search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    வங்கி தேர்வுகளில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், வங்கித்தேர்வை ரத்து செய்யக்கோரியும் நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் திருமேனி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் செந்தில் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மண்டல செயலாளர் திருமாறன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நிர்வாகிகள் நாகவேந்தன், சுபாஷ், ஸ்ரீதர், பாவாணன், புலிக்கொடியன், முரளி, கலியமூர்த்தி, ஜெயக்குமார், பிரதீப், செல்வம், விஜயன், ஒன்றிய கவுன்சிலர் சீனு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த ஒரு பெண் திடீரென தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் சங்க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதை பார்த்த கட்சி நிர்வாகிகள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுநகர் போலீசார், அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை அழைத்து சென்றனர்.

    அதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை சீர் குலைக்க முயற்சி செய்ததாகவும், கட்சி நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகர செயலாளர் செந்தில் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் பெண் ஒருவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×