்காடு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர். 

    • மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் தகராறு செய்தார்.
    • பணம் கொடுக்க மறுத்ததால் கோவிந்தராஜ் தன் உடலில் தீ வைத்துக் கொண்டார்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (65). மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இந்த நிலையில் கோவிந்தராஜ் கடந்த வாரம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதையடுத்து அவர் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் தகராறு செய்தார். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் பணம் தர மறுதது வட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் திடீரென மண் எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி கொண்டு வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு பணம் கொடுக்க மறுத்ததால் கோவிந்தராஜ் தன் உடலில் தீ வைத்துக் கொண்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்குசேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். 

    • ஷன்மதி என்கிற மாணவி 489 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.
    • யோகேஸ்வரி என்கிற மாணவி 475 மதிப்பெண் பெற்று 3-வது இடம் பெற்றுள்ளார்.

    சிவகிரி ,

    சிவகிரி அருகே உள்ள அம்மன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 88 பேர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்வு எழுதினர்.இதில் தேர்வு எழுதிய அனைத்து மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த அரசு பள்ளி 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.

    தற்போது நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கொடுமுடி வட்டார பகுதியில் ஷன்மதி என்கிற மாணவி 489 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். கணக்கு மற்றும் அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    மாணவி எஸ்.வி.கிரண்யா 480 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பெற்று ள்ளார். யோகேஸ்வரி என்கிற மாணவி 475 மதிப்பெண் பெற்று 3-வது இடம் பெற்றுள்ளார். மேலும் தமிழ் பாடத்தில் 2 மாணவிகள், ஆங்கில பாடத்தில் 3 பேர் 99 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.

    இதையடுத்து அதிக மதிப்பெண் பெற்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகளை பொதுமக்கள் பாராட்டினர். தனியார் பள்ளிக்கு இணை யாக அரசு பள்ளி உருவாகி இருக்கிறது என்றும் பள்ளி யின் தலைமை ஆசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், நிர்வாக குழு, பள்ளி மேலாண்மை குழு என அனைவருக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

    பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம் கூறும் போது, சென்ற கல்வி ஆண்டை விட இந்த ஆண்டு மாணவிகள் சிறந்த மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளனர். அனைத்து மாணவிகளுக்கும், ஆசிரியர் களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து இந்த ஆண்டு மாணவிகளின் சேர்க்கை இன்னும் அதிகமாகும் என கூறினார்.

    ×