search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை படத்தில் காணலாம்.
    X
    கடலூரில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை படத்தில் காணலாம்.

    கடலூரில் வெங்காயம் விலை கிடு, கிடு உயர்வு- பொதுமக்கள் அவதி

    கடலூரில் வெங்காயம் விலை கிடு, கிடுவென உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூரில் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் ஆகியவை இயங்கி வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அண்ணா மார்க்கெட் மஞ்சக்குப்பம் மைதானத்திலும், பான்பரி மார்க்கெட் கோ- ஆப்டெக்ஸ் எதிரிலும், முதுநகர் மார்க்கெட் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகிலும் இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இங்குள்ள காய்கறி கடைகளில் வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. விலை கிடு, கிடுவென உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய வெங்காயம் விலை ரூ.50 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது ரூ.70 முதல் ரூ,80 வரை உயர்ந்துள்ளது. சிறிய வெங்காயம் 36 ரூபாயில் இருந்து 56 ரூபாயாக உயர்ந்துள்ளது. நடுத்தரம் 40 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    அதேபோல் சாம்பார் வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.90 வரை அதிகரித்துள்ளது. ஒரு சில கடைகளில் மட்டும் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெங்காயம் வாங்க கடைக்கு செல்லும் பொதுமக்கள் விலையை கேட்டவுடன், பாதி தான் வாங்கி செல்கிறார்கள். அதாவது 1 கிலோ வாங்குவதற்கு பதிலாக ¼ கிலோ, ½ கிலோ என வெங்காயத்தை குறைத்து வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. கொரோனா பரவலுக்கு முன்பு பெரிய வெங்காயம் விலை 100 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.140 வரைக்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    இந்த வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்து வருவது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணை செயலாளர் மதிசேகர் கூறுகையில், மத்திய அரசு எண்ணெய், கருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்களில் இருந்து எடுத்து விட்டது. இதனால் இந்த பொருட்கள் பதுக்கல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெங்காயத்தை அதிக அளவில் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை பெரிய நிறுவனங்கள் உருவாக்கி வருகிறது. இதன் காரணமாக தான் வெங்காயத்தின் விலை கிடு, கிடு வென உயர்ந்து வருகிறது.

    கடலூருக்கு மராட்டியம், ஆந்திராவில் இருந்து தான் வெங்காயம் அதிக அளவில் கொண்டு வரப்படுகிறது. ஆனால் ஆந்திராவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தான் வெங்காயம் விலை உயர்ந்து வருவதாக சிலர் பரப்பி வருகிறார்கள். ஆனால் அதற்கு முன்பே வெங்காயம் அறுவடை முடிந்து விட்டது. ஆகவே திட்டமிட்டு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். இதன் மூலம் மேலும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
    Next Story
    ×