என் மலர்tooltip icon

    கடலூர்

    புதுப்பேட்டை அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுப்பேட்டை:

    புதுப்பேட்டை அருகே ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஏரிப்பாளையத்தில் உள்ள மளிகைக்கடைக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகைக்கடை உரிமையாளர் ஆனத்தூரை சேர்ந்த புஷ்பபிருகம் (வயது 29) என்பவரை கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சிதம்பரத்தில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிகிச்சை அளித்த ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தணிகைவேல் (வயது 46). இவர் கே.ஆடூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

    மேலும் இவர் சிதம்பரம் வடக்கு வீதியில் கிளினிக் வைத்து, பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் தணிகைவேல், மருத்துவ படிப்பு படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு புகார் சென்றது.

    இதையடுத்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் உத்தரவின் பேரில் நகர இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், வடக்கு வீதியில் உள்ள கிளினிக்குக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தணிகைவேல், எம்.பி.பி.எஸ். படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தணிகைவேலை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மருந்து, மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. போலி டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூரில் வெங்காயம் விலை கிடு, கிடுவென உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூரில் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் ஆகியவை இயங்கி வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அண்ணா மார்க்கெட் மஞ்சக்குப்பம் மைதானத்திலும், பான்பரி மார்க்கெட் கோ- ஆப்டெக்ஸ் எதிரிலும், முதுநகர் மார்க்கெட் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகிலும் இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இங்குள்ள காய்கறி கடைகளில் வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. விலை கிடு, கிடுவென உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய வெங்காயம் விலை ரூ.50 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது ரூ.70 முதல் ரூ,80 வரை உயர்ந்துள்ளது. சிறிய வெங்காயம் 36 ரூபாயில் இருந்து 56 ரூபாயாக உயர்ந்துள்ளது. நடுத்தரம் 40 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    அதேபோல் சாம்பார் வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.90 வரை அதிகரித்துள்ளது. ஒரு சில கடைகளில் மட்டும் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெங்காயம் வாங்க கடைக்கு செல்லும் பொதுமக்கள் விலையை கேட்டவுடன், பாதி தான் வாங்கி செல்கிறார்கள். அதாவது 1 கிலோ வாங்குவதற்கு பதிலாக ¼ கிலோ, ½ கிலோ என வெங்காயத்தை குறைத்து வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. கொரோனா பரவலுக்கு முன்பு பெரிய வெங்காயம் விலை 100 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.140 வரைக்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    இந்த வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்து வருவது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணை செயலாளர் மதிசேகர் கூறுகையில், மத்திய அரசு எண்ணெய், கருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்களில் இருந்து எடுத்து விட்டது. இதனால் இந்த பொருட்கள் பதுக்கல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெங்காயத்தை அதிக அளவில் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை பெரிய நிறுவனங்கள் உருவாக்கி வருகிறது. இதன் காரணமாக தான் வெங்காயத்தின் விலை கிடு, கிடு வென உயர்ந்து வருகிறது.

    கடலூருக்கு மராட்டியம், ஆந்திராவில் இருந்து தான் வெங்காயம் அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது. ஆனால் ஆந்திராவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தான் வெங்காயம் விலை உயர்ந்து வருவதாக சிலர் பரப்பி வருகிறார்கள். ஆனால் அதற்கு முன்பே வெங்காயம் அறுவடை முடிந்து விட்டது. ஆகவே திட்டமிட்டு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். இதன் மூலம் மேலும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
    ஏர்வாடி அருகே களக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    ஏர்வாடி:

    கடலூர் மாவட்டம் தெற்குத்திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை கண்டித்தும், ஊராட்சி பணிகளில் தலைவரின் உறவினர்கள் தலையிடுவதை தடுக்க வலியுறுத்தியும் ஊராட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும் களக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

    ஒன்றிய தலைவர் திருமலைநம்பி தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் வானுமாமலை முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகை ஏந்தி கோஷமிட்டனர்.

    கடலூர் முதுநகரில் கஞ்சா விற்க முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் முதுநகர் சிதம்பரம் பிரதான சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். 

    விசாரணையில் அவர், கடலூர் துறைமுகம் அருகே உள்ள சோனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த திருஞானம் மகன் பிரதீப் (வயது 25) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பிரதீப்பை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    வங்கி தேர்வுகளில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், வங்கித்தேர்வை ரத்து செய்யக்கோரியும் நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் திருமேனி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் செந்தில் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மண்டல செயலாளர் திருமாறன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நிர்வாகிகள் நாகவேந்தன், சுபாஷ், ஸ்ரீதர், பாவாணன், புலிக்கொடியன், முரளி, கலியமூர்த்தி, ஜெயக்குமார், பிரதீப், செல்வம், விஜயன், ஒன்றிய கவுன்சிலர் சீனு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த ஒரு பெண் திடீரென தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் சங்க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதை பார்த்த கட்சி நிர்வாகிகள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுநகர் போலீசார், அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை அழைத்து சென்றனர்.

    அதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை சீர் குலைக்க முயற்சி செய்ததாகவும், கட்சி நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகர செயலாளர் செந்தில் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் பெண் ஒருவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நெய்வேலி அருகே கடன்தொல்லையால் அவதிப்பட்டு வந்த மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ள மேல் வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் ராமர் மகன் வெங்கடேசன் (வயது 36). மெக்கானிக்கான இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் வெங்கடேசன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடன் வாங்கிவிட்டு, அதனை திருப்பி தரவில்லை என்று தெரிகிறது. 

    இந்த நிலையில் அந்த பெண், வெங்கடேசனிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேசன் வீட்டின் முன்புறமுள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து அவரது மனைவி விமலாதேவி கொடுத்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருமண புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதை தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    பண்ருட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார் மகன் விக்னேஷ் (வயது 26). இவருக்கும் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த சந்தியா(25) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்திருந்தனர். இருப்பினும் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த ஜனவரி மாதம் வேளாங்கண்ணியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். 

    இந்நிலையில் திருமணம் ஆன சிறிது நாட்களிலேயே விக்னேசின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு சந்தியா, கடலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். இதற்கிடையே திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. 

    இதை பார்த்த சந்தியா, விக்னேசை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது விக்னேஷ், தன்னுடன் குடும்பம் நடத்த வரவில்லை எனில் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்.
    ஆண்டிமடம் அருகே மோட்டார்சைக்கிள் இருந்து தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிமடம்:

    கடலூர் மாவட்டம், கணபதிகுறிச்சி கிராமம் மெயின் சாலை பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர், சம்பவத்தன்று மனைவி மணியுடன் (வயது 40) மோட்டார் சைக்கிளில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-காடுவெட்டி சாலையில் தர்மசமுத்திரம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தார். 

    அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால், திடீரென பிரேக் பிடித்ததில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் மணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்ற அவர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் நேற்று முன்தினம் மணி உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரங்கிப்பேட்டையில் திருமணமான 5 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    பரங்கிப்பேட்டை:

    பரங்கிப்பேட்டை காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம். இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பு.மணவெளியை சேர்ந்த குப்புசாமி என்பவரது மகள் சசித்ராவுக்கும்(வயது 30) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சசித்ரா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சசித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சசித்ராவின் தந்தை குப்புசாமி பரங்கிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சசித்ராவுக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால், வரதட்சணை காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    கடலூர் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைக்க கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தனியார் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சோலார் சக்தியில் இயங்கும் கைகழுவும் எந்திரம் ஏற்கனவே அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

    இதை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வருபவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கைகளை கழுவி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் உலக கை கழுவும் தினத்தையொட்டி நேற்று அரசு மருத்துவமனை பொதுப்பிரிவில் ஒரு புதிய கை கழுவும் எந்திரத்தை மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்து, கைகளை கழுவி நோயாளிகள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர், பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்கு வெளியில் மரத்தடியில் நின்று கொண்டிருந்த நோயாளிகளின் உறவினர்களை பார்த்து, இங்கு கூட்டமாக நிற்கக்கூடாது. நோயாளிகளை பார்க்க வந்த இடத்தில் கொரோனாவை பரப்பி விடாதீர்கள், கொரோனா பரவலை தடுக்க கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    மேலும் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு வெளியே நோயாளிகளின் உறவினர்கள், பொதுமக்கள் அமரும் வகையில் அங்கு நிழற்குடை ஒன்று அமைக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா, நிலைய மருத்துவர் குமார், என்.எச்.எம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரிமேலழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் அறநிலையத்துறை உதவி ஆணையாளர் பரணிதரன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
    அண்ணாமலைநகர்:

    சிதம்பரம் நகரின் எல்லையில் புகழ்பெற்ற தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் 3 மாதத்திற்கு ஒருமுறை உண்டியலை திறந்து, காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் கோவில் மூடப்பட்டிருந்ததால் கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு உண்டியல் திறக்கப்படவில்லை.

    இந்நிலையில் ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்ததன் அடிப்படையில் கோவில்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் கோவிலில் அறநிலையத்துறை உதவி ஆணையாளர் பரணிதரன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் 7 லட்சத்து ஆயிரத்து 533 ரூபாய் மற்றும் 52 கிராம் தங்கம், 51 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியின்போது கோவில் செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார், ஆய்வாளர் ஜெயச்சித்ரா உள்பட பலர் உடனிருந்தனர்.
    ×