என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • புனித தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வந்து பின்னர் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
    • விழா ஏற்பாடுகளை பாப்பாபட்டி ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே பாப்பாபட்டி கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் முதல்நாள் அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, தனபூஜை, நவக்கிரக ஹோமம், கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    பின்னர் 2-ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து அம்மனுக்கு பூர்ணாகுதி தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், வைகை, உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வந்து பின்னர் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் கலசத்தில் ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    விழாவில் நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, நாம் தமிழர் கட்சி மாநில கொள்கைபரப்பு செயலாளர் சிவசங்கரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், பழனிக்குமார், இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பாப்பாபட்டி ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பஞ்சாமிர்தம் விற்பனை 1.50 லட்சம் டப்பாக அதிகரித்துள்ளது.
    • இரவு 11 மணியளவில் கொடி இறக்கம் நடைபெற்றது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் கடந்த மாதம் 29-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. நிறைவுநாள் நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி, தெய்வானை திரு ஊடல் வைபவம் நேற்று நடைபெற்றது.

    புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமார சாமி எழுந்தருளி வடக்கு ரத வீதி அருகே உலா வரும் போது வள்ளியை திருமணம் செய்து கொண்ட செய்தி அறிந்து தெய்வானை கோபித்துக் கொண்டு அவரிடம் இருந்து பிரிந்து கோவிலுக்கு வந்து நடையை பூட்டிக் கொண்டார்.

    இதையடுத்து கோவிலுக்கு திரும்பிய சுவாமி நடை அடைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து வீரபாகுவை தூது அனுப்பி தெய்வானையை சமாதானம் செய்து கோவில் நடையை திறக்க வைக்கும் திரு ஊடல் வைபவம் தூது பாடல்கள் பாடி நடைபெற்றது.

    அதன் பிறகு முத்துக்குமார சுவாமி வள்ளி-தெய்வானை சமேதரராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து இரவில் தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி தெப்பத்தின் நடுவில் அமைந்துள்ள கல் மண்டபத்தில் வள்ளி-தெய்வானை சமேதரருடன் முத்துக்குமார சுவாமிக்கு பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுவாமி எழுந்தருளினார். அதன் பின் வானவேடிக்கைகள் முழங்க தெப்பத்தேர் உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 11 மணியளவில் கொடி இறக்கம் நடைபெற்று தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது.

    தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து விரதமிருந்து மாலை அணிந்த பக்தர்கள் ஏராளமானோர் பாதயாத்திரையாக பழனிக்கு வந்தனர். கடந்த 4, 5-ந் தேதி தைப்பூசத்தையொட்டி இங்கு வந்த பக்தர்களால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டது. தைப்பூசம் முடிந்த பிறகும் கூட பக்தர்கள் வருகை குறையாமல் உள்ளது. காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    கடந்த 4-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்களில் மலைக்கோவிலில் மட்டும் 4.50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். பழனி கோவில் தேவஸ்தான பஞ்சாமிர்தம் விற்பனையும் 1 லட்சம் டப்பாவில் இருந்து 1.50 லட்சம் டப்பாக அதிகரித்துள்ளது.

    • தெப்பத்தேர் 3 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தபோது வாண வேடிக்கை நடைபெற்றது.
    • தெப்ப உற்சவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அறுபடை வீடுகளில் 3-ம்படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த மாதம் 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி தினமும் காலை, மாலையில் தந்தப் பல்லக்கு. புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் சுவாமி புறப்பாடு, மண்டகப்படி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே கடந்த 3, 4-ந்தேதிகளில் நடைபெற்றது.

    வெகுவிமரிசையாக நடைபெற்ற பழனி தைப்பூச திருவிழாவின் 10-ம் நாளான நேற்று இரவு தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

    முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையை தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்துக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு 6 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஓதுவார்கள் பண்பாடி மகா தீபாராதனை நடைபெற்றது.

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'அரோகரா அரோகரா' என்று சரண கோஷம் எழுப்பினர். பின்னர் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் தெப்பத்தேரில் எழுந்தருளினார். தெப்பத்தேர் 3 முறை தெப்பக்குளத்தில் வலம் வந்தபோது வாண வேடிக்கை நடைபெற்றது. இதனையடுத்து தெப்பத்தேர் நிறுத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

    பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில், முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானை தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளினார். பிறகு இரவு 11 மணிக்கு கொடி இறக்கத்துடன் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது.

    தெப்ப உற்சவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் பழனி தெப்ப உற்சவ விழா கமிட்டி ஆகியோர் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    தைப்பூச திருவிழா நிறைவு நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருஆவினன்குடி, பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் காலை 6 மணி முதலே தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    இதேபோல் பாதவிநாயகர் கோவில் பகுதியில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு நேற்று 3 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. மேலும் பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தி கிரிவீதியை சுற்றி வந்தனர்.

    • மாரிமுத்து தனது ராசி, வீட்டு முகவரி உள்ளிட்ட விபரங்களை கூறி உள்ளார்.
    • பார்சல் கொண்டு வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் எடுக்கவில்லை.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது63). சுமை தூக்கும் கூலித்தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது.

    அந்த எண்ணை மாரிமுத்து திரும்பி தொடர்பு கொண்டபோது தங்களிடம் ராசிக்கல் மோதிரம் இருப்பதாகவும் அவரவர் ராசிக்கேற்ப மோதிரத்தை அனுப்பி வைப்பதாகவும் அதற்கு ஏற்ப பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.

    இதனை நம்பிய மாரிமுத்து தனது ராசி, வீட்டு முகவரி உள்ளிட்ட விபரங்களை கூறி உள்ளார். இதனை தொடர்ந்து அவரது வீட்டுக்கு ராசிக்கல் மோதிரம் பார்சலில் வந்தது. ரூ.2 ஆயிரம் கொடுத்து பார்சலை வாங்கி பிரித்து பார்த்தார். அதில் குழந்தைகளின் விளையாட்டு மோதிரம் இருந்தது.

    இதுகுறித்து மாரிமுத்து கூறுகையில், மிஸ்டு கால் அழைப்பை நம்பி நானும் எனது குடும்பத்தினரும் மோதிரத்துக்கு ஆர்டர் கொடுத்தோம். ரூ.2 ஆயிரம் செலுத்தி பார்சலை பிரித்து பார்த்தபோது குழந்தைகள் விளையாட்டு மோதிரம் போல் சிறிய அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்காலான மோதிரம் இருந்தது.

    பார்சல் கொண்டு வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் எடுக்கவில்லை. வேறு எண்ணில் இருந்து அழைத்தால் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அடித்து செல்லப்பட்ட வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் சந்தீப் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து வெள்ளத்தூவன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 5 பேர் கேரள மாநிலம் மூணாறை சுற்றி பார்க்க வந்தனர். சுற்றுலா தலங்களை கண்டு ரசித்த பின்னர் அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    எல்லக்கல் பகுதியில் உள்ள சுனைமாக்கால் அருவி பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு இயற்கை அழகை கண்டு ரசித்தனர். இதில் சந்தீப் (வயது23) என்ற வாலிபர் அருவியின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளார். அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அடித்து செல்லப்பட்ட அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் சந்தீப் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து வெள்ளத்தூவன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 21-ந்தேதி கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • மார்ச் 7-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவில் கிழக்கு ரதவீதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அம்மன் லிங்க வடிவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் மாசித்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழா வருகிற 17-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து 21-ந்தேதி திருக்கம்பம் அலங்கரித்தல், கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 28-ந்தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும், மார்ச் 7-ந்தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது. அன்று இரவு அம்மன் தங்க குதிரை வாகனத்தில் உலா வருகிறார்.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 8-ந்தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த நாள் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவில் மாரியம்மன் தங்கமயில், புதுச்சேரி சப்பரம், வெள்ளியானை, தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகிறார். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் 16 ஆண்டுகள் பிறகு பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தைப்பூசத் திருவிழா முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருந்தது.

    கடந்த 3 நாட்களில் (3,4,5 ஆகிய தேதிகளில்) பழனி கோவிலில் 3 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    • பழனி அரசு ஆஸ்பத்திரி யில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
    • பணப்பல ன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளி ட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறு த்தி அரசு ஆஸ்பத்திரி முன்பு காத்தி ருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    பழனி:

    பழனி அரசு ஆஸ்பத்திரி யில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் இங்குள்ள காவலர்கள் மற்றும் கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பாக்கி வழங்கவில்லை என தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    மேலும் மாதம் 4 நாள் விடுமுறை வழங்க வேண்டும். தனியார் நிறுவனத்தை ரத்து செய்ய வேண்டும். துப்புரவு தொழி லாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளி ட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி முன்பு காத்தி ருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    கையில் தங்கள் கோரிக்கை அட்டையுடன் கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட தால் அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டது.

    • திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தியதை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • அபிராமி பிடிபட்ட நிலையில் அவருடன் வந்த மேலும் 2 பெண்கள் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள தீத்தாகிழவனூரை சேர்ந்தவர் நீலாமணி (வயது19). இவர் தைப்பூசத்தை முன்னிட்டு அங்குள்ள பேசும் பழனியாண்டவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்றார்.

    திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தியதை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது கழுத்தில் இருந்த நகையை யாரோ பறிப்பதுபோல உணரவே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்தார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் அவர் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த அபிராமி (35) என தெரிய வந்தது. கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் நடைபெறும் இடங்களுக்கு சென்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறிப்பதை இவர் வாடிக்கையாக வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

    அபிராமி பிடிபட்ட நிலையில் அவருடன் வந்த மேலும் 2 பெண்கள் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    • 14 பவுன் தங்க நகையை பையில் வைத்திருந்ததை நோட்டமிட்டவர் அதனை திருடிச்சென்றது தெரியவந்தது.
    • போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிராக்களை காட்சிகளை வைத்து திருடிய தேடி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    கோவை மாவட்டம் இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மனைவி அனிதா (வயது 37). இவர்கள் ஒட்டன்சத்திரத்தில் நடந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ்நிலையம் வந்தனர்.

    அப்போது அனிதா தான் கழுத்தில் அணிந்திருந்த 14 பவுன் தங்க நகையை கழற்றி அதை ஒரு பையில் சுற்றி கட்டைப்பையில் வைத்துக் கொண்டார்.

    பஸ்சில் ஒரு வேளை தூங்கி விட்டால் நகை தொலைந்து விடும் என்ற அச்சத்தில் அவர் இவ்வாறு வைத்துள்ளார். ஆனால் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பையில் இருந்த 14 பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர். பஸ்சுக்கு காத்திருந்த அவர்கள் சிறிது நேரம் கழித்து பையில் சோதனையிட்டபோது நகை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்தில் தொடர்ந்து செல்போன், மோட்டார் சைக்கிள், பயணிகளின் பணம் திருடப்பட்டு வருகிறது.

    ஆனால் கொள்ளையர்கள் பிடிபடாமல் உள்ளனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சத்துடனேயே கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விளைந்த கரும்பு அறுவடை செய்ய இருந்த நிலையில் மாலையில் பலத்த காற்று காரணமாக மின்வயர்கள் உரசியது. இதில் கரும்பு தோட்டம் மற்றும் தென்னை மரங்கள் மீது தீப்பிடித்து எரிந்தது.
    • சுமார் 250 டன் கரும்பு விளைச்சல் இருந்தது. இதன் மதிப்பு ரூ7 லட்சம் ஆகும். மேலும் 30 தென்னை மரங்கள் எரிந்ததில் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ10 லட்சம் சேதம் ஏற்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள விருப்பாட்சியை சேர்ந்த பெருமாள் குளம் பாசனம் மேட்டுவயல் பகுதியை சேர்ந்தவர் ரவி பாரதி (வயது58). விவசாயி. இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார்.

    விளைந்த கரும்பு அறுவடை செய்ய இருந்த நிலையில் மாலையில் பலத்த காற்று காரணமாக மின்வயர்கள் உரசியது. இதில் கரும்பு தோட்டம் மற்றும் தென்னை மரங்கள் மீது தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர்.

    வாகனங்கள் சென்றுவர பாதை இல்லாத தோட்டம் என்பதால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் தாங்களே அணைக்கும் முயற்யில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதும் காற்று வேகமாக வீசியதால் கரும்பு மற்றும் தென்னை மரங்கள் எரிந்து சேதமானது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி தலைமையில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சேதமடைந்த பயிர்களை வேளாண்மை துறையின் அலுவலரிடம் ஆய்வு நடத்த கூறுவதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.

    இது குறித்து விவசாயி ரவிபாரதி கூறுகையில், 5 ஏக்கர் நிலத்தில் சுமார் 250 டன் கரும்பு விளைச்சல் இருந்தது. இதன் மதிப்பு ரூ7 லட்சம் ஆகும். மேலும் 30 தென்னை மரங்கள் எரிந்ததில் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ10 லட்சம் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

    • வங்கியில் இருந்த காவலாளி வெளியில் சென்றுவிட்ட நிலையில் வங்கிக்குள் வேறு யாரேனும் நுழைந்துவிட்டார்களா என்று அச்சம் ஏற்பட்டது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இன்று காலை அபாய சங்கு ஒலிக்கத் தொடங்கியது. அந்த வழியாக நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    வங்கியில் இருந்த காவலாளி வெளியில் சென்றுவிட்ட நிலையில் வங்கிக்குள் வேறு யாரேனும் நுழைந்துவிட்டார்களா என்று அச்சம் ஏற்பட்டது. இதுகுறித்து நகர் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வங்கிக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். எந்திர கோளாறு காரணமாக அபாய சங்கு ஒலித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அங்கு பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு சரிசெய்யும் பணி நடைபெற்றது. திண்டுக்கல்லில் கடந்த மாதம் வங்கிக்குள் புகுந்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று வங்கிக்குள் அபாய சங்கு நீண்டநேரம் ஒலித்துக் கொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×