என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீ விபத்தில் எரிந்து சாம்பலான கரும்புகள்.
ஒட்டன்சத்திரம் அருகே தீ விபத்து மின்கம்பி உரசியதில் ரூ.10லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதம்
- விளைந்த கரும்பு அறுவடை செய்ய இருந்த நிலையில் மாலையில் பலத்த காற்று காரணமாக மின்வயர்கள் உரசியது. இதில் கரும்பு தோட்டம் மற்றும் தென்னை மரங்கள் மீது தீப்பிடித்து எரிந்தது.
- சுமார் 250 டன் கரும்பு விளைச்சல் இருந்தது. இதன் மதிப்பு ரூ7 லட்சம் ஆகும். மேலும் 30 தென்னை மரங்கள் எரிந்ததில் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ10 லட்சம் சேதம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள விருப்பாட்சியை சேர்ந்த பெருமாள் குளம் பாசனம் மேட்டுவயல் பகுதியை சேர்ந்தவர் ரவி பாரதி (வயது58). விவசாயி. இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார்.
விளைந்த கரும்பு அறுவடை செய்ய இருந்த நிலையில் மாலையில் பலத்த காற்று காரணமாக மின்வயர்கள் உரசியது. இதில் கரும்பு தோட்டம் மற்றும் தென்னை மரங்கள் மீது தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர்.
வாகனங்கள் சென்றுவர பாதை இல்லாத தோட்டம் என்பதால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் தாங்களே அணைக்கும் முயற்யில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதும் காற்று வேகமாக வீசியதால் கரும்பு மற்றும் தென்னை மரங்கள் எரிந்து சேதமானது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி தலைமையில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சேதமடைந்த பயிர்களை வேளாண்மை துறையின் அலுவலரிடம் ஆய்வு நடத்த கூறுவதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.
இது குறித்து விவசாயி ரவிபாரதி கூறுகையில், 5 ஏக்கர் நிலத்தில் சுமார் 250 டன் கரும்பு விளைச்சல் இருந்தது. இதன் மதிப்பு ரூ7 லட்சம் ஆகும். மேலும் 30 தென்னை மரங்கள் எரிந்ததில் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ10 லட்சம் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.






