என் மலர்
கடலூர்
- கொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
கடலூர்:
புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் முகிலன். பிரபல ரவுடி. இவர் நேற்று இரவு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே பாலூர் சித்தரசூர் காலனி பகுதியில் உள்ள விவசாய கரும்பு தோட்டத்தில் கும்பலுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் முகிலனை வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க பண்ருட்டி டி.எஸ்.பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சீனுவாசன், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான 3 தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி போலீசார் 5 பேர் கொண்ட கும்பலை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் புதுவை ரவுடி முகிலனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். உடனே போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
ரவுடியை கொலை செய்த கும்பல் புதுவை மாநிலத்தை கலக்கும் மற்றொரு பிரபல ரவுடியான முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஸ்வரன் (வயது 31), அரியாங்குப்பம் விஸ்வா (23), ரெட்டியார்பாளையம் கணபதி (27), புவனேஸ்வர் (20), உழவர்கரையை சேர்ந்த ஸ்ரீராக் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
ரவுடி விக்கிக்கும் கொலை செய்யப்பட்ட முகிலனுக்கும் புதுவை மாநிலத்தில் யார் பெரிய ரவுடி என்ற முன்விரோத தகராறு நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோத தகராறில் ரவுடி விக்கி என்ற விக்னேஸ்வரனை, முகிலன் திட்டம் தீட்டி கொலை செய்ய முயன்றுள்ளார்.
ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட முகிலன் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியேவந்தார். சிறையில் இருக்கும் போது நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த புகழ் என்ற கைதியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஜெயிலில் இருந்து வெளியே வந்த முகிலன் புதுவையில் இருந்தால் ரவுடி விக்கி கொலை செய்து விடுவான் என்ற நோக்கத்தில் சிறையில் பழக்கமான கைதி புகழின் பகுதியான சித்தரசூர் பகுதிக்கு சென்று தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் விக்னேஸ்வரன் தரப்பை சேர்ந்தவர்கள் முகிலனை தீவிரமாக தேடி வந்த நிலையில் முகிலன் நெல்லிக்குப்பம் அருகே சித்தரசூர் பகுதியில் பதுங்கியிருப்பது விக்கி தரப்பிற்கு தெரிய வந்தது.
இதனையடுத்து முகிலன் எங்கு செல்கிறான் என்பதை விக்கி தரப்பை சேர்ந்தவர்கள் நோட்டமிட்டனர். இந்நிலையில் நேற்று ஒரு கும்பலுடன் முகிலன் சித்தரசூர் பகுதியை அடுத்த விவசாய கரும்பு தோட்டத்தில் மது குடித்து கொண்டிங்கும் தகவல் விக்கி தரப்பிற்கு தெரிவந்தது. உடனே விக்கி தரப்பை சேர்ந்தவர்கள் வீச்சரிவாளுடன் அங்கு சென்று முகிலனை ஓட ஓடவிரட்டி கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
முகிலன் கொலை செய்யப்பட்டபோது அவருடன் இருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- ஆனைவாரி மேட்டு தெரு இடையிலான சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- இது குறித்து தகவல் அறிந்து புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் நேரில் வந்து பார்வையிட்டார்.
சேத்தியா தோப்பு, ஆக .18-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த ஆனைவாரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு ஆனைவாரி மேட்டு தெரு இடையிலான சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது குறித்து ஆனைவாரி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் அண்ணாதுரை மற்றும் கிராம மக்கள் 100- க்கு மேற்பட்டோர் இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் அல்லது சுரங்க பாதை அமைக்க வேண்டும் என ஒன்று திரண்டு வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து புவனகிரி தொகுதிஎம்.எல்.ஏ அருண்மொழி தேவன் நேரில் வந்து பார்வையிட்டார். மேலும் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தொடர்பு கொண்டு பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் தேசிய நெடுஞ்சாலை நகாய் திட்டஅலுவலரிடம் பேசி மேம்பாலம் அல்லது சுரங்க பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
- இன்று அதிகாலை தூக்கணாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர்.
- 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த இரண்டாயிரம் விளாக பகுதியில் தென்பெண்ணையாறு உள்ளது. இந்த பகுதியில் இருந்து மாட்டுவண்டிகள் மூலம் மணல் திருடிச் சென்று தங்கள் வீடு உள்ள பகுதிகளில் கொட்டுவைக்கின்றனர். பின்னர் வாகனங்கள் மூலமாக மணல் கடத்தப்பட்டு வருவதாகவும் தூக்கணாம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று அதிகாலை தூக்கணாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். வீடுகள் முன்பாக ஆற்று மணல் குவியல் குவியலாக இருந்தது.
இந்த மணலை 2 வாகனங்களில் ஏற்றும் பணியில் ஒரு சிலர் ஈடுபட்டு வந்தனர். மினி லாரி, மர்ம நபர்களை பிடிக்க போலீசார் முயன்ற போது பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் தப்பியோடினர். இதையடுத்து மணல் ஏற்றிக் கொண்டிருந்த 2 மினி லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தூக்கணாம்பாக்கம் போலீசார், புதுவை மாநிலம் கொம்பாக்கம் வேல்முருகன், குருவிநத்தம் நடராஜன் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ள மணலை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் கட்சி நிர்வாகிகள் பணியாற்றிட வேண்டும்.
- சிவானந்தம், பிரவீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாநகர தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் செயலாளர் ராஜா தலைமையில் இன்று காலை நடைபெற்றது. பகுதி செயலாளர் நடராஜன், சலீம், செயற்குழு உறுப்பினர் விக்ரமன், பொதுக்குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீட் தேர்வு ரத்து செய்யாத மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் கடலூர் மாநகரில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது. வருகின்ற அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் கட்சி நிர்வாகிகள் பணியாற்றிட வேண்டும்.
வாக்கு சாவடி முகவர்கள் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை கேட்டறிந்து மக்கள் பிரதிநிதிகள் மூலம் நிறைவேற்றிட வேண்டும். கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் புதிய மார்க்கெட் கட்டிடம் மற்றும் அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு மாநகர திமுக சார்பில் பெருந்திரளாக வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், அமைப்பு சாரா தொழிலாளர் அணி ஓ.எல். பெரியசாமி, மண்டல குழு தலைவர் பிரசன்னா, மாவட்ட பிரதிநிதிகள் ராமு, செல்வமணி, பொருளாளர் ராஜேந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆராமுது, சக்திவேல், இளைஞர் அணி மணிகண்டன், ஜெயமணி, ஜெயச்சந்திரன், குப்புராஜ், கோபி, மாநகர பிரதிநிதி சிவானந்தம், பிரவீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ஆல்பேட்டை பகுதியில் அனைத்து கட்சி சார்பில் 60 முதல் 80 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பங்கள் வைத்திருந்தனர்.
- எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கொடிக்கம்பங்களை எப்படி அகற்றினீர்கள்? இதற்கு யார் அனுமதி அளித்தார்கள்?
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆல்பேட்டை பகுதியில் அனைத்து கட்சி சார்பில் 60 முதல் 80 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பங்கள் வைத்திருந்தனர். இன்று காலை அனைத்து கொடிக்கம்பங்களையும் நெடுஞ்சாலை துறையினர் அகற்றும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததோடு, சிமெண்ட் கட்டைகளும் இடிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், பா.ம.க. மாநில நிர்வாகி கோபிநாத், த.வா.க. கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் திரண்டனர்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கொடிக்கம்பங்களை எப்படி அகற்றினீர்கள்? இதற்கு யார் அனுமதி அளித்தார்கள்? என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி விரைந்து வந்து அரசியல் கட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- விருத்தாசலத்தில் அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அறுவடை செய்யாத நோய் தாக்கிய கரும்புகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மருங்கூர், காவனூர், வல்லியம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்புகளை மஞ்சள் நோய் தாக்கியதால், கரும்பு வளர்ச்சி அடையாமல் அழிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கரும்பு முற்றிலும் அழிவதற்குள், தங்களது கரும்புகளை வெட்டி தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி உள்ளனர். இந்நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள், விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புகளை லாரிகள் மற்றும் டிராக்டர்களில் இருந்து இறக்க கூடாது என்று கூறி விவசாயிகளை தடுத்தனர். இதனால் கரும்புகள் கடந்த 3 நாட்களாக வெயிலால் வாகனங்களில் இருந்தே காய்ந்து வருகிறது. மேலும் அறுவடை செய்யாத நோய் தாக்கிய கரும்புகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று விருத்தாசலம் அடுத்த மேலப்பாளையூர், கரும்பு கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை பின்னர் விவசாயிகளின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காத அதிகாரிகளை அலுவலகத்திற்குள் சிறை வைத்து, அலுவலகத்தின் முன்பக்க, பின்பக்க உள்ள கதவுகளை பூட்டி சீல் வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அலுவலகத்தின் பூட்டை திறந்து அலுவலர்களை விடுவித்தனர். இந்நிலையில் இன்று காலை விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், கருவேப்பிலங்குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அதிகாரிகளை அலுவலகத்திற்குள் சிறை வைத்து பூட்டிய விவசாயிகளான ராஜ வன்னியன் (வயது 47), செல்வ வளவன் (37), ராஜீவ் காந்தி (47) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி விவசாயிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாலமுருகனை அங்கிருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
- பாலமுருகன் மீது பழிக்குபழியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா ?
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஓசைமணி மகன் பாலமுருகன் (வயது 28). அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கொலையில் பாலமுருகன் சம்பந்தப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பாலமுருகன் சம்பவத்தன்று திருநங்கை ஒருவரை பஸ் ஏற்றிவிட புதுவை பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென பாலமுருகனை பலமாக தாக்கியது. இதில் பாலமுருகன் சுருண்டு விழுந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்கு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனையடுத்து பாலமுருகனை மேல் சிகிச்சைக்காக இவரது உறவினர்கள் கிருமாம்பா க்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாலமுருகனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் பாலமுருகனின் உடல்நிலை மோசமாக உள்ளதால் சிகிச்சை அளித்தும் பலனில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதைகேட்ட பாலமுருகனின் உறவினர்கள் பாலமுருகனை அங்கிருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து வீட்டிலி ருந்த பாலமுருகனின் உடல்நிலை மிகவும் மோசமாகி உயிரிழந்தார். இதுகுறித்து பாலமுருகனின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் முன்னதாக பாலமுரகன் தாக்கப்பட்டது குறித்து பாலமுருகன் அண்ணன் வெங்கடேசன் புதுவை உருளையன்பேட்டை போலீசாரிடம் அளித்த புகாரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது பாலமுருகன் இறந்த சம்பவம் அறிந்த புதுவை போலீசார் கொலை வழக்காக மாற்றி சம்பவ இடத்திற்கு வந்து பாலமுருகன் இறந்ததை போலீசாரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டனர். உடனே அருகில் இருந்த பாலமுருகனின் நண்பர்கள், உறவினர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடி பாலமுருகன் உடலை தரமாட்டோம் என போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் கடலூர் திருப்பாதிரிபோலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாதிரி போலீசார் புதுவை போலீசாரிடம் சம்பவம் குறித்து கேட்டு பாலமுருகன் உறவினர்களிடம் புதுவை, திருப்பாதிரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பாலமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பாதிரி போலீசாரின் உதவியுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் கொலை வழக்கு சம்பந்தமான உடலை இங்கு பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம் என்று கூறி அதற்கு முண்டியம்பாக்கம், புதுவை கதிர்காமம் ஆஸ்பத்திரிக்குதான் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினர். இதனையடுத்து புதுவை போலீசார் பாலமுருகன் உடலை கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து புதுவை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை வழக்கு நிலுவையில் இருந்த பாலமுருகன் மீது பழிக்குபழியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ராஜ்குமார், சூர்யா, உதயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார்.
கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் கவிதா, தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சேவல் ஜெயக்குமார், செங்கதிர், ஆறுமுகம், ஹானஸ்ட், ராஜ்குமார், சூர்யா, உதயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ந்தேதி நடைபெறவுள்ளது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
கடலூர்:
கடலூர் ஊராட்சி ஓன்றியத்துக்குட்பட்ட கோண்டூர் ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகா மினை கலெக்டர் அருண் தம்புராஜ், தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரயை வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள 7,01,617 குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதுள்ள 2,23,660 பெண்களுக்கு மட்டும் (கர்ப்பிணித்தாய்மார்கள். பாலூட்டும் தாய்மார்கள் நீங்கலாக) பயனடைய உள்ளனர். 1 மற்றும் 2 வயது வரை அரை மாத்திரையும், 2 முதல் 30 வயது வரை 1 மாத்திரையும் எடுத்து க்கொள்ள வேண்டும். முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ந்தேதி நடைபெறவுள்ளது. குடற்புழு நீக்க மாத்திரை ஒரே நாளில் அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இக்குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படு வதுடன், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. இரத்த சோகையை தடுக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், உதவுகிறது. பொது மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறார்கள். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்க ன்வாடி பணியாளர்களும் வீடுவீடாக சென்று தகவலளித்து குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு வரவழைத்து இக்குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்ப டுகிறது. இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்(சுகாதாரம்) டாக்டர் மீரா, மற்றும் மருத்துவர்கள், மருத்துவபணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சம்பவத்தன்று உத்திராபதி என்பவர் இட்லியை கடனாக கேட்டுள்ளார்.
- தனது ஆதரவாளருடன் கடைக்கு சென்று நெடுஞ்செழியனை தாக்கினார்.
கடலூர்:
கடலூர் அடுத்த கம்பளிமேடை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 52). இவர் அதே பகுதியில் இட்லி கடை வைத்து வந்துள்ளார். சம்பவத்தன்று உத்திராபதி என்பவர் இட்லியை கடனாக கேட்டுள்ளார். அப்போது நெடுஞ்செழியன் தர மறுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உத்ராபதி தனது ஆதரவாளருடன் கடைக்கு சென்று நெடுஞ்செழியனை தாக்கினார். அப்போது அதனை தடுக்க வந்த எழிலரசி, வசந்தா, ஆறுமுகம் ஆகியோரையும் தாக்கினார்கள். மேலும் எழிலரசியை மானபங்கம்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நெடுஞ்செழியன், எழிலரசி, ஆறுமுகம் ,வசந்தா ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெடுஞ்செழியன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் உத்ராபதி, மோகன், விஜி ஆகிய 3 பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.
- நுழைந்து மனைவி சரிதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் முதுநகரை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய சகோதரர் சிவசங்கர். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று சிவசங்கர் திடீரென்று முனுசாமி வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து மனைவி சரிதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சரிதா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் . கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசங்கரை கைது செய்தனர்.
- கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
- கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
கடலூர்:
கடலூர் புருகீஸ்பேட்டையை சேர்ந்தவர் ரவிக்குமார் .இவரது மனைவி கல்பனா (வயது 33). கல்பனா தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் கல்பனாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று கல்பனாவுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்பனாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியிலே பரிதாபமாக கல்பனா உயிரிழந்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






