என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டதால் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
    • மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது30). சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி வினோதினி (25). இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.

    வேடசந்தூரில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வினோதினி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்ட அளவில் சிறந்த தடகள வீரர் மற்றும் வீராங்கனை களின் கல்லூரி படிப்பு செலவு மற்றும் விளை யாட்டுக்கு தேவையான உபகரண செலவுகளை மாவட்ட தடகள சங்கமே ஏற்றுக் கொள்ளும்.
    • 2 மாதங்களுக்கு ஒரு முறை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மாதம் 2-வது சனிக்கிழமை தடகள போட்டிகள் நடத்துவதற்கு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பாக வருடாந்திர பொதுக்கூட்டம் என்.பி.ஆர். கல்விக்குழும வளாகத்தில் நடந்தது.

    இக்கூட்டத்தில் கடந்த வருடத்திற்கான ஆண்டறிக்கையை சங்கத்தின் செயலாளர் சிவக்குமார் வெளியிட தலைவர் துரை பெற்றுக் கொண்டார். மேலும் கடந்த ஆண்டு மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக மாநில அளவில் சாதனை படைத்த 17 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றித ழ்கள் வழங்கப்ப ட்டது.

    மாவட்ட அளவில் முதல்முறையாக குழந்தை களுக்கான தடகள போட்டிகள் மற்றும் (14,16,18,20) வயதுடைய வீரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி தடகள போட்டி திண்டுக்கல் ஜி.டி.என். கலைகல்லூரியில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

    மேலும் மாவட்ட அளவில் சிறந்த தடகள வீரர் மற்றும் வீராங்கனை களின் கல்லூரி படிப்பு செலவு மற்றும் விளை யாட்டுக்கு தேவையான உபகரண செலவுகளை மாவட்ட தடகள சங்கமே ஏற்றுக் கொள்ளும்.

    இதில் 2 மாதங்களுக்கு ஒரு முறை போட்டிகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மாதம் 2-வது சனிக்கிழமை தடகள போட்டிகள் நடத்துவதற்கு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட தடகள ச ங்கத்தின் அடுத்தாண்டிற்கான தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு சங்க உறுப்பினர்கள் ஆலோ சனை ஏற்றுக்கொண்டு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • மனோஜ் தனது நண்பர் மணிகண்டனுக்கு தாங்கள் சுற்றுலா முடிந்து ஊருக்கு கிளம்புவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
    • தப்பி ஓடிய ரமேஷ், சிவா ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரும்பாறை:

    மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 28) தனியார் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது கார் டிரைவராக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியைச் சேர்ந்த மனோஜ் (27) என்பவர் பணியாற்றி வந்தார்.

    தர்மராஜ் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி காரில் கொடைக்கானல் சென்றார். காரை டிரைவர் மனோஜ் ஓட்டியுள்ளார். சுற்றுலா தலங்களை கண்டு ரசித்த பின்னர் அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது மனோஜ் தனது நண்பர் மணிகண்டனுக்கு தாங்கள் சுற்றுலா முடிந்து ஊருக்கு கிளம்புவதாக தகவல் தெரிவித்துள்ளார். வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் ஊத்து அருகே வந்த போது மணிகண்டன் தனது நண்பர்களான தேனியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், ரமேஷ், சிவா, ஆண்டிபட்டியைச் சேர்ந்த மதன் ஆகியோர் அங்கு வந்து அவர்களிடம் சிறிது நேரம் பேசினர்.

    பின்னர் அங்கிருந்து அவர்கள் கிளம்பிச் சென்றனர். அப்போது காரில் இருந்த பணம் ரூ.2 லட்சம், 1.5 பவுன் நகை ஆகியவை மாயமாகி இருந்ததை கண்டு தர்மராஜ் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் டிரைவர் மனோஜ் தர்மராஜிடம் அதிக அளவில் பணம் மற்றும் நகைகள் இருப்பது தெரிய வந்ததால் தனது நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து அதனை திருட திட்டம் போட்டார். அதன்படி அவர்களை வரவழைத்து பேச்சு கொடுத்து சிறிது நேரத்தில் பணத்தை திருடியது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து டிரைவர் மனோஜ், மணிகண்டன், சண்முகசுந்தரம், மதன் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர். தப்பி ஓடிய ரமேஷ், சிவா ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மலைக்கோவில் மட்டுமின்றி அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் இருந்தது.
    • கூட்டம் காரணமாக பொது, கட்டணம் உள்ளிட்ட தரிசன வழிகள், அன்னதானக்கூடம் ஆகிய இடங்களில் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    அறுடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கி ன்றனர். நேர்த்திக்க டனாக முடி காணிக்கை செலுத்தி மயில்காவடி, தீர்த்தகாவடி எடுத்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    திருவிழா காலங்கள், பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    மலைக்கோவில் மட்டுமின்றி அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் இருந்தது. கூட்டம் காரணமாக பொது, கட்டணம் உள்ளிட்ட தரிசன வழிகள், அன்னதானக்கூடம் ஆகிய இடங்களில் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் பிரதான வழிகளான படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும் மின் இழுவை ரெயில் நிலையம் உள்பட பல இடங்களில் பக்தர்கள் கூட்டம் இருந்தது.

    பழனிக்கு வெளியூர் பக்தர்கள் கார், வேன்களில் அதிகமாக வந்திருந்தனர். இதனால் அடிவாரம் ரோடு, கிரிவீதி, பூங்காரோடு, அய்யம்புள்ளிரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோரங்களில் கார்களை நிறுத்திச் சென்றதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    சாமி தரிசனம் செய்த பின்பு சொந்த ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • அழகர்கோவில் பழமுதிர்சோலை பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் அடைக்கன் என்பதும், விஷம் அருந்தி இறந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    நத்தம்:

    மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றத்தை சேர்ந்தவர் அடைக்கன் (55). இவர் வீட்டில் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதத்திற்கு முன்னர் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் அப்பன் திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்நிலையில் அழகர்கோவில் பழமுதிர்சோலை பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைபற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் அடைக்கன் என்பதும், விஷம் அருந்தி இறந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும், சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ச்சியடைந்தனர்.
    • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கொடைக்கானல்:

    இயற்கை எழில் கொஞ்சும் அழகும், கண்ணைக் கவரும் மலை முகடுகளும், தலையை முட்டும் மேகக் கூட்டங்களும் இருப்பதால் கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்று அழைப்பர். வருடம் முழுவதும் இங்கு இதமான சீதோஷ்ணம் நிலவுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, பியர் சோழா அருவி போன்ற அருவிகளை கண்டு ரசித்து அருகில் நின்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இன்று வார விடுமுறை என்பதால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ் வாக், மன்னவனூர், சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும், சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ச்சியடைந்தனர்.

    காற்றின் வேகம் அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி படகு சவாரி நிறுத்தப்பட்டது. பின்னர் நிலமை சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காற்றின் வேகத்தைப் பொறுத்து படகுகள் இயக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இனி வரும் காலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து தாயின் வயிற்றில் இருந்து கன்றுவை பிரித்து எடுத்தனர்.
    • 2 தலை, 7 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர்

    பழனி:

    பழனி அருகே பெரியம்மாபட்டி புலியம்பட்டி பிரிவைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன். இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவரது எருமை மாடு கன்று ஈன்ற முடியாமல் வெகு மணி நேரம் சிரம பட்டது.

    இதனைத் தொடர்ந்து பெருமாள் புதூர் கால்நடை மருந்தக கால்நடை உதவி டாக்டர் முருகன் தலைமையில் அம்பிளிக்கை கால்நடை டாக்டர் ஜூபைர் அகமது மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து தாயின் வயிற்றில் இருந்து கன்றுவை பிரித்து எடுத்தனர்.

    அந்த கன்றுக்கு 2 தலை, 7 கால்கள், 2 வால் என அனைத்தும் ஒட்டிய நிலையில் காணப்பட்டது. இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு சென்றனர். இந்த அறுவை சிகிச்சையின்போது கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராஜா மற்றும் முத்துச்சாமி மற்றும் குழுவினர் உடன் இருந்தனர்.

    • கோழி அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது வாழைத்தோட்டத்தில் புகுந்து பள்ளம் பறித்ததாக கூறப்படுகிறது.
    • அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது மகன் சண்முகம் ஆகியோர் சண்டையை விலக்க சென்றுள்ளனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி(45). இவர் வீட்டில் கோழி வளர்த்து வருகிறார். இவரது கோழி அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது வாழைத்தோட்டத்தில் புகுந்து பள்ளம் பறித்ததாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரமடைந்த ஜெயராமன் 3 பேருடன் சென்று பாண்டியை தாக்கி உள்ளார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது மகன் சண்முகம் ஆகியோர் சண்டையை விலக்க சென்றுள்ளனர்.

    இதில் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தபட்டதில் இருவரும் காயமடைந்து நத்தம் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக அனுமதிக ்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து பாண்டி நத்தம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் நத்தம் போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து ஆத்திபட்டி யை சேர்ந்த ஜெயராமன் (55), விஜயகுமார் (19), ரஞ்சித் (26), அஜீத் (22) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விஷ்வசேனர் ஆராதனை, வாசு தேவர் புண்ணியவாகனம், காப்பு கட்டுதல், யக்யோவகி தாரணம் நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் வருடந்தோறும் ஆடிப்பூரம் திருவிழா சிறப்பாக கொ ண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இந்தாண்டு ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள், சீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நேற்று மாலை நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய ப்பட்டன. விஷ்வசேனர் ஆராதனை, வாசு தேவர் புண்ணியவாகனம், காப்பு கட்டுதல், யக்யோவகி தாரணம் நடைபெற்றது. தொடர்ந்து மகாலெட்சுமி பூஜை, மாங்கல்ய பூஜை நடைபெற்று திருமாங்கல்யம் சூட்டும் வைபவம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ் செய்திருந்தார்.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் இழுப்பார்கள்.இந்நிலையில் தேரில் சில பாகங்களில் பழுது ஏற்பட்டது. அதனை சீரமைப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
    • தேரின் மையப் பகுதியான சுவாமி பீடம் போன்றவை இலுப்பை மரத்தினால் புதிதாக செய்யப்படும் பணியில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த சிற்ப கலைஞர்கள் ஈடுப ட்டுள்ளனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் உப கோவி லான பெரியநாயகியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் இழுப்பார்கள்.இந்நிலையில் தேரில் சில பாகங்களில் பழுது ஏற்பட்டது. அதனை சீரமைப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொட்டகை அமைத்து தேரை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேரின் சக்கரத்தை தவிர மற்ற அனைத்து பாகங்களும் புதுப்பிக்கும் பணிக்காக ரூ.45 லட்சம் ஒதுக்கப்பட்டு சீரமைக்கும் பணி கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. தேரின் மையப் பகுதியான சுவாமி பீடம் போன்றவை இலுப்பை மரத்தினால் புதிதாக செய்யப்பட்டு வருகிறது.

    இப்பணியில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த சிற்ப கலைஞர்கள் ஈடுப ட்டுள்ளனர். தற்போது தேரை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 3 மாதத்துக்குள் இப்பணிகள் நிறை வடையும் என கோவில் அதிகாரி தெரிவித்தார்.

    • ஓடைப்பட்டி பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையில் தானாக விழுந்து பலத்த காயமடைந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பழைய கரூர் சாலை என்.எஸ். நகரை சேர்ந்தவர் நாகராஜ் (52). பிட்டர். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஓடைப்பட்டியில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு ஓடைப்பட்டியில் இருந்து என்.எஸ். நகருக்கு டூவீலரில் நாகராஜ் சென்றார்.

    ஓடைப்பட்டி பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையில் தானாக விழுந்து பலத்த காயமடைந்தார். இவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வங்கி கணக்கு இல்லாத மகளிருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • மத்திய கூட்டுறவு வங்கி கிளை களிலும் ஜீரோ பேலன்சில் சேமிப்பு கணக்கு தொடங்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தற்போது வீடுகள் தோறும் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள மகளிர் வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 செலுத்தும் வகையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

    வங்கி கணக்கு இல்லாத மகளிருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு முதல்கட்ட விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம்கள் வருகிற 24-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந்தேதி வரை அந்தந்த ரேசன்கடைகளில் நடைபெறும்.

    அவ்வாறு வழங்கப்பட்ட விண்ணப்பங்களுடன் ஆதார், ரேசன், மின்கட்டண அட்டைகளுடன் வங்கி கணக்கு புத்தகம் அவசியமாகிறது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு என்.ஜி.ஓ.காலனி மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம், அந்தந்த பகுதி கூட்டுறவு வங்கி கிளை களிலும் ஜீரோ பேலன்சில் சேமிப்பு கணக்கு தொடங்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

    இதற்காக 2 பாஸ்போர்ட்டு சைஸ் போட்டோ, ஆதார், ரேசன், வாக்காளர் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பித்து வங்கி கணக்கு தொடங்கலாம் என்றார்.

    ×